அறிவியல் மனப்பான்மை பரப்புவதில் அக்கறை - தபோல்கர் நினைவு நாள்

பகுத்தறிவாளர், மருத்துவர் எனப் பன்முக அடையாளம் கொண்ட எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நாள், தேசிய அறிவியல் மனப்பான்மை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சமூக செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர்
சமூக செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர்

பகுத்தறிவாளர், மருத்துவர் எனப் பன்முக அடையாளம் கொண்ட எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நாள், சமூக ஆர்வலர்களால் தேசிய அறிவியல் மனப்பான்மை நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும், அறிவியல் மனப்பான்மை பிரசாரமும்

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 51-பிரிவு-அ வில் இந்திய குடிமக்களின் அடிப்படைக் கடமைகளாக அறிவியலார்ந்த மனப்பான்மை, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல் அடிப்படை கடமைகளுள் ஒன்று என கூறப்பட்டுள்ளது.

ஆயினும் சமூகத்தில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக களமாடுபவர்களால் தான் அத்தகைய சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அந்த வகையில் எழுத்தாளர் நரேந்திர தபோல்கரின் செயல்பாடுகள் இந்திய சூழலில் முக்கியத்துவம் பெறுகின்றன.

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, 
ஆனால் அதை சொல்வதற்கான 
உனது உரிமையைக் காக்க 
என் உயிரையும் கொடுப்பேன். 
                                      - வால்டேர்.

மருத்துவம் படித்த பின் புணே நகரில் மருத்துவ சேவையாற்றிவந்த நரேந்திர தபோல்கர், மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கையில் இருந்த மக்களிடைய அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடையே பிரசாரம் செய்துவந்தார். 

மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் மூடநம்பிக்கைக்கு எதிரான “மனிதப்பலி கொடுத்தல் மற்றும் பிற மனிதத் தன்மையற்ற தீய, பில்லி சூனியச் செயல்பாடுகள், கண்கட்டி வித்தைகள் தடுத்தலும் ஒழித்தலுக்குமான சட்டம் 2013”-யை இயற்ற அவர் பெரும் பாடுபட்டார். மூடநம்பிக்கைக்கு எதிரான இவரின் பிரசாரத்தை விரும்பாத மதவாத அமைப்பினர், தபோல்கரை ஆகஸ்ட் 20, 2013 ஆம் ஆண்டு புணேவில் வீதியிலேயே நடைப்பயிற்சியின்போது கொடூரமாக சுட்டுக் கொன்றனர்.

தபோல்கர் படுகொலை செய்யப்பட்ட நாளை அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பும், தபோல்கர் உருவாக்கிய மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதியும் இணைந்து நாடு முழுவதும் அறிவியல் மனப்பான்மை நாளாக அனுசரித்து வருகின்றன.

இளம் வயதில் தபோல்கர்

மகாராஷ்டிர மாநிலம் புணே அருகே சதாரா என்ற ஒரு சிறிய நகரத்தில் நவம்பர் 1, 1945-ம் ஆண்டு பிறந்தார் நரேந்திர தபோல்கர். தனது பள்ளிப் படிப்பை முடித்த தபோல்கர், மிராஜில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை தொடர்ந்தார். அவரது குடும்பத்தில் அனைவரும் நன்கு படித்து, சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

கல்லூரியின் தொடக்க காலத்தில் கபடி விளையாட்டால் ஈர்க்கப்பட்ட தபோல்கர், சிவாஜி பல்கலைக்கழக கபடி அணியின் தலைவராகப் பதவியேற்றார். மேலும், வங்க தேசத்திற்கு எதிரான இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார். கபடியில் சிறந்து விளங்கியதற்காக மகாராஷ்டிர அரசின் சிவ்சத்ரபதி விருதையும் வென்றுள்ளார் தபோல்கர்.

கல்லூரிப் படிப்பை முடித்த தபோல்கர், சைலா என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். ஆடம்பர திருமணங்களை வெறுத்த தபோல்கர் தனது மக்களுக்கும் மிக எளிய முறையில் திருமணம் செய்து வைத்தார்.

சமூக சீர்திருத்த பணிகள்

கல்லூரி காலத்திலேயே சோசலிச, சமத்துவ கொள்கையால் ஈர்க்கப்பட்ட தபோல்கர் இடதுசாரி அமைப்பான சமாஜ்வாடி யுவ தளத்தில் 1970-ல் சேர்ந்து ஜாதி எதிர்ப்பு இயக்கங்களில் பங்கு பெற்றார்.

1980-ல் மருத்துவர் பாபா ஆதவ் தலைமையிலான ‘ஏக் கவ், ஏக் பனாவத’ (ஒரு கிராமம், ஒரு நீராதாரம்) இயக்கத்திலும், மராத்வாடா பல்கலைக்கழகத்தை அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றுவதற்கான இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டார். 

அகில பாரத அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதியில் சேர்ந்த தபோல்கர் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். பின், 1989-ல் மராட்டிய அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற அமைப்பை ஆரம்பித்த தபோல்கர் மூடநம்பிக்கைக்கு எதிராக மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை உருவாக்க தொடர்ந்து பல பிரசார இயக்கங்களை முன்னெடுத்தார்.

மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் மூடநம்பிக்கைக்கு எதிரான மராட்டி நாடகத்தை 25 இடங்களில் ஏற்பாடு செய்து, புகழ்பெற்ற ஸ்ரீராம் லகூ, நிலுபூலே, ரோஹிணி ஹட்டங்காடி மற்றும் சதாசிவ் அம்ராபுர்கர் உள்ளிட்ட சமூக உணர்வுள்ள நாடகக் கலைஞர்களின் குழுவை ஒருங்கிணைத்தார்.

நுழைவுச் சீட்டு விற்பனை மற்றும் நன்கொடைகள் மூலம் ஆரம்ப காலத்தில் சுமார் 25 லட்ச ரூபாயை நிதியாகத் திரட்டினார். தற்போது அந்த நிதி ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்த நிதியை மகாராஷ்டிரத்தில் 45 முழு நேர சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப் பயன்படுத்தினார். இந்த நிதியில் முக்கிய பங்களிப்பாக மகாராஷ்டிர பள்ளிக் குழந்தைகள் தலா 5 ரூபாய் நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

1990 முதல் 2010 வரை தீண்டாமைக்கு எதிராகவும், இந்திய ஜாதியக் கட்டமைப்பு, ஜாதியக் கொடுமை, மூட நம்பிக்கை போன்றவற்றிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தார். 3000க்கும் அதிகமான மேடைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து பேசியுள்ளார் தபோல்கர்.

1982-ம் ஆண்டில் அவர் மருத்துவ சிகிச்சைப் பணியைக் கைவிட்டபோதிலும், தபோல்கர் தொடர்ந்து மக்களிடையே சுகாதார பிரச்சினைகள் பற்றிப் பேசினார். நோயால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களைக் கடவுளின் பெயர் சொல்லி ஏமாற்றுவதற்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்தார். ஜூலை 2009-ல் ஜான் ஆரோக்ய அபியான் புணேவில் முதன்முறையாக ஏற்பாடு செய்த நோயாளிகளின் உரிமைகள் மாநாட்டிற்கு தபோல்கர் தலைமை தாங்க அழைக்கப்பட்டார்.

மூடநம்பிக்கைக்கு எதிரான செயல்பாடுகள்:

தபோல்கர் உருவாக்கிய மகாராஷ்டிர அந்தா ஷ்ரத்தா நிர்மூலன் சமிதியில் மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கான சிறப்புக் குழுவை நிறுவினார். சுமார் 180 கிளைகளைக் கொண்ட மாபெரும் முற்போக்கு அமைப்பாக அது விளங்கியது.

1948-ல் சனே குருஜி ஆரம்பித்த வாராந்திர முற்போக்கு பத்திரிகையான சாதனா இதழின் ஆசிரியராக தபோல்கர் 1998-ல் நியமிக்கப்பட்டார். இந்த பத்திரிகையின் நோக்கம் மக்களை மூடநம்பிக்கையால் ஏமாற்றுவதற்கு எதிராகவும் ஒரு நியாயமான சமுதாயத்தை உருவாக்க மக்களிடையே அறிவியல் அணுகுமுறை, கேள்வி மனப்பான்மை, மனிதநேயம் மற்றும் பகுத்தறிவு சிந்தனைகளை வளர்ப்பதாகும்.

மந்திரம், தந்திரம் என்னும் செயல்களை நிரூபித்தால் அவர்களுக்கு ரூ. 20 லட்சம் பரிசு தருவதாக தபோலகர் அறிவித்தார். இன்று வரை அவரின் சவாலை யாராலும் ஏற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  
மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்த தபோல்கர், மூடநம்பிக்கைக்கு எதிரான வரைவை வரையறுத்து 1990-ல் முதல் வரைவை வெளியிட்டார். பின் வரைவை மக்களிடையே பிரசாரம் செய்தார்.

இந்த மசோதாவில் மந்திர சக்திகள், மந்திரச் சடங்குகள் செய்வது, பேயோட்டுதல், போலி மருத்துவம், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறி அடித்தல் மற்றும் பணப் பறிப்பு நடைமுறைகளுக்கு எதிரான அறிவியல் விளக்கத்தை விரிவாக எடுத்துரைத்தது.

இந்த வரைவை ஹிந்து மதத்திற்கு எதிரானது என்ற தவறான பிரசாரத்தை மதவாதிகள் தூண்டியதால் மசோதாவில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வரைவில் எந்த மதத்தைப் பற்றியும் ஒரு சொல்கூட குறிப்பிடவில்லை என்று தபோல்கர் விளக்கமளித்தார்.

இந்த வரைவிற்கு அன்றைய முதல்வர் சுசில்குமார் ஒப்புதல் அளித்தாலும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவில்லை.

பின், இந்த வரைவில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு 2005-ம் ஆண்டு குளிர்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளால் பெரும் விவாதத்திற்கு உள்ளானதால் வரைவு நிறைவேறாமல் போனது.

அதன் பிறகு இந்த வரைவிற்கு ஆதரவாக முற்போக்கு அமைப்புகளும், எதிராக மதவாத அமைப்புகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன.

மனிதப்பலி கொடுத்தல் மற்றும் பிற மனிதத் தன்மையற்ற தீய, பில்லி சூனியச் செயல்பாடுகள், கண்கட்டி வித்தைகள் தடுத்தலும் ஒழித்தலுக்குமான சட்டம் 2013

புணேவில் 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று காலை 7.20 மணிக்கு தபோல்கர் நடைப்பயிற்சி சென்றபோது, ஓங்காரேஸ்வரர் பாலம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது கொலையைக் கண்டித்தும் வரைவை அமல்படுத்தக் கோரியும் முற்போக்குவாதிகள், மக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஆகஸ்ட் 21-ம் தேதி மகாராஷ்டிர அரசாங்கம் வரைவிற்கு ஒப்புதல் அளித்தது. பின் ஆகஸ்ட் 24-ம் தேதி மகாராஷ்டிர ஆளுநர் கே.சங்கரநாராயணன் வரைவைச் செயல்படுத்த கையெழுத்திட்டார்.

தபோல்கரின் சமூக செயல்பாட்டு பணிகளுக்காக அவருக்கு 2014-ம் ஆண்டு இந்திய அரசு சார்பில் ‘பத்ம ஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் முதன்முதலில் 2013 செப்டம்பர் 4-ம் தேதி நந்திட் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை தருவதாக விளம்பரம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டுவிட்டாலும் அவர் முன்னெடுத்த அறிவியல் அணுகுமுறையைத் தொடர்ந்து முன்னெடுக்க அவர் கொலையுண்ட நாள், அறிவியல் மனப்பான்மை நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

- ஆக. 20 - தேசிய அறிவியல் மனப்பான்மை நாள் -

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com