சுடச்சுட

  

  வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்: இது தான் வளர்ச்சியா?

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 13th September 2019 01:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  poor_people


  நிலவுக்கு சந்திரயான் விடும் அதே வேளையில், இந்தியா அதீத வறுமை நாடுகளின் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஜூன், 2018 இல் நாடுகளின் எதிர்கால வளர்ச்சி குறித்து வேல்டு பாவர்ட்டி கிளாக் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்,

  * உலக அளவில் அதிகமான ஏழைகள் இருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 
  * இந்தியாவில் விநாடிக்கு 44 இந்தியர்கள் விகிதத்தில் தீவிர வறுமையில் இருத்து மக்கள் விடுபட்டு வருவதாகவும்,  

  * இந்நிலை தொடர்ந்தால் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் வறுமை நிலை 3 சதவிதத்திற்கு கீழ் குறையும் என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  * 87 கோடி மக்கள் தீவிர வறுமை நிலையில் உள்ள நைஜீரியா, ஏழைகள் அதிக உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

  * இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் 73 கோடி பேர் தீவிர வறுமை நிலையில் உள்ளனர்.

  * இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் குறைந்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்து அது மூன்றாம் இடத்திற்கு குறையும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

  * இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்காள தேசம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தனிநபர் வருமானம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது

  உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகளின் பட்டியலில் நைஜீரியா, காங்கோவுக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

  World Poverty Clock என்ற அமைப்பின் புள்ளி விவரத்தை மேற்கோள்காட்டி The Spectator Index என்கிற ட்விட்டர் பக்கத்தில் உலகில் அதீத வறுமை வாட்டும் நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் இடம் நைஜீரியா என்கிறது.

  உலகில், தீவிர வறுமையில் வாழும் மக்கள்.

  • நைஜீரியா: 15.7%
  • காங்கோ: 10%
  • இந்தியா: 8%
  • எத்தியோப்பியா: 4.6%
  • தான்சானியா: 3%
  • பங்களாதேஷ்: 2.3%
  • தென்னாப்பிரிக்கா: 2.3%
  • இந்தோனேசியா: 2.1%
  • ஏமன்: 1.6%
  • பிரேசில்: 1.1%
  • சீனா: 0.9%
  • பாகிஸ்தான்: 0.3%
  • அமெரிக்கா: 0.3%
  • மெக்சிகோ: 0.3%

  (World Poverty Clock)

  நமது நாட்டில் 8% பேர் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது இப்புள்ளி விவரம். இதையடுத்து எத்தியோப்பியா 4.6%; தான்சானியா 3%; வங்கதேசம் 2.3% என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  பிற நாடுகளின் அதீத வறுமையால் பாதிக்கப்பட்டோர் சதவீதம்:
  தென்னாப்பிரிக்கா 2.3%; இந்தோனேசியா 2.1%; ஏமன்- 1.6%; பிரேசில் 1.1%; சீனா- 0.9%; பாகிஸ்தான் 0.3%; அமெரிக்கா- 0.3% ; மெக்சிகோ- 0.35 எனவும்  அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

  வறுமைக்கோடு (Poverty Line) என்றால் என்ன?
  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தாதாபாய் நவ்ரோஜி தொடங்கி 2011 -ல் மறைந்த சுரேஷ் டெண்டுல்கர் வரை பல பொருளியல் அறிஞர்கள், அரசின் வல்லுநர் குழுக்கள், உலக வங்கி போன்ற அமைப்புகள் வறுமையினை அளவிட முயன்றும், அதையொட்டி பல்வேறு விதமான விவாதங்கள் நடந்தேறியும், எல்லோரும் எற்றுக்கொள்ளுமளவுக்கு எந்த ஒரு வரையறையும், அளவீடும் இன்றுவரை எட்டப்படவில்லை. 

  திட்டக்குழுவின் வறுமை மதிப்பீடு
  அரசுக்காக இந்தியாவின் வறுமையினை மதிப்பிடும் நிறுவனம் திட்டக்குழு ஆகும். வறுமை பற்றிய முறையான மதிப்பீடு முதல் முதலில் 1971 இல் டண்டேகர் மற்றும் ராத் என்ற இரு பொருளியல் அறிஞர்களால் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 2250 கலோரி உணவு பெறத் தேவையான செலவுத் தொகையினை ‘வறுமைக் கோடு’ என அன்றைக்கு வரையறுத்திருந்தார்கள். திட்டக்குழு இதை நகர்ப்புறத்துக்கு 2,400 கலோரி, கிராமப்புறத்துக்கு 2100 கலோரி என 1973-74 இல் மாற்றியமைத்தது; இதனடிப்படையில் அன்றைய விலைவாசியில் தினமும் 2400 கலோரியுள்ள உணவை கிராமங்களில் வாங்க ஒரு மாதத்திற்கு ஒருவருக்குத் தேவைப்பட்ட பணம் ரூ.49.10; நகர்ப்புறத்தில் தினமும் 2100 கலோரி உணவு வாங்க ஒரு மாதத்திற்கு தேவைப்பட்ட பணம் ரூ.56.

  இந்த ரூபாய் மதிப்புதான் வறுமைக் கோடு என வரையறை செய்யப்பட்டது. அதாவது, ஒரு மாதத்திற்கு கிராமத்தில் ரூ49.10-ம், நகர்ப்புறத்தில் ரூ56-ம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலும் அப்படி இல்லாதவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழும் வாழ்வதாக பொருள். இந்த வரையறையின்படி, 1973-74-ல் நாட்டின் பாதிப் பேர் வறுமைகோட்டிற்கு கீழே இருந்தனர். 1973-74-ல் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுத் தேவையை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இந்த வறுமைக்கோடு எந்தவித பெரிய மாற்றமும் இன்றி அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடந்து கடைப்பிடிக்கப்பட்டது.

  ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் விலைவாசி ஏற்றத்துக்குத் தேவையான திருத்தங்கள் மட்டும் இதில் செய்யப்பட்டது. திட்டக்குழுவின் இந்த அணுகுமுறையும், ஒரு மனிதனின் அடிப்படை தேவை வெறும் உணவு மட்டும்தான், அந்த குறைந்தபட்ச உணவிருந்தால் அவன் வறுமைக்கோட்டிற்கு மேலே வந்துவிடுகின்றான் என்ற நிலைப்பாடும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குள்ளாயின.

  திட்டக்குழு, தன்னுடைய வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில், ஐந்தாண்டுக்கொருமுறை NSS –ன் (National Sample Survey Organisation) நுகர்வோர் செலவினப்புள்ளி விவரத்தைக் கொண்டு வறுமையில் உள்ளோரை எண்ணிக்கையிலும், “தலை எண்ணிக்கை விகிதத்திலும்” ( Head Count Ratio ) கணக்கிடுகின்றது. அதாவது, வறுமைக்கோடு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச தேவைகள் இல்லாத மக்கள், எண்ணிக்கையில் எத்தனை பேர், மக்கள் தொகையில் எத்துனை சதவீதம் என கணக்கிடப்படுகின்றது.

  1973-74-ல், ஒவ்வொரு நூறு பேரில் 55 பேர் ஏழைகளாகக் கணிக்கப்பட்டார்கள். அது 1999-2000-ல் இந்தியாவில் 26 பேராகவும், தமிழ் நாட்டில் 21 பேராகவும் குறைந்துள்ளதாக திட்டக்குழு கணித்தது. நகர்ப்புற, கிராமிய வறுமையினை ஒப்பிடுகையில், தேசிய அளவில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், தமிழ் நாட்டில் நகரத்தைவிட கிராமப்புறத்தில் வறுமை சற்று அதிகமாக இருந்தது.

  பல பொருளியல் அறிஞர்கள் இதே NSS–ன் புள்ளி விவரத்தைக் கொண்டு திட்டக்குழுவின் மதிப்பீட்டைவிட வறுமை அதிகமாக உள்ளதாக கணக்கிட்டுள்ளனர். எனினும், அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் திட்டக்குழுவின் மதிப்பீடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

  குறைந்தபட்ச உணவை மட்டுமே நமது அடிப்படைத் தேவை என்று திட்டக்குழு கூறுவது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. உணவு, உடை, தங்குமிடம், குடிநீர் கல்வி, சுகாதாரம், வேலை போன்ற வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் அடிப்படை மனிதத் தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்புகளை இழந்திருக்கும் நிலையை வறுமை எனலாம். இந்த இழப்புகள் எவை எவை என்பதை உறுதிசெய்வதில் சுய உணர்வுகளை முற்றிலும் தவிர்க்க முடியாதென்றாலும், சமூக உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

  சுரேஷ் டெண்டுல்கர் குழு அறிக்கை
  நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்த, சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியானது கடந்த 2009-ல் பரிந்துரை செய்ததன் அடிப்படையில், தற்போது வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படு வருகின்றன. அதன்படி நகரங்களில் நாள் ஒன்றுக்கு உணவு உள்ளிட்ட தேவைக்கு, 33.33 ரூபாய்க்கும், கிராமப் புறங்களில், 27.20 ரூபாய்க்கும் குறைவாக செலவு செய்பவர்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களாக வரையறுக்கப்பட்டனர். இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும், என பல தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். திட்ட குழு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த பிரமாண பத்திரத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 40 கோடியே 70 லட்சம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்பொழுது நிதி ஆயோக் குழு பரிசீலித்து வருகிறது.

  வறுமைக் காரணிகள்

  அறிவியல் ஆராய்ச்சிகள் மனித உழைப்பை குறைக்கின்றது மனித வளம் பல நாடுகளில் மிகுதியாக உள்ளது. இவ்வாறு இருக்கும் சூழலில் தேவைக்கு ஏற்றமனிதவள வாய்ப்புகள் உருவாகவில்லை.
  பொறியியல் சாதனங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் இவற்றால் மனிதவளத்தின் தேவை குறைகிறது, பொறியியல் சாதனங்களை கையாளக் கூடிய திறன் சில பேருக்கு கிடைக்கின்றது இதன்மூலம் பல பேர் தங்கள் வேலை இழக்கின்றனர். 

  பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாக இருந்தால் இதுபோன்ற சூழல் எங்கும் ஏற்படாது, ஐரோப்பாவில் சில நாடுகள் குறிப்பாக holland, அயர்லாந்து போன்ற நாடுகள் விவசாயத்தில் பெரும் முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளன இங்கு விவசாய பண்ணைகளில் வேலை செய்வதற்கான மனித வளம் அதிகமாக தேவைப்படுகிறது. 

  தேவை குறைவாகவும் மனித வளம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஏழ்மை உண்டாகின்றது.

  பணக்காரன் பெரும் பணக்காரனாகிறான், ஏழை இன்னும் ஏழையாகிறான்.
  லஞ்சல், ஊழல், சுரண்டல் வறுமைக்கு வழிவகுக்கிறது.

  தீர்வுகள் என்ன?
  வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 நிதியுதவி அளித்தது. விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றால் வறுமை தீரவில்லை என்பதே உண்மை.

  மக்களின் கல்வி, சிறந்த மருத்துவம், அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதிலும், தனியார் சுரண்டல்களிலிருந்து மக்களை விடுவிப்பதுமே நல்லபலனைத் தரும்,

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai