Enable Javscript for better performance
Slavery is a Violent Crime- Dinamani

சுடச்சுட

  

  இனி யாருக்காகவும் கூனிக் குறுகி வேலை செய்ய வேண்டியதில்லை! மனதை நெகிழ வைக்கும் உண்மைச் சம்பவம்!

  Published on : 18th September 2019 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  slavery_and_bonded_labor

   

  முத்து- சுந்தரம் தம்பதியின் மகள் சுந்தரவல்லியும் மகன் அன்புவும் ஒரு ஓலைக் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தனர். எதிர்பாராத நேரத்தில் திடீரென குடிசை தீப்பற்றி எரிவதைப் பார்த்த அவர்களின் தாத்தா மற்றும் பாட்டி குழந்தைகளைத் தூக்கத்திலிருந்து அவசர அவசரமாக எழுப்பி வெளியே அழைத்து வந்தார்கள். சற்று நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த குடிசையானது எரிந்து சாம்பலானது.

  இந்த எதிர்பாராத சம்பவம் அவர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த வயதான பாட்டி தன்னுடைய மகன் மற்றும் மருமகள் வேலை செய்து கொண்டிருக்கும் இடத்திற்கு சென்று நடந்ததைக் கூறி அழுதார்.

  'அழுது கொண்டே ஓடி வந்த என் மாமியார் குடிசை எரிந்த சம்பவத்தைக் கூறியதும் நானும் கண்ணீர் விட்டு அழுதேன்' என்று முத்து சோகத்துடன் கூறினார். அதன்பிறகு முத்து அருகிலுள்ள கிராமத்தில் உள்ளவர்கள் இடம் விசாரித்த போதுதான் அவர்களின் வீட்டிற்கு தீ வைத்தது மரம் வெட்டும் குழுவின் முதலாளி என்று தெரிய வந்தது.

  'அந்த வீடு இருந்ததால்தானே நீங்கள் அங்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி சொன்னீர்கள்? அதனால்தான் அந்த வீட்டிற்கு யாரோ தீ வைத்து விட்டனர். இனி அங்குப் போய் எந்த பயனும் இல்லை' என்ற முதலாளியின் பேச்சு முத்துவிற்கு அவர் மீது பலத்த சந்தேகத்தை எழுப்பியது. மிகுந்த வேதனையுடன் அவர்களுக்கு நடந்த கொடுமைகளைப் பற்றி முத்து நம்மிடையே கூறினார்.

  வாழ்வின் இருண்ட பக்கங்கள்

  சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மரம் வெட்டும் குழுவின் முதலாளி முத்து - சுந்தரம் தம்பதியை அழைத்து ரூ.1000 கொடுத்து மரம் வெட்டும் வேலைக்கும் தோட்ட வேலை செய்வதற்கும் ஆட்கள் வேண்டுமென்றார். நல்ல சம்பளம் என்பதால் அதை ஒப்புக் கொண்ட இருவரும் வேலை செய்ய முதலாளியின் பணியிடத்திற்குச் சென்றனர். வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் அவர்கள் தங்குவதற்குக் கூட இடம் இல்லை என்பது தெரிய வந்தது. எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்தனர். ஒரு புறம் அவளுக்கு அச்சம் ஏற்பட்டாலும் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து விடுவோம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆதலால் தொடர்ந்து அவரிடமே வேலை செய்ய தங்களது மூன்று குழந்தைகளையும் அவர்களின் தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் விட்டுச் சென்றனர்.

  அந்த ஏதுமறியா அப்பாவிகள் ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு தங்களது அடிப்படை மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் பல ஆண்டுக் கணக்கில் இழந்து தத்தளித்து உள்ளனர்.

  பறிபோன சுதந்திரம்

  அந்த நேரத்திற்கு ஒப்புக் கொண்ட வேலைக்காக முத்து - சுந்தரத்தின் வாழ்க்கை முற்றிலுமாக மாற்றமடைந்தது. ஒரு சராசரி மனிதனுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும் அவர்கள் எப்பொழுது எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், எங்குச் செல்ல வேண்டும், எங்கு தங்க வேண்டும், எப்பொழுது தூங்க வேண்டும் போன்ற முதலாளியின் கட்டளைக்கேற்ப அவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாற்றமடைந்தது.

  உழைப்புச் சுரண்டல்

  ஒவ்வொரு நாளும் அவர்கள் காலை முதல் மாலை வரை மரங்களை வெட்டி செதுக்கி மூட்டைகளாக அதை வண்டியில் ஏற்றும் வரை வேலை செய்ய வேண்டி இருந்தது. இப்படி கடினமாக உழைத்ததால் அவர்களின் கைகள் மரத்துப் போய் பாளம்பாளமாக வெடித்தாலும் மருத்துவ வசதியை அவர்கள் நாடவில்லை. மேலும் முதலாளிக்கு அவர்களின் உடல்நிலை பற்றி அக்கறை இல்லாமல் அவர்களை வேலை வாங்கினார். முதலாளியின் வசைச் சொற்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்காகவே அவர்கள் தொடர்ந்து அங்கு வேலை செய்தனர்.

  ஊதியமற்ற உழைப்புச் சுரண்டல்

  ஒரு வாரம் முழுக்க வேலை செய்தாலும் முத்து மற்றும் சுந்தரம்  என இருவருக்கும் சேர்த்து ரூபாய் 200-300 வரை மட்டுமே கூலியாகக் கிடைத்தது. அதனைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒருவருக்கு ஒரு நாளுக்கு 14 - 21 ரூபாய் வரை மட்டுமே கிடைத்திருக்கிறது. அதை வைத்துக் கொண்டு வாங்கிய கடன் தொகையை மட்டுமல்ல அதற்கான வட்டியைக் கூட அவர்களால் செலுத்த முடியவில்லை. மேலும் அவர்கள் வாங்கிய கூலி அடிப்படையான வாழ்க்கைக்குப் போதுமானதாக இல்லை. அதைப் பற்றி முதலாளியிடம் கேட்டால், அவர் கத்தி பேச ஆரம்பித்து விடுவார். 'உங்களின்  கூலியிலிருந்து எனக்குச் சேர வேண்டிய தொகையை கழித்து கொள்கிறேன்' என்று முதலாளி அடிக்கடி கூறியதாக முத்து நம்மிடம் தெரிவித்தார்.

  பாதுகாப்பற்ற சூழல்

  முத்துவும் சுந்தரமும் சென்னை விமான நிலையம் பின்புறமுள்ள ஒரு சாலை ஓரத்தில் வசித்து வந்தனர். சில கம்பு மற்றும் தார்ப்பாய் உதவியுடன் நான்கடி உயரமுள்ள ஒரு கொட்டகையை அமைத்து அதில் தங்கினர். ஒவ்வொரு நாளும் பாம்பு, பூச்சி பொட்டு போன்ற விஷப் பூச்சிகளுக்கு அஞ்சி வாழ்ந்து வந்தனர். பரந்து விரிந்த அந்த இடத்தில் ஒரு வேலை செய்யும் நபருக்குத் தேவையான குறைந்த பட்ச தேவைகளான மின்சாரம், தண்ணீர், உணவு, வீடு ஆகியன இல்லாமல் அவர்கள் துன்பப்பட்டனர்.

  சுவர்கள் அற்ற சிறைச்சாலை

  சுந்தரமும் முத்துவும் அவர்கள் வேலை செய்யும் இடத்தைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்று முதலாளி கட்டளை போட்டுள்ளார். அவர்கள் இருவரையும் சுற்றி எந்த ஒரு தடுப்புச் சுவரும் இல்லை என்றாலும் அவர்களால் அவ்விடத்தை விட்டு வெளியே தப்பித்துச் செல்ல முடியவில்லை.

  திருவிழா, உறவினர்களின் சுப மற்றும் துக்க நிகழ்ச்சிகள், மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்ற அவர்களின் வெளி நடமாட்டத்தை முற்றிலுமாக முதலாளி முடக்கி வைத்துள்ளார். ஒருவேளை வெளியே சென்றவர்கள் மீண்டும் பணியிடத்திற்கு திரும்பவில்லை என்றால் முதலாளியின் ஆட்கள் அவர்களைத் தேடி அழைத்து வந்துவிடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கான தண்டனை மிகவும் மோசமாக இருந்தது.

  பலியாடுகளான குழந்தைகள்

  சுதந்திரமான வாழ்க்கையை எதிர்பார்த்த முத்துவிற்கும் சுந்தரத்திற்கும் நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டே சென்றது. ஒருநாள் முதலாளி குழந்தைகளான சுந்தரவல்லி மற்றும் அன்பை அழைத்து வந்து 'நீங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வந்தவர்கள் அவர்களைச் சரியாகப் பார்த்துக் கொள்ளவில்லை ஆகையால் ரூபாய் 20,000 கொடுத்துவிட்டு அவர்களை இங்கு அழைத்து வந்துவிட்டேன்' என்றிருக்கிறார். இதைக் கேட்ட முத்துவும் சுந்தரமும்  மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். 'அவர் பொய் சொல்கிறார் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் இங்கேயே வேலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை இங்கு அழைத்து வந்துள்ளார்' என்றார் முத்து.

  'நம் கண்முன்னே குழந்தைகள் வேலை செய்வதைப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது. அவர்கள் கல்வி கற்று பெரிய ஆட்களாக வர வேண்டும் என்று கனவு கண்டோம். அவர்கள் இங்கு வந்து வேலை செய்யத் தொடங்கிய போது கூட இங்கிருந்து வெளியே சென்று அவர்களுக்குச் சிறப்பான கல்வி வழங்க வேண்டும் என்ற கனவுகளுடன் தான் நாங்கள் இருந்தோம். ஆனால் அது சாத்தியமில்லாமல் போனது' என்றார் முத்து.

  நம்பிக்கையின் விடியல்

  அவர்கள் மீட்கப்பட்ட நாளை நினைக்க முத்துவின் முகம் பிரகாசமடைகிறது. 'நாங்கள் மரம் வெட்டிக் கொண்டிருந்த போது சில பேர் எங்களை நோக்கி பேண்ட் சட்டையில் வருவது தெரிந்தது.' என்றார்.

  'அவர்கள் எங்களுக்கு விடுதலை சான்றிதழ்களைக் கொடுத்து இனி நாங்கள் அங்கு வேலை செய்ய வேண்டாம் என்று கூறினர்'. (விடுதலை சான்று என்பது  கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் முதல் அடையாள சான்று. அது அவர்கள் முன்னர் தெரிந்தோ தெரியாமலோ, எழுத்துபூர்வமாகவோ வாய் ஒப்புதலுடனோ ஒப்பந்த முறையில் வேலைக்காக வாங்கிய கடன் தொகை மொத்தமும் ரத்து செய்யப்பட்டு விட்டதற்கான ஆவணம்.) 'நாங்கள் வீட்டிற்குப் போகலாம் என்று கூறிய வருவாய்க் கோட்டாட்சியர் அவர்கள் இனி யாரிடமும் பணம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்'.

  முனைவர். டி. பரிதா பானு, வருவாய் கோட்டாட்சியர், காஞ்சிபுரம் அவர்கள் முத்து, சுந்தரம், சுந்தரவல்லி, அன்பு மற்றும் கைக்குழந்தை சுப்பிரமணி ஆகியோரை நான்கு ஆண்டு கொத்தடிமை வாழ்க்கையிலிருந்து விடுவித்தார்.

  விடுதலைப் பயணம்

  கொத்தடிமையிலிருந்து மீண்டவர்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புவது அவ்வளவு எளிதல்ல. பல ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு உடல், மன மற்றும் சமூக ரீதியாகப் பல சிக்கல்கள் இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தின் அங்கமாக மாற அவர்களுக்கு போதுமான மனநல ஆலோசனைகளும் தொடர்ச்சியான ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் தேவை. தொடர்ச்சியான சந்திப்புகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சுதந்திரமாக வாழும் மனிதர்களாக மாறுகின்றனர். முத்து மற்றும் சுந்தரத்திற்கும் இதுதான் நடந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து இன்று முத்துவும் சுந்தரமும் இந்த நாட்டின் சுதந்திரமான குடிமக்களாக மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். அவர்களுக்கென்று இப்போது அடையாள ஆவணங்கள், குடும்ப அட்டை, ஊரக வேலைவாய்ப்பு உறுதி அட்டை போன்றவை இருக்கின்றன. மேலும் அவளுக்கென்று ஒரு வீட்டையும் கட்டியுள்ளனர்.

  சுதந்திரத்தால் அடைந்த முன்னேற்றம்.

  தொழிலாளர்கள் கொத்தடிமைகள் இருந்து விடுதலையான பிறகு அவர்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் கண்கூடாகத் தெரிகிறது. முத்துவும் சுந்தரமும் தற்போது விடுவிக்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள். தங்களைப் போன்று கொத்தடிமையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அரசுடன் இணைந்து மீட்பது, அரசின் திட்டங்களை மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்குப் பெற்றுத்தருவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முத்து ஒரு முதியவரை கொத்தடிமையில் சிக்காதவாறு காப்பாற்றியுள்ளதைப் பெருமையுடன் நம்மிடம் தெரிவித்தார்.

  'கொத்தடிமையிலிருந்து வெளியே வருவது சிறைச் சாலையிலிருந்து  வெளி வருவது போல' என்கிறார் சுந்தரம். 'இப்போது எங்கள் வாழ்க்கை எங்கள் குழந்தைகள்… என எல்லாமுமே மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்குத் தேவை ஏற்படும் போது வேலை செய்கிறோம். இல்லை என்றால் எங்களது சொந்த வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். யாருக்காகவும் கைக்கட்டிக் கூனிக் குறுகி வேலை செய்ய வேண்டியதில்லை' என்று பெருமை பொங்க கூறுகிறார் முத்து.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai