நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: திடுக்கிட வைக்கும் முக்கிய விஷயங்கள்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட வழக்குத் தொடர்பாக தேனி போலீஸார், சென்னையில் வியாழக்கிழமை விசாரணை செய்தனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டப் புகார்: திடுக்கிட வைக்கும் முக்கிய விஷயங்கள்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேட்டில் ஈடுபட்ட வழக்குத் தொடர்பாக தேனி போலீஸார், சென்னையில் வியாழக்கிழமை விசாரணை செய்தனர்.

இந்த நிலையில், புகாருக்குள்ளான மாணவர் உதித் சூர்யா தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மருத்துவம் பயில வேண்டும் என்பதால்தான் 3 ஆண்டுகள் நீட் நுழைவுத் தேர்வு எழுதி இறுதியாக தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். ஆனால் மன உளைச்சல் காரணமாக படிப்பில் இருந்து விலகியுள்ளேன். ஹால்டிக்கெட்டில் இருக்கும் புகைப்படமும், செல்போனில் இருந்த படமும் எனதுதான். ஹால்டிக்கெட்டில் இருக்கும் புகைப்படம் போட்டோ ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது. மற்றது செல்போனில் எடுக்கப்பட்டது. அதனால்தான் வேறுபட்டுத்தெரிகிறது.

எனது எதிர்காலம் கருதி, கைது நடவடிக்கையில் இருந்து காக்க வேண்டும், முழு விசாரணைக்கும் ஒத்துழைப்பு அளிப்பேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவல்துறையின் விசாரணையில் உதித் சூர்யா மும்பையில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து படித்துள்ளார். எனவே, அந்த பயிற்சி மையத்தின் மூலம் இந்த ஆள்மாறாட்டம் நடந்துள்ளதா என்ற ரீதியிலும் விசாரணை நடந்து வருகிறது.

ஒருவர் ஆள்மாறாட்டம் செய்ய வேண்டும் என்றால் தனி நபரால் செய்ய முடியாது, இதில் வேறு சிலருக்கும், முக்கிய அதிகாரிகளுக்கும் கூட தொடர்பிருக்கலாம் என்றும், பல லட்ச ரூபாய் கைமாறியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

நீட் தேர்வை வேறொருவர் எழுதியிருப்பாரென்றால், மருத்துவக் கலந்தாய்வில் உதித் சூர்யா பங்கேற்றாரா? அல்லது தேர்வெழுதியவரே பங்கேற்றாரா என்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது.

ஆள்மாறாட்டம் நடந்திருந்தால் கலந்தாய்வின் போதே  சான்றிதழ் பரிசோதனை செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். அப்போது எங்கே கோட்டைவிடப்பட்டது. அது ஏதேச்சையாக நடந்ததா? அல்லது அதற்கும் லஞ்சம் கைமாறியதா?

அப்படி உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்துதான் எம்பிபிஎஸ் சேர்ந்தார் என்றால், இதுபோல ஒரே ஒருவர் மட்டுமே ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருக்க முடியாது, இதுபோன்ற பலர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பகீர் தகவல் கிளம்பியுள்ளது.

அது மட்டுமல்ல, உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசனும், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனும் ஒன்றாக வேலை பார்த்தவர்கள் என்று கூறப்படுவதால், நீட் ஆள்மாறாட்டம் புகாரில் தோண்டத் தோண்ட பூதம் கிளம்பலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு அண்மையில் மின்னஞ்சல் மூலம் புகார் வந்தது.

இதையடுத்து  கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மீதும், அவருக்கு பதிலாக தேர்வு எழுதிய நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், உதித் சூர்யா ஏற்கெனவே இரு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததினால், மூன்றாவது முறையும் தோல்வியடைந்துவிட்டால் மருத்துவம் படிக்க முடியாது என்பதால், உதித் சூர்யாவும், அவரது பெற்றோரும் இணைந்து ஏற்கெனவே நீட் தேர்வு தேர்ச்சி பெற்ற ஒரு நபரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்திருப்பதும், முறைகேட்டில் சிக்காமல் இருப்பதற்கு மும்பையில் தேர்வு எழுதியிருப்பதும் தெரியவந்துள்ளது.

சென்னையில்  விசாரணை:  இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள உதித் சூர்யா வீட்டுக்கு தேனி மாவட்ட காவல்துறையின் தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை வந்தனர். உதித் சூர்யா வீடு புதன்கிழமை முதல் பூட்டப்பட்டிருந்ததால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர்களிடம் விசாரணை செய்தனர். அதேபோல சென்னையில் வசிக்கும் உதித் சூர்யாவின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடமும் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கு உதித் சூர்யாவையும், அவருக்கு பதிலாக தேர்வு எழுதிய நபரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com