புலம்பெயர்ந்தவர்கள் எதிரிகளா?

மனித வரலாறு முழுவதும், இடம்பெயர்வு என்பது துன்பங்களைச் சமாளிப்பதற்கும் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கும் மனிதனால் மேற்கொள்ளப்படும் வாழ்வியல் நடவடிக்கையே.
புலம்பெயர் கால்கள்...
புலம்பெயர் கால்கள்...

மனித வரலாறு முழுவதும், இடம்பெயர்வு என்பது துன்பங்களை சமாளிப்பதற்கும் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கும் மனிதனால் மேற்கொள்ளப்படும் வாழ்வியல் நடவடிக்கையே.

இன்று, உலகமயமாக்கல், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்தின் முன்னேற்றங்களுடன் சேர்ந்து, பிற இடங்களுக்குச் செல்வதற்கான விருப்பமும் திறனும் கொண்ட மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

உலகம் குறித்த பல்வேறு கற்பிதங்கள் இருந்தாலும் அனைவருக்குமான உலகு எனும் இலக்கை அடைவதே மனித குலத்தின் வெற்றியாக இருக்க முடியும்.

கல்வி, வேலைவாய்ப்பு வசதிகளைத் தாண்டியும் பிற நாடுகளில் இருந்து அல்லது பிற பகுதிகளில் இருந்து குடியேறும் மக்களை, தங்கள் வாய்ப்புகளைப் பறிக்க வந்த மனிதர்களாக முன்னிறுத்துவதும் அவர்களுக்கான வாழ்வியல் காரணிகளை முடக்குவதும் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

உலகின் பல்வேறு பகுதி மக்களும் பல்வேறு காரணங்களால் இடம்பெயர்தலை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4, 2000 அன்று, ஐக்கிய நாடுகள் அவை, டிசம்பர் 18 ஆம் நாளை சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாளாக அறிவித்தது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குப் புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பு பெருமளவு முக்கியத்துவம் பெற்றது என்பதனை வலியுறுத்தும் விதமாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

புலம்பெயர்வு என்பது பல காரணங்களால் ஏற்படும் உலகளாவிய நிகழ்வு. அரசியல் நெருக்கடி, அவசர நிலை, போர்ப் பதற்றம், கல்வி மற்றும் மருத்துவம், வாழ்வியல் தேவை ஆகிய காரணங்களுக்காக மக்கள் ஒரு பகுதியில் இருந்து பிரிதொரு பகுதிக்குப் புலம்பெயர்கின்றனர்.

சிரியாவில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி, இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின் காரணமாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் போன்றவை சுட்டிக்காட்ட முன் உள்ள எடுத்துக்காட்டுகளாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டில், உலகளவில் புலம்பெயர்ந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 27.2 கோடியை எட்டியுள்ளது. இது உலக மக்கள்தொகையில் 3.5% ஆகும். இந்த எண்ணிக்கையானது கடந்த 2010ஐவிட 5.1 கோடி அதிகம். அதில், 52 சதவீதம் ஆண்கள் என்பது கூடுதல் செய்தி.

இவர்கள் பணி நிமித்தமாகவும், மேற்படிப்புக்காகவும் புலம்பெயர்கிறார்கள். 1970-க்குப் பிறகு, தங்களது பிறந்த இடத்தைத் தவிர வேறு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

சொந்த நாட்டு மக்களால் அல்லது அரசால் புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பது என்பது அனைத்துலக நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ள ஒப்பந்தமாகும். புலம்பெயர்ந்தோருக்குத் தரமான கல்வியை வழங்குவது, அவர்களைக் குறித்த எதிர்மறையான கருத்துகளைப் போக்குவது, பாதுகாப்பான மற்றும் ஒழுங்கான வாழ்வை உறுதிப்படுத்துவது என்பனவற்றை ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்துகிறது.

புலம்பெயர்ந்தோர் ஒவ்வொருவரின் உரிமைகளையும், அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாத்து நிலையான வளர்ச்சிக்கு அவர்களை ஊக்குவிப்பது என்பது மனித குலத்தின் தேவை என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

உலக அளவில் பொருளாதார வளம் பெற்ற நாடுகளுக்கே அதிகமான மக்கள் புலம்பெயர்கின்றனர் என்கிறது தரவுகள். அவ்வாறாக புலம்பெயர்ந்தவர்கள் பெருவாரியாகத் தேர்ந்தெடுப்பது அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளைத் தான்.

அதேவேளை உள்நாட்டு பிராந்தியங்களில் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ளது. உள்நாடுகளுக்குள் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 4.1 கோடிக்கும் அதிகமாகவும், அகதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2.6 கோடியாகவும் உள்ளது.

1.75 கோடி புலம்பெயர்ந்தோர்களின் எண்ணிக்கையுடன் அதிகமான புலம்பெயர்வோரைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதனைத் தொடர்ந்து மெக்சிகோ (1.18 கோடி) மற்றும் சீனா (1.07 கோடி) ஆகிய நாடுகள் உள்ளன. ஐ.எம்.ஓ. எனப்படும் உலகளாவிய புலம்பெயர்வு அறிக்கை 2020-ன்படி 96.5 சதவிகித மக்கள் தங்கள் சொந்த நாடுகளில் புலம்பெயர்ந்து வசித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

ஐ.நா. அமைப்பின் கூற்றுப்படி, உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 14.1 கோடி மக்கள் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வாழ்கின்றனர். அமெரிக்காவில் 5.07 கோடி புலம்பெயர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி உலகளாவில் ஒட்டுமொத்த புலம்பெயர்ந்தோர்களின் எண்ணிக்கையில் 40 சதவிகிதத்தினர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற தகவலும் கவனத்தில் கொள்ள வேண்டியது. வளைகுடா நாடுகளில் சுமார் 30 லட்சம் புலம்பெயர் இந்தியர்கள் வாழ்கின்றனர் எனவும்,  பிரிட்டனில் சுமார் 10 லட்சம் இந்தியர்கள் உள்ளனர் எனவும் கூறப்படுகிறது. 1990-க்கும் 2017-க்கும் இடையில் கத்தாரில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 803 மடங்கு அதிகரித்துள்ளது.

போர் அபாயம் உள்ளிட்ட அவசர நிலைக் காலங்களில் புலம்பெயர்பவர்களைக் காட்டிலும் கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்து புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு புலம்பெயர்ந்து வாழ்வோர் தங்களது சொந்த நாட்டிற்குத் தங்களது உழைப்பின் ஊதியத்தை அனுப்பிவைப்பதும் தற்போது முக்கிய கவனம் பெற்றுள்ளது. 

சமீபத்தில் உலக வங்கி 'இடம்பெயர்வு மற்றும் பணம் அனுப்புதல்' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு கணக்கின்படி புலம்பெயர்ந்தோரால் தங்களது சொந்த நாடுகளுக்கு 6890 கோடி டாலர்கள் அந்நிய செலாவணியாக அனுப்பட்டுள்ளன. இதில் இந்தியாவிற்கு 786 கோடி டாலர்களும், சீனாவிற்கு 674 கோடி டாலர்களும், மெக்சிகோவிற்கு 357 கோடி டாலர்களும் அனுப்பப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய மொத்தப் பணத்தில் 75%-க்கும் அதிகமானவை அமெரிக்கா, சௌதி அரேபியா, ரஷியா உள்ளிட்ட உலகின் 10 பெரிய செல்வந்த நாடுகளில் இருந்து பெறப்பட்டவை எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

1998 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிலிருந்து மொத்தம் 4.13 கோடி மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளனர். உள்நாட்டுப் போர் பதற்றமும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் புலம்பெயர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உள்நாட்டுப் பதற்றங்களால் தங்களது நாட்டின் அண்டைப் பிராந்தியங்களில் புலம்பெயர்ந்தோரின் பட்டியலில் 60 லட்சம் மக்கள்தொகையுடன் சிரியா முன்னணியில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 58 லட்சம் மக்கள்தொகையுடன் கொலம்பியாவும், 31 லட்சம் மக்கள் தொகையுடன் காங்கோவும் உள்ளன.

இதற்கு சற்றும் சளைக்காத வகையில் இயற்கைப் பேரழிகளால் இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் எதிர்வரும் காலத்தில் இது புலம்பெயர்தல் காரணியில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக பிலிப்பின்ஸிலிருந்து 2018 ஆம் ஆண்டின் இறுதியில் 38 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இது உலகளவில் மிகப்பெரிய எண்ணிக்கையாகும். 

உலக இடம்பெயர்வு அறிக்கை 2020ன்படி புலம்பெயர்தலின்போது மேற்கொள்ளும் ஆபத்தான பயணங்களில் பலியாவோரின் எண்ணிக்கையும் மலைக்க வைப்பதாக உள்ளன. 

2013 ஆம் ஆண்டில் இத்தாலிய தீவான லம்பேடுசா அருகே இரண்டு படகுகள் மூழ்கி நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். இதனையடுத்து, புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு உலகளவில் புலம்பெயரும்போது ஏற்படும் உயிரிழப்புகளைக் கண்காணிக்கத் தொடங்கியது.
 
அதன் பிறகான ஐந்து ஆண்டுகளில், 30,900-க்கும் மேற்பட்ட மக்கள் பிற நாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்ல முயன்றதில் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். 2014 முதல், அமெரிக்காவிற்கும், மெக்சிகோவிற்கும் இடையிலான எல்லையில் மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதேபோல் ஐரோப்பாவை அடைய மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் மத்திய தரைக் கடல் பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 18,000 மக்கள் பலியாகியுள்ளனர். உலகில் பாதிக்கும் மேற்பட்ட அகதிகள் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியாவைச் சேர்ந்தவர்களாவர். அகதிகள் அனைவருக்கும் தனியே ஒரு நாடு என ஒன்று இருந்தால் அது உலகின் 22ஆவது பெரிய நாடாக இருக்கும்.

கரோனா தொற்று மத்தியிலும் நமது நாட்டிலும் தென் மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்க சொந்த மாநிலங்களை நோக்கி நடக்கத் தொடங்கினர். அதில் தங்களது பயணப் பாதையிலேயே மாண்டும், கர்ப்பிணி பெண்கள் சாலைகளில் குழந்தை பெற்ற அவலமும் நடந்தது. பணி காரணமாக நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்நிலைகளை மேம்படுத்த முயற்சிப்பது அடிப்படை தேவையாகும். 

தென்னாப்பிரிக்க நாடுகளிலிருந்து இன்றும்கூட மேற்கத்திய நாடுகளுக்கு பாலியல் சுரண்டலுக்காகவும், மலிவான உழைப்பாளர்களாகவும் மக்கள் நாடு கடத்தப்படுவது நடந்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் வறுமை அவர்களின் அன்றாட வாழ்வை நடத்த சிரமப்படுத்துவதால் பல்வேறு நாடுகளுக்கு அந்த மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். 

இன்றைக்கும் லிபியா நாடானது கண்ணீர்ப் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுவதன் பின்னணியில் புலம்பெயர்தலில் இறந்த மக்களின் தடங்கள் உள்ளதை மறுக்க முடியாது. சிரியாவில் ஏற்படுத்தப்பட்ட உள்நாட்டுப்போரால் பலர் துருக்கி, ஜோர்தான் மற்றும் லெபனானில் சிக்கி உள்ளனர். புலம்பெயர்ந்தாலும் உரிய பணி வாய்ப்புக் கிடைக்காமல் வறுமையை சந்திக்க மக்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

புலம்பெயர்வு என்பது தற்போதைய உலகில் அதிக கவனத்தைப் பெற்று வருகிறது. புலம்பெயர்வுகளில் நிலவும் சவால்கள் மற்றும் சிரமங்களுக்கு மத்தியில் நாடுகள் மற்றும் பிராந்தியங்களிடையே மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கையை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.

தேசிய எல்லைகளைக் கடந்த மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை வேறுபாடுகள் கடந்து உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். சொந்த மக்கள், புலம்பெயர் மக்கள் எனும் இருவேறு சொற்பதங்கள் மூலம் மக்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தும் காரணிகளைக் களைவதும் தற்போதைய நாள்களில் அவசியமாகிறது.

[டிச. 18 - உலக  புலம்பெயர்ந்தோர் நாள்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com