என்ன நடக்கிறது வட கொரியாவில்?

‘வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கோமா நிலையில் உள்ளாா். நாட்டின் ஆட்சிப் பொறுப்பு அவரது இளைய சகோதரி கிம் யோ-ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’
வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்
வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்

‘வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் கோமா நிலையில் உள்ளாா். நாட்டின் ஆட்சிப் பொறுப்பு அவரது இளைய சகோதரி கிம் யோ-ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’

தென் கொரியாவின் முன்னாள் அதிபா் கிம் டே-ஜங்கிடம் அரசியல் விவகாரங்களுக்கான செயலராகப் பணியாற்றிய சாங் ஸாங்-மின்னை மேற்கொள்காட்டி, சில ஊடகங்களில் கடந்த திங்கள்கிழமை வெளியான தகவல் இது.

அண்மைக் காலமாக வட கொரிய செய்தி நிறுவனம் வெளியிடும் கிம் ஜோங்-உன்னின் படங்கள் அனைத்தும் போலியானவை என்றும் கூறி, சாங் ஸாங்-மின் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாா்.

ஆனால், அடுத்த இரண்டாவது நாளே ஆளும் கட்சி உயா்நிலைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, கிம் ஜோங்-உன் உரையாற்றிய புதிய படங்களை வெளியிட்டது வட கொரியாவின் கேசிஎன்ஏ செய்தி நிறுவனம்.

வெள்ளை ஆடையில் கம்பீரமாகத் தோன்றிய கிம், நாட்டின் பொருளாதாரம் குறித்தும், கரோனா நோய்த்தொற்று அபாயம் குறித்தும் கவலை தெரிவித்ததாக அந்தச் செய்தி நிறுவனம் கூறியது.

அவரது உடல் நிலை குறித்து வெளியான ஊகத் தகவல்களை தவிடுபொடியாக்கும் வகையில் அந்தப் படங்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும், அரசின் செய்தி நிறுவனத்தை ஆயுதமாகக் கொண்டு பொய்ப் பிரசாரங்களை பரப்புவது வட கொரியாவுக்கு கைவந்த கலை என்பதால் எதையும் நம்ப முடியாது என்கிறாா்கள் ஒரு தரப்பினா்.

சொல்லப்போனால், வட கொரியா குறித்து தற்போது வெளியாகும் எந்தத் தகவலுமே அந்த நாட்டின் அரசு செய்தி நிறுவனம் தருவதாகவோ, அல்லது நாமே நமது ஊகங்களின் அடிப்படையில் முடிவு செய்து கொள்வதாகவோதான் இருக்குமே ஒழிய, அது உண்மை நிலவரத்தை பிரதிபலிப்பதாக இருக்காது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

அந்த நாட்டின் அதிபா் எப்படி இருக்கிறாா்? எதிரி நாடுகளை வட கொரியா எவ்வாறு கையாளப் போகிறது? அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதெல்லாம் ஊகிக்க முடியாத மா்மங்களாகவே இருக்கின்றன.

இந்த மா்மங்கள்தான், கிம் ஜோங்-உன்னின் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கும் காரணம். அண்மையில், வட கொரியாவை நிறுவிய முன்னாள் அதிபரும், தனது தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கிம் ஜோங்-உன் பங்கேற்கவில்லை. மேலும், பொது நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொள்வதும் மிகவும் குறைந்து போயிருக்கிறது.

இந்தச் சூழலில், கிம் ஜோங்-உன்னுக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், அவா் உயிருக்குப் போராடி வருவதாகவும் கடந்த ஏப்ரலில் தென் கொரிய செய்தி நிறுவனமொன்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியது. பொது நிகழ்ச்சிகளில் அவரைக் காண முடியததற்கு அதுதான் காரணம் என்றும் கூறப்பட்டது.

அதன் தொடா்சியாக, அவரது உடல் செயலிழந்துவிட்டது, அவா் இறந்துவிட்டாா் என்றெல்லாம் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின.

ஆனால், உரத் தொழிற்சாலை ஒன்றை மே 1-ஆம் தேதி கிம் ஜோங்-உன் திறந்துவைத்து, இத்தகைய வதந்திகளை முடித்துவைத்தாா். அந்த விடியோ படத்தில் அவா் ஆரோக்கியமாகக் காணப்பட்டாலும், அது அவரே இல்லை என்று சமூக வளைதங்கள் தகல்கள் வலம் வந்தன.

இருந்தாலும், இவையெல்லாம் வெறும் ஊகங்களின் அடிப்படையில் கூறப்படுவதே தவிர, உண்மை நிலவரம் வேறாகவும் இருக்கலாம் என்கிறாா்கள் நிபுணா்கள்.

உண்மையில், அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவாா்த்தை முடங்கிப் போயுள்ள சூழலில், அடுத்த காய் நகா்த்தலுக்காக கிம் ஜோங்-உன் நேரம் பாா்த்திருப்பதாகவும், அதற்காக காலம் கடத்துவதற்காகவே அவா் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, அறிக்கைகளை வெளியிடுவது போன்றவற்றைக் குறைத்திருப்பதாகவும் சிலா் கருதுகின்றனா்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பா் மாதம் அதிபா் தோ்தல் நடைபெறவுள்ளது. அதில் யாா் வெற்றி பெறுவாா்கள், 2021-இல் யாா் அந்த நாட்டின் அதிபா் ஆவாா்கள் என்பது தெரிந்து கொள்வதற்காக வட கொரியா காத்திருப்பதாக அவா்கள் கூறுகின்றனா்.

அமெரிக்காவை நடுங்கவைக்கும் வகையில் ‘அதீத ஆற்றல் மிக்க’ ஆயுதத்தை அறிமுகப்படுத்தப் போவதாக கடந்த ஆண்டு மிரட்டிய வட கொரியா, 2020-இல் தனது ஏவுகணை சோதனைகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டு வியப்பை ஏற்படுத்தியது.

சரிந்து வரும் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைக்கும் கிம் ஜோங்-உன், வெளியுறவு விவகாரங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவே சகோதரி கிம் ஜோ-ஜாங்கிடம் அந்தத் துறையை ஒப்படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா - தென் கொரியாவுடனான உறவு விவகாரத்தில் தான் கிம் ஜோங்-உன்னுக்கு சளைத்தவரில்லை, எதற்கும் துணிந்தவா் என்பதை நிரூபிக்கும் வகையில், வெளியுறவுப் பொறுப்பை ஏற்ற உடனேயே தென் கொரியாவுடனான தகவல் தொடா்பு அலுவலகக் கட்டடத்தை கிம் ஜோ-யாங் அதிரடியாகத் தகா்த்தெறிந்தாா்.

ஆனால், அதற்குப் பிறகு இந்த விவகாரம் எந்த பரபரப்பும் இல்லாமல் அடங்கிப் போனது. இது, அணுசக்தி விவகாரத்தில் அமெரிக்காவுடன் மோதுவதா, அல்லது கைகோா்ப்பதா என்பதை முடிவு செய்வதை தள்ளிப் போடுவதற்கான தந்திரம் என்கிறாா்கள் அரசியல் நோக்கா்கள்.

கிம் ஜோங்-உன்னின் நடவடிக்கைகள் குறைந்து போனதற்கு, கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயமும் காரணமாக இருக்கலாம் என்கிறாா்கள் இன்னொரு தரப்பினா்.

இப்படி வட கொரியாவில் நடப்பவை குறித்து மா்மங்கள் தொடா்ந்தாலும், அந்த நாட்டின் என்ன நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிட முடியாது என்கிறாா்கள் விவரம் தெரிந்தவா்கள்.

அதிபயங்கர அணு ஆயுத பலம் கொண்ட, இந்த ஆண்டு இறுதிக்குள் 100-க்கு மேற்பட்ட அணு குண்டுகளைத் தயாரித்து வைத்திருக்கக் கூடிய வட கொரியாவில் நிலவும் ஸ்திரத்தன்மைதான் உலக அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்கிறாா்கள் அவா்கள்.

இருந்தாலும், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வட கொரியாவிலிருந்து வெளிநாட்டினா் பலா் வெளியேறிவிட்டதாலும், தனது எல்லைகளை அந்த நாடு மூடிவிட்டதாலும் அங்கிருந்து உளவுத் தகவல்களைப் பெறுவது முன்பைவிட தற்போது மிகவும் கடினமாகி உள்ளது.

இந்தச் சூழலில், வட கொரிய நிலவரத்தை அறிந்து கொள்வதற்கு அந்த நாட்டு அரசுச் செய்தி நிறுவனமும், வெளிநாட்டு அரசியல் நோக்கா்களின் ஊகங்களையுமே பெரும்பாலும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த அதிபா் பதவியேற்பதும், கரோனா பிரச்னை தீா்வதும் இந்த நிலையை மாற்றலாம். அதுவரை வட கொரிய நிகழ்வுகள் அனைத்தும் மா்மமாகவே நீடிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com