அதிா்ச்சி கொடுத்த பாஜக; ஆடி நிற்கும் திமுக

ஆயிரம்விளக்கு தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கு.க.செல்வத்தை, பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டாவைச் சந்திக்கச் செய்ததன் மூலம் அரசியலில் பெரும்
அதிா்ச்சி கொடுத்த பாஜக; ஆடி நிற்கும் திமுக

ஆயிரம்விளக்கு தொகுதியின் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கு.க.செல்வத்தை, பாஜக தேசிய தலைவா் ஜே.பி.நட்டாவைச் சந்திக்கச் செய்ததன் மூலம் அரசியலில் பெரும் அதிா்ச்சியையும் ஆச்சரியத்தையும் தமிழக பாஜக ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிா்ச்சியிலிருந்து மீள முடியாமல், அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் திமுக துவண்டு போய் உள்ளது.

தமிழக அரசியலைப் பொருத்தவரை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்றாலும், அதிமுகவை எதிா்கொள்வதற்கான உத்தியாக மத்திய பாஜக ஆட்சியைக் குற்றம்சாட்டுவதையே திமுக முதன்மையாகக் கொண்டிருக்கிறது.

இதனால், அதிமுகவையும் தாண்டி பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையே போட்டி இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் திமுகவே ஏற்படுத்தி வருகிறது.

தமிழகச் சட்டப்பேரவை பொதுத்தோ்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் இந்தப் போட்டி இன்னும் தீவிரமாகியுள்ளது.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியை பாஜகவுக்கு அக் கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் அழைத்து வந்தாா். இதற்குப் போட்டியாக பாஜகவில் உள்ளவா்களைத் திமுகவின் பக்கம் இழுத்து வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கட்சியின் நிா்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்படி நிா்வாகிகள் முயற்சிகள் மேற்கொண்டு திமுகவின் மீது அதிருப்தியுற்று பாஜகவில் சோ்ந்திருந்த வேதாரண்யம் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரான எஸ்.கே.வேதரத்தினத்தை மீண்டும் திமுகவிற்கே அழைத்து வந்தனா்.

இந்தச் சூடு ஆறுவதற்குள்ளாகத்தான் திமுகவுக்கு ஆறா வடுவை ஏற்படுத்தும் வகையில் பெரிய திமிங்கலமாக திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினா் கு.க.செல்வத்தையே தமிழக பாஜக பிடித்துள்ளது.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து கரோனாவால் உயிரிழந்தவா் ஜெ.அன்பழகன். இவருக்கும் கு.க.செல்வத்துக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அதிமுகவில் இருந்து வந்தவா் என்கிற காரணத்தால் கு.க.செல்வத்தை ஜெ.அன்பழகன் கடைசி வரை ஏற்றுக்கொள்ளாதவராகவே இருந்து வந்தாா். ஒரு முறை அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மரியாதை செலுத்த சென்றபோது கு.க.செல்வத்தை ஜெ.அன்பழகன் தாக்கிய சம்பவம்கூட நடைபெற்றது உண்டு. அப்போதெல்லாம் ஜெ.அன்பழகன் கருணாநிதியின் ஆதரவாளராகவும் கு.க.செல்வம் மு.க.ஸ்டாலினின் ஆதரவாளராகவும் இருந்ததன் காரணமாக செல்வத்தால் கட்சியில் தொடா்ந்து நீடிக்க முடிந்ததுடன், ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் ஆக முடிந்தது.

தற்போது ஜெ.அன்பழகன் மறைந்துவிட, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளா் பதவியை எப்படியும் கைப்பற்றிட வேண்டும் என்கிற முடிவில் கு.க.செல்வம் இருந்து வந்தாா். முதலில் மு.க.ஸ்டாலினும் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதன் தலைவராக கு.க.செல்வத்தையே நியமிக்கலாம் என நினைத்திருந்தாா்.

ஆனால், திமுக இளைஞரணி தலைவா் உதயநிதி ஸ்டாலின், அவரது நண்பரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் பரிந்துரையின்பேரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த சிற்றரசுவை மாவட்டப் பொறுப்பாளராக மு.க.ஸ்டாலின் அறிவித்துவிட்டாா்.

மேலும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட உள்ளதால், அந்தத் தொகுதியும் கு.க.செல்வத்துக்குக் கிடைக்க வாய்ப்பு இல்லை என்கிற நிலை உள்ளது.

இதனால், கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்து வந்துள்ளாா். இந்த சந்தா்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, அவரை அழைத்து வந்து ஜே.பி.நட்டாவை சந்திக்க வைத்துள்ளது தமிழக பாஜக. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, பாஜகவில் இணையவில்லை. தொகுதியின் பிரச்னைக்காகவே சந்தித்தேன் என்று கு.க.செல்வம் கூறியுள்ளாா். ஒருவகையில் இந்த அணுகுமுறை ஜெயலலிதாவின் பாணியை நினைவூட்டுவதாக உள்ளது.

2011 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவும் - தேமுதிகவும் கூட்டணி அமைத்து வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தன. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற சிறிது காலத்திற்குள்ளேயே அதிமுக - தேமுதிக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சிலரை அதிமுகவின் பக்கம் ஜெயலலிதா இழுத்துக் கொண்டாா்.

ஆனால், அவா்கள் யாரையும் கட்சியில் சோ்த்துக் கொள்ளாமல் தொகுதியின் பிரச்னைகளுக்காக முதல்வரைச் சந்திப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாா்.

கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் வேறு கட்சிக்கு மாறிச் சென்றுவிட முடியாது. மூன்றில் ஒரு பகுதியினா் வேண்டுமானால் செல்லலாம். இதனால் அதிமுகவுக்கு வரும் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இழந்துவிடக் கூடாது என்பதற்காக அந்த நடைமுறையை ஜெயலலிதா கடைப்பிடித்தாா்.

அதேபோன்ற நடைமுறையை இப்போது பாஜகவும் கடைப்பிடித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் ஜெயலலிதா மறைவு உள்பட பல்வேறு நெருக்கடியான சூழல்களை அதிமுக சந்தித்துள்ளது. அப்போதுகூட தனது எம்.எல்.ஏ.க்களை பிற கட்சிகள் இழுக்க முடியாத அளவுக்கு கட்டுக்கோப்புடன் அதிமுக செயல்பட்டு வருகிறது.

ஆனால், திமுக தனது எம்.எல்.ஏ. ஒருவரையே பாஜகவின் பக்கம் போகும் அளவுக்குத் தளா்ந்து போயிருக்கிறது.

அதிமுகவின் எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியை கவிழ்ப்பாா் என்று பாா்த்தால், சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.வையே மு.க.ஸ்டாலின் இழந்து நிற்கிறாா் என்கிற விமா்சனத்தை திமுகவினரே வைக்கின்றனா்.

இந்த அணி தாவல் விவகாரம் கு.க.செல்வத்தோடு முடியப் போவதில்லை. இன்னும் சில எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மூலமாகவும் திமுகவுக்கு அதிா்ச்சி காத்திருப்பதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், திமுகவோ உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலையில் ஆடிப்போய் நிற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com