குற்றங்கள் பெருக்கம்: உள்துறையும், காவல் தலைமையும் நடவடிக்கை எடுக்குமா?

தற்போது குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளைப்போல் நமது நாட்டில் குற்ற சம்பவங்களுக்கு கடுமையான
குற்றங்கள் பெருக்கம்: உள்துறையும், காவல் தலைமையும் நடவடிக்கை எடுக்குமா?

தற்போது குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளைப்போல் நமது நாட்டில் குற்ற சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை கிடையாது. இதை பயன்படுத்திக்கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பிடிபடுபவர்களில் 50 சதவீதம் பேர் மாணவர்களாக உள்ளனர். முன்பெல்லாம் குற்ற சம்பவங்களை கண்டுபிடிப்பதுதான் போலீசாரின் பிரதான பணியாக இருந்தது. ஆனால் இன்றைக்கு மக்களின் அன்றாட பல்வேறு பிரச்னைகளையும் போலீசார் கவனிக்க வேண்டியுள்ளதால் குற்ற சம்பவங்களை தடுக்க முழு நேரமும் போலீசாரால் இயலவில்லை. அமைச்சர்களுக்கு பந்தோபஸ்து பணி, கோயில் விழாக்களுக்கு பந்தோபஸ்து, நீதிமன்றக் கெடுபிடியால் ஹெல்மெட் பிடிப்பதிலும் பணி விரயமாகிறது.

எதற்கு இந்த குற்றக்கொலை லிஸ்ட் என்று நினைக்காதீர்கள். கிட்டத்தட்ட 8 மாதத்தில் 100 கொலைகள் தமிழகத்தில். எளிதாக செய்திகளை கடந்து செல்ல முடியாது. விபத்துகளில் இறப்பவர்களை விட கொலைசெய்யப்படுபவர்கள் அதிகம். குற்றங்கள் காவல்துறைக் கட்டுப்பாட்டில் இல்லையா என்ற சந்தேகங்களை எழுப்புகிறது..?

கொலைப் பார்வை
16, ஆகஸ்ட், 2019, கிருஷ்ணகிரி மாவட்டம் பேதப்பனுரில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் சிலர் டாஸ்மாக் கடை விற்பனையாளர் ராஜா என்பவரை வெட்டிக்கொலை செய்துவிட்டு கடையில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

ஜூலை, 2019, நெல்லையில் பயங்கரம்..! திமுக முன்னாள் மேயர் உமா மகேஷ்வரி உட்பட மூவர் வெட்டிப் படுகொலை.  
18, ஆகஸ்ட், 2019, கோவை கவுண்டம்பாளையத்தில் மாமியார் மீனாவின் கன்னத்தில் அறைந்த மருமகன் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டார். மருமகனை கொன்று விட்டு தப்பிய மாமனார் தங்கமணியை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆகஸ்ட் 21, 2019, சிதம்பரம் , அண்ணாநகரை சேர்ந்த பிரபல ரவுடி கோழி பாண்டியன் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஹோட்டலில் , சாப்பிட்டு கொண்டிருந்த போது அரிவாளால் வெட்டி , நாட்டு வெடி குண்டு வீசி கொலை. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பெருமாக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் மகன் சூர்யா(22) என்பவரின் காதல் பிரச்சினையில். அதே ஊரை சேர்ந்தவர் கருணாகரன் என்பவர் கொலை.

ஆகஸ்ட், 21, 2019 சிவகங்கை மாவட்டம், கல்லல் கிராமத்தில் மணல் கொள்ளைக்கு எதிராகப் புகார் கொடுத்த, திருநாவுக்கரசு (56). இரண்டு கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில், கை கால்கள் எலும்பு முறிக்கப்பட்டும், நிர்வாண கோலத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். 

ஆகஸ்ட் 21, 2019 காஞ்சிபுரம் அருகே,  வாலாஜாபாத் அடுத்த கோவிந்தவாடியைச் சேர்ந்தவர் தனஞ்செழியன், 35; புருஷோத்தன் கும்பலால் வெட்டிக் கொலை.

13,ஆகஸ்ட், சென்னை சைதாப்பேட்டையில் சொத்துக்காக மாநகராட்சி ஊழியர் ஜெயா கொலை. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் மோகனாவை வீராசாமி கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதை தற்கொலை போல் சித்தரித்துவிட்டு தப்பிச் சென்றான்.

தருமபுரி, குமாரசாமிபேட்டையில் உள்ள சந்தோஷ் திரையரங்கு முன்பு அண்ணன் வெங்கடாசலம், தம்பி நரசிம்மனை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் நரசிம்மன் கீழே சரிந்தார்.

தூத்துக்குடியில் பிரபல ரவுடி சிந்தா பழிக்குப்பழியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஒரே வாரத்தில் தமிழகத்தில் அடுத்தடுத்து 4 பழிக்குப்பழி கொலை சம்பவங்கள் நடந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

திருப்பூரில் கணவரை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க நினைத்த இரு மனைவிகளில் ஒருவரை கணவரே கொலை செய்தார். மற்றொரு மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தூங்கா நகரில் மட்டும் 8 மாதங்களில் 80 கொலைகள்
தமிழகத்தில் ‘தூங்கா நகரம்’ எது என்று கேட்டால், அசந்து தூங்குபவர்கள் கூட எழுந்து ‘மதுரை’ என்பார்கள். அந்தளவுக்கு எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். தற்போதும் இந்நகர மக்கள் தூங்காமலே இருக்கின்றனர். அதற்கு தொழில் உள்ளிட்ட காரணங்கள் இல்லை. சர்வசாதாரணமாக வீதிகளில் நடக்கும் கொலைகள், வழிப்பறி சம்பவங்கள், வீடுகளை உடைத்து நடக்கும் கொள்ளை சம்பவங்களே இதற்கு முக்கிய காரணம். கடந்த 8 மாதங்களில் 80 கொலைகள் நடந்துள்ளது போலீசாரின் கண்காணிப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. கொய்யாவுக்காக கொலையா?: மதுரையில் கடந்த சில மாதங்களாக நடந்த சில கொலைகளை பார்ப்போம்.* மதுரையில் புதூர் சிவானந்த நகர் டாஸ்மாக் கடையில் கொய்யாப்பழ துண்டுக்காக, கொடிக்குளம் பகுதியை சேர்ந்த கார் டிரைவரான சிவாவை (22), துண்டுதுண்டாக ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. மதுரை, செல்லூர், சத்தியமூர்த்தி நகரில் வீட்டில் தனியாக இருந்த உசேன் மனைவி மம்தா பீவியை (87), மர்ம கும்பல் கழுத்தை நெரித்துக் கொன்று 8 பவுன் நகையை எடுத்துச் சென்றது. பழிக்குப்பழியாக...:  மதுரை அனுப்பானடியை சேர்ந்த ரவுடி டேங்க் குமரன் (எ) குமரன் (28), பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூரைச் சேர்ந்த முருகன் மனைவி கவுசல்யாவை (22), நகைக்காக உறவினர் கழுத்தை நெரித்துக் கொன்றார். மதுரை முத்துப்பட்டி கண்மாய்கரையைச் சேர்ந்த சதீஸ்குமார் (25). இவர் தெற்குமாரட் வீதி பாண்டிய வெள்ளார் சந்திப்பில் நடந்து வரும்போது, டூவீலரில் வந்த 4 பேர் அவரை வழிமறித்து கொலை செய்தனர்.

மதுரை அ.கோவில்பட்டி ராம்பு (23), ஆத்திக்குளம் தினேஷ்,  திருநங்கை அல்போன்சா, புதூரைச் சேர்ந்த பால் வியாபாரி, மதுரை அண்ணாநகர்  கட்டை முத்து, ஜெய்ஹிந்த்புரம் ராமர், மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதி  தெருவைச் சேர்ந்த மாரிமுத்து(50),  மதுரை மதிச்சியம் ராமராயர் மண்டபம்  பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) கொலை செய்யப்பட்டனர். அனுப்பானடியைச் சேர்ந்த காளீஸ்வரன் மனைவி லதாவை, நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரே மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தார். உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியைச் சேர்ந்த திராவிட மணி மனைவி உமாதேவி (45), ஓட்டலில் சப்ளையர் உட்பட நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த 8 மாதங்களில் 80 கொலைகள் அரங்கேறியுள்ளன. 

கொள்ளைக்கும் குறைவில்லை...: கொலைகள் மட்டுமல்லாது  வழிப்பறியும், கொள்ளைச்சம்பவங்களும் குறைவின்றி நடந்து வருகிறது. கடந்த 8  மாதங்களில் மட்டும் 98 சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 3,255 பவுன் நகைகள்  இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் கரிமேடு பகுதியில் தேவி  என்பவர் வீட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை, காமராஜர்புரம் பகுதியைச்  சேர்ந்த தங்கவேல் என்பவரது வீட்டிற்குள் புகுந்து 418 பவுன் நகைகள், ₹8  லட்சம் கொள்ளை என தொடர்ந்த 10 சம்பவங்களில் 525 பவுன் நகைகள் கொள்ளை போயின.  பிப்ரவரி மாதத்தில் அதிகபட்சமாக 14 சம்பவங்களில் அடகுகடை கொள்ளை சம்பவம்  உட்பட 1,827 பவுன் நகைகள், ₹12.65 லட்சம் பணம் கொள்ளை போயின.  மார்ச்  மாதத்தில் 10 சம்பவங்களில் 123 பவுன் நகைகள், ஏப்ரல் மாதத்தில் 11  சம்பவங்களில் 112 பவுன் நகைகள், ₹14 லட்சம் ரொக்கம், மே மாதத்தில் 16  சம்பவங்களில் 157 பவுன் நகைகள், ஜூன் மாதத்தில் 11 சம்பவங்களில் 204 பவுன்  நகைகள், ஜூலை மாதத்தில் 10 சம்பவங்களில் 130 பவுன் நகைகள், ஆகஸ்ட்  மாதத்தில் 16 சம்பவங்களில் 289 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன.  இந்த வருடத்தில் 8 மாதத்தில் 98 சம்பவங்களில் 3,255 பவுன் நகைகள்,  ₹2.34 கோடி பணத்தை மக்கள் இழந்துள்ளனர்.

மதுரையில் கீரைத்துறை மற்றும் புதூர் பகுதிகளில் பழிக்குப்பழி கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. கொலை, கொள்ளை அன்றாட சம்பவம் போல நடப்பதால், பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழல் உள்ளது. மேலும், மாலை, இரவு நேரங்களில் தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து வழிப்பறியும் நடந்து வருகிறது. எனவே, மாநகராட்சியான மதுரையில் போலீசார் தினந்தோறும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. 

‘வைரல் கொலைகள்’: மதுரை, புதூர் ராமவர்மா நகரைச் சேர்ந்த பைனான்சியர் ராஜா (35), நள்ளிரவில் ஓட ஓட விரட்டி ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார். மதுரை, புதூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகமும் (22) இதே முறையில் கொலையானார். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான இந்த கொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவின. 

போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துல 
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (23). இவர் ஒரு வழக்கு தொடர்பாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வரும்போது, வெட்டி கொலை செய்யப்பட்டார். இதேபோல் சோழவந்தான் பகுதியில் பாபு என்பவரும்  கொலை செய்யப்பட்டார்.

கஞ்சா விற்பனை “கனஜோர்”
மதுரைக்கு ஆந்திரா, கேரளாவில் இருந்து அதிகளவு கார்களில் கஞ்சா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் போதை தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் 325 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1,960 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மத்திய போதை தடுப்பு நுண்ணறிவு போலீசார் சோதனையில் 15 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை நகர் போலீசார் 138 பேரை கைது செய்து 780 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புறநகரில் 234 பேரை கைது செய்து, 478 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மட்டுமே 712 பேரை கைது செய்து, 3,568 கிலோ கஞ்சா, 17 கார்கள், 26 டூவீலர்களை போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது.

செப்டம்பர் 07, 2019,கோவையில் கஞ்சா வியாபாரி பாலாஜியை கையும்களவுமாக பிடித்த பொதுமக்கள், அடித்து உதைத்து அவரை போலீசில் ஒப்படைத்தனர்.  ஜூலை 14,  2019 ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தி வந்த,  முனியசாமி (வயது 29) என்பதும், வழிவிடும் முருகன் (19) கைது. ஜனவரி 13, கோவை,தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவருடைய மனைவி ஜெயா (45). இவர்கள் இருவரும் சவுரிபாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் 19,கோவை பீளமேடு பகுதியில் தேனியில் இருந்து வரும் ஒருவர் கஞ்சா சப்ளை செய்வது தெரியவந்தது. எனவே அந்த வாலிபர் மூலம் கஞ்சா சப்ளை செய்யும் ஆண்டிப்பட்டி தும்மு குண்டு என்ற கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி(வயது 33) என்பது கைது.  ஏப்ரல் 5, 2019, செய்து வந்த ராஜா, கதிரேசன் ஆகிய இருவரை கைது. சென்னையில் போதைக்கு அடிமையான கல்லூரி மாணவி ஸ்வாதி, ராஜூ செயின் பறிப்பில் கைது.

பெருகி வரும் சிறார் குற்றவாளிகள்
தமிழகத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்கள் வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருகிறது. தற்போது பழைய குற்றவாளிகள் பலரும் சிறையில் உள்ளனர். வெளியில் இருப்போரும் தங்கள்  தொழிலை மாற்றி, மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து திருந்தி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது புதிய குற்றவாளிகள் அதிகளவில் உருவாகி வருகின்றனர். பெரும்பாலும் 18 வயதிற்கு கீழ் உள்ள நபர்கள் மது, கஞ்சா போதைகளில் கொலை குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

போலீசார் நடவடிக்கை அவசியம். 

  • போலீசார் சைக்கிள் ரோந்து பணியை திவீரப்படுத்த வேண்டும்.
  • வீடுகளில் அதிக அளவு பணம், நகைகள் வைத்து இருக்க கூடாது. நகைகளை வங்கி பெட்டகங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்
  • போலீஸ் பணியை திசை திருப்பாமல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள் செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
  • குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும்.
  • வீதிகள்தோறும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். போக்குவரத்து சிக்னல், முக்கிய இடங்கள், சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் போலீசாரே கண்காணிப்பு கேமரா பொருத்துவது சாத்தியமற்றது.
  • குடியிருப்பு பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த பொதுமக்கள் முன்வரவேண்டும்.
  • வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளில் சமூகம் சார்ந்து வழக்கு நடத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com