நீதித் துறையில் பிற மாநிலத்தவரை நுழைக்க முயற்சியா? பணியாளர் தேர்வாணையம் செவிசாய்க்குமா?

தமிழ்நாட்டில் 176 குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பம் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம்
நீதித் துறையில் பிற மாநிலத்தவரை நுழைக்க முயற்சியா? பணியாளர் தேர்வாணையம் செவிசாய்க்குமா?


தமிழ்நாட்டில் 176 குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகளுக்கான தேர்வு விண்ணப்பம் கோரி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 09.09.2019 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது (அறிவிப்பு எண் - 555/2019). அறிவிக்கையின் 6-ஆம் பக்கக் குறிப்பில் “தமிழில் போதுமான அறிவு இல்லாத விண்ணப்பதாரர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் தகுதிகாண் (Probation Period) காலத்திற்குள் தமிழில் இரண்டாம் வகுப்பு மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.” என்று குறிப்பு உள்ளது.

2017 செப்டம்பரில் அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்விலும், 2018 பிப்ரவரியில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. பொதுத் தேர்விலும், 2019 ஏப்ரலில் மின்வாரியத்திற்கான பொறியாளர் தேர்விலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குஜராத்தில் மாவட்ட அளவிலான நீதிபதிகள் தேர்வுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் (நாள் – 26.08.2019, அறிவிப்பு எண் - RC/0719/2019-20) குஜராத்தி மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று முன் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மாவட்ட அளவிலான நீதிபதி வேலையில் சேர தமிழ் மொழி அறிந்திருப்பது முன் நிபந்தனை அல்ல, வேலையில் சேர்ந்த பிறகு கற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசே கூறியிருக்கிறது. 

தமிழ்நாட்டில் சிவில் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை, சாட்சியம் உள்ளிட்ட அனைத்தும் தமிழ்  மொழியில் தான் நடக்கும். சிவில் நீதிமன்றங்களில் சொத்துகள் குறித்த வழக்குகள் தான் அதிக எண்ணிக்கையில் நடைபெறும். இந்த வழக்குகளை தீர்மானிப்பதற்கான முக்கிய ஆதாரங்கள் நிலப்பதிவு  ஆவணங்கள், வருவாய் ஆவணக்கள் தான். 

இவை பெரும்பாலும் தமிழில் தான் இருக்கும். பத்திரங்களில் உள்ள வாசகங்களை அறிந்து கொள்ள தமிழ் மொழி மட்டும் தெரிந்திருந்தால் போதாது; உள்ளூர் மொழிநடையும் தெரிந்திருக்க வேண்டும். சிவில் வழக்குகளை கையள்வதில் மொழி சார்ந்து இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் நிலையில், தமிழ் மொழி அறியாதவர்கள் கூட சிவில் நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது தேவையற்ற ஒன்று.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தழுவி வகுக்கப்பட்டதாகவும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ் அறிந்திருக்காவிட்டாலும் கூட தமிழகத்தில் தேர்வு எழுதலாம் என்று விதிமுறைகளில் இருப்பதை மாற்ற முடியாது என்றும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் விளக்கம் அளித்திருக்கிறார். 

இந்த விதிகள் இப்போது கொண்டு வரப்பட்டவை அல்ல... தேர்வாணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே இவ்விதிகள் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவை அனைத்தும் உண்மை; அவற்றில் எதையும், மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால், அந்த விதிமுறைகளின் காரணமாக இதுவரை பாதிப்புகள் ஏற்பட்டதில்லை; இப்போது தான் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. 

அந்த குறிப்பை நீக்கக் கோரி, வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் என பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com