சுடச்சுட

  

  எது நலம் / நலமற்றது?  வாருங்கள் தெரிந்து கொள்ளலாம், இது தேசிய ஊட்டச்சத்து மாதம்!

  By பெ.உமா மகேஸ்வரி  |   Published on : 13th September 2019 11:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Eat-Right1

   

  "உயிர் வளர்க்கும் ஊட்டச்சத்து"

  செப்டம்பர் 1 முதல் 7 வரை கொண்டாடப்படும்  தேசிய ஊட்டச்சத்து வாரம், கடந்த ஆண்டு முதல்  தேசிய ஊட்டச்சத்து மாதமாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்விற்கு ஏற்பட்டிருக்கும் ஒரு அவசியமான சூழல்!

  வறுமையின் காரணமாகப் போதிய உணவு மற்றும் ஊட்டமின்மையும் அதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் தொற்று வியாதிகளும் ஏற்பட்டு உடல் எடை மற்றும் வளர்ச்சியின்மை என்பது  அவர்கள் பெரியவர்களான பின்பும் சரி செய்ய இயலாது நிரந்தரமாகி விடுகிறது. இதன் மூலம் ஏற்படும் ஆரோக்கிய குறைபாட்டால்  அவர்கள் வேலை செய்யும் ஆற்றலும், உற்பத்தித்  திறனும் குறைந்து ஏழ்மை  தொடர்கிறது .இந்த சுழற்சி (vicious cycle)  இந்தியாவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

  இதையும் பாருங்க... சாம்பார் பொடியில் சால்மோனெல்லா பாக்டீரியா ஊடுருவல், விநியோகத்தை திரும்பப் பெறச்சொல்லி FDA உத்தரவு!

  உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி ( Global Nutrition Report,2018) வயதுக்கேற்ற போதிய உயரமின்மை கொண்ட 46.6 மில்லியன் குழந்தைகளும், உயரத்திற்கேற்ற போதிய எடையின்மை கொண்ட 25.5 மில்லியன் குழந்தைகளையும் இந்தியா கொண்டுள்ளது. யுனிசெஃப் அறிக்கையின் படி இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் ஏதேனும் ஒரு விதமான ஊட்டச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை ஒரு புறமிருக்க அதிக உடல் எடை கொண்ட  ஒரு மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கும் இந்தியா தாயகமாக உள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான ஊட்டம் என்கிற இரட்டைச் சுமையைக் கொண்ட நாடாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது.

  இந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் மையக்கருத்தாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பஞ்சசீல கொள்கையை போன்று ஐந்து முக்கிய கருத்துக்களை வலியுறுத்தியுள்ளது. அவையாவன, முதல் ஆயிரம் நாட்களின் முக்கியத்துவம், இரத்த சோகை மற்றும் தீவிர வயி்ற்றுப் போக்கு தடுப்பு, தனி மனித சுகாதாரம், சரிவிகித ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு ஆகியவை. ஒரு பெண்ணின் கர்ப்பம் ஆரம்பிப்பது  முதல் பிறக்கும் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் வரையிலான முதல் 1000 நாட்கள் மிக முக்கியம் வாய்ந்தவை. இந்த ஆயிரம் நாட்களே  ஒரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் காலகட்டமாக மறைமுகமாக ஒரு தேசத்தின் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும் முக்கிய நாட்களாக அமைகிறது.

  இதையும் பாருங்க... ‘சிக்கன் சூப்பரோ சூப்பர்’ புகழ்ந்த பெண்ணுக்கு வாழ்நாள் முழுக்க அன்லிமிடெட் ஃப்ரீ சிக்கன்!

  கர்ப்ப காலத்திற்குத் தேவையான அதிகப் படியான ஊட்டச்சத்து, அத்தியாவசிய தடுப்பூசிகள், சீம்பால் மற்றும் தாய்ப்பாலின் முக்கியத்துவம், ஆறு மாதங்களுக்கு மேல் இரண்டு வயது வரை தாய்ப்பாலோடு வழங்க வேண்டிய கூடுதல்  உணவுகள், சுகாதாரம் என இவை அனைத்தையும் இக்கால கட்டம் உள்ளடக்கியது.

  பற்றாக்குறையான அல்லது சமநிலையற்ற உணவால் உண்டாகும் சத்துக் குறைவு... ஊட்டச்சத்து குறைவு என்று வரையறுக்கப்படுகிறது. மனித ஆரோக்கியத்திலும், முன்னேற்றத்திலும் ஊட்டச்சத்தின்மை எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. அது உற்பத்தி இழப்பையும் பொருளாதார ரீதியிலான பின்னடைவையும் உண்டாக்குகிறது. ஆரோக்கியமான குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குகின்றனர். போதுமான ஊட்டச்சத்து கொண்டவர்கள் அதிக ஆற்றல் கொண்டவர்கள். மாறாக ஊட்டச்சத்தின்மை நோய்த்தடுப்பாற்றலை குறைத்து நோய் தாக்கத்திற்கு ஆளாக்கி, உடல், மன வளர்ச்சியை தடுத்து ஆக்க சக்தியையும் குறைக்கிறது. அனைத்து வகை ஊட்டச்சத்துக்களையும் பரிந்துரைக்கப்பட்ட தகுந்த அளவில் வழங்குவதே சமநிலை உணவாகும் (சரிவிகித உணவு) இதில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் மாமிச உணவுகள் அடங்கும். ஒரு சமநிலை உணவு ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம்  கலோரிகளையும் புரதத்திலிருந்து பத்திலிருந்து பதினைந்து சதவிகிதத்தையும், கொழுப்பிலிருந்து 20 முதல் 30 சதவீதத்தையும் வழங்க வேண்டும், உணவில் புரதம், மாவு, கொழுப்பு, உயிர்ச்சத்து, தாது, நீர் ஆகிய ஆறு வகை சத்துக்,கள் அடங்கியுள்ளன. உயிர்வாழ்க்கை, வளர்ச்சி, உடலியக்கம், திசு சீரமைப்பு இவை அனைத்திற்குமே ஊட்டச்சத்து தேவையானது. குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஒன்றே போதுமானது. 

  தாய்ப்பாலில் போதுமான அளவிற்கு புரதம், கொழுப்பு, கலோரி, உயிர்ச்சத்து , இரும்பு , தாது , நீர் மற்றும் நொதிகள் உள்ளன. நோய் தடுப்பாற்றலை அதிகரிப்பதால் குழந்தைகளுக்கு பலவிதமான தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் எளிதாக செரிமானம் ஆகிறது. ஆனால் இங்கும் மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. விளம்பரங்களில் வருவது போன்று தங்கள் குழந்தைகள் இருக்க வேண்டும் என அறியாமையின் காரணமாக தாய்மார்கள் நினைக்கின்றனர். எனவே முதல்  ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே கூடுதல் உணவுகளை ஆரம்பித்துவிடுகின்றனர். மறுபுறம் ஆறு மாதங்கள் கழித்து கூடுதல் உணவுகளை  வழங்க வேண்டிய அவசியம் மற்றும் எளிதாக வீட்டிலேயே தயாரிக்க இயலும் சத்துமாவு, ராகிக் கூழ் போன்றவை குறித்த சரியான விழிப்புணர்வின்மையின் காரணமாக குறிப்பிட்ட சதவிகித தாய்மார்கள் இருப்பதும் நிதர்சனம்!

  முறையாகத் தாய்ப்பால் கொடுப்பது வயிற்றுப்போக்கை தடுக்கும். ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட ஐந்து லட்சத்து 25 ஆயிரம் குழந்தைகள் உயிர் இழப்பதற்கு இந்த வயிற்றுப்போக்கே காரணமாகிறது. இதனை  எளிமையாக மிக மலிவான விலையில் கிடைக்கும் உப்பு, சர்க்கரை கரைசலைக் கொண்டு (ORS) குணப்படுத்திவிடலாம் என்பது இன்னும அனைவரையும் சென்று சேரவில்லை.

  ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படும் நிலை இரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் நுரையீரல்களில் இருந்து பிராணவாயுவை உடலிலுள்ள எல்லா உறுப்புகளுக்கும் மற்றும் திசுக்களுக்கும் எடுத்துச் செல்லும் முக்கியமான பணியை செய்கிறது. மூளை உட்பட  உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு தேவையான பிராணவாயுவின் அளவு குறையும்போது உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது .இரத்த சோகை ஏற்பட பல விதமான காரணங்கள் உண்டு .வளர் இளம் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்தை இழப்பதாலும்,கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகாலத்தின் போது ஏற்படும் இரத்தப் போக்கினாலும் இரத்தசோகை ஏற்படுகிறது .இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது ,மலேரியா காய்ச்சல் மற்றும் குடலில் கொக்கிப் புழுக்கள் பாதிப்பு ஆகியவையும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இரத்த சோகையினால்  உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவு,நோய் எதிர்ப்பு சக்தியின்மை,படிப்பில் கவனம் இன்மை,நெஞ்சில் படபடப்பு,சோர்வு,அன்றாடப்பணிகள் செய்ய இயலாமை ஆகியவை ஏற்படுகின்றன. வைட்டமின் சி நிறைந்த உணவுகள், சுண்டைக்காய் ,உலர்ந்த திராட்சை, பேரிச்சை, கோதுமை, பொட்டுக்கடலை, மீன், முட்டை, இறால் ஆகிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் இரத்த சோகையைத் தடுக்கும். உலகிலேயே முதன்முறையாக 1970 ல் இரத்த சோகையை தடுக்கும் திட்டத்தை நம் இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளை கடக்கப் போகும் இந்நிலையிலும் பதினைந்திலிருந்து 49 வயதிற்குட்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  நம் உடலில் தற்கால வாழ்வியல் முறை, சுற்றுப்புறம் ஆகியவற்றினால் free radical damage ஏற்படுகிறது. சிறியது  முதல் பெரிய வியாதிகள் வரை அனைத்திற்கும் காரணி இது தான். இதனைத் தடுத்து  நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பவை Anti oxidants. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்் அதிகம் உள்ள கொய்யா, மாதுளை, சீத்தா பழம், பன்னீர் திராட்சை ( திராட்சை விதை புற்று நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது), இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் நார்ச்சத்து மிகுந்தது அத்திப்பழம்,

  கால்சியம், இரும்பு, கரோட்டின் நிறைந்த முருங்கைக்கீரை, வைட்டமின் சி மலிவாகத் தரும் எலுமிச்சை ஆகியவற்றை உட்கொள்வது சிறந்தது. முருங்கைக் கீரையின் மகத்துவத்தை அறிந்து இங்கிருந்து கொண்டு சென்று கியூபாவில் பயிரிடச் செய்தவர் மறைந்த அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ. ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் நமக்கு அருகாமையிலேயே மலிவாகக் கிடைக்கிறது. தேவை விழிப்புணர்வு மட்டுமே.

  முடிந்தவரை பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து அவ்வப்போது சமைத்த உணவுகளையும் பச்சை காய்கறிகளையும், கீரைகள், பழங்கள், உலர்ந்த திராட்சை போன்றவற்றை உண்ண வேண்டும். துரித உணவுகளின் மூலம் நமக்கு கிடைத்த கொடை அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை. ஐந்து கிராமிற்கும் குறைவாக  உப்பை உபயோகிப்பது வருடத்தில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய வியாதிகள் மூலம் ஏற்படும்  1.7 மில்லியன் இறப்புகளை தவிர்க்கும். பதப்படுத்தப் பட்ட உணவுகள், துரித உணவுகள், சாஸ் மற்றும் மென்பானங்களில் தேவைக்கு அதிகமான உப்பும், சர்க்கரையும் ஒளிந்திருக்கின்றன.

  தனி மனித சுத்தம், சுற்றுப் புறத் தூய்மை, தூய்மையான குடிநீர் ஆகியவை ஆரோக்கிய வாழ்வில் முக்கியப்  பங்கு வகிக்கின்றன. அனைத்து குடும்பங்களுக்கும் கழிப்பறைகள் என்பது இன்னும் எட்டப் படாத நிலை என்பது எவ்வளவு வெட்கக்கேடான உண்மை?

  ஜோக்கர் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். திறந்தவெளியில் மலம் கழித்துக் கொண்டிருக்கும் ஒருவர் நவீன அலைபேசியில் பேசிக் கொண்டிருப்பது போன்று ஒரு காட்சி அமைக்கப் பட்டிருக்கும்.

  அடிப்படை ஊட்டச் சத்தான  உணவு, குடிநீர், வீடுகளில், கல்வி நிறுவனங்களில், பொது இடங்களில் தேவையான கழிப்பறை வசதிகள், முறையான மருத்துவம் போன்ற அடிப்படைகளைத் தவறவிட்டு எங்கோ தொழில்நுட்பத்தில் முன்னேறிக் கொண்டிருப்பது எதனை நோக்கி என சிந்திக்க வேண்டும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai