சோழர் காலக் கல்வெட்டுகளுடன் மடைத்தூண்கள் கண்டுபிடிப்பு

முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக் கண்டறிந்தார்.
மடைத்தூண்கள்
மடைத்தூண்கள்

புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு மேற்கொண்ட முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக் கண்டறிந்தார். அவர் அளித்த தகவலால் அக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு.நளினியும் ஆய்வாளர் அ. செல்வியுடன் திம்மயம்பட்டித் தூண்களை ஆராய்ந்தனர். மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் இரா. முத்தாண்டி யும் ஆய்வாளர் பி. லோகநாதனும் உடனிருந்து உதவினர்.

உள்ளூர் மக்களால் ஆனையடிக்கல் என்றழைக்கப்படும் இத்தூண்களை மடைத்தூண்களாக அடையாளப்படுத்தும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன், இவை பற்றிய விரிவான செய்திகளை வெளியிட்டுள்ளார். குறுங்குளம் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பெறும் திம்மயம்பட்டிக் குளத்தின் கிழக்குக் கரையருகே குளத்திற்குள் இருக்குமாறு இவ்விருதூண்களும் நிறுவப்பட்டுள்ளன. இவற்றிற்கு இடைப்பட்டு அமையும் மடை எனும் கட்டுமானமே குளத்து நீரைப் பாசனத்திற்கேற்ப திறக்கவும் திசைமாற்றவும் பயன்படுகிறது.

இவ்விரண்டு தூண்களில் வடபுறத்தூண் வட்டமான மேற்பகுதியும் செவ்வகக் கீழ்ப்பகுதியும் கொண்டுள்ளது. இரண்டிற்கும் இடையில் மூன்று அடர்த்தியான செதுக்கல்கள். 1. 43 மீ. உயரமும் 25 செ. மீ. அகலமும் கொண்டுள்ள இம்மடைத்தூணின் ஒருபுறத்தே பொதுக்காலம் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால எழுத்தமைதியில் 9 வரிகளில் அமைந்த தமிழ்க் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மடைத்தூணைத் தலை நீரழிக்கல் என்றழைக்கும் கல்வெட்டு, கிழவன் பவழக்குன்றான கண்டாங்குச வேளானுக்கு இது அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. கல்வெட்டுப்பகுதிக்குக் கீழிருக்குமாறு இரு குத்துவிளக்குகள் காட்டப்பட்டுள்ளன.

தெற்குத் தூண் 43 செ. மீ. உயர 28 செ. மீ. அகலச் செவ்வகப் பாதமும் 1. 48 மீ. உயர எண்முக உடலும் கொண்டுள்ளது. தூணின் மேற்பகுதி அரைவட்டவடிவமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இவ்விரு பிரிவுகளுக்கும் இடைப்பட்டு மூன்று அடர்த்தியான வளையங்கள். தூணின் பாதப்பகுதியில் 7 வரிகளில் அமைந்துள்ள சோழர் காலக் கல்வெட்டு (பொ. கா. 10ஆம் நூற்றாண்டு) இதையும் தலைநீரழிக் கல்லாகவே குறிக்கிறது. வைகை சூற்றியான உறத்தூர் நாட்டுக் கிழவன் உத்தமசோழனுக்காக இக்கல் நிறுவப்பட்டுள்ளது. முறை வைத்து நீர்ப்பாய்ச்சும்போது குளத்தின் முதல் நீரோட்டம் இவ்விருவருக்கும் அளிக்கப்பட்டிருக்கலாம் என்பதையே தலைநீரழி என்ற தொடர் குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கல்வெட்டுகளுடன் அமைந்த மடைத் தூண்கள் கிடைத்திருப்பினும் சோழர் காலப் பொறிப்புகளுடன் காணப்படுபவை குறைந்த அளவினவே எனும் பேராசிரியர் மு. நளினி, மடைத்தொகுதியின் இரண்டு தூண்களும் சோழர் கல்வெட்டுகள் பெற்று அமைவது அரிதானதாகும் என்கிறார். தற்போது வற்றியுள்ள இக்குளத்தில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இச்சோழர் கால மடை அமைப்பிற்குச் சேதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு ஊர்மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com