மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல! அமெரிக்காவையே மாற்றிய அற்புதக் காதல்!

காதல் என்னும் இந்த ஒற்றை வார்த்தையும், அதன் பின்னுள்ள உணர்வும் இத்தனை ஆயிரம் ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் எண்ணற்றவை.
லோபோ
லோபோ

காதல் என்னும் இந்த ஒற்றை வார்த்தையும், அதன் பின்னுள்ள உணர்வும் இத்தனை ஆயிரம் ஆண்டுகால மனிதகுல வரலாற்றில் நிகழ்த்தியுள்ள அற்புதங்கள் எண்ணற்றவை. எத்தனையோ மகத்தான சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சிக்கும், நம்ப முடியாத பல்வேறு சாதனைகள் நடப்பதற்கும், தனி மனிதர்கள் உலகப்புகழ் பெறுவதற்கும் ஏதோவொரு காதல் காரணமாக அமைந்துள்ளது என்பதற்கான உதாரணங்களை நம்மால் வரலாற்றின் வழிநெடுகிலும் காண முடியும். அவ்வளவு ஏன் 19-ஆம் நூற்றண்டில் மனித இனம் கண்ட மாபெரும் இன அழிப்பைச் செய்தவனான கொடுங்கோலன் ஹிட்லர் கடைசியில் எதிரிகள் சூழ்ந்த தருணத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த போது, அவன் கூடவே தற்கொலை செய்து கொண்டவர் அவனது காதலி ஈவா பிரவுன் என்பது கவனிக்கத்தக்கது.  அப்படி காதல் எப்போதும் எளிதில் புரிந்துகொள்ள இயலாத பல பரிமாணங்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறது.

ஆனால் இந்தக் காதல் என்னும் உணர்வானது உலகில் உள்ள உயிர்களில் மனிதனுக்கு மட்டுமே உரித்தானது அல்லவே? விலங்குகள் கூட  காதல் கொள்கின்றன. ஆனால மனிதன் தான் கொண்ட காதல் என்னும் உணர்வை வெளிப்படுத்த, பரிணாம வளர்ச்சியால் தான் பெற்ற அறிவைப் பயன்படுத்தி பாடல், இசை, கவிதை, ஓவியம், சிற்பம் என்னும் பல்வேறு வழிகளிலும் காதலை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறான். அதேநேரம் விலங்குகளும் தங்களது காதலை தாங்கள் உணரும் வழியில் வெளிப்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன அப்படியான ஒரு காதல் கதையைத்தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். அமெரிக்காவின் புகழ்பெற்ற ஒரு வேட்டைக்காரரை தனது துப்பாக்கியை உடைத்து தூக்கிப் போட்டு விட்டு, வனங்களின் பாதுகாப்பை வலியுறுத்தி செயல்படுபவராக மாற்றி, காடுகள் மற்றும் விலங்குகள் குறித்த அமெரிக்காவின் பார்வையையே மாற்றி விட்ட மகத்தான காதல் இது!!

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ளது கரம்பா பள்ளத்தாக்கு. 1890 வாக்கில் அங்கு வசித்த மக்களுக்கு, பண்ணைகளை அமைத்திருந்த பண்ணையாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஒரு பெயர் லோபோ. இந்த லோபோ என்பது அதிபயங்கர கொள்ளைக்காரனோ அல்லது கொடுங்கோலனோ அல்ல. அது ஒரு ஓநாய். லோபோ என்னும் பெயருக்கு ஸ்பானிய மொழியில் ஓநாய் என்பதுதான் பொருள். லோபோவும் அதனோடு கூடிய சிறு ஓநாய்க் கூட்டமும் சேர்ந்து கொண்டு அந்த மக்களை வெகுவாக அச்சுறுத்தி வந்தன. அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் லோபோவின் பெயரை உச்சரிக்காத நாள்களே இல்லையென்ற அளவிற்கு அவ்வளவு அட்டூழியங்களை லோபோ செய்து வந்தது.

<strong>பிடிபட்ட நிலையில் லோபோ</strong>
பிடிபட்ட நிலையில் லோபோ

வனங்கள் மற்றும் வன விலங்குகளை அழித்து உருவாக்கப்படும் பண்ணை குடியிருப்புகளின் காரணமாக, லோபோ மற்றும் அதன் கூட்டத்திற்கு இயற்கையான இரைகளான காட்டெருமை, எல்க் போன்ற விலங்கினங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. எனவே அந்த ஓநாய்க் கூட்டமானது அங்கு குடியேறியவர்களின் பண்ணை விலங்குகளை விரும்பி வேட்டையாடி வந்ததே அதன் மீதான அச்சத்திற்கு மிக முக்கிய காரணமாக  இருந்தது.

அப்படியே இதன் வேட்டையைக் கண்டு அவர்களும் சும்மா இருக்கவில்லை. பண்ணையாளர்கள் திட்டமிட்டு இறந்த விலங்குகளின் சடலங்களில் விஷம் வைத்து லோபோவையும் அதன் கூட்டத்தினரையும் அழிக்க முயன்றனர். ஆனால் இயல்பிலேயே புத்திசாலித்தனமான லோபோ மற்றும் இதர ஓநாய்கள், விஷம் கலந்த கறித்துண்டுகளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ளவற்றைச் சாப்பிட்டு விட்டுத் தெம்பாகத் தப்பின. ஆனாலும்  முற்சியைக் கைவிடாத மக்கள், ஓநாய்களைப் பொறிகளாலும், பல வேட்டை ஆள்களை வரவைத்துத் திட்டமிட்டு ஒழிக்க முயன்றனர், ஆனால் அவர்களுக்கு சோகம் தரும் விதமாக அனைத்து முயற்சிகளும் தோல்விகளிலேயே முடிந்தது.

இதன் காரணமாக கடும் கோபமடைந்த அங்குள்ள மக்கள் லோபோவின் தலைக்கு 1000 டாலர்கள் பிணைத்  தொகை வைத்தனர். அந்தக் காலத்திலேயே 1000 டாலர்கள் தொகை என்றால் லோபோ மீது அவர்கள் எத்தனை கோபம் கொண்டிருப்பார்கள் என்பதை உணரலாம். உதாரணமாக  ஒருமுறை அவர்கள் திட்டமிட்டுப் பண்ணையில், பலவீனமான நோய்வாய்ப்பட்ட ஆடுகளை வெளிவட்டத்தில் வைத்துவிட்டு, ஆரோக்கியமான ஆடுகளை மட்டும் உள் வட்டத்தில் சற்றுத் தள்ளி நிறுத்திவைத்தனர்.  மறுநாள் காலை அவர்கள் வியக்கும் விதமாக காணாமல்போன ஆடுகள் அனைத்தும் உள் வட்டத்து ஆடுகளே. வெளியே பாதுகாப்பு அரணாக நிறுத்தப்பட்ட நோய்வாய்ப்பட்ட ஆடுகள் ஒன்றுகூட இறக்கவில்லை. அத்தனை ஒரு புத்திகூர்மையான விலங்காக இருந்தது லோபோ!   

லோபோவின் தலைக்கு 1000 டாலர்கள் பிணைத் தொகை என்ற விவரம், அப்போது கிழக்கு அமெரிக்க பகுதிகளில் புகழ்பெற்ற வேட்டைக்காரரும், திறமையான ஒரு வேட்டைப் பரம்பரையை சேர்ந்தவருமான எர்னஸ்ட் தாம்சன் செட்டன் என்பவற்றின் காதுக்கு எட்டியது. அவரது பரம்பரை புகழுக்கு எடுத்துக்காட்டாக வட பிரிட்டனின் கடைசி ஓநாய்கள் வரை கொன்று குவித்தது அவர்கள்தான் என்ற ஒரு செய்தியே உதாரணமாக இருக்கும்.

<strong>  வேட்டைக்காரர் எர்னஸ்ட் தாம்சன் செட்டன்</strong>
  வேட்டைக்காரர் எர்னஸ்ட் தாம்சன் செட்டன்

தனது திறமைக்கு விடுக்கப்பட்ட சவாலாக அவர் கரம்பா பள்ளத்தாக்கில் கால் வைத்தார். அப்போதே இரண்டு வாரங்களில் எப்படியோ லோபாவைப் பிடித்து விடுவேன் என்று அங்கிருந்த பண்ணையாளர்களிடம் சவாலும் விட்டார். தனது முதல் முயற்சியாகக் கொஞ்சம்கூட மனித வாசனையின் தடயங்களின்றி 5 விஷம் கலக்கப்பட்ட இறைச்சித் துண்டுகளையும், 5  கலக்கப்படாத துண்டுகளையும் வைத்துக் கவனமாக மூடி, லோபோ உலவும் பிரதேசத்தில் பொறிகளோடு வைத்தார். அடுத்த நாள் வந்து பார்த்தவர் அதிர்ந்துபோனார்.  5 கலப்படமில்லாத இறைச்சித் துண்டுகளை மட்டும் காணவில்லை. அதிலும் அவரைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற விஷயம் எதுவென்றால் ஐந்து விஷம் கலக்கப்பட்ட இறைச்சித் துண்டுகளையும் ஒன்றிணைத்து ஓநாய் மலத்தால் மூடப்பட்ட ஒரு குவியலையும் அவர் அங்கு கண்டதுதான்! இதற்குப் பிறகுதான் மோதிக் கொண்டிருப்பது மிகு புத்திசாலித்தனம் கொண்ட ஒரு ஓநாயோடு என்பதை அவர் உணர்ந்துகொண்டார். 

செட்டன் ஒவ்வொரு முறையும் நன்கு யோசித்து  புதிய, சிறப்பு பொறிகளை உருவாக்கி அவற்றை லோபோ புழங்கும் பிரதேசத்தில் கவனமாக மறைத்து வைத்தார், ஆனால் லோபோவோ தினமும் அவற்றை வெகு கவனமாகத் தோண்டி எடுத்து மீண்டும் செட்டனின் பார்வைக்கே வைத்து விட்டுச் சென்றது. ஆரம்பத்தில் நான்கு வாரங்களில் முடிந்துவிடும் என்று நினைத்த வேட்டை முயற்சி, நான்கு மாதங்களாக நீடிக்க செட்டன் சோர்வடைந்து விரக்தியடைந்தார்.

இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்த அவருக்கு ஒரு தடயம் கிடைத்தது.  பனிக் காலத்தில் ஓநாய்களின் சிறிய தடங்களின் தொகுப்பைப் பின்பற்றி வந்த அவர் லோபோவின் தடத்தைப் பனிப்படலத்தில் தனியாகக் கண்டுபிடித்தார். அப்போதுதான் லோபோ பற்றிய ஒரு முக்கிய விஷயம் செட்டனுக்கு தெரிய வந்தது. அது, லோபோ எப்போதும்  தனி ஓநாய் கிடையாது; அதற்கு ஒரு காதலி இருக்கிறாள் என்பதுதான் அது. அருகருகே இருந்த சிறு ஜோடித்  தடங்களை வைத்து அதனைப் புரிந்துகொண்டார். லோபோவின் கூடவே இருந்த அந்த வெள்ளை ஓநாயை பிளாங்கா என்று அங்கிருந்த மக்கள் அழைத்தனர். பிளாங்கா  என்றால் பிரெஞ்ச் மொழியில் வெள்ளை அல்லது ஒளி பொருந்திய என்பது பொருளாகும்.  

எனவே தனது திட்டத்தை வெகுவாக மாற்றி யோசித்த செட்டன் ஒரு குறுகிய பகுதியில் பல பொறிகளை அமைத்தார், அந்த தூண்டில் பொறிகளில் ஏதாவது ஒன்றில் லோபோவுடன் சுற்றும் பிளாங்கா சிக்கிக் கொள்ளும் என்று நினைத்து, பலவேறு இறைச்சித் துண்டுகளைப் பரப்பிவைத்து ஏறக்குறைய  50 பொறிகளை அமைத்தார்.

ஒரு நாள் விடியற்காலையில் ஒரு ஓநாயின் அழுகுரல் சப்தம் கேட்டு செட்டன் எழுந்தார். அவர் எண்ணியது போலவே அது லோபாவின் குரல்தான். உடனே பொறிகளின் இடத்திற்குச் சென்ற செட்டன் பார்த்து பிரமித்துப் போனார். பொறியில் சிக்கிய பிளாங்கா அசலாக ஒரு வெள்ளை தேவதையை போலிருந்தது.  அது சிக்கிக் கொண்ட காரணம் பிளாங்காவிற்கு இரையில் முன்னுரிமை கொடுத்து விட்டு லோபோ கொஞ்சம் விலகி இருந்ததே ஆகும். செட்டன் தூரத்திலிருந்து பார்க்கும்போது, பிளாங்கா அருகில் லோபோவும் நின்று கொண்டிருந்தது. செட்டன் வருவதை பார்த்து, லோபோ ஒரு பாதுகாப்பான தூரத்திற்கு ஓடி மறைந்து நின்று கொண்டு அங்கு நடப்பவற்றை கண்காணித்தது.

<strong>பிடிபட்ட நிலையில் பிளாங்கா</strong>
பிடிபட்ட நிலையில் பிளாங்கா

அதன் கண் முன்னாலேயே செட்டனும் அவரது கூட்டாளிகளும் பிளாங்காவைக் கொன்று அவளது இறந்த உடலைக் குதிரைகளின் காலில் கட்டி கிராமத்தை நோக்கி இழுத்து வந்தனர். இவை அனைத்தையும்  மலை உச்சியில் நின்று கண்ணீருடன் லோபோ  பார்த்துக்கொண்டே இருந்தது.

அதன் பிறகு செட்டன் அங்கு தங்கியிருந்த ஒவ்வொரு இரவிலும் லோபோவின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததாக செட்டன் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு நீண்ட, தெளிவான சோகம் நிறைந்த அழுகை என்று அவர் விவரிக்கிறார். லோபோவின் மீது செட்டன் வருத்தப்பட்டாலும், அதனைக் கைப்பற்றுவதற்கான தனது திட்டத்தைத் தொடர்வது என்று முடிவு செய்தார். அதற்கு ஏதுவாக பிளாங்காவின் உடலை அழிக்காமல் தன் பண்ணை வீட்டிலேயே பாதுகாத்து வைத்தார்.

அதேநேரம் பிளாங்காவின் இழப்பு லோபோவை வெகுவாகப் பாதித்துவிட்டது. இதன் காரணமாக ஆபத்து என்று தெரிந்தும், தனது இணை மீது கொண்ட ஆழ்ந்த காதலின் காரணமாக பிளாங்காவின் வாசனையைப் பிடித்துக்கொண்டு செட்டனின் பண்ணை வீட்டிற்கே வந்து சென்றது. தினமும் அங்கு பதிந்திருக்கும் காலடிகள் மூலமாக லோபோ தனது வீட்டின் அருகே சுற்றித் திரிவதை  செட்டன் கண்டுகொண்டார். கூடுதல் பொறிகளை அமைத்தார். அங்கு வைக்கப்பட்ட இறைச்சிகளில் பிளாங்காவின் உடலைப் பயன்படுத்தி அவற்றில் மீது பிளாங்காவின் வாசனை வரச் செய்தார்.

செட்டனின் இந்த புதிய பொறி நன்றாக வேலை செய்தது. பிளாங்கா மீதான லோபோவின் காதல், இழப்பின்  ஏக்கம், வருத்தம் அதனை முழுதாக ஆக்கிரமித்து அதன் இயல்பான எச்சரிக்கை உணர்வை முழுவதுமாக மங்கச் செய்து விட்டது. இவற்றின் காரணமாக கரம்பா பள்ளத்தாக்கையே தனது புத்திசாலித்தனத்தால் கட்டியாண்ட லோபோ ஜனவரி 31, 1894 அன்று சுலபமாகப் பொறியில் பிடிபட்டது.

அதனைப் பார்க்க செட்டன்  அங்கு சென்றார். தனது வேட்டையுலக வாழ்க்கையில் அவ்வளவு கம்பீரமான ஓநாயை செட்டன் அதுவரை பார்த்ததே இல்லை. செட்டன் அதனை உயிரோடு பிடிக்கும் முயற்சியில் அதனருகே சென்றபோது, தன் உடலெங்கும் காயங்கள் இருந்தபோதிலும் ஊர்மக்கள் முன் லோபோ கம்பீரமாக நின்று உறுமியது. லோபோவின் அசராத துணிச்சலினாலும் தன் துணையிடம் அது வைத்திருந்த மாறா காதலினாலும், செட்டனால் அதனைக் கொல்ல முடியவில்லை. எனவே அவர்கள் லோபோவைக் கயிறு கட்டி, இழுத்து குதிரையில் ஏற்றி பாதுகாப்பாக அவரது பண்ணைக்கு அழைத்துச் வந்தனர்.

லோபோ அங்கு கொண்டுவரப்பட்டவுடன் காயங்களுடன் தவழ்ந்து சென்று முனகியபடி அங்கே கிடந்த தனது காதலி பிளாங்காவை எழுப்பத் தொடர்ந்து முயன்றதைப் பார்த்த செட்டன் மனமுடைந்து கண்ணீர்விட்டுக் கதறினார். ஆனால் லோபோ மீண்டும் மீண்டும் இறந்து சடலமாகக் கிடந்த காதலியைச் சுற்றிச்சுற்றி வந்து ஊளையிட்டு, அவளை எழுப்பக் கோபமாகக் கடித்துக்கூடப் பார்த்தது.  தனது சலியா தொடர் முயற்சிகள் தோல்வியில் முடிய, லோபோ துவண்டு போய் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு அப்படியே படுத்துக்கொண்டது. அது எதுவும்  சாப்பிடவோ அல்லது ஊர் மக்களையோ செட்டனையோ நிமிர்ந்து பார்க்கக்கூட மறுத்துவிட்டது.

ஒருகட்டத்தில் அதன் கட்டுகளை அவிழ்த்துவிட்டு வெறுமனே கயிறு மட்டும் கொண்டு வெறுமனே கட்டியும் அது தப்பிக்க எந்த முயற்சியும் எடுக்காமல் அப்படியே இருந்துவிட்டது. இது பிளாங்காவைப் பொறி வைத்துப் பிடித்து, துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற செட்டனை மேலும் மேலும் கவலையிலும் குற்ற உணர்ச்சியிலும் தள்ளியது.

ஒரு மகத்தான காதல் கதையின் இறுதிக் கட்டத்தைப் போல, வெட்டவெளியில் இறந்துபோன தன் காதலியுடன் படுத்திருந்த லோபோ, ஒருகாலத்தில் தான் கம்பீரமாக தனது கூட்டத்துடன் சுற்றித்திரிந்த, தனது ராஜ்யத்தைப் பார்த்துக்கொண்டே இறுதியாக ஒருமுறை ஈனஸ்வரத்தில் கம்பீரமாக ஊளையிட்டு ஓய்ந்து காதலி அருகிலேயே உயிரை விட்டது.

இதனை  வந்து பார்த்த செட்டன் மனது வெகுவாக உடைந்துபோய் லோபாவின் அருகிலேயே தளர்ந்து படுத்துவிட்டார். மாபெரும் வேட்டைக்காரனாக இருந்தாலும், தான் செய்த பாவச் செயலுக்கு முதல் முறையாக வெட்கித்  தலைகுனிந்தார்.

அந்த புனிதமான காதலுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இரு உடல்களையும் ஒன்றாக சேர்த்து புதைத்தார். அதேநேரம், 'லோபோ, பிளாங்கா, மனிதர்கள் உங்களை பிரித்து விட்டனர். ஆனால் மரணம்கூட உங்களிடம் தோற்று விட்டது' என்று வருத்தத்துடன் கூறி தனது வேட்டைத் துப்பாக்கியை இரண்டாக உடைத்துத் தூக்கி எறிந்துவிட்டு நடந்து சென்றார்.

<strong>லோபோ மற்றும் பிளாங்கா - ஓவியம்</strong>
லோபோ மற்றும் பிளாங்கா - ஓவியம்

அதன்பிறகு தனது வாழ்நாளில் ஒருபோதும் துப்பாக்கியைத் தொடாத செட்டன், தனது அனுபவங்களை நூலாக எழுதினர். அதே நேரம் வனங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தனது எழுத்துகளில் தொடர்ந்து வலியுறுத்தினர். இதன் காரணமாக நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் துவங்கி அமெரிக்கா முழுவதும் வனம்  மற்றும் வன உயினங்களைப் பாதுகாப்பது குறித்து மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது.    

லோபோ - பிளாங்கா இருவரும் வேண்டுமானால் மரணித்திருக்கலாம், ஆனால் அவர்களின் உணர்வுப்பூர்வமான காதல் அமெரிக்க கண்டத்தின் வன வரலாற்றையே மாற்றியமைத்தது என்றால் அது சிறிதும் மிகையாகாது. மனிதர்களுக்கு மட்டுமல்ல.. மகத்தான காதல் விலங்குகளுக்கும் சாத்தியம்தான்!   

ஆதாரங்கள்:

லோபோ குறித்த முழுமையான ஆவணப்படம்:https://www.dailymotion.com/video/x2faql0  

புகைப்பட நன்றிகள்:

All images courtesy of Philmont Museum – Seton Memorial Library

Cimarron, New Mexico

A gift of Mrs. Julia M. Seton

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com