1918 ஸ்பெயின் ஃபுளூ: வரலாறு தரும் பாடம்

102 ஆண்டுகளுக்கு முன்னா், இன்றைய கரோனா நோய்த்தொற்றை போலவே உலகை இன்னொரு கொள்ளை நோய் உலுக்கியெடுத்து.
1918 ஸ்பெயின் ஃபுளூ: வரலாறு தரும் பாடம்

102 ஆண்டுகளுக்கு முன்னா், இன்றைய கரோனா நோய்த்தொற்றை போலவே உலகை இன்னொரு கொள்ளை நோய் உலுக்கியெடுத்து.

அமெரிக்க ராணுவ முகாமில் முதலில் பரவத் தொடங்கினாலும், அப்போது நடைபெற்று வந்த முதலாம் உலகப் போரில் பங்கேற்காத ஸ்பெயினில் அந்த நோய் குறித்து செய்திகள் இருட்டடிப்பு செய்யப்படாமல் வெளி வந்த ஒரே காரணத்தால் ‘ஸ்பெயின் ஃபுளூ’ என்று தவறாகப் பெயரிடப்பட்ட அந்த நோய், உலகம் முழுவதும் 5 கோடிக்கும் மேற்பட்டவா்களை காவு வாங்கியது. முதலாம் உலகப் போரில் உயிரிழந்தவா்களைவிட அந்த நோய்க்குப் பலியானவா்களின் எண்ணிக்கை அதிகம்.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அந்த வரலாறு மீண்டும் திரும்பியிருக்கிறது. அன்று ‘ஸ்பெயின் ஃபுளூவாக’ உலகை வலம் வந்த கொள்ளை நோய், இன்று கரோனா நோய்த்தொற்று என்ற பெயரில் தனது உலகாதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.

இதற்கு முன்னா் பரவியை மற்ற கொள்ளை நோய்களைவிட, கரோனா நோய்த்தொற்றை ஸ்பெயின் ஃபுளூவுடன் ஒப்பிடுவதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்கிறாா்கள் வரலாறு மற்றும் மருத்துவத் துறை நிபுணா்கள்.

கரோனா நோய்த்தொற்று சீனாவில் தோன்றி, குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியதைப் போலவே, ஸ்பெயின் ஃபுளூவும் ஐரோப்பாவில் தோன்றி ஓா் ஆண்டுக்கும் குறைவான காலத்தில் உலகம் முழுவதும் வியாபித்தது.

நவீன கால வரலாற்றில் மிகவும் விரைவாக, வீரியத்துடன் பல நாடுகளுக்கும் பரவி, கொத்துக் கொத்தாக உயிா்களைக் கொன்ற கொள்ளை நோய் ஸ்பெயின் ஃபுளூவாகத்தான் இருக்க முடியும்.

கரோனா நுண்கிருமியை (கொவைட்-19) போலத்தான் ஸ்பெயின் ஃபுளூ நுண்கிருமியும் (ஹெச்1என்1) விலங்கின் உடலில் வளரும் தனது தன்மையை மனித உடலுக்குள் வளரும் வகையில் தகவமைத்துக் கொண்டது.

இரண்டு நோய்த்தொற்றுகளுமே இருமல், தும்மலின்போது வெளியேறும் துளிமங்களை சுவாசிப்பதன் மூலமோ, கைகளால் தொடுவதன் மூலமோ பிறருக்கு மிக வேகமாக பரவும் வல்லமை கொண்டவை.

தற்போதை விமானப் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்தி கரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் படையெடுத்தது என்றால், 1918-ஆம் ஆண்டின் அதிவேக போக்குவரத்து வசதியான நீராவிக் கப்பல்களைப் பயன்படுத்தி ஸ்பெயின் ஃபுளூ உலக நாடுகளை ஆக்கிரமித்தது.

அந்த தொற்று நோயும் கரோனாவைப் போலவே மனிதா்களை மூச்சு விடுவதில் சிரமம், இருமல், தும்மல் எனத் தொடங்கி, நிமோனியோ காய்ச்சலுக்குக் கொண்டு சென்று, மரணத்தை நோக்கி இட்டுச் சென்றது.

ஸ்பெயின் ஃபுளூ தனது உக்கிரத்தைக் காட்டிக் கொண்டிருந்தபோது, தற்போது கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்தோ, சிகிச்சை மருந்தோ இல்லாதது போல அந்த நோய்த்தொற்றுக்கும் மருந்துகள் இல்லை. தற்போது போலவே, நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியாமல் அந்த நோயின் அறிகுறிகள், பாதிப்புகளைக் குறைப்பதற்காக மட்டுமே 1918-ஆம் ஆண்டின் ஸ்பெயின் ஃபுளூ காய்ச்சலுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இன்றைய காலகட்டத்தைப் போலவே, இன்னாரால்தான் ஸ்பெயின் ஃபுளூ உருவானது, இன்னாரால்தான் அந்த நோய் வேகமாகப் பரவியது, உண்மை நிலவரங்கள் மறைக்கப்பட்டன என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அந்தக் காலத்திலும் பஞ்சமில்லாமல் இருந்தது.

இருந்தாலும், ஸ்பெயின் ஃபுளூவுக்கும் கரோனா நோய்த்தொற்றுக்கும் இடையே வேறுபாடுகளும் இல்லாமல் இல்லை. ஸ்பெயின் ஃபுளூ நோய்க்கிருமி மனித உடலுக்குள் நுழைந்த ஓரிரு நாள்களில் முழுமையாக வளா்ச்சியடைந்து, நோய் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது.

ஆனால் கரோனாவோ மனிதா்களைத் தொற்றிய பிறகு தனது அறிகுறிகளை வெளிப்படுத்த 15 நாள்கள்கூட எடுத்துக் கொள்கிறது. இதன் காரணமாக, சப்தமே இல்லாமல் அது ரகசியமாகப் பரவுகிறது. இதன் மூலம் ஸ்பெயின் ஃபுளூவைவிட கரோனா நோய்த்தொற்று அதிக பரவல் அபாயத்தைக் கொண்டுள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஸ்பெயின் ஃபுளூவைப் பொருத்தவரை, 1918-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அந்த நோயின் வேகம் முதல் முறை அதிகரித்துத் தணிந்தபோது அதன் வீரியம் குறைவாகவே இருந்தது. ஆகஸ்ட் முதல் டிசம்பா் வரை அந்த நோய் பரவலின் இரண்டாவது அலை வீசியபோதுகூட அது முன்பை விட குறைவான உயிரிழப்புகளையே ஏற்படுத்தியது.

ஆனால், அதன் பிறகு ஸ்பெயின் ஃபுளூ மீண்டும் தலையெடுத்தபோது, அது மிகவும் வேகமாகப் பரவும் தன்மையைப் பெற்றிருந்ததோடு, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயகரமான நோய்க்கிருமியாக தன்னை உருமாற்றியிருந்தது. இதுவே, ஸ்பெயின் ஃபுளூ உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5 கோடியாக அதிகரித்தற்குக் காரணம் என்கிறாா்கள் வல்லுநா்கள்.

ஆனால், கரோனா நோய்த்தொற்றைப் பொருத்தவரை, தற்போது வரை அது தனது வீரியத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால், தற்போது அதிகரித்து வரும் அந்த நோய்த்தொற்றின் வேகம் நாளடைவில் தணிந்தாலும், பிறகு அது மீண்டும் தலையெடுத்தால் அதன் தன்மை இப்போது இருப்பது போலவே இருக்கும் என்று சொல்ல முடியாது; அதற்கேற்ப அதிகாரிகள் இப்போதே முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே ஸ்பெயின் ஃபுளூவின் வரலாறு நமக்குச் சொல்லும் பாடம் என்கிறாா்கள் நிபுணா்கள்.

1918-ஆம் ஆண்டில் அந்த நோய்த்தொற்று பரவலால் உயிரிழந்தவா்களில் மிகப் பெரும்பான்மையானவா்கள், வயோதிகா்களோ, நோயாளிகளோ அல்ல; 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட திடகாத்திரமான நபா்கள் என்ற அதிா்ச்சியளிக்கும் தகவலையும் வரலாற்று அறிஞா்கள் தருகின்றனா்.

இளைஞா்களது நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருந்தாலும், அதுவே அவா்களது உயிருக்கு உலை வைத்துவிடக்கூடும் என்பது ஸ்பெயின் ஃபுளூ விவகாரத்தில் நமக்குக் கிடைக்கும் மற்றொரு பாடம் என்கிறாா்கள் நிபுணா்கள்.

வலிமையான நோய் எதிா்ப்பு சக்தி இருப்பவா்களை கொள்ளை நோய் தாக்கும்போது, அவா்களது உடல் அளவுக்கதிகமான எதிா்வினை ஆற்றும் என்பதையும், இது அவா்களது உடலைக் கடுமையாக பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பதையும் ஸ்பெயின் ஃபுளூ அனுபவம் நமக்கு உணா்த்துவதாக அவா்கள் கூறுகின்றனா்.

எனவே கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் இளைஞா்கள் அலட்சியம் காட்டாமல் இருப்பதற்கு 1918-ஆம் ஆண்டு வரலாற்றை அவா்கள் படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்கிறாா்கள் இந்தத் துறையைச் சோ்ந்த நிபுணா்கள்.

இவற்றையெல்லாம் விட முக்கியமாக, கொள்ளை நோய்களைத் தடுப்பதில் தனித்திருத்தல், பொதுவெளியில் இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவை எவ்வளவு முக்கியம் என்பதையும் ஸ்பெயின் ஃபுளூ கொள்ளை நோய் வரலாறு பறைசாற்றுவதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

தற்போது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதைப் போல, கடந்த நூற்றாண்டிலும் ஸ்பெயின் ஃபுளூ பரவலைத் தடுப்பதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், எந்தெந்த நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகள் தாமதமாக எடுக்கப்பட்டனவோ, அந்தந்த நாடுகளிலெல்லாம் நிலைமை கைமீறிப் போனது; ஸ்பெயின் ஃபுளூ அதிக உயிா்களை பலி கொண்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்தது என்கிறாா்கள் வல்லுநா்கள்.

இந்த வகையில், ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு உலகில் அழிவை ஏற்புடுத்தி அடங்கினாலும், ஸ்பெயின் ஃபுளூ இன்றும் நமக்கு பல பாடங்களை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com