கைக்குலுக்குவதால் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளலாமா? 

மனிதர்களிடமிருந்து உடல்மொழி வெளிப்படும்போது, அது அவர்களது கைகளின் செயல்பாடுகளின் மூலமே அதிகம் பிரதிபலிக்கிறது.
கைக்குலுக்குவதால் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளலாமா? 

மனிதர்களிடமிருந்து உடல்மொழி வெளிப்படும்போது, அது அவர்களது கைகளின் செயல்பாடுகளின் மூலமே அதிகம் பிரதிபலிக்கிறது. அதில் கைகுலுக்கல் முதன்மையானது. இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டில் இரண்டு நபர்கள் சந்திக்கும்போது கைகுலுக்கிக்கொள்வது இயல்பான செயலாக இருக்கிறது. ஆனால், மேலைநாடுகளில் மனிதர்களுக்குள் நடக்கும் சந்திப்புகளில் உறவுகள் மேம்பட கைகுலுக்கல்கள் மிகப் பெரிய பங்கை வகிக்கின்றது.

உலகம் முழுக்க இரண்டு நபர்கள் சந்திக்கும்போது கைகுலுக்குவது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கம். ஆனால், கைகுலுக்கல் நடைபெறும் ஒவ்வொரு தருணத்திலும் யார் முதலில் கைகுலுக்குவது? என்ற ஒரு சிக்கலை மனிதர்கள் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியே கைகுலுக்கும்போதும், கைகுலுக்க முதலில் கை நீட்டுபவர் தாழ்ந்தவர் என்றும், இரண்டாவதாக கை நீட்டுபவர் முக்கியமானவர் என்றும் ஒரு பொதுக் கருத்து இருக்கவே செய்கிறது. யதார்த்தத்தில் அப்படி இல்லை.

யார் எப்படி இருந்தாலும் இருவருக்கிடையே முதலில் கைகுலுக்க கை நீட்டுபவர்தான் நட்பில் உயர்ந்தவராகிறார் என்கிறது உடல்மொழி ஆய்வு. சில நபர்களுக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கும். புதிதாக சந்திக்கும் யாருடனும் உடனே கைகுலுக்கத் தொடங்கிவிடுவார்கள். ஒருவருடன் கைகுலுக்கும்போது சந்தர்ப்பம் பார்த்து பொருத்தமானதாக இருந்தால் மட்டுமே கைகுலுக்க வேண்டும். இல்லையென்றால் அது அந்தச் சூழ்நிலையையே மாற்றிவிடும்.

ஒருவருடன் கைகுலுக்க முற்படும்போது இந்த சந்திப்பு சரியானதுதானா? நான் இவரிடத்தில் வரவேற்கப்படுகிறேனா? என்னை சந்திப்பதில் இவர் சந்தோஷப்படுகிறாரா? நான் இவரை கட்டாயப்படுத்துகிறேனா? என்று சில அடிப்படைக் கேள்விகளை ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்தக் கேள்விகள் எல்லாம் இயல்பாக எட்டிப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. ஆனால், அதைக் கவனிக்காமல், முக்கியத்துவம் தராமல், உதாசீனப்படுத்தி, சூழ்நிலையின் படபடப்போடு நகர்ந்து செல்கிறார்கள். இதனால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டுவிடுகிறது.

கைகுலுக்கல் ஒரு மரியாதையின் வெளிப்பாடு. இரண்டு உடல்களின் பகுதிகள் இணையும் தருணம். அப்போது உடல் சுத்தம், இறுக்கம், அவஸ்தை என்ற உள்காரணங்களோடு சிலர் (ஆண்கள்) கைகுலுக்கமாட்டார்கள். இது ஒருவகை இயல்பு. அவர்கள் சந்திக்கும்போது தலையசைப்பார்கள், அல்லது ஒற்றைக் கைகளால் ஹாய் என்பார்கள் அல்லது வணக்கம் தெரிவிப்பார்கள்.

பல இஸ்லாமிய நாடுகளிலும் (நம் ஊர் கிராமங்களிலும்) பெண்கள் கைகுலுக்க மாட்டார்கள். கைகுலுக்கல் தவறான செயல்பாடு என்ற நம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை சந்திக்கும்போது அவர்களுடன் கைகுலுக்க முயற்சிக்கக்கூடாது. உறுதியான கைகுலுக்கலைக் காட்டும் பெண்கள் திறந்த மனமுள்ளவர்களாகவும், விசாலமான எண்ணம் கொண்டவர்கள் என்ற எண்ணத்தையே பிரதிபலிக்கிறார்கள்.

கைகுலுக்கல் நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் ரோம் நகரில் இரண்டு நபர்கள் சந்தித்து கைகுலுக்கும்போது, இரண்டு வீரர்கள் கைகளைப் பின்னிக் கொண்டு மல்யுத்தம் செய்வது போலவேயிருந்தது. காரணம், கைகுலுக்கலில் அவர்களின் உள்ளங்கைகளின் நிலை மாறிக்கொண்டே இருக்கும். யாருடைய கை மேலோங்கி வருகிறது என்பது அவர்களுக்குள் ஒரு போட்டியாகவே இருந்தது. கைகுலுக்கலின் மூலம் உடல்மொழி ஒவ்வொரு மனிதர்களுக்குமான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டுமிடம் அதுதான்.

இரண்டு நபர்கள் சந்தித்து கைகுலுக்கும்போது, அவர்களுக்கு இடையில் அதிகாரம் - சமரசம் - பணிவு என்று மூன்று விதமான மனோபாவங்களில் ஒன்று மௌனமாக வெளிப்படுகிறது. அதை கவனித்து அறிவதுதான் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது. கைகுலுக்கும்போது ஒவ்வொருவரின் மனோபாவம் வெளிப்படுவதை கூர்ந்து கவனித்தால், “இவன் என்னை அதிகாரம் செலுத்த முயற்சிக்கிறான், இவனிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவன் அதிகாரம் செலுத்த முற்படுகிறான்’’ என்பதும், 

“இவனுடன் சௌகர்யமாக இருக்க முடியுது.
இவன் எனக்கு இணையானவன்’’ என்பதும், “இவன்கிட்ட என்னால அதிகாரம் செலுத்த முடியும். இவன் மீது ஆளுமையை செலுத்த முடியும். இவன் பணிவானவன்’’ என்பதும், ஒவ்வொரு கைகுலுக்கலின்போதும் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும். அதை உணராமல் கடந்துபோகும்போது தான் உறவுகளுக்குள் பாதிப்புகளும், கசப்புகளும் வருகிறது.

கைகுலுக்கலில் கரங்களின் நிலை கைகுலுக்கலில் கைகளின் நிலைதான் நம்மை அடுத்தவருக்குக் காட்டுகிறது, நமது குணாதிசயத்தை அடுத்தவருக்கு புரியவைக்கிறது. கைகுலுக்கும்போது, உள்ளங்கை கீழே பார்த்தபடி வைத்திருந்தாலோ அல்லது உள்ளங்கை மேல்நோக்கி வைத்திருந்தாலோ அவர் செல்வாக்கை செலுத்தக்கூடியவர் என்பதும், ஆளுமை மிக்கவர் என்பதும் புரியவைக்கும். அதே நேரம் உறுதியற்ற தன்மையான கைகுலுக்கல் அவர் மிகவும் மென்மையானவர் என்ற கருத்தை மௌனமாகக் காட்டிக்கொடுக்கும்.

உலகம் முழுவதும் சக்தியும், அதிகாரமும் மிளிரும் ஆண்களின் கரத்தையே பெண்கள் விரும்புகிறார்கள். அதேநேரம் இறுக்கமான ஆளுமை வெளிப்படும் கைகுலுக்கலை ரசிப்பதில்லை. கைகுலுக்கலில் உறுதியிருக்கலாம், உத்தரவுத் தன்மை இருக்கக்கூடாது. வில்லியம் சாப்ளின் என்பவர் அலபாமா பல்கலைக்கழகத்தில் 2001ல் கைகுலுக்கலை வைத்து ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

அதில் மனதிலிருந்து எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடிய ஆண்கள் உறுதியான கைகுலுக்கலை காட்டக்கூடியவர்களாகவும், மனதில் நினைத்ததை நேரடியாக வெளிக்காட்டாமல் வெட்கப்பட்டு மூடிமறைத்துப் பேசும் ஆண்கள் மென்மையாக கைகுலுக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்று கண்டறிந்தார். அதே சமயம் பெண்களில் புதிய சிந்தனைகளுக்குத் தயாராக இருப்பவர்கள் உறுதியான கைகுலுக்கலை காட்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் கண்டறிந்தார்.

அவரின் கண்டுபிடிப்புகளைக் கொண்டு, ஆண்கள் ஆண்களிடமும், பெண்கள் ஆண்களிடம் உறுதியான கைகுலுக்கலை உபயோகிப்பது வர்த்தக ரீதியாக உதவுகிறது என்பதை உடல்மொழி வல்லுநர்கள் கண்டடைந்தார்கள். உலகம் முழுக்க எல்லா கண்டுபிடிப்புகளும் ஒரு நாள் வர்த்தக ரீதியாக உபயோகமாவதைப் போலவே, உடல்மொழி ரீதியான கைகுலுக்கலின் ஆய்வையும், அதில் வெளிப்படும் மனநிலையையும் வர்த்தகச் சூழல் வரவேற்று எடுத்துக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com