Enable Javscript for better performance
Mamallapuram Butter Ball- Dinamani

சுடச்சுட

  

  மாமல்லபுர வெண்ணெய் உருண்டை பாறை, சீன நாட்டு உயர் அதிகாரிகள் குழு வியப்பு!

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 24th September 2019 11:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  butter_ball  கற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும், புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுர கோவில்கள் நம் பண்பாட்டுச் சின்னங்கள். இவை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  தமிழ்நாடு மாநிலம், காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரம் (மாமல்லபுரம்) பின் கோடு 600024 நகரத்தில் அர்ஜுனன் தபசு புடைப்புச் சிற்பத் தொகுதிக்கு அருகில் கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து பாறை அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 12°38′N அட்சரேகை 80°10′E தீர்க்கரேகை ஆகும் ) கடல் மட்டத்திலிருந்து இந்நகரின் உயரம் 12 மீட்டர் (39 அடி ஆகும்.

  மேலும் படிக்க: பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: மாமல்லபுரம் கடற்கரையில் தூய்மைப் பணி

  கிருஷ்ணனின் வெண்ணெய்ப் பந்து அல்லது வான் இறைக் கல் (Stone of the Sky God) என்று உள்ளூர் பொதுமக்களால் அழைக்கப்படும்,  இந்தப் பெரிய, உருண்டை வடிவப் பாறாங்கல் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து நிற்பதன் மர்மம் இன்றுவரை புரியவில்லை. மாமல்லபுரத்திற்கு அன்றாடம் வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பாறைக் கல்லை வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.  இந்தப் பாறைக்கல் உருண்டை 5 மீட்டர் விட்டமும், 6 மீட்டர் உயரமும், 250 டன் எடையும் கொண்டது. இதன் எடையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 45 டிகிரி சாய்வான பாறைத்தளத்தில் இருந்து உருண்டோடி சமதளத்தில் நின்றிருக்கவேண்டும். எந்த விதப் பிடிப்பும் இல்லாமல் சாய்வான தளத்தில் நிற்பது வியப்பிறகுரியதாகும். 

  மேலும் படிக்க: பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகை: சீன பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் ஆய்வு

  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன் (கி.பி. 630 – 668) என்னும் மாமல்லன் நினைவாகவே மாமல்லபுரம் என்ற துறைமுக நகரம் ஏற்படுத்தப்பட்டது. இம்மன்னன் தன் ஆட்சிக் காலத்திலேயே இந்த உருண்டை வடிவப் பாறைக் கல்லை நகர்த்தி அப்புறப்படுத்த முயன்றுள்ளார். இதுவே இப்பாறையை அப்புறப்படுத்த மேற்கொண்ட முதல் முயற்சியாகும். இதற்குப் பிறகு சுமார் 1250 ஆண்டுகள் கழித்து மெட்ராஸ் கவர்னராகப் பணிபுரிந்த சர். ஆர்தர் ஹேவ்லாக் (Arthur Havelock) என்ற ஆங்கிலேயர் இந்தப் பாறையை அப்புறப்படுத்த முயன்றார். இவர் ஏழு யானைகளைப் பணியில் அமர்த்தி இப்பாறையை அப்புறப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி பலனற்றுப் போனது.

  இந்தப் பாறையை அதன் இடத்தில் நிலைத்து நிற்க வைத்துக் கடவுள் தன் சக்தியைப் புலப்படுத்தியுள்ளார் என்று பலர் நம்புகிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத அமானுஷ்ய சக்தியே இந்தப் பாறையை இந்தச் சாய்வு தளத்திலிருந்து மேலும் நகர முடியாதபடி நிலை நிறுத்தியுள்ளது என்பது வேறு சிலர் நம்பிக்கை. இது இயற்கையான உருவாக்கம் என்பது  புவியியல் விஞ்ஞானிகளின் கருத்தாகும். பாறாங்கல் சரிவதைத் தடுப்பது உராய்வு (Friction) ஆகும்.  நாம் சறுக்கும் தரையில் நிற்கும்போது எப்படி நிற்கிறோமோ அது போலவே இந்தப் பாறையும் நிற்கிறது. புவி ஈர்ப்பு மையம் (Center of gravity) ஒரு சிறிய தொடர்பு பகுதியில் (small contact area) சமநிலைப்படுத்த (balance) அனுமதிக்கிறது. இது போல பல எடுத்துக்காட்டுகளை ஹம்பி மற்றும் ஜபல்பூர் போன்ற இடங்களில் காணலாம்.

  இப்பாறையின் ஆபத்து பற்றி சற்றும் கவலைப்படாத சுற்றுலாப் பயணிகள் பறையின் அடியிலேயே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும், அமர்ந்து இளைப்பாறுவதும்  நாம் அன்றாடம் காணும் காட்சியாகும்.

  சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து வழி நடத்தும் வழிகாட்டிகள் இதன் அடியிலேயே நின்று கொண்டு கிருஷ்ணன் கோகுலத்தில் வெண்ணெய் திருடியதையும் இந்தப் பாறையின் உருண்டை வடிவத்தையும் இணைத்து தினமும் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  பிரதமர், நரேந்திர மோடி, சீன அதிபர், ஜின்பிங், அடுத்த மாதம், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் வருகின்றனர்; இங்குள்ள சிற்பங்களையும் பார்வையிடுகின்றனர். இதற்காக, மத்திய, மாநில அரசுகள், மாமல்லபுரத்தில் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சீன நாட்டு, முக்கிய துறைகளின் உயரதிகாரிகள் குழுவினர், சிற்ப பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்கின்றனர். அப்போது இந்தப் பாறையைப் பார்த்து வியக்கும் சீன அதிகாரிகள், பாறை நிற்பதற்கான காரணத்தை கேட்டு, ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர். பாறையை, உருள விடாமல் தாங்குவது போல் நின்று, புகைப்படம் எடுக்கின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai