'ஒரே நாடு, ஒரே கட்சி' என்பதை மறைமுகமாகச் சொல்கிறாரா? அமித்ஷா

ஒரே நாடு ஒரே கட்சி என்ற கொள்கை, ஒற்றை அதிகாரக் குவிப்பினை நோக்கி செல்வதுடன் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும். பல கட்சி முறை தோல்வி அடைந்துவிட்டது என்ற அமித்ஷா பேச்சு ஒற்றை கட்சி முறையை நோக்கியது.
'ஒரே நாடு, ஒரே கட்சி' என்பதை மறைமுகமாகச் சொல்கிறாரா? அமித்ஷா

இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்து விட்டதாக அமித்ஷா கூறியுள்ளார். 70 ஆண்டு சுதந்திர இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்றுவிட்டது என்பதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை என் அமித்ஷா தெரிவித்துள்ளார். சரி பலகட்சி, இருகட்சி, ஒற்றை கட்சி அமைப்புகளைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்…

அரசியல் கட்சிகள் (A political party)

அரசியல் கட்சிகள் பின்பற்றப்படும் குடியாட்சி முறை நாட்டிற்கு மிகவும் அவசியமானவை. தற்போதைய உலகில் குடியாட்சிகள் பிரதிநிதித்துவத் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இத்தகைய குடியாட்சி அமைப்புகளில் கட்சிகள் மக்களுக்கு அரசியலில் ஆர்வத்தை ஊட்டி பங்கேற்க கற்றுத்தருகின்றன. ஒரு ஜனநாயக அமைப்புக்கு அரசியல் கட்சிகள் மிக மிக அத்தியாவசியமான தேவையாகும். இன்றைய சமகால உலகில் ஜனநாயகங்கள் பிரதிநிதித்துவத் தன்மையுடையனவாகப் பண்புக்கூற்றைப் பெற்றுள்ளன. பிரதிநிதித்துவ வடிவிலமைந்த ஓர் அரசாங்கத்தில் அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்குக் கற்றுத்தந்து செயத்திறன் மிக்க அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான ஆர்வத்தை ஊட்டுகின்றன.

அரசியல் கட்சிகளின் தேவை

ஒரு தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்கு அரசியல் கட்சி என்பது மிகவும் அவசியம். மக்கள் மற்றும் அரசாங்கம், வாக்காளர்கள் மற்றும் பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்குமிடையே ஒரு உறவை ஏற்படுத்தும் பாலமாக அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.

அரசியல் கட்சிகள், அரசியல் அதிகாரத்தை ஏற்றிச் செல்லும் வாகனங்களாகும். இவை கல்லாமை மற்றும் தீண்டாமை போன்ற சமுதாயக் கொடுமைகளை வேரோடு அழிக்கப் பாடுபடுவதுடன் பஞ்சம், வெள்ளம் போன்றவை மக்களைத் தாக்கும் பொழுது அவற்றிலிருந்து மக்களை கைத்தூக்கி விட்டு காப்பாற்றுவதற்காகப் பாடுபடுகின்றன. இவை அரசியலுக்காக மக்களை ஒன்று திரட்டி ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபடுகின்றன. மேலும் இவை மக்கள் நலனுக்காக சமுதாய நல விழாக்களை நடத்துகின்றன.

அரசியல் கட்சிகளின் பொருளும்அவற்றின் கூறுகளும்

பிரதிநிதித்துவத் தன்மை வாய்ந்த எல்லா அரசாங்கங்களும் பிரதிநித்துவத் தன்மை வாய்ந்த எல்லா நிறுவன அமைப்புகளும் அரசியல் கட்சிகளின் இருப்பைத் தங்களின் தேவையாகக் கொண்டுள்ளன.

நாட்டின் அரசியல் கட்சிகளின் முக்கியமான நோக்கம் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதும் அதைத் தக்க வைத்துக் கொள்வதுமேயாகும்.

அரசாங்கத்தை நடத்திச் செல்லுகிற அமைப்பு அரசியல் கட்சிகள் ஆகும். ஒரு கூட்டணி அரசாங்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இடம் பெற்றிருக்கலாம்.

அதிகாரத்தில் உள்ள ஓர் ஆளும் அரசியல் கட்சி அல்லது குறிப்பிட்ட பிரச்னைகளின் மீது குறிப்பாகவும் விமர்சனங்களை முன் வைத்தும் பகுப்பாய்வு செய்தும் செயல்பட்டு வருகிற கட்சி ஆளும் கட்சி எனவும் மற்றும் எதிர்வரிசையில் அமர்கிற கட்சிகள் எதிர்க்கட்சிகள் என அழைக்கப்படுகின்றன.

ஓர் அரசியல் கட்சி கொண்டிருக்க வேண்டிய அத்தியாவசிய அம்சங்கள்

​முறையான உறுப்பினர் தகுதி படைத்த மக்களின் அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாக அது இருக்க வேண்டும்.

அது மிகத் தெளிவாகத் தனது கொள்கைகளையும் திட்டங்களையும் வரையறுத்து அறிவிக்க வேண்டும்.

கட்சியினுடைய உறுப்பினர்கள் அதனுடைய தத்துவார்த்தம் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

அரசியல் – அதிகாரத்தை ஜனநாயகப்பூர்வமான செயல்முறைகளின் மூலமாகப் பெறுவதை அது இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

மிகத் தெளிவான ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைமையுடையதாக அது இருக்க வேண்டும்

அரசாங்கக் கொள்கைகளின் பிரதான பகுதிகளின் மீதும் பரந்த பிரச்சனைகளின் மீதும் அது தன் கவனத்தைக் குவிப்பதாக இருக்க வேண்டும். 

கட்சி அமைப்பின் வகைகள்

இந்தியா பலகட்சி அமைப்பு முறையைக் கொண்டதாகும். இந்திய அரசியல் பல்வேறு தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. வேறு சில நாடுகள் ஒரு கட்சி அமைப்பு முறையைக் கொண்டவையாக உள்ளன. கடந்த காலத்தில் ஒன்றாயிருந்த சோவியத் ஒன்றியம் மற்றும் யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் ஒற்றை அரசியல் கட்சி முறையைக் கொண்டவையாயிருந்தன.   

இரண்டு கட்சி அல்ல துபை-பார்ட்டி அமைப்பு முறையில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இங்கிலாந்து, அமெரிக்கா , ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை இருகட்சி அமைப்பு முறையைக் கொண்டவையாகும். இந்நாடுகளில் வேறு கட்சிகளும் இருக்கக்கூடும். ஆனால் அவற்றின் பாத்திரம் முக்கியத்துவமற்ற வகையிலேயே பொதுவாக அமைந்திருக்கும்.

எடுத்துக்காட்டாக இங்கிலாந்தில் இரண்டு முக்கியக் கட்சிகள் உள்ளன. பழமைவாதக் கட்சி (Conservative Party) மற்றும் தொழிற்கட்சி (Labour Party), அமெரிக்காவில் உள்ள இரண்டு முக்கியக் கட்சிகள்: குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி, ஜப்பான், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றம் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பலகட்சி அமைப்பு முறைகள் உள்ளன.

பலகட்சி அமைப்பு (Multi-party system)

சமுதாய அமைப்பில் ஏற்பட்ட பிளவுகளும் தேசிய அளவில் ஏற்பட்ட வேறுபாடுகளும் பலகட்சி முறை அமைப்பு உருவாவதற்குக் காரணம். இதில் இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் இருக்கும். இதற்கு ,அர்ஜென்டினா, ஆர்மீனியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், குரோஷியா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, இந்தியா, இந்தோனேசியா, அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, லெபனான், மாலத்தீவுகள், மெக்சிகோ, மால்டோவா, நேபாளம், நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, செர்பியா, ஸ்பெயின், இலங்கை, சுவீடன், சுவிட்சர்லாந்து, தைவான், துனிசியா மற்றும் உக்ரைன் ஆகியவை உதாரணமாகும். 

நன்மைகள்

1. மந்திரி சபை எதேச்சதிகாரம் இருக்காது.
2. தனி மனித சுதந்திரம் அதிக அளவில் இருக்கும். பலவிதமான கருத்துகள் இக்கட்சிகளால் பிரதிபலிக்கப்படும்.
3. இம்முறையில் வாக்காளர்களுக்கு தங்கள் விருப்பப்படி முடிவெடுக்க அதிக அளவு வாய்ப்பு கிடைக்கும்.

தீமைகள்

1. நிலையான அரசாங்கம் இருக்காது
2. அரசியல் கட்சிகளில் பலபிரிவுகள் உண்டாவதால் நாட்டில் குழப்பம் ஏற்படும்.
3. கட்சிகள் மக்களை எதிரி கூட்டங்களாகப் பிரிக்கும்.
4. எந்த மந்திரி சபையாலும் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் செய்ய இயலாது. கூட்டணி மந்திரிகள் குறுகிய காலத்திற்கே பதவியில் இருப்பார்கள்.
5. பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் முறை ஏற்பட்டு அரசியல் புனிதத்தைக் கெடுக்கும்

இருகட்சி அமைப்பு(two-party system)

இரு கட்சிகள் இருக்கும் அதில் ஒன்று ஆளும் கட்சி, மற்றொன்று எதிர்க்கட்சி இதற்கு உதாரணம்.

1. இங்கிலாந்து – இங்கு பழமைவாத கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி, இதற்கு உதாரணம்.
2. ஐக்கிய அமெரிக்க நாடுகள் – ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக்கட்சி என்பன.

மேலும், பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்டாரியோ, கியூபெக், மானிடோபா மற்றும் சிறிய நியூ பிரன்சுவிக், நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடோர், நோவா ஸ்கோடியா, பிரின்ஸ் எட்வர்ட் தீவு மற்றும் யூகோன் பிரதேசங்கள் இரண்டு கட்சிகள் முறையைப் பின்பற்றுகின்றன.

நன்மைகள்

1. பாராளுமன்ற அரசாங்க முறையில் நிலையான ஆட்சியை கொடுக்கும்.
2. இரு கட்சி அமைப்பில் தான் உண்மையான இரு கட்சிமுறையை ஏற்படுத்த முடியும்.
3. கட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் கருத்தை உருவாக்குவது எளிதாகும்.
4. வாக்காளர்கள் இக்கட்சிகளின் கொள்கைகளையும் திட்டங்களையும் நன்கு அறிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தமான கட்சியை தேர்ந்தெடுக்கலாம்.
5. எதிர்க்கட்சி சிறப்பாகப் பங்காற்ற முடியும். அரசாங்கத்திடம் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்ட முடியும்.

தீமைகள்

1.அமைச்சரவை எதேச்சதிகாரத் தன்மையை அதிகரித்து சட்டசபையின் கௌரவத்தைக் குறைக்கும்.
2. ஆளும் கட்சி கொடுங்கோன்மை ஆட்சி புரியும் நிலை ஏற்படும்.
3. கட்சி மற்றும் கட்சித் தலைவன் மீது ஒரு கண்மூடித்தனமான விசுவாசம் ஏற்படும்.

ஒற்றைக்கட்சி அமைப்பு (one-party system)

1. ஒற்றைக்கட்சி அமைப்பில் ஒரே ஒரு கட்சி தான் இருக்கும். இந்த நாட்டின் சட்டம் மாற்று கட்சிகளை அனுமதிக்காது. 

2. 20ஆம் நூற்றாண்டின் ஆராம்பத்தில் ஏற்பட்ட ரஷ்யப் புரட்சியே ஒற்றைக்கட்சி அமைப்பு உருவாவதற்கு அடிகோலியது. இதற்கு உதாரணம் கம்யனிஸ்ட் சீனா, துருக்கி, கமரூன், துனிசியா, துனிசியா, சிரிய குடியரசு, ஆப்கானிஸ்தான்

நிறைகள்

1. வீண் விவாதங்களில் நேரத்தை வீணாக்காமல் அரசாங்கம் திறமையாக செயல்படும்.
2. உயர்ந்த தேசிய ஒழுங்குமுறையிருக்கும்.
3. அரசியல் எதிர்கட்சியினர் இருக்கமாட்டார்கள்.
4. அனைத்து துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும் வாய்ப்பு.

தீமைகள்

1. கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் வேறுபாடு இருக்காது.
2. இதில் சட்டமன்றம் கொள்கை உருவாக்கும் அமைப்பாக இருக்கும். அங்கு மனம் திறந்த விவாதங்களுக்கோ செயலாற்றும் தன்மைக்கோ இடமிராது.
3.இத்தகைய கட்சி ஆட்சி சர்வாதிகார ஆட்சிக்கும் எதேச்சதிகாரத்துக்கும் வழிவகுக்கும்.
4. மக்கள் இரக்கமற்ற முறையில் ஒடுக்கப்படுவார்கள்
5. தனிமனித ஆளுமைக்கு இங்க மதிப்பிராது.
6. மக்களால் எந்த உரிமையையும் அனுபவிக்க முடியாது.

ஒரே நாடு ஒரே கட்சி என்ற கொள்கை, ஒற்றை அதிகாரக் குவிப்பினை நோக்கி செல்வதுடன் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும். பல கட்சி முறை தோல்வி அடைந்துவிட்டது என்ற அமித்ஷா பேச்சு ஒற்றை கட்சி முறையை நோக்கிய நகர்வாக பார்க்க முடிகிறது. நாட்டில் ஏராளமான சீர்திருத்தப் பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இதில், ஒற்றை நகர்வு மீண்டும் முடியாட்சிக்கே கொண்டுசெல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com