சிறிய நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: விரைவில் ஜிஎஸ்டியில் இருக்கு விலக்கு?
By C.P.சரவணன், வழக்குரைஞர் | Published On : 13th September 2019 04:33 PM | Last Updated : 13th September 2019 04:33 PM | அ+அ அ- |

சிறிய நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள முறையில், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்பவர்கள், ஜிஎஸ்டிஆர்-9 படிவத்தில் ஆண்டு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். 1 கோடியே 39 லட்சம் ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், இதில் 85 சதவீத நிறுவனங்கள் ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கும் குறைவான வரவு உள்ளவை என அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை 3 முறை நீட்டித்தும், தாக்கல் செய்யப்பட்ட எண்ணிக்கை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று முறை அவகாசம் நீட்டித்தும் 25 முதல் 27 சதவீதம் வரையே கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய்க்கு குறைவாக வரவு உள்ள நிறுவனங்களுக்கு, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் வரும் 20ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது.
இதேபோல, கட்டாயம் கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பதை, 2017-18 நிதியாண்டுக்கு மட்டும் நிறுத்தி வைப்பதா அல்லது அடுத்தடுத்த நிதியாண்டுகளுக்கும் நீட்டிப்பதா என்பது குறித்தும் கவுன்சில் ஆலோசனை நடத்த உள்ளது.
ஜிஎஸ்டி வரி தாக்கலுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்தும் கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது. அதேசமயம், ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் எண்ணிக்கை அதிகரிக்கிறதா என்பதை, நவம்பர் 30ஆம் தேதி வரை பொறுத்திருந்து, அதன் பிறகே பரிசீலிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சிறிய நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிப்பது, சுமையை குறைப்பதுடன், அதிகாரிகள் பெரிய அளவிலான கணக்குகளில் கவனம் செலுத்துவதற்கு உதவும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தற்போதுள்ள முறை ஆற்றல் மிக்கதாக இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து சிறு நிறுவனங்களுக்கு ஓரிரு ஆண்டுகளுக்கு விலக்களிப்பது கூட, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.