பொறியியல் பாடத் திட்டத்தில் பகவத் கீதை: மதச்சார்பின்மைக்கு எதிரானதா? உங்களது கருத்து என்ன?

பொறியியல் மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பகவத் கீதை மற்றும் பல்வேறு உபநிடதங்கள் குறித்த புதிய பாடப் பிரிவுகளைச் சேர்த்துள்ளது.
பொறியியல் பாடத் திட்டத்தில் பகவத் கீதை: மதச்சார்பின்மைக்கு எதிரானதா? உங்களது கருத்து என்ன?

சமீப காலமாக கல்வித்துறையில் வெளியாகும் சில அறிவிப்புகள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. புதிய கல்விக்கொள்கை; பள்ளிகளில் ஹிந்தி மொழி, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள், மேல்நிலை வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு உள்ளிட்ட இந்த வரிசையில் தற்போதைய ஹாட் டாப்பிக்.. பொறியியல் படிப்பில் பகவத் கீதை அறிமுகப்படுத்தப்பட்டதுதான். 

பொறியியல் பாடத் திட்டம் மாற்றம்:  

பொறியியல் பாடத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழக பி.இ. படிப்புகளுக்கான பாடத்திட்டம் 2019-ஆம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. 

இதில் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தலின் பேரில், இந்திய வரலாறு, அரசியலமைப்புச் சட்டம், சுற்றுச்சூழல், மேலாண்மை தத்துவங்கள் ஆகிய பாடங்களும் புதிதாக சேர்க்கப்பட்டன.  

பொறியியல் படிப்பில் பகவத் கீதை:

இதன் தொடர்ச்சியாக, ஏஐசிடிஇ-யின் அறிவுறுத்தலின்படி, பொறியியல் மாணவர்களுக்கான பாடத் திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பகவத் கீதை மற்றும் பல்வேறு உபநிடதங்கள் குறித்த புதிய பாடப் பிரிவுகளைச் சேர்த்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்தில் வரும்  தத்துவவியல்(Philosophy) பாடத்தில் இவை சேர்க்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT, CEG, ACT, SAP வளாகத்தில் உள்ள பொறியியல் மாணவர்களுக்கு மட்டும் வரும் கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படுகிறது. 

அதுபோன்று, எம்.இ., எம்.டெக் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தில் இரண்டாம் ஆண்டில் தத்துவப் பாடத்தில் புராணங்கள், உபநிடதங்கள் இடம்பெற்றுள்ளன.

வலுக்கும் எதிர்ப்புகள்: 

முதலில் கட்டாயப் பாடம் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்த நிலையில், இதற்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'கல்வியை காவிமயமாக்கும் பாஜகவின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது' என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விமர்சித்துள்ளார். 

'இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு' என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணா பல்கலை. அறிவிப்பு, மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  கண்டனம் தெரிவித்துள்ளார். 

பகவத் கீதை கட்டாயப் பாடமா?  

அறிவிப்பு வந்த உடனேயே எதிர்ப்பு வலுத்ததை அடுத்து 'பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஏற்கனவே நிறையப் பாடங்களை படிக்கின்றனர். அவர்களுக்கு மேலும் சுமையை கொடுக்க விரும்பவில்லை.

எனவே, இன்றைய அறிவிப்பில் 'கட்டாயப் பாடம்' என்பதை நீக்கிவிட்டு விருப்பப் பாடமாக மாற்ற பரிசீலித்து வருவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார். இதன்பின்னர் நிலைமை சற்று சீராகியுள்ளது என்று கூறலாம். 

மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா? 

இந்தியாவில் சாதி, மதங்களைக் கடந்து 'வேற்றுமையில் ஒற்றுமை'  என்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். நம் நாட்டில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பல மொழி பேசுபவர்கள் வாழ்கின்றனர். இதில், பொறியியல் பாடத்திட்டத்தில் ஒரு மதத்தின் நூல்களை மட்டும் போதிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

அனைத்து மதத்தினைச் சேர்ந்தவரும் பொறியியல் படிக்கின்றனர். அப்படி இருக்க கீதையின் உபவாசங்களை மட்டும் போதித்தால் மற்ற மதத்தினர், தங்களது மதத்தில் உள்ள புனித நூல்களில் இதுபோன்ற கருத்துகள் இல்லையா? என்று கேள்வி எழுப்புகின்றனர். 

'இந்தியா எனது தாய்நாடு; இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர, சகோதரிகள்' என்று பள்ளிகளில் மாணவர்கள் உறுதிமொழி எடுக்கின்றனர். சாதி, மதத்தைக் கடந்து மாணவர்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். இளைய தலைமுறையினர் பள்ளிகளின் மூலமாகவே இத்தகைய பழக்கத்தை கற்றுக்கொள்கின்றனர்.

இப்போது கல்லூரிகளில் இந்த புதிய முறையை புகுத்தும்போது, மாணவர்களிடையே இடைவெளியை அல்லது மற்ற மதத்தினருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் என்றே பேராசிரியர்கள் பலரின் கருத்தாக இருக்கிறது. 

அனைத்து மதத்திற்கும் முக்கியத்துவம்: 

பள்ளிகளில் தமிழ் பாடங்களில் செய்யுளில் இந்து மதம் குறித்த பாடல்கள் இருக்கும். ஆனால், அடுத்த செய்யுளாக கிறிஸ்தவம், இஸ்லாம், புத்த மதம் என அனைத்து மதத்தினரின் ஒரு செய்யுளும் இடம்பெறும். அனைத்து மதச் செய்யுளையும் மாணவர்கள் படிக்கும்போது பெரிதாக வித்தியாசம் தெரியாது. மாறாக அதுவும் மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது. 

தகவல் தொழில் நுட்பத்துறையில் தத்துவப் பாடம் தேவையற்றது. அதையும் தாண்டி அறிமுகம் செய்கிறபோது, அந்தப் பாடத்தில் அனைத்து மதங்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஹிந்து மத போதனைகள் குறித்து, அனைத்துச் சமூக மாணவர்களையும் படிக்க கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல; பள்ளிகளில் ஹிந்தியை கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் சமஸ்கிருதத்தை பாடமாக கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களா?  

இதற்கு பதிலாக, வாழ்வியல், சமூகம் சார்ந்த பாடங்களை மட்டும் படிக்க வலியுறுத்தலாம். அப்படி ஒருவேளை புராணங்களை பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்றால் பகவத் கீதையுடன் மற்ற மதத்தினரின் கருத்துகளையும் பாடமாக வைக்கலாமே? 

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 'தமிழ்' பட்டப்படிப்பைத் தவிர மற்ற துறைகளில் பகவத் கீதை, வேதங்களை சேர்க்காத போது, தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

நாம் கடைபிடிக்கும் மதச்சார்பின்மைக்கு எதிராகவே அண்ணா பல்கலை. அறிவிப்பு இருப்பதாக பெரும்பாலான அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  

குறைந்து வரும் பொறியியல் கல்லூரிகளின் தரம்:

இதுதவிர, தற்போது பொறியியல் படிப்பு மீதுள்ள ஆர்வம் மாணவர்களுக்கு குறைந்து வருகிறது. பொறியியல் கல்லூரிகளின் தரம் குறைந்து வருகிறது. கல்லூரிகள் அதிகமாக இருந்தாலும்,  பொறியியல் படிக்கவில்லை என்றால் வேலை கிடைக்காது என்ற ஒரு பபொதுவான கருத்தும் மக்களிடையே நிலவுகிறது. இதனை களைவதற்கு என்ன செய்யலாம்? என்பது குறித்து பொறியியல் பல்கலைக்கழகங்களும் அரசும் கலந்து ஆலோசிக்கலாம். 

மதச்சார்பின்மையை பாதிக்காது: 

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு குறித்து ஒரு சிலர் நேர்மறையான சில கருத்துகளையும் முன்வைக்கின்றனர்.

அண்ணா பல்கலைக் கழக பேராசியர்களின் ஒருவர் பேசும்போது, 'பகவத் கீதை என்பது அனைத்து மதத்தினருக்கும் ஒரு பொதுவான நூல். அதில் வரும் கதாபாத்திரங்கள் இந்து மதத்தை பிரதிபலித்தாலும், வாழ்வியலுக்கான அறிவுரைகள் இருக்கிறது. இதனை அனைத்து மதத்தினருமே கடைபிடிக்கலாம். மேலும், இதனை  ஏஐசிடிஇ  பரிந்துரைத்து அண்ணா பல்கலைக்கழகம் விருப்பப் பாடங்களில்தான் வைத்துள்ளது. அந்தப் பாடத்திலும் ஒரு பிரிவாக தான் வைக்கப்பட்டுள்ளது. விருப்பமிருந்தால் மாணவர்கள் எடுத்து படிக்கலாம். இல்லையென்றால் விட்டுவிடலாம். இதில் எதிர்ப்பு தெரிவிக்க அவசியமில்லை. 

'மதம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பாடத்தை படிப்பதால் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை; இவை வெறும் பாடங்களே; இதனை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் நாங்கள் வலியுறுத்துவது இல்லை' என்று கல்வி நிறுவனங்கள் சில கூறுகின்றன. 

அமெரிக்காவும் நம் நாட்டைப் போன்று மதச்சார்பின்மையை கடைபிடிக்கும் நாடு தான். ஆனால், அங்குள்ள கல்வி முறையில் பைபிள் கருத்துகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் மதச்சார்பின்மை பாதிக்கப்படாது. மிகவும் பழமையான ஒரு நூல் என்ற அடிப்படையில் தான் இவை பாடங்களாக வைக்கப்படுகின்றன. இதனை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார். 

இதுகுறித்த உங்களது கருத்துகளை கமெண்ட்டுகளில் தெரிவியுங்கள்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com