Enable Javscript for better performance
Cauvery hokenakkal Forest villages- Dinamani

சுடச்சுட

  

  காவிரி கரைபுரண்டாலும் எங்களுக்கு வறட்சி தான்.. ஒகேனக்கல்லில் ஒரு கிராமம்

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 25th September 2019 05:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  post

   

  கர்நாடகாவில் உற்பத்தியாகும் காவிரி, பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தில் அருவியாய் ஆர்ப்பரித்து கொட்டும் இடம் ஒகேனக்கல். காவிரி நீரானது மேட்டூர் அணையை நிரப்பி, அங்கிருந்து திறக்கப்பட்டு 13 டெல்டா  மாவட்டங்களின் பாசனத் தேவையை பூர்த்தி செய்கிறது. 

  இப்படி காவிரி பொங்கி பிரவாகம் எடுக்கும் ஒகேனக்கல்லில் உள்ள மலைகிராமங்களில் வசிக்கும் மக்கள், வறட்சி தாண்டவமாடும் நேரத்தில் மட்டுமல்ல, வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில் கூட, குடிநீருக்கு தத்தளித்து நிற்பது வேதனையின் உச்சம். 

  ஒகேனக்கல் அமைந்துள்ள பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பிக்கிலி ஊராட்சியில் உள்ளது குறவன்திண்ணை மலை கிராமம். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

  ஆடு, மாடு  வளர்ப்பது தான் இந்த  கிராம மக்களின் பிரதான தொழில். பத்து வருடங்களுக்கு  முன்பு செல்வசெழிப்போடு வாழ்ந்த குறவன்திண்ணை கிராம மக்கள், தற்போது  ஒரு குடம் தண்ணீருக்காக நான்கு கிலோமீட்டருக்கு அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  பள்ளி  முடிந்து வீடு திரும்பியதும், குடங்களை எடுத்துக்கொண்டு தண்ணீர்  பிடிக்க செல்வதுதான் இங்குள்ள சிறுவர்களுக்கு வேலை.குறவன்திண்ணை  கிராமத்தில் 2 மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, ஆழ்துளை கிணறுகள் உள்ளன.  மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லை. ஆழ்துளை  கிணறுகளில் இரண்டு பைப் மட்டும் தான் இருக்கிறது.  இங்குள்ள  கிராம மக்கள், தேவைக்கு ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு மணி நேரமாகிறது.  அதுவும் நீரை ஊற வைத்து, பின்புதான் எடுக்கமுடிகிறது. இதனால் ஊர்  மக்களே குடும்பத்திற்கு 3 குடம் என்று முடிவு செய்து, தண்ணீர்  பிடித்துச்  செல்லும் நிலை தொடர்கிறது.

  ஒகேனக்கல் அமைந்துள்ள பென்னாகரம் தாலுகாவின் வட்டுவனஹள்ளி ஊராட்சியில் கோட்டூர்மலை, ஏரிமலை, ஆலகாடு மலை என்று 3 மலைகிராமங்கள் உள்ளன.  இங்குள்ள அலக்காடு  பகுதியில் பாறை இடுக்கின் சுனையில் இருந்து வரும்  ஊற்று நீரை, மணிக்கணக்கில் காத்திருந்து வடிகட்டி பிடித்து குடிக்கும் நிலையில் தான் அங்குள்ள மக்கள் இருக்கின்றனர்.   சுகாதாரமற்ற இந்த தண்ணீரை குடிப்பதால்,  இப்பகுதி மக்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்படுகிறது. ஆனால்,  வேறு  வழியின்றி இந்த தண்ணீரையே பயன்படுத்தும் நிலையில் மலை கிராம மக்கள் உள்ளனர். இதேபோல், பென்னாகரம் அருகேயுள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்குட்பட்டது பண்ணப்பட்டி மலை கிராமம். காடு, மலை சார்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

  இங்குள்ள மக்கள், தங்கள்  இருப்பிடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னாறு வனப்பகுதிக்குள் நடந்து சென்று, ஊற்று தோண்டி சேறு கலந்த தண்ணீரை சேகரித்து வந்து, குடிநீராக பயன்படுத்தும் அவல நிலை இருந்தது. தன்னார்வலர் ஒருவர்  அமைத்துக் கொடுத்த ஆழ்துளை கிணற்றால், தற்போது தண்ணீர் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைத்துள்ளது.வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு ஒகேனக்கல் சொர்க்கமாய் தெரிகிறது. ஆனால், அதனையொட்டி வாழும் மக்களுக்கு வேதனையின் சுவடுகளே அதிகமுள்ளது. காவிரி பொங்கி வழிந்தும், தாகம் தீர்க்க வழியில்லை என்ற ஏக்கமே  மேலோங்கி நிற்கிறது. தண்ணீருக்கு தத்தளிக்கும் ஒகேனக்கல் மலைகிராம மக்கள், குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். மழை,  பனிக்காலங்களிலும் கடுமையான காற்று வீசும் காலங்களிலும், இவர்கள் மிகுந்த  சிரமத்திற்கு ஆளாகி  வருகின்றனர். இவர்களுக்கு வனவிலங்குகளின் அச்சுறுத்தலும்  நிறையவே உள்ளது.  இவர்களுக்குத்  தேவையான தரமான சாலை வசதி, குடியிருக்க தரமான நீடித்து நிலைக்கத் தக்க வீடுகள்  மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தால்  இயற்கையோடு இணைந்து வாழும்  இந்த மக்களின் வாழ்வு மேம்படும் என்கின்றனர் பழங்குடியினர் நலஆர்வலர்கள்.

  சுகாதாரமற்ற நீரால் உடல்நலம் பாதிக்கிறது:
  மலை கிராம மக்கள், வனப்பகுதிக்குள் தண்ணீரை தேடி, கூட்டமாகவே செல்ல வேண்டியுள்ளது. இப்படி தண்ணீர் பிடிக்கச் சென்று விட்டால், எங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஆளில்லை என்ற நிலையில், கைக்குழந்தைகளை இடுப்பில்  சுமந்தபடி, தண்ணீர் தேடி அலையும் அவலமும் உள்ளது. தனியாக வனப்பகுதிக்கு செல்வது ஆபத்தை வரவழைக்கும் என்பதால், தண்ணீர் பிடிக்க கூட்டமாக செல்கிறோம். அங்கு மணலில் குழி தோண்டி, அதில் ஊறும் சேறு கலந்து தண்ணீரை  பாத்திரங்களில் பிடித்து, குடங்களில் நிரப்பி தலைச்சுமையாக சுமந்து வந்து குடிக்கிறோம். சுகாதாரமற்ற நீரை குடிப்பதால் உடல்நல பாதிப்புகளும் தொடர்கிறது என்கின்றனர் மலைகிராம பெண்கள்.

  50 ஆண்டுகளாக போராடியும் பலனில்லை:
  கோட்டூர் மலையானது, பெல்ரம்பட்டியை அடுத்த கான்ஸால்பெயில் அடிவாரத்திலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள மக்கள் மலைக்கு சாலை வசதி கேட்டு, கடந்த 50 ஆண்டுகளாகப் போராடி விட்டு, அவர்களே  பின்னர் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மண்சாலை அமைத்துள்ளனர். ஒழுங்கான பாதை வசதியற்ற கரடுமுரடான மலையில், சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்து சென்றால் கோட்டூர் மலையை அடையலாம். இங்கிருந்து ஏரிமலை, அலக்காடு  மலையை இணைக்கும் எந்த சாலை வசதிகளும் கிடையாது. நடைவழித் தடங்கள் மட்டுமே உண்டு என்கின்றனர் இங்குள்ள மக்கள்.

  பெண் கொடுக்க மறுக்கிறார்கள்:  
  குறவன்திண்ணை விவசாயிகள் கூறுகையில், நாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு அதிக அளவில் குடிநீர் தேவை. இதனால் விவசாயத்தை விட குடிநீர் கொண்டு வருவதே எங்களின் முழுநேர வேலையாக உள்ளது. எங்களது பிள்ளைகளை பொறுத்தவரை தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி, எங்களுடன் இருப்பதில்லை. பென்னாகரம், பாலக்கோடு, ஏரியூர் பகுதிகளிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தங்கி விடுகின்றனர். இது ஒருபுறமிருக்க, தண்ணீர் பிரச்னையை  காரணமாக வைத்து, இந்த ஊரில் பெண் கொடுக்கவோ, அல்லது பெண் எடுக்கவோ யாரும் முன்வருவதில்லை என்றனர்.

  வெளிமாநிலங்களுக்கு செல்வது அதிகரிப்பு:
  தண்ணீர் பிரச்னை காரணமாக, மலைகிராமங்களை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டவர்கள், கர்நாடகா,  கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டனர். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், தண்ணீர் பிரச்னை காரணமாக குறித்த  நேரத்தில் செல்லமுடிவதில்லை. இதையெல்லாம் எடுத்துக்கூறி, அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், அந்த நேரத்தில் மட்டும் சம்பவ இடத்திற்கு வரும் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி  அளிப்பார்கள். அதன் பிறகு எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இதே போல், பலமுறை தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியும் பலனில்லை என்பதும் மக்களின் குமுறல்.   

  சொந்த வீடு, கறவை மாடு கலெக்டர் உறுதி:
  பென்னாகரம் தாலுகாவிலுள்ள அலக்கட்டு மலைகிராமத்தில், சமீபத்தில் 10கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘இங்கு வாழும் மக்களுக்கு மலைக்கு கீழ்  பகுதியில் சமதள பரப்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1 ஏக்கர் நிலம்  வழங்கவும், சொந்த வீடு கட்டிக்கொடுக்கவும், மலைகிராம மக்களின்  வாழ்வாதாரத்திற்காக கறவை மாடுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவும்,  மாவட்ட நிர்வாகம்  பரிசீலனை செய்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒப்புதல் அளித்தால் இந்த திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும்,’’ என்றார். இதையடுத்து அலக்கட்டு மலைகிராம மக்கள்  அனைவரும் அந்த திட்டத்தில் பயன்பெற ஒப்புதல் தெரிவித்தனர்.  உடனடியாக  கையொப்பம் இட்டு ஒப்புதல் கடிதத்தை கலெக்டரிடம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai