கரோனா எதிரொலி: மூலிகைத் தேநீர் தயாரிக்க உதவும் நாட்டு மருந்துப் பொருள்களுக்கு கிராக்கி!

கரோனா தீநுண்மித் பரவல் எதிரொலியாக, சேலத்தில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளில் மூலிகைப் பொருள்களின் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது.
கரோனா எதிரொலி: மூலிகைத் தேநீர் தயாரிக்க உதவும் நாட்டு மருந்துப் பொருள்களுக்கு கிராக்கி!



கரோனா தீநுண்மித் பரவல் எதிரொலியாக, சேலத்தில் உள்ள நாட்டு மருந்துக் கடைகளில் மூலிகைப் பொருள்களின் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ளது. குறிப்பாக மூலிகைத் தேநீர் தயாரிக்க உதவும் நாட்டு மருந்துப் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது.

கரோனா தீநுண்மித் தொற்றுக்கான சிகிச்சையில் அலோபதி  மருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வேளையில், அரசு மருத்துவமனைகளில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது.

சென்னையில் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் கரோனா சிகிச்சைக்கென சித்த மருத்துவ மையம் தனியாகவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் சித்த மருத்துவர் வீரபாபு மேற்பார்வையில் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள செய்தி பலரையும் ஈர்த்துள்ளது.

டெங்கு காய்ச்சலின் போது நிலவேம்புக் குடிநீர் பிரபலமானது. தற்போது கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுரக் குடிநீர் அதிக அளவில் வழங்கப்படுகிறது.

நாட்டு மருந்துக் கடைகள் உள்ளிட்ட அனைத்து மருந்துக் கடைகளிலும் நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீருக்கான மூலிகைப் பொடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. 

மேலும், கரோனாவைக் குணப்படுத்த கபசுரக் குடிநீருக்கு துணை மருந்தாக சித்த மருத்துவர் வீரபாபு பரிந்துரைந்த மூலிகைத் தேநீரும், கரோனா பாதித்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. சேலத்தில் இந்த மூலிகை தேநீருக்கான மருந்துப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 

அவர் பரிந்துரைந்த சுக்கு - 100 கிராம், அதிமதுரம் - 100 கிராம், சித்தரத்தை -30 கிராம், கடுக்காய்த் தோல் - 30 கிராம், மஞ்சள்- 10 கிராம், திப்பிலி - 5 கிராம், ஓமம் -5 கிராம், கிராம்பு - 5 கிராம், மிளகு - 5 கிராம் அடங்கிய மூலிகை மருந்து பொருட்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து மூலிகைத் தேநீர் பொட்டலமாக ரூ. 120 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

சேலம், சின்ன கடைவீதியில் அதிக அளவிலான நாட்டு மருந்துக் கடைகள் உள்ளன. இங்குள்ள நாட்டு மருந்துக் கடைகளில் வழக்கத்துக்கு மாறாக நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர்,  மூலிகைத் தேநீர், வைட்டமின்-சி சத்துமிக்க நெல்லிக்காய் பானம், நோய் எதிர்ப்பு சக்தி மிக்க திரிபலா சூரணம் ஆகிய மூலிகைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, சின்ன கடைவீதியில் நாட்டு மருந்துக் கடை நடத்திவரும் எஸ்.சீனிவாசன் கூறியதாவது:
எங்கள் குடும்பத்தினர் சுமார் 60 ஆண்டுகளாக நாட்டு மருந்துக் கடை நடத்தி வருகின்றனர். கபசுரக் குடிநீர்ப் பொடி- ரூ.120, மூலிகைப் தேநீர்ப் பொருட்கள் அடங்கிய பொட்டலம்- ரூ.120,  நிலவேம்புக் குடிநீர்ப் பொடி- ரூ. 100 என்ற விலையில் பல்வேறு நிறுவன தயாரிப்புகளை நாங்கள் விற்பனை செய்கிறோம்.

சென்னையில் கரோனா சிகிச்சை மையத்தில், சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வீரபாபு பரிந்துரைக்கும் மூலிகைப் பொருட்களை மக்கள் தனித்தனியாக வாங்கத் தொடங்கினர். தற்போது அவர் பரிந்துரைக்கும் 9 விதமான மூலிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புப் பொட்டலத்தைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். மக்கள் மூலிகைத் தேநீர் தொகுப்பை விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் கோ.செல்வமூர்த்தி கூறியதாவது: நம் வீட்டு சமையலறை அஞ்சறைப் பெட்டியில் உள்ள மிளகு, மஞ்சள், சீரகம், வெந்தயம், கடுகு, கொத்தமல்லி, சோம்பு, சுக்கு, ஏலம், லவங்கப்பட்டை, கிராம்பு போன்ற மூலிகைப் பொருட்கள் மிகவும் மருத்துவக் குணம் கொண்டவை. அஞ்சறைப் பெட்டியை உயிர் காக்கும் மருந்துப் பெட்டகமாகப் பயன்படுத்துவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com