சர்வதேச அளவில் கண்டிக்கப்படும் குற்றம்

உலகெங்கும் பரவியுள்ள குற்றங்களில் மனித கடத்தலும் கொத்தடிமை முறையும் பல்வேறு சிக்கல்களை கொண்டது.
சர்வதேச அளவில் கண்டிக்கப்படும் குற்றம்

உலகெங்கும் பரவியுள்ள குற்றங்களில் மனிதக் கடத்தலும் கொத்தடிமை முறையும் பல்வேறு சிக்கல்களை கொண்டது. பெரும்பாலானவர்கள் இக்குற்றங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது என்று கூறினாலும் இன்றும் நம்மிடையே நிலவி வருவது நிதர்சனமான உண்மை. மேலும் இவை பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. மனிதக் கடத்தல் என்பது ஆண்டுதோறும் 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் புழங்கும் ஒரு ஒருங்கிணைந்த குற்றச் செயலாகும். ஒவ்வொரு நுகர்வோரும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் கொத்தடிமைகள் பற்றியும் அவர்கள் உருவாக்கிய பொருட்களில் மறைந்திருக்கும் அடிமை சங்கிலி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தி தயாரிக்கப்படும் தரை விரிப்புகள் ஆகட்டும், மேற்கு ஆப்பிரிக்காவில் அடிமை தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் சாக்லேட் போன்ற பொருள்கள் ஆகட்டும் அதில் அடிமை வணிக சங்கிலி பிணைந்து இருப்பது பல வாடிக்கையாளர்களுக்கு தெரிவதில்லை. 

பாலியல் சுரண்டல், வீட்டுவேலை, கொத்தடிமை முறை, உடல் உறுப்பு, போன்ற தேவைகளுக்காக குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கடத்தப்படுவதும் மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

சர்வதேச அளவில் கண்டிக்கப்படும் குற்றமாக இருப்பினும், மனிதக் கடத்தல் தொடர்ந்து பல மக்களின் வாழ்க்கையை சூறையாடி அவர்கள் மனிதத் தன்மையை இழக்கும் அளவிற்கு வதைக்கிறது. ஒட்டுமொத்தமாக மனித க் கடத்தல் கூறுகளை புரிந்துகொள்ள, அதில் ஒரு பகுதியான பாலின பாகுபாடுகளை தெரிந்து கொண்டாலே போதும். எழ்மையுடன், பாலியல் பாகுபாடும் சேர்வதால் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகளே பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர். பாதிக்கப்பட்டவரைப் பொருத்து சம்பவங்களும் சூழல்களும் மாறுபடுகின்றன. ஆகையால் இங்கு ஒற்றைத் தன்மை என்பது இல்லை. பல்வேறு தளங்களில் மனிதர்களை அடிமைப்படுத்துவது, விற்பது மற்றும் கடத்தப்படுவது போன்றவை நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இக்குற்றங்களின் பின்னணியில் சில பொது காரணிகளை காண முடிகிறது. அவை ஆண்-பெண் பாலினப் பாகுபாடு, வயது, இனம், சாதி, ஏழ்மை ஆகியவற்றால் பெரும்பாலும் நிகழ்கிறது. அதுமட்டுமில்லாமல் சமூகத்தில் நிலவும் ஊழல் மற்றும் பேராசையும் காரணங்களாக அமைகின்றன. 

இந்திய தண்டனைச் சட்டம் IPC 370-ன் படி, 'மனிதக் கடத்தல்' என்பது ஒரு குற்றமாகவும் அது "மனிதர்களைக் கட்டாயப்படுத்தி வேலைக்கு அமர்த்துவது, இடப்பெயர்வு செய்வது, மிரட்டி வேலை வாங்குவது, வாங்கிய பணத்திற்காகவோ பண்டத்திற்காகவோ ஒருவரின் உழைப்பைச் சுரண்டுவது" என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதிலும் 'உழைப்புச் சுரண்டல்' என்பது "உடல்ரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் ஒரு மனிதனை / மனிதர்களை வதைப்பது, அடிமைப்படுத்துவது, அடிமைகள் போல நடத்துவது, ஆண்டான் அடிமை முறையில் வைத்திருப்பது அல்லது கட்டாயப்படுத்தி உடல் உறுப்புகளை திருடுவது" போன்ற குற்றங்கள் அடங்கும். இங்கு கடத்தல் என்பது நாடு விட்டு மற்றொரு நாட்டிற்கு அல்லது ஒரு நாட்டிற்கு உள்ளேயோ நடக்கும் கட்டாய இடப்பெயர்வை குறிக்கிறது.

உலகில் சிறார்கள் மற்றும் ஆண்களை கடத்துவது நடந்தாலும் பெண்களும் சிறுமிகளுமே மிக அதிக அளவில் கடத்தப்படுகின்றனர். கடத்தல் என்பது சமூக பொருளாதார காரணிகள் மட்டுமல்லாமல் கலாச்சாரரீதியான பின்னணி உள்ளதால் இது பாலினம் சார்ந்ததாகவும் இருக்கிறது. அதாவது சமூகத்தில் நிலவும் பாலினப் பாகுபாடு, ஆணாதிக்கம் ஆகிய காரணிகளால் கடத்தலுக்கு இலக்காவது பெரும்பாலும் சிறுமிகளும் பெண்களுமாகவே இருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் மீது வன்முறையை எளிதில் ஏவ முடியும். மேலும் நம் சமூகத்தில் பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளை மேலானவர்களாக கருதும் போக்கு நிலவுவதால் குடும்பத்தில் பெண்ணுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு செய்யும் முதலீடு மிகக் குறைவாகவே உள்ளது.

உதாரணத்திற்கு கொத்தடிமையாக சிக்கிக் கொண்டது ஒரு தம்பதி எனில், கணவர் வாங்கிய கடன் தொகைக்காக மனைவியின் ஒப்புதல் இல்லாமலேயே அதனைத் திருப்பிச் செலுத்தும் சுமை அவர் மீது சுமத்தப்படுகிறது. ஒருவேளை கணவர் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் மனைவியும் அதே இடத்தில் கணவருடன் சேர்ந்து வேலை செய்து அதனை அடைக்க வேண்டியுள்ளது. இதில் கணவரின் உழைப்பிலேயே மனைவியின் உழைப்பும் அடங்கி விடுவதால், ஆணாதிக்கத்தின் மறுபக்கம் தெரிகிறது. குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பெண்களும் இக்காலத்தில் வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இதுவே ஒரு புறம் கடத்தல்காரர்கள் இலக்காகக் கருதுகின்றனர். இந்தியா போன்ற நாடுகளில் திருமணத்திற்கு வரதட்சணை வாங்கும் பழக்கம் இருப்பதால் பெண் பிள்ளைகளை ஒரு சுமையாகவே குடும்பத்தில் உள்ளவர்கள் கருதுகின்றனர்.மேலும் பெண்களுக்கான வாழ்வாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு பெருமளவில் இல்லாததால் அவர்கள் பொருளாதார ரீதியில் பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையும் இணைந்து கொள்வதால் பெண்கள் வேறு வழியில்லாமல் சுரண்டல் முறை அதிகமாக உள்ள இடங்களிலேயே வேலை செய்ய நேரிடுகிறது. இதுமட்டுமில்லாமல் பணியிடங்களில் பாலியல் சீண்டல்களும் வன்முறைகளும் பெரும் அளவில் நடக்கின்றன.

'Free the slaves' என்ற அமைப்பு 2018-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி மனித கடத்தல் பாதிக்கப்பட்டவர்கள் 71% பேர் பெண்களும் சிறுமிகளும் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு சர்வதேச இடப்பெயர்வு அமைப்பு கணக்கீட்டின் படி ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் முதல் இரண்டு கோடி பெண்கள் மற்றும் குழந்தைகள் சர்வதேச எல்லைகள் வழியாக கடத்தப்படுகின்றனர் என்கிறது.

தேசியக் குற்ற ஆவண காப்பகத்தின் 2016ஆம் ஆண்டின் அறிக்கையின்படி மனித கடத்தலால் பாதிக்கப்பட்ட 22,955 பேரில் 7238 பேர் பெண்களும், 5532 பேர் குழந்தைகளும் அடங்குவர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அரசால் அடையாளம் காணப்பட்டவர்களில் பெண்களும் சிறுமிகளும் சேர்த்து 55% என இருக்கும் நிலையில் ஆண்கள் வெறும் 7% ஆகவும், சிறுவர்கள் 37% மாகவும் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகிறது.

மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆனாலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் இன்னும் பரிதாபகரமானது. அவர்கள் பாலியல்ரீதியாக மட்டுமல்லாமல் சமூக-கலாச்சார மற்றும் சாதிக் காரணத்தால் பல்வேறு கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். இது மனிதக் கடத்தலுக்கு உள்ளாகுவரைப் பொறுத்தே அவரின் மீது தொடுக்கப்படும் வன்முறையின் அளவும் மாறுகிறது. இதில் பெண்கள் பாலியல் வன்முறை, வல்லுறவு, அபாயகரமான, எச்ஐவி எய்ட்ஸ் போன்ற நோய் தொற்ற வைப்பது, உளவியல்ரீதியான பிரச்னைகள் போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். இதே போல சிறுமிகளாக இருப்பின் அவர்களை வைத்து மிரட்டி ஆபாச படங்களை எடுப்பது, கூட்டு பாலியல் வல்லுறவு செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களையும் சிறுமிகளையும் துயரில் இருந்து மீட்க பல தரப்பு முயற்சிகள் அவசியம். பல நேரங்களில் உளவியல்ரீதியாகவும் மருத்துவரீதியாகவும் உதவி தேவைப்படும். பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் மீண்டும் இணைந்து வாழ சமூகப் பொருளாதார நிறுவனங்கள் மற்றும் அரசின் தலையீடு இல்லை எனில் அவர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடும்.

மனிதக் கடத்தல் என்பது ஒரு சிக்கலான மனித உரிமைகள் பிரச்னையாகும். இதில் பாலினப் பாகுபாடு அதிகளவில் இருப்பதால் மேலும் சிக்கலானதாக இது மாறுகிறது. பெண்களுக்கான வளர்ச்சி, மருத்துவ வசதி, உளவியல் ஆலோசனை பல்வேறு தரப்பினர் மூலம் முன்னெடுத்து மட்டுமே ஒரு நிலையான அதேசமயம் சமத்துவமான சமூகத்தைப் படைக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com