நிர்பயா முதல் கலிஃபோர்னியா காவலர் வரை: முக்கிய சாட்சியாகும் மூன்றாவது கண்

சிசிடிவி கேமராக்கள் வெறுமனே குற்றவாளிகளைக் கைது செய்ய மட்டும் பயன்படுவதில்லை, குற்றவாளிகளை அடையாளம் காட்டி, தண்டனை பெற்றுத் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.
முக்கிய சாட்சியாக மாறும் மூன்றாவது கண்
முக்கிய சாட்சியாக மாறும் மூன்றாவது கண்

ஒரு காலத்தில் நிறைய வழக்குகள் நேரடி சாட்சியங்கள் இல்லை என்பதாலேயே வலுவிழந்து குற்றவாளிகள் தப்பிச் செல்ல வாய்ப்பாக இருந்திருக்கின்றன. ஆனால், இன்றோ குற்றவாளிகளைக் கண்டறிவதிலும் தண்டனை பெற்றுத் தருவதிலும் முக்கிய சாட்சியாக மாறிக் கொண்டிருக்கின்றன சிசிடிவி கேமராக்கள் எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள்!

2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு 23 வயது துணை மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் ஐந்து பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய அழுத்தம் காவலர்களுக்கு ஏற்பட்டது.

ஆனால், குற்றவாளிகளுக்கு எதிராக எந்த சாட்சியமும் இல்லை, பாதிக்கப்பட்டவர்கள் கூறும் தகவல்களைத் தவிர. பிறகு காவல்துறையினர் விசாரணையை எங்கிருந்து தொடங்கினர்? விசாரணை அதிகாரிகள் மஹிபால்பூரில் உள்ள உணவகத்துக்குச் சென்றனர். அங்குதான் முதல் சாட்சியம் கிடைத்தது. அதுதான் சிசிடிவி கேமரா பதிவு. அதில், அந்தப் பேருந்து அவ்வழியாகச் செல்வதைக் காவல்துறையினர் கண்டறிந்தனர். அதன் பிறகுதான் விசாரணை சூடுபிடித்தது. பேருந்தின் எண் கண்டுபிடிக்கப்பட்டு, பிறகு விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

பல வழக்குகளில் சிசிடிவி கேமராக்கள் வெறுமனே குற்றவாளிகளைக் கைது செய்ய மட்டும் பயன்படுவதில்லை, குற்றவாளிகளை அடையாளம் காட்டி, தண்டனை பெற்றுத் தருவதிலும் முக்கியப் பங்காற்றுகின்றன.

சமீப காலமாக தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பல வழக்குகளை மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் மூலமாகத்தான் காவல்துறையினர் கண்டறிந்துவருகிறார்கள். ஒருசில வழக்குகளில் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராப் பதிவுகளைக்கூட ஆராய்ந்து குற்றவாளிகளைக்  காவல்துறையினர் கண்டுபிடிக்கிறார்கள்.

மேற்கு தில்லியில் கடந்த ஜூலையில் 25 வயது பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், எந்த சாட்சியமும் இல்லாத நிலையில், ஒரு சிறுவன் மற்றும் இரண்டு நபர்களைக் காவல்துறையினர் பிடித்ததும் இந்த சிசிடிவி கேமரா பதிவை அடிப்படையாக வைத்தே.

கொலை முதல் கொள்ளை வரை பல வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முக்கிய இடத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. நீதியின் முன் குற்றவாளிகளை நிறுத்தக் காவல்துறைக்கு பேருதவியாகவும் இருக்கிறது என்று மூத்த காவல்துறை அதிகாரி தெரிவிக்கிறார்.

சில வழக்குகளில் குற்றவாளிகளே சம்பவ இடத்தில் இருந்துகொண்டு, காவல்துறையினரைத் திசை திருப்பும் சம்பவங்களும் நடந்துவருகின்றன. அதற்காக அவர்களை அவர்களே காயப்படுத்திக் கொள்வதும் உண்டு. ஆனால் அனைத்தையும் தவிடுபொடியாக்கி சிசிடிவி கேமராக்கள், நீதியின்பால் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. ஒரு குற்றத்தில் உண்மையான குற்றவாளி யார் என்பதை சிசிடிவி கேமராக்கள் பட்டவர்த்தனமாகக் காட்டிக்கொடுத்துவிடுகின்றன. 

சமீபத்தில் உலகளவில் பேசப்பட்ட சிசிடிவி கேமரா விவகாரம் இது..

கலிஃபோர்னியிவில் 13 கொலைகள்,  பல பெண்களை பலாத்காரம் செய்து, 100-க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட படுபாதக குற்றவாளிக்கு சிசிடிவி கேமராதான் ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளது.

கலிஃபோர்னியாவின் முன்னாள் காவல்துறை அதிகாரியான ஜோசப் டி ஆஞ்சலோவுக்கு (74) பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பு வழங்கும்போது, நீதிமன்றத்துக்கு வந்த  குற்றவாளி ஜோசப், தன்னால் பாதிக்கப்பட்ட பெண்களின் உறவினர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், தன்னை மன்னித்துவிடும்படியும் கையெடுத்தக் கும்பிட்டான். ஆனால், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உறவினர்கள் அழுத்தமான கோரிக்கையை முன்வைத்தனர்.

முன்னதாக, தனது கால்கள் முடங்கிவிட்டதாகக் கூறி சக்கர நாற்காலியில் நீதிமன்றத்துக்கு வந்த ஜோசப் பரிதாபத்தைத் தேட முயன்றான். ஆனால், தனது சிறை அறையில் மிகக் கடுமையான உடற்பயிற்சிகளைச்  செய்வதையும், மேஜைகள் மீது ஏறி இறங்குவதையும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த காவல்துறையினர், அதனை நீதிமன்றத்தில் போட்டுக்காட்டி, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வழிவகை செய்தனர்.

எனவே, காவல்துறை விசாரணையில் மூன்றாவது கண்ணாக சிசிடிவி கேமராக்கள் விளங்குகின்றன என்பதை அடிப்படையாக வைத்தே, தமிழக காவல்துறை சார்பில் முக்கிய இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த அதிக ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர் முழுவதையும் சிசிடிவியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரமாக மாற்ற காவல்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே. விஸ்வநாதன், தனது பணிக் காலத்தில், சென்னை மாநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தும் திட்டத்தை மிக தீவிரமாக செயல்படுத்தி வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சென்னை கடற்கரையில் பலூன் விற்பவரின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில், தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களின் உதவியால் ஒருசில மணி நேரத்திலேயே குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்து குழந்தையை மீட்டனர்.

இதுபோல சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு துப்புதுலக்கப்பட்ட வழக்குகளும் குற்றச்சம்பவங்களும் ஏராளம்.

நீதித் துறைக்கு மூன்றாவது கண்ணாக இன்று மாறியிருக்கிறது சிசிடிவி கேமரா பதிவுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com