யானைகள் தினம்: காணாமல்போகும் கானகத்தின் பேருயிர்கள்!

யானைகள் நாளில் கானகத்தின் பேருயிரான யானைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய எவ்வளவோ தகவல்களில் சில...
யானைகள் தினம்: காணாமல்போகும் கானகத்தின் பேருயிர்கள்!

காட்டு இனங்களில் மிக முக்கியமானவை யானைகள். அவை வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்கி பராமரிப்பது மட்டுமல்லாமல், எண்ணற்ற தாவர மற்றும் விலங்கு இனங்கள் அந்த சூழல்களிலும் வாழ்வதை சாத்தியமாக்குகின்றன. யானைகள் காலநிலை நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான வீரர்கள். யானையை இழப்பது என்பது ஒரு சுற்றுச்சூழல் பராமரிப்பாளரையும் ஒரு விலங்கையும் இழப்பதாகும், இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம்.

இதை மனதில்வைத்து 2020 உலக யானை தினத்தை கொண்டாடுவதற்கும், மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, யானைகள் குறித்த ஆன்லைன் திரைப்பட விழா மற்றும் ஆன்லைன் வினாடி வினா போட்டி உள்பட பல ஆன்லைன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது சி.எம்.எஸ். வட்டவரன் என்ற அமைப்பு. 

இதன் மூலம் மாணவர்களின் அறிவை மேம்படுத்துவது, பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது மற்றும் அவற்றின் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும் மனித இனம் - யானை உறவைப் புரிந்துகொள்ளவும் ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படுகிறது. 

உலக யானைகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட்  12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளை கொண்ட நாடுகள் இந்த தினத்தைக் கொண்டாடி வருகின்றன. இந்த நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் யானைகள், அவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாப்பது மற்றும் தனியார் வளர்க்கும் யானைகளை பாதுகாப்பதுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தினம் முதன் முதலாக 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதாவது வில்லியம் சாட்னர் என்பவர் தனியார் வளர்க்கும் யானையை, காட்டிற்குள் மீண்டும் கொண்டு விடுவது குறித்த கதை அம்சத்தைக் கருவாக வைத்து  'வனத்திற்குள் திரும்பு' என்ற ஆங்கிலப் படத்தை எடுத்தார். இந்த படம் 2012 ஆகஸ்ட் 12 இல் வெளியானது. அன்றைய தினம் முதல் 'உலக யானைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்லாந்தின் தேசிய விலங்கு யானை. இதுவே மிகப் பெரிய பாலூட்டி இனமும். 

பூமியில் வாழும் உயிரினங்களில் மனிதனைத் தவிர்த்து, மிக நீண்ட காலம் உயிர் வாழும் உயிரினம் யானை. இவற்றின் சராசரி ஆயுள்காலம் சுமார் எழுபது ஆண்டுகள். நிலங்களில் வாழும் உயிரினத்தில் யானைதான் மிகவும் பெரியது. யானையின் தொடர்புகொள்ளும் தன்மை பூனையைப் போன்றே இருக்கும். சமூக வாழ்க்கை முறை கொண்ட யானைகள், அதிக தண்ணீர் மற்றும் உணவை உட்கொள்ளும். அதனால் செழிப்பான காடுகளில்தான் யானைகள் வசிக்கும்.

உலகின் தன்மையான விலங்குகளில் யானையும் ஒன்றாகும். மனித வரலாற்றில் காலங்காலமான தொடர்பு யானைக்கு உண்டு. இதன் காரணமாகவே யானை ஒரு பாரம்பரிய உயிரினம் என இந்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 

யானைகள் தனித்து வாழும் விலங்கல்ல. கூட்டமாக கூடி வாழும் பெரிய விலங்காகும். காலநிலை நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு நமக்குத் தேவைப்படும் அல்லது பெறக்கூடிய அனைத்து உதவிகளிலும் தெளிவாக இருக்க வேண்டும், அவை கரோனா தொற்றைவிட  கடினமாக இருக்கும். அதிகரித்து வரும் உலகளாவிய வெப்பநிலையை எதிர்த்துப் போராட, யானைகளைப் போன்ற முக்கிய காட்டு உயிரிகளின்  உதவி நமக்கு தேவை.

யானைகள் மற்றும் காண்டாமிருகங்கள் மற்றும் நீர்யானை போன்ற உயிரினங்கள் இரகசிய காலநிலைமாற்ற சூப்பர் ஹீரோக்கள், அவை கிரகத்தை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

காடுகள் - அடர் காடுகளின் கார்பனின் அத்தியாவசிய சேமிப்பாளராகவும், இரண்டு வாழ்விடங்களுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க யானைகள் உதவுகின்றன. “மரங்களும் புதர்களும் புல்வெளிகளைக் காப்பாற்றவும் புல்வெளிகள் மரம் மற்றும் வனப்பகுதிகளைக் காப்பாற்றவும்” உதவுகின்றன

யானை வகைகள்: அங்கீகரிக்கப்பட்ட மூன்று யானைகள் (ஆப்பிரிக்காவில் புதர்வெளி யானைகள் மற்றும் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானை என மூன்று வகையான யானைகள் உள்ளன. இவை அத்தியாவசிய சுற்றுச்சூழல் அமைப்புகளில் வெப்பநிலை உயர்வைத் தணிக்கின்றன.

யானைக்கு நான்கு பற்கள்தான். ஆறு முறை பற்கள் விழுந்து முளைக்கும். கடைசி நேரம் பல் விழும்போது சரியாக சாப்பிடாது. நன்கு வளர்ந்த ஆப்பிரிக்க யானையின் தந்தத்தின் நீளம் சுமார் ஏழு அடிகள் நீளம் வரை இருக்கும். இதன் பற்கள் சுமார் 5 கிலோ இருக்கும். ஆப்பிரிக்க இருபால் யானைகளுக்கும் தந்தங்கள் இருக்கும். சூரிய வெப்பத்தில் இருந்து காத்து கொள்வதற்காக முதலில் தண்ணீரை எடுத்து தனது உடல் முழுவதும் நனைத்துக் கொள்ளும். பின்பு பூச்சிகளின் கடியில் இருந்தும் காத்துக்கொள்வதற்காக புழுதியை எடுத்து உடம்பில் தூற்றி கொள்ளும். 

யானைகள் அழைக்கப்படும் விதம்: ஆண் யானைகள் களிறு என்றும், பெண் யானைகள் பிடி என்றும் இளம் யானைகள் கன்று அல்லது யானைக்குட்டி என்றும் அழைக்கப்படுகின்றன.

யானைகளின் சிறப்பு உறுப்புகள்: தந்தமும் தும்பிக்கையும்தான். ஒவ்வொரு யானைக்கும்  இரண்டு தந்தங்கள் இருக்கும். தும்பிக்கையை ஒட்டி கீழ்நோக்கி தந்தம் இருக்கும். இந்தியாவில் பெண் யானைகளுக்கு தந்தம் இருப்பதில்லை. ஆசிய யானைகளில் பொதுவாக ஆண் யானைகளிடமும், அரிதாக பெண் யானைகளிடம் தந்தங்கள் காணப்படும். சுமார் பத்து அடி நீளம் கொண்டவையாக இருக்கும். இதன் தந்தங்கள் 90 கிலோகிராம் வரை எடை கொண்டதாவும், நீட்சியடைந்த கடைவாய்ப் பற்களாக தந்தங்கள் இருக்கும். அழகான தந்தங்களே அவற்றுக்கு பெரிய எதிரியாக அமைந்துவிடுகின்றன. சட்டத்திற்கு புறம்பாக யானைத் தந்தங்கள் நல்ல விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனையாவதாலே அவைகள் வேட்டையாடப்படுகின்றன. 

தும்பிக்கை:  யானையின் தும்பிக்கை சுமார் நாற்பதாயிரம் தசைகளால் ஆனது. எல்லா திசையிலும் சுழற்றும் முடிந்த தும்பிக்கையின் உதவியால் சிறு குச்சி முதல் பாரம் மிகுந்த பொருள்கள் வரை சுமக்க திறன் கொண்டவை. யானை உணவை எடுத்து உண்ணவும், நீரை பருகும் உறுப்பாக தும்பிக்கையே உள்ளது. யானை தும்பிக்கையின் மூலம் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது. ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் தண்ணீரை குடிக்கும். 24 மணி நேரம் நீர் அருந்தவில்லை என்றால் உயிரை விட்டு விடும். தும்பிக்கையின் நுனியில் உள்ள நாசித் துவாரங்கள் மூலம் எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்கின்றன. இதன் தும்பிக்கை சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தசைகளால் ஆனது. மனிதன் உடம்பு மொத்தம் 640 தசைகளால் ஆனது. தனது தும்பிக்கை மூலம் பூமியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவை. இதனால் மற்ற விலங்குகளும் பயனடைகின்றன. ஒவ்வொரு காட்டிலும் நீர்வளம் குறித்து எளிதாக உணரும் திறன் கொண்டவை. கோடைக்காலங்களில் யானைகளால் கண்டறியப்படும் நீரூற்றுகளே பிற விலங்குகளின் தாகம் தணிக்கும் நீர் நிலைகளாக உள்ளன. 

கால்கள்: அதிகப்படியான உடல் எடையை கொண்ட யானை, உடல் எடையை தாங்குவதற்காக தடிமனான செங்குத்தான பெரிய கால்களையும் அகன்ற பாதங்களை கொண்டது. இவை செங்குத்தான மலைகளின் மீதும் எளிதாக ஏறும் திறன்கொண்டவை. 

காதுகள்: தங்களின் உடல் வெப்ப நிலையை சீராக பராமரிப்பதற்காக அதிகப்படியான ரத்தநாளங்களுடன் கூடிய பெரிய அகன்ற காதுகளைக் கொண்டுள்ளன. தடித்த உணர்திறன் மிக்க தோல்களைக் கொண்டுள்ளன. அதிகப்படியான கேட்கும்திறன் மற்றும் மோப்பத்திறனை கொண்ட யானைகள் கிட்டப்பார்வையையும் கொண்டவை. மனித பிறவிக்கு அடுத்தபடியாக அதிக அறிவுத்திறனும் நினைவுத் திறனும் கொண்டவை யானைகள். 

உணவு:  தாவர உண்ணியான யானைகள் அதிகப்படியான தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன. இவற்றின் செரிமானத் திறன் 40% தான் என்பதால் நாளொன்றுக்கு 140-270 கிலோ தாவரங்களை உணவாக உண்ணுக்கின்றன. எனவே, உணவு சேகரிக்கவே பெரும் நேரத்தை செலவிடுகின்றன. யானைகள் விரும்பி உண்ணும் உணவாக கரும்பு மற்றும் மூங்கில் உள்ளன. 

வாழ்க்கை முறை: யானைகள் தனித்து வாழும் விலங்கல்ல. கூட்டமாக கூடி வாழும் பெரிய விலங்காகும். பொதுவாக குழுவாக இணைந்து வாழும் தன்மை கொண்டவை. அதனால் அவலை உணவு மற்றும் நீருக்காக மட்டுமின்றி இனப்பெருக்கத்திற்காகவும் வலசை (இடம் மாறுவது) செல்கின்றன.  பருவ நிலைக்கேற்ப யானைகள் வலசை போவது இயல்பாகும். ஒரு யானை கூட்டத்தில் ஒன்று முதல் பல நூறு யானைகள் வரை இருக்கும். பொதுவாக யானைக் கூட்டத்தில் பெண் யானைகளும் குட்டிகளும் தான் இருக்கும். கூட்டத்தை வழிநடத்தி செல்வது வயதான பெண் யானை. வயது முதிர்ந்த ஆண் யானைகள் கூட்டத்தில் இருக்காது. பருவமெய்திய ஆண் யானைகள் தனித்து வாழும். இனப்பெருக்க காலத்தில் மட்டும் பெண் யானை குழுவை விட்டு வெளியேறும். அதிக சினைக்காலம் கொண்டவை. இவற்றின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். ஏறக்குறைய 100 கிலோ எடை கொண்ட ஒரேயொரு குட்டியை ஈனும். அதிசயமாக சில நேரங்களில் இரண்டு குட்டியை ஈனும். பிரசவக் காலத்தின் போது பிற யானைகள் அருகில் இருந்து உதவும். குட்டி யானைகளால் வளர்க்கப்படுகிறது. காடுகள் வாழும் உயிரினங்களில் யானையால் மட்டுமே துள்ளிக் குதிக்க முடியாது. மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் யானைகளால் ஓட முடியும்.

சமூக சேவை: சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக யானைகள் விளங்குகின்றன. காட்டில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்வதால், புதிய வழிப்பாதைகள் உருவாகின்றன. இதன் மூலம் காடுகளில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது அவற்றின் ஊட்டமான உணவுக் கழிவான சாணத்தில் “கடின மரங்களுக்கான விதைகளை விதைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.” இதனால் புதிய தாவரங்கள் முளைத்து பசுமையான காடுகள் உருவாகின்றன. யானைகள் காடுகளில் இருந்து ஒரு பங்கு உணவைப் பெற்றால் பத்து பங்கு உணவு உற்பத்திக்குத் தேவையான மரம், செடிகளை மறைமுகமாக உற்பத்தி செய்யும் வேலையை செய்கிறது.

யானைகள் மண்ணை ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வளிமண்டலத்திலிருந்து கார்பனை வெளியே இழுத்து தரையில் சேமித்து வைப்பதற்கு ஆரோக்கியமான மண் அவசியம் அதனை அளிப்பது யானைகள். இது காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான மிக முக்கியமான தீர்வாக கருதப்படுகிறது. எனவே யானைகள் நமக்கு எவ்வளவு தேவை என்பதை மனிதர்கள் கூட உணரவில்லை என்பது வேதனையான ஒன்று. 

கரோனா நோய்த் தொற்று பரவல் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பே யானைகள் மிகுந்த சிக்கலில் இருந்தன. ஆண்டுக்கு குறைந்தது 20 ஆயிரம் ஆப்பிரிக்க யானைகளைக் கொல்வது, காடுகளில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருவது, மற்றும் யானை சுற்றுச்சூழல் அமைப்புகளில் மனிதர்கள் இன்னும் அதிகமாக அத்துமீறி வருவது ஆகியவற்றுக்கு இடையில், உலகளவில் யானைகளின் எண்ணிக்கை ஒரு ஒளிரும் இடத்தில் உள்ளது என்ற தகவல் ஆறுதலாக உள்ளது.

இப்போது கரோனா தொற்றுநோயால் உலகமே பாதிக்கப்பட்டு நிலையில், யானைகள் இன்னும் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகி உள்ளது, அதாவது உலக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் ஆசியாவின் பெரும்பகுதிகளில் உள்ள வளர்ப்பு யானைகள் முடக்கியுள்ளது, அங்கு மக்கள் தொகை கொண்ட பெரும்பாலான நாடுகளில் (இந்தியா தவிர), சிறைபிடிக்கப்பட்ட யானைகளின் எண்ணிக்கை காட்டு மக்களை விட அதிகமாக உள்ளது. தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் மற்றும் இலங்கையில் உள்ள யானை சரணாலயங்களில் உள்ள யானைகளுக்கு உணவளிக்க போதி நிதி இல்லாமல் சவாலாக உள்ளதாக யானைக் காப்பாளர்கள் கூறுகின்றனர். அவற்றை காட்டுக்குத் திருப்பி அனுப்புவது சாத்தியமற்றது, ஏனென்றால் அங்கு மனித ஊடுருவல் அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. சுற்றுலாப் பயணிகள் மற்றும் தன்னார்வலர்களின் வருகை திடீரென நின்றுபோனதால் யானைகளை வேட்டையாடுதலுக்கு வழிவகுத்துள்ளது, பல சரணாலயங்கள் யானைகளுக்கு உணவளிக்க சிரமப்படுகின்றன. அதேபோல் போதிய வனக் காவலர்கள் இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நிதியில்லாமல் யானைகள் உணவின்றி பட்டினி கிடப்பதால் சில சரணாலயங்கள் மூடப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

காலநிலை நெருக்கடி குறுகிய மாற்றத்தை அடைந்துள்ளது. கரோனா நோய்த் தாற்று நமக்குத் தெரிந்தபடியெல்லாம் வாழ்க்கையை சீர்குலைத்துவிட்டது என்று நீங்கள் அதனை உணர்ந்தவர்காளாக இருந்தால், உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயரும்போது நமக்கு என்ன பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.  

குணங்கள்: யானைகளின் குணம், உடல்வாகு, வசிக்கும் இடத்தை பொருத்தது. மிகவும் மதிநுட்பம் வாய்ந்த விலங்கான யானை, மனித பிறவிகளைப் போன்று பாசம், அறிவு, பெருந்தன்மை, நினைவுத்திறன், போராடும் திறன், தனது எல்லைக்கோட்டை அறியும் திறன் மற்றும் தான் இருக்கும் இடத்தினை மரங்களின் கிளைகளை உடைத்தும், நாய் போன்று குறைத்தும் எச்சரிக்கை ஒலியை திறன் கொண்டவை. முதுகில் எலும்பு துாக்கிய நிலையில் காணப்படும் யானை திமிர் பிடித்தது. ஒழுங்கற்ற, ஒற்றை தந்தம் கொண்ட யானை ஆட்கொல்லி. இதன் உடலில் மாமிச வாடை வீசும். வளர்ப்பு யானை ஆடி கொண்டே இருந்தால் மன அழுத்தம் கொண்டதாக இருக்கும். 

எத்தகைய குணம் கொண்ட யானையாக இருந்தாலும் இறுதி நொடியிலும் எதிரியை கொல்லாமல் விட்டு விடும் பெருந்தன்மையும், இரக்க குணமும் யானைக்கு உண்டு. யானைகளின் தோற்றத்தை பார்த்தே அதன் குணங்களை அறிந்துகொள்ள முடியும். நாம் யானையிடம் அன்பு காட்டினால் அதனை மறக்காமல் நினைவில் வைத்திருந்து 20 ஆண்டுகள் சந்தித்தாலும் அடையாளம் கண்டு சந்தோஷப்படும் குணம் படைத்தது யானை. 

மேலாண்மை சட்டம்: மனித பெண்கள் போன்று மாதவிலக்கு, தாய்மை உணர்வு கொண்டது யானை. அதனால் வளர்ப்பு பெண் யானைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து 'மேட்டிங்'காக முகாமில் உள்ள ஆண் யானையிடம் அழைத்து செல்லப்பட்டு இரண்டு மாதங்கள் பழகவிட்டு மூன்று மாதங்கள் தனிமைப்படுத்தி 'மேட்டிங்' செய்ய வைக்கப்படுகின்றன.  பின்னர், குட்டி யானை பிறக்கும் வரை 20 மாதங்களுக்கு முகாமில் இருக்க வேண்டும். 2011 யானை மேலாண்மை சட்டப்படி, 2011 ஆண்டுக்கு பின்னர்,  யானைகளை விற்கவோ, வாங்கவோ முடியாது. ஆனால் 2011க்கு முன்பு வாங்கிய யானைகளை, கோவில்களுக்கு தானமாக தரலாம் தெரிவிக்கிறது. 

ஆசிய யானைகள் இனம் உலகில் 13 நாடுகளில் தான் உள்ளது. இந்த நாடுகளில் உள்ள யானைகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட யானைகள் இந்தியாவில் உள்ளது. அதிலும் பாதிக்கும் மேற்பட்டவை தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளத்தில் உள்ளன. இதில் தமிழகத்தின் நீலகிரி உயிர்கோள காப்பகத்தில்தான் அதிகயளவில் உள்ளன. 

தென்இந்தியாவில், தமிழகத்தில் கோவை, சத்தியமங்கலம் மற்றும் நீலகிரி ஆனைமலை, ஆனைமுடி பகுதிகளிலும், கேரளத்தில் மன்னார்காடு, வயநாடு மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு பகுதிகளிலும், கர்நாடகத்தில் பந்திப்பூர், நாகர்ஹோலே, கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகள் யானைகளின் வாழ்விடங்களாக உள்ளன. உலக அளவில் இருந்த 24 வகை யானை இனங்களில், 22 வகைகள் அழிந்துவிட்டதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளில், மின்சாரம், ரயில், விஷம், வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் 2,330 யானைகள் இறந்துள்ளன. 

2019 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, ஆப்பிரிக்காவில் 4 லட்சம் யானைகளும், ஆசியாவில் 55 ஆயிரம் யானைகளும் இருப்பதாகவும், ஆசியாவில் உள்ள மொத்த யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் 31,368 யானைகளும், தோரயமாக, தமிழகத்தில் 3,750 யானைகளும், கேரளத்தில் 5,706 யானைகளும், கர்நாடகத்தில் 6,049 யானைகளும் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

அழிவுக்குக் காரணம்: ஆப்பிரிக்க, ஆசிய காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. யானைகளை பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் என பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (ஐயுசிஎன்) பலமுறை எச்சரிக்கை விடுத்தும் காடுகளில் வெட்டப்படும் மரங்கள், குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்புகள், தந்தத்திற்காக வேட்டையாடுதல் போன்ற செயல்களே யானைகளின் அழிவுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

மேலும், யானைகளின் பாரம்பரிய வலசை நிலங்கள் தற்போது தனியார் நிலங்களாகவும், குறுகிய பாதைகளாகவும் மாற்றப்படிருப்பதை யானைகளின் பாரம்பரிய உணர்வால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடையை உடைத்துக்கொண்டு வெளியே வரும்போதுதான் மோதல்களும் அதிகரிக்கின்றன. மனிதர்களைக் கொண்டு ஒதுங்கிச் சென்ற யானைகள் தற்போது மோதலுக்கு முந்துகின்றன.

காடுகள் அழிப்பால் குறைந்துபோன வாழிடங்கள், காடுகளில் பெருகி வரும் சிறிய தாவர உண்ணிகள், காடுகளில் பார்த்தீனியம், பலனற்ற தாவரங்களின் அதிகரிப்பு, காடுகளை அழித்து அமைக்கப்படும் தண்டவாளங்கள் மற்றும் தேசிய சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் அணைக்கட்டுகள், மேம்பாலங்கள்,  போன்ற பல காரணங்களால் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. காலம் காலமாக யானைகள் பயன்படுத்தும் வழித்தடத்தை மனிதன் ஆக்கிரமித்ததால் அதன் எல்லை சுருங்கியது. இதனால் மனிதன், யானை இடையே மோதல் உருவாகியுள்ளது. மேலும் பருவமழை பொய்த்தல், காலநிலை மாற்றம், வெப்பம், வறட்சி, பசுமை உணவுகள் கிடைக்காமல் போனது போன்றவற்றால் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையோர குடியிருப்புகளை நோக்கி யானைகள் கூட்டமாக வருகின்றன.

இதனால் தமிழகத்தில் சராசரியாக மாதத்துக்கு 8 யானைகள் உயிரிழக்கின்றன - கானகத்தைவிட்டுக் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் யானைகளைப் பாதுகாக்கவும் இந்த தினம் சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது. காடுகள் உயிர்ப்போடு இருக்கவும், சுற்றுச்சூழல் சுவாசம் தூய்மையாக இருப்பதற்கு யானைகள் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து, யானைகளைப் பாதுகாக்கவும், நீர்நிலைகள் உருவாகி, அதன் வாழ்விடத்தை பாதுகாக்கவும், காடுகளில் மனித இடையூறுகளைத் தடுக்க உறுதிகொண்டு, "மனித தொற்றுநோய்" யானைகளின் வாழ்க்கையைச் சீர்குலைத்து வரும் நிலையில் ‘காடுகளின் காவல் யானையை’ காப்போம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com