Enable Javscript for better performance
மருத்துவர் நாள் - கரோனா காலத்தில்- Dinamani

சுடச்சுட

  

  மருத்துவர் நாள் - கரோனா காலத்தில்

  By டாக்டர் வெ. ஜீவானந்தம்  |   Published on : 01st July 2020 08:24 AM  |   அ+அ அ-   |    |  

  Doctors Day in Corona time

  கோப்புப்படம்

  மருத்துவர், விடுதலைப் போராட்ட வீரர், காந்திஜியின் மருத்துவர், மேற்கு வங்க முதல்வர் எனப் பல்வேறு முகங்களுடன் சேவையாற்றி மருத்துவத் துறைக்குப் பெருமை சேர்த்த டாக்டர் பி.சி. ராயின் நினைவைப் போற்றும் வகையில்தான், அவர் பிறந்த நாளான ஜூலை 1, ஆண்டுதோறும் நாடு முழுவதும் மருத்துவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

  வழக்கத்துக்கு மாறாக, கரோனா காலத்தில் வரும் இந்தாண்டின் மருத்துவர் நாள், மருத்துவத்  துறை சார்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி முடிக்கும் நாளாக அன்றி, மக்கள் அனைவரும் மனநிறைவுடனும் நன்றியுடனும் டாக்டர்களை வாழ்த்தும் நாளாக அமைந்துவிட்டது சிறப்புக்குரிய ஒன்று.

  கரோனா நமது நம்பிக்கைகள் பலவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது.

  பணத்தாலும், ஆயுத பலத்தாலும், வலிமையான வல்லரசுகள் என்று மார் தட்டியவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு, பயந்து வெளியே வராமல் பதுங்குகுழிகளில் ஒளிந்து கொள்வதைக் காண்கிறோம்.

  விஞ்ஞானம் எதையும் சாதித்து விடும், அறிவியலால் தீர்க்க முடியாத பிரச்னைகள் எதுவுமில்லை என்கிற அறிவு ஆணவம் தன்னால் ஏன்? எப்படி? என்ன தீர்வு? என்று எதையும் சொல்லமுடியாமல் கைகளை உயர்த்தித் தலைகவிழ்ந்து நிற்கிறது.

  டாக்டர் பி.சி. ராய்

  முக்காலத்தையும் கணிக்கும் ஜோதிடங்களுக்கு எதுவும் பிடிபடவில்லை. எல்லா வினையும் தீர்க்கும் என்ற கடவுளர்களின் ஆலயங்கள் யாவும் பூட்டப்பட்டிருக்கின்றன.

  ஊரே முடங்கிப் போயிருக்கிறது. அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுக் கிடக்கின்றன.

  எல்லா நோய்களையும் தீர்ப்போம் என்று பளப்பளப்பாக மின்னிய நட்சத்திர கார்பரேட் மருத்துவமனைகள் தான் தப்பித்தால் போதுமெனப் பூட்டிக் கிடக்கின்றன.

  ஆனால், தரமற்றவை என்று ஏழைகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுவிட்டிருந்த  அரசு மருத்துவமனைகள் மட்டுமே சுறுசுறுப்புடன் இரவு-பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அரசு மருத்துவமனை டாக்டர்களும், செவிலியர்களும் எட்டு மணி நேர வேலை, ஓய்வு, பாதுகாப்பு, வீடு, குழந்தைகள் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.

  குணமாக்கும் மருந்து ஏதுமில்லை என்றபோதும், தும்மினால், இருமினால் வைரஸ் தாக்கும் என்று தெரிந்திருந்தபோதும் பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் முழுமையாகத் தரப்படாத சூழலிலும் அவர்களில் பலரும் கையூட்டு எதையும் எதிர்பார்க்காமல் கடமை உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் நோயின் தாக்குதலுக்கு ஆளாகினர். சிலர் மரணத்தையும் தழுவினர். சிலர் தக்க மரியாதை ஏதுமின்றிப் போராட்டத்திற்கிடையே புதைக்கவும் பட்டனர்.

  கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்ற கீதை வாசகத்தின் வாழும் பிரதிகளாக வாழ்ந்து மரித்தவர்கள் ஓரிரு நாட்கள் விவாதப் பொருளாகி மறக்கப்பட்டனர். ஏறி வந்த ஏணியையும், கடக்க உதவிய படகையுமே மறக்கும் மனித குலம் மருத்துவர்களை மட்டும் நினைவுகொண்டு நிரந்தரமாகப் போற்றும் என்று எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும்?

  சீனாவில் போரிலும், நோயிலும் ஆயிரக்கணக்கானவர்கள் மடிந்துகொண்டிருந்தபோது மாவோவின் வேண்டுகோளை ஏற்று, இந்தியாவிலிருந்து டாக்டர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை சீனத்திற்கு அனுப்பி உதவினார் காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவாஹர்லால் நேரு.

  டாக்டர் கோட்னிஸ்

  பம்பாயில் மருத்துவராகப் பணியாற்றிய டாக்டர் கோட்னிஸ், தாம் முன்னெப்போதும் அறிமுகமில்லாத சீன மக்களின் துயர் தீர்க்க செல்ல முன்வந்தார். சென்றார். போர்க்களத்தில் சீன மக்களுக்கு உதவினார். போராட்ட காலத்திலேயே சீன மண்ணிலேயே மிகக் குறைந்த வயதிலேயே  மரணமடைந்தார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். இன்றும் இந்தியா வரும் சீனத் தலைவர்கள், மும்பையில் உள்ள கோட்னிஸ் உறவினர்களைச் சந்தித்து நன்றி கூறுகின்றனர். இந்தியரான கோட்னிஸின் நினைவாக, சீன மண்ணில் ஒரு மருத்துவக் கல்லூரியையும் மருத்துவமனையையும் உருவாக்கியிருக்கிறது சீன அரசு.

  அரசுப் பணியில் உள்ள டாக்டர்களும் செவிலியர்களும் பிற மருத்துவ உதவியாளர்களூம் மறுக்க முடியாத காரணத்தினால் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்று சொல்லிவிட முடியாது.

  வேகமாகப் பரவும், மரணமும் நேரிடலாம் என்ற சூழல் நூறாண்டுகள் முன் பிளேக் தொற்றின்போதும் உண்டானது. தமது பாதுகாப்பைப் பற்றிச் சிந்திக்காமல் பாரிஸ்டராகப் பணியாற்றிய மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி நோயுற்றோரிடையே சேவையாளராகப் பணியாற்றினார். மருத்துவம் பயிலாத பலரும் நோயுற்றவர்களுக்குச் சேவை செய்ய முன்வந்தனர். விளக்கேந்திய மங்கையராகச் செவிலியர்கள் தொண்டாற்றினர்.

  ஆனால், இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தாக்குதலின்போது தனியார் மருத்துவமனைகள் மருத்துவம் தராமல் போனது ஏன்? அரசின் தடையா? மருந்தேதுமில்லை என்கிற குறையா? மருத்துவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற காரணமா? எது காரணமானாலும் மருத்துவம் தேவைப்படும் மக்களுக்கு வேதனைக் காலத்தில் உதவவில்லை என்பது வருந்தத்தக்க உண்மையே.

  மருத்துவ அறம் அனுமதிக்காத இந்தத் தவறு நிகழ யார் காரணம், எது காரணம் என்பதை இனியாகிலும் திறந்த மனதுடன் ஆராய்ந்து தீர்வு காண்பது அவசியம்.

  உலகின் பெரிய முதலாளித்துவ நாடான அமெரிக்காவில் மக்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கிலாந்து உள்பட  பல ஐரோப்பிய நாடுகளில் மருத்துவம் முழுவதும் அரசின் பொறுப்பாக, இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. சோசலிச நாடுகளிலோ மருத்துவம் முழுவதும் அரசாலேயே வழங்கப்படுகிறது.

  ஆனால், சோசலிசக் குடியரசு என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஏழை நாடு இந்தியாவிலோ, 80 விழுக்காடு மருத்துவம் தனியார் கைகளிலேயே இருக்கிறது. உலகமயப் பொருளாதாரம் மேலும் மேலும் தனியாரைப் பலப்படுத்துவதாகவும், அரசுத் துறையை இரண்டாம் தரமானதாக்குவதாகவுமே உள்ளது.

  மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் சாதாரண மக்கள் மருத்துவம் பெறப் பெரிதும் உதவுகின்றன. மருத்துவம் தருவதற்காக வழங்கப்படும் கட்டணங்கள் பெருமளவு தனியார் மருத்துவமனைகளுக்கே தரப்படுகின்றன.

  முழுமையான அரசு மருத்துவமனைகளை உருவாக்க அரசு நிதி நிலைமை இடம் தராது என்றால், அரசுப் பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் மாற்றான இடைநிலையாக அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் உருவாக்கப்பட்டது போல் அரசு நிதியுதவி பெறும் அரசு தனியார் மருத்துவமனைகளை உருவாக்கி மருத்துவம் தர அரசு முயற்சிக்கலாம்.

  அரசு மருத்துவமனைகளை நவீனப்படுத்தவும், 1000 நபர்களுக்கு ஒரு டாக்டர் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி நிறைவேற்றவும், 10 ஆயிரம் நபர்கள் கொண்ட ஊர் ஒவ்வொன்றிலும் முழுமையான வசதிகள் பெற்ற மருத்துவமனைகளை உருவாக்கவும் நிதியைப் பயன்படுத்தியிருந்தால் அரசு மிக எளிதாக இந்த கரோனா மருத்துவ அவசர நிலையை எதிர்கொண்டிருக்க முடியும்.

  இதற்கு அரசின் காசநோய் மருத்துவ முறையையே சிறந்த முன்மாதிரியாக ஏற்க முடியும்.

  காச நோய்க்கான மருத்துவம் முழுதையும் அரசே செய்து வருகிறது. பரிசோதனை, மருந்துகள், தொடர் கவனிப்பு என அனைத்தையும் அரசே வீடு தேடி வந்து இலவசமாகத் தருவதன் மூலம் நோய் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

  இதையே முன்மாதிரியாகக் கொண்டு மருத்துவத்தின் அனைத்துத் துறைகளையும் மேம்படுத்திவிட முடியும். இந்தியரான டாக்டர் செளமியா சுவாமிநாதன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையிலுள்ள இந்தக் காலத்தை அரசு சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் மக்களுக்கான மருத்துவப் புரட்சியை அரசு செய்து விட முடியும்.

  வளர்ந்து வரும் நாடுகளின் மருத்துவ மேம்பாட்டிற்குச் சிறந்த முன்மாதிரியாக கியூபா வழிகாட்டுகிறது. வெறும் 3000 டாக்டர்கள் மட்டுமே கொண்டிருந்த கியூபா இன்று அமெரிக்கா உள்பட உலக நாடுகள் பலவற்றிற்கும் மருத்துவ அவசர நிலைகளை எதிர்கொள்ள மருத்துவக் குழுவை அனுப்பி உதவுவதாக மாறியுள்ளது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை ஆராய்வதும் அந்த வழிமுறையை நமக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்வதும் அவசியம்.

  தன் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்கும் எவ்வித மருத்துவப் பேரிடர் நிகழும் போதும், உதவ முன்வரும் இளையோர்க்கு மட்டுமே கியூபாவில் மருத்துவர், செவிலியர் பயிற்சி தரப்பட்டுக் கிராம சேவையில் கட்டாயமாக அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

  65 விழுக்காடு மக்கள் கிராமங்களில் வாழும் நமது நாட்டில் மக்கள் நலவாழ்வுக்கான வேறு எந்த சிறந்த முறையை அரசு தேர்வு செய்ய முடியும்? எனவே மருத்துவக் கல்வியை மக்களுக்குச் சேவை செய்ய முன் வருபவர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்க அரசு முன் வர வேண்டும்.

  1000 நபர்களுக்கு ஒரு மருத்துவர், 10,000 நபர்களுக்கு ஒரு மருத்துவமனை எனும் கடமையை நிறைவேற்ற அரசு தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 விழுக்காட்டையாவது உடனடியாக ஒதுக்க முன்வர வேண்டும். நாட்டின் பாதுகாப்பு ராணுவத்தின் பலத்தில் இல்லை, மக்களின் ஆரோக்கியத்தில்தான் உள்ளது என்பதை அரசு உணர்ந்தால் போதும்.

  நமது அரசு ஜன் ஒளஷத் எனும் மக்கள் மருந்தகங்கள் மூலம் 10 ரூபாய் மருந்தை 2 ரூபாயில் தரும் மகத்தான சேவையை பெரும்பாலும் நகரங்களில் துவங்கியுள்ளது. இதனை நமது அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், கிராமங்களிலும் துவக்கி, குறைந்த கட்டணத்தில் மருந்துடன், மருத்துவப் பரிசோதனைகளையும் வழங்குவதாக விரிவுபடுத்திவிட்டால் நோயுற்ற நலவாழ்வை அனைவருக்கும் தந்துவிட முடியும்.

  சாபத்தில் வழங்கப்பட்ட வரமே கரோனா. நமது மருத்துவ முறை வெறும் அலோபதி சார்ந்ததாக மட்டுமே இருந்துவிட முடியாது என்பதை உணர்த்தியுள்ளது இந்தக் காலம்.

  சித்த, ஆயுர்வேத மருத்துவத்தின் கபசுர குடிநீர், நில வேம்புக் கசாயம், மஞ்சள், மிளகு, சுக்கு, திப்பிலி எனும் மருந்துப் பொருள்களின் அற்புதம், ஹோமியோபதியின் ஆர்செனிக் ஆல்பம் நோய் தடுக்கும் என்கிற நம்பிக்கை யாவும் அரசாலும், மருத்துவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

  இத்தகைய ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டு மருத்துவ முறை தவிர்க்க முடியாதது என்பதையும் கோவிட்-19 உணர்த்தியுள்ளது. நமது மருத்துவம் அலோபதி தனியாகவும், பிற துறைகள் தனியாகவும் இனியும் இயங்க முடியாது. மனிதகுல நல்வாழ்வுக்காக அனைத்து ஜன்னல்களையும் திறந்துவைப்போம்.

  கரோனா சில புதிய பாடங்களை நமக்கு உணர்த்தியுள்ளது.

  * தனியார் மருத்துவமனைகளுக்கு மேலாக  அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவது உடனடியான அவசரத் தேவை. இதற்கு அரசு இரு மடங்கு அதிக நிதியொதுக்க வேண்டும்.

  * கல்வி, மருத்துவம் என இரண்டு அடிப்படைத் தேவைகளும் வணிகமாக அன்றி மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பு மனம் கொண்ட புதிய தலைமுறையை உருவாக்குவதாக மாற்றப்பட வேண்டும்.

  * மருத்துகளும், பரிசோதனை வசதிகளும் குறைவான கட்டணத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

  இயற்கைப் பேரிடர்களும், மருத்துவ அவசர நிலைகளும் இனி ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் என நாம் சாம்ஸ்கி போன்ற சமூகவியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.

  எனவே, அவற்றை எதிர்கொள்ளத் தக்க இளம் மருத்துவர்களையும், மக்கள் மைய மருத்துவமனைகளையும் உருவாக்குவதற்கான சிந்தனை வாய்ப்பாக இந்த மருத்துவர் நாளைப் பயன்படுத்துவோம்.

  2000-ல் அனைவருக்கும் நலவாழ்வு என்று முப்பது ஆண்டுகள் முன் தந்த உறுதிமொழியை வரும் பத்தாண்டுகளிலாவது செயல் வடிவம் பெறச் செய்ய இந்த மருத்துவர் தினத்தில் உறுதியேற்றுச் செயல்படுத்துவோம்.

  [கட்டுரையாளர் - மருத்துவர்,

  தலைவர், தமிழக பசுமை இயக்கம், ஈரோடு]

  kattana sevai