பணம் வாங்கியது மட்டும்தான் எங்கள் தவறு! கீதாவின் சோகக் கதை!

திருத்தணி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் கீதா மற்றும் ரமேஷ்
பணம் வாங்கியது மட்டும்தான் எங்கள் தவறு! கீதாவின் சோகக் கதை!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் கீதா மற்றும் ரமேஷ் தம்பதியினர். ஒருநாள் செங்கல் சூளை முதலாளி ஒருவர் வீட்டிற்கு வந்து அவர்களிடம் ரூபாய் 5 ஆயிரத்தைக் கையில் திணித்து விட்டு தன்னுடைய சூளைக்கு வேலைக்கு வருமாறு கூறிச் சென்று விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த ரமேஷும் கீதாவும் பணத்தை ஏற்றுக் கொண்டு வேலைக்குச் செல்வது என முடிவு செய்தனர். ஆனால் இத்தகைய முடிவு அவர்களின் சுதந்திரமான வாழ்க்கையைப் பாதிக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இதற்காக ரமேஷும் கீதாவும் கொடுத்த விலை அவர்கள் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு - வேலை, உணவு, தூக்கம் என அந்த முதலாளியின் கட்டளைக்கு அடிபணிந்து வாழ்ந்தனர். குடும்ப நிகழ்ச்சிகளுக்கும் கோயில் திருவிழாக்களுக்கு என வெளியில் எங்கும் செல்ல முடியாமல் அந்தச் செங்கல் சூளையிலேயே அடைபட்டுக் கிடந்தனர்.

முடிவில்லாத உழைப்புச் சுரண்டல்

இடைவேளை கூட இல்லாமல் ரமேஷையும் கீதாவையும் மணிக்கணக்கில் வேலை வாங்கியுள்ளார் செங்கல் சூளை முதலாளி.

'காயம்பட்ட எங்கள் கைகளைப் பாருங்கள். இனிமேல் எங்களால் செங்கற்களைச் செய்ய முடியாது' என்று முதலாளியிடம் கூறினோம். ஆனால் அவரோ, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு போதுமான செங்கற்கள் வேண்டும்' என்று மனசாட்சி இல்லாமல் கூறுவார்.

எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் வாரத்திற்கு ரூபாய் 150 மட்டுமே அவர் கொடுப்பார். அது நம் மாநிலத்தில் ஒரு தொழிலாளிக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் குறைந்தபட்ச கூலியை விடக் குறைவானது.

அப்போது கீதா மற்றும் ரமேஷ் தம்பதியருக்கு 6 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் இருவரும் பாட்டி வீட்டிலிருந்து கொண்டு பால்வாடி சென்று வந்தனர். குழந்தைகளைப் பார்க்கச் சென்று வர முதலாளியிடம் அனுமதி கேட்டாலும் அவர் மறுத்துள்ளார். 'கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு எங்கு வேண்டுமானாலும் போங்கள்' என்று முதலாளி சொல்லுவார். வாங்கும் கூலி அன்றாட தேவைகளுக்குக் கூட போதுமானதாக இல்லாததால் அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

ஒரு நாள் ரமேஷ் மற்றும் கீதாவுக்குத் தெரியாமல் முதலாளி அவர்களின் கிராமத்திற்குச் சென்று இரு குழந்தைகளையும் செங்கல் சூளைக்கு அழைத்து வந்துவிட்டார். ‘பள்ளிக்கூடம் செல்கின்ற குழந்தைகளை இங்கே ஏன் அழைத்து வந்தீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவர்  ‘இங்கிருந்து அவர்களும் செங்கல் அறுக்கட்டும்’ என்று திமிராகக் கூறினார்.  அதிலிருந்து அவர்கள் படிப்பும் வாழ்க்கையும் வீணாகப் போய்விட்டது என்று கூறுகிறார் ரமேஷ்.

'பணம் வாங்கியது எங்களின் தவறு; அதனால்தான் இக்கொடுமையை அனுபவிக்கிறோம்' என்று சோகத்துடன் கூறுகிறார் கீதா. அன்றிலிருந்து குழந்தைகளும் அவர்களுடன் வேலை செய்தனர். குழந்தைகள் வேலை செய்யாமல் விளையாட்டுத்தனமாக இருந்தால் முதலாளி அவர்களின் தலையிலேயே கொட்டு வைப்பார்.

நீண்ட காலம் எதிர்பார்த்த விடுதலை

கடந்த 2013-ஆம் ஆண்டு திருத்தணி மண்டல வருவாய் அலுவலர் தலைமையில் அரசு அதிகாரிகள் குழுவினர் செங்கல் சூளையில் ஆய்வு நடத்தி அக்குடும்பத்தை மீட்டனர். அவர்கள் அங்குச் சென்றபோது சுடும் வெயிலில் குழந்தைகளும் பெரியவர்களும் செங்கற்களைத் திருப்பிப் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதிகாரிகளின் விசாரணையில் அக்குடும்பம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

மண்டல வருவாய் அலுவலர் அவர்கள் மீட்கப்பட்ட அன்றே ரமேஷ், கீதா மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு விடுதலை சான்றிதழ்களை வழங்கினார். அச்சான்றிதழில் அவர்கள் வாங்கிய கடன் தொகை ரத்து செய்யப்படுவது மட்டுமில்லாமல் அவர்கள் கொத்தடிமையிலிருந்து விடுதலையானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டுக்கால சுதந்திரமான வாழ்க்கை

கடந்த 5 ஆண்டுகளாக ரமேஷும் கீதாவும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். விருப்பப்பட்டதை உண்டும் தேவைப்படும்போது உறங்கியும் வாழும் வாழ்க்கையைப் பெரிதும் மதிக்கின்றனர். 'இப்போதுதான் மன நிறைவாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்கிறார் ரமேஷ். 'யாராவது இனி பணம் கொடுத்தாலும் நான் வாங்கப் போவதில்லை. என் குடும்பத்திற்காகக் கடுமையாக வேலை செய்து அவர்களைக் காப்பாற்றுவேன்' என்று உறுதியுடன் கூறுகிறார் அவர்.

ரமேஷுக்கும் கீதாவிற்கும் தமிழக அரசு நிலப் பட்டா வழங்கிய போது அவர்களின் மகிழ்ச்சி இருமடங்கானது.'இதுதான் எங்கள் பெயரில் இருக்கும் முதல் நிலம். அதில் நாங்கள் சொந்தமாக வீடு கட்டி வாழ்வோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இனி யாராவது இங்கு வந்து எங்களை மிரட்டினாலும் நாங்கள் தைரியமுடன் சொல்வோம் இது எங்கள் வீடு, நாங்கள் இங்கு வாசிக்கிறோம் என்று. எங்களைப் போன்ற கொத்தடிமையிலிருந்தவர்களுக்கு நாங்கள் உதவுவோம்' என்று பெருமையுடன் கூறுகிறார் ரமேஷ். தற்போது ரமேஷும் கீதாவும் தினக்கூலிகளாக வேலைக்குச் சென்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றனர். மேலும் ரமேஷ் கூறுகையில், 'இப்போது நாங்கள் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறோம். யாரும் எங்களை இனி இந்த வேலைதான் செய்ய வேண்டும், பணத்தைத் திருப்பி செலுத்த வேண்டும் என்று கூற முடியாது. நாங்கள் எங்குச் செல்ல நினைக்கிறோமோ அங்குச் செல்ல முடியும். எந்த நிகழ்ச்சியானாலும் கலந்து கொள்வோம். நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்.' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com