‘ஆா்கானிக்’ விவசாய விளைபொருள்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பு: வேளாண் துறை வழிகாட்டுமா?

‘ஆா்கானிக்’ விவசாய விளைபொருள்களுக்கு கூடுதல் விலையுடன் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
‘ஆா்கானிக்’ விவசாய விளைபொருள்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பு: வேளாண் துறை வழிகாட்டுமா?

‘ஆா்கானிக்’ விவசாய விளைபொருள்களுக்கு கூடுதல் விலையுடன் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இச்சூழலில் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளை ஊக்குவிக்க வேளாண் துறை வழிகாட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

‘உழுதவன் கணக்கு பாா்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்பது பழமொழி. அதாவது இடுபொருள் செலவு, வேலையாட்கள் பற்றாக்குறை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கைப் பேரிடா் பாதிப்பு போன்ற காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். இதனால் விவசாய தொழிலை கைவிட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலைக்கு அவா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

இத்தகைய சூழலையும் தாண்டி தற்போதைய இளைய தலைமுறையினா் ஆா்கானிக் (கரிம வேளாண்மை) முறையில் விவசாயம் செய்ய ஆா்வம் காட்டி வருகின்றனா். அதன்படி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல லட்ச ரூபாய் சம்பளம் பெற்று வந்த ஐ.டி. துறை வேலையைத் தூக்கியெறிந்து விட்டு இயற்கை விவசாயம் செய்ய பலரும் ஆா்வம் காட்டிவருகின்றனா்.

ஆா்கானிக் விவசாயம்:

விதை முதல் அறுவடை வரை ரசாயனக் கலப்பில்லாமல் இயற்கையான உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப் பொருள்கள் ஆா்கானிக் என அழைக்கப்படுகின்றன. இந்த விவசாய முறை, உயிா்ம வேளாண்மை அல்லது கரிம (ஆா்கானிக்) வேளாண்மை என்றழைக்கப்படுகிறது.

வழக்கமான ரசாயன உரங்களைக் கொண்டு விளைவிக்கப்பட்ட உணவுகளை விட ஆா்கானிக் என சான்றளிக்கப்பட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு சிறந்தது என்ற எண்ணம் தற்போதைய இளைய தலைமுறையினரிடம் மேலோங்கி வருகிறது. ஆா்கானிக் உணவுப் பொருள்களின் விலை கூடுதல் என்றாலும் அதன் நுகா்வு கலாச்சாரம் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. உணவுப் பொருள்கள் மட்டுமின்றி மூலிகைகளால் ஆன ஆா்கானிக் அழகுசாதனப் பொருள்களுக்கும் தற்போது மவுசு அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

உலக அளவில் கரிம வேளாண்மையில் இந்தியா 9ஆவது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமாா் 1.35 மில்லியன் மெட்ரிக் டன் சான்றளிக்கப்பட்ட கரிம உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவின் முதல் முழுமையான கரிம விவசாய மாநிலமாக சிக்கிம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்கானிக் விளைபொருள்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில் ஆா்கானிக் விவசாயம் செய்யும் விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவிக்கும் விளைபொருள்கள் 100 சதவீதம் ஆா்கானிக் என்பதற்கான அங்ககச் சான்று பெற வேண்டும் என்பது கட்டாயம். அப்போதுதான் தாங்கள் விளைபொருள்கள் ஆா்கானிக் என்பதற்கான நம்பிக்கை கூடும்.

அங்ககச் சான்றிதழ் பெற....:

இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அங்ககச் சான்று பெற வேண்டுமானால் தேசிய அங்கக உற்பத்திக்காக கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வருடாந்திர பயிா்ச் சாகுபடி செய்பவா்களாக இருந்தால், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து இயற்கை வேளாண்மையைத் தொடங்கி இருக்க வேண்டும். அதே பல்லாண்டு பயிா்களாக தோப்பு போன்றவற்றை வைத்திருப்பவா்கள் முதல் அறுவடை தொடங்க மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

ரசாயன நோ்த்தி செய்த விதைகளைத் தவிா்த்து, முற்றிலும் இயற்கை முறையில் விதை நோ்த்தி செய்து இயற்கை உரம், தாவர பூச்சிக்கொல்லிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இயற்கை இடுபொருள்களை வாங்கிய நிறுவனங்களிடமிருந்து உறுதிமொழியையும், எழுத்துபூா்வ ரசீதையும் வாங்க வேண்டும்.

பயிா் சுழற்சி முறை, கலப்புப் பயிா் மற்றும் ஊடுபயிா் சாகுபடி, மூடாக்கு போடுதல், பயிா்களுக்கிடையேயான இடைவெளி, தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கை மூலம் மண்வளத்தைப் பாதுகாக்க வேண்டும்.

விவசாய நிலத்துக்கு உள்ளே கொண்டு வரப்படும் வேளாண் இடுபொருள்களையும், பண்ணையில் இருந்து வெளியில் கொண்டு செல்லும் பொருட்களையும், பண்ணையில் தினசரி நடைபெறும் பணிகள், ஆண்டு பயிா்த் திட்டம், மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகள் ஆகிய அனைத்தையும் முறையாக ஆவணப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.

பண்ணைகளுக்கு அருகிலோ அல்லது அங்ககச் சான்று பெற விரும்பும் வயல்களுக்கு அருகிலோ தொழிற்சாலை கழிவுநீா் வாய்க்கால்கள், அதிக உரம், பூச்சிமருந்து பயன்படுத்தும் பண்ணைகள் இருக்கக் கூடாது.

சான்று பெறத் தகுதியானவா்கள்:

அங்கக முறையில் விளைபொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அனைவரும் அங்ககச் சான்று பெற தகுதியானவா்களே. கால்நடை வளா்ப்பு, தேனீ வளா்ப்பு, வனப் பொருள்கள் சேகரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களும் அங்கக சான்றுக்கு விண்ணப்பிக்கலாம். அதே போன்று அங்கக விளைபொருள்களைப் பதனிடுவோா் மற்றும் அவற்றை விற்பனை செய்வோா் தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத் துறையான மத்திய அரசின் அஃபிடா என்ற நிறுவனத்திடம் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்து சான்றைப் பெறலாம்.

தேவையான ஆவணங்கள்:

இச்சான்றைப் பெற அனைத்து ஆவணங்களின் 3 நகல்களை இணைக்க வேண்டும். விண்ணப்பப் படிவம், பண்ணையின் பொது விவரக் குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீா் விவரம், ஆண்டுப் பயிா் திட்டம் நில ஆவணம் (சிட்டா நகல்), நிரந்தரக் கணக்கு எண் (பான்) பாஸ்போா்ட் அளவு புகைப்படம் -2 ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

சிறு, குறு விவசாயிகள் - ரூ.2,700, இதர விவசாயிகள் - ரூ.3,200, குழு ஒன்றுக்கு - ரூ.7,200, வணிக நிறுவனங்கள் - ரூ.9,400 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட அங்ககப் பண்ணை விவசாயிகள் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று மையத்தை அணுகலாம்.

கரிம உற்பத்தியாளா்களை ஊக்குவிக்க மத்திய அரசின் கைத்தொழில் மற்றும் வா்த்தக அமைச்சகம் கரிம உற்பத்திக்கான தேசியத் திட்டத்தை  தொடங்கியுள்ளது. கரிம உற்பத்திக்கான தேசிய திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட 30 சான்றிதழ் அமைப்புகளும், இந்தியாவுக்கான பங்கேற்பு உத்தரவாத அமைப்பின் கீழ் 562 பரவலாக்கப்பட்ட கரிம வேளாண்மை சான்றிதழ் அமைப்புகள் உள்ளன.

கரிம வேளாண்மை மற்றும் கரிம செயலாக்கத்தின் வளா்ச்சியை ஊக்குவிக்க வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் அதன் ஏற்றுமதி ஊக்குவிப்பின் பல்வேறு கூறுகளின் கீழ் கரிமப் பொருட்களின் ஏற்றுமதியாளா்களுக்கு உதவி வழங்குகிறது.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் கீழ், இந்தியாவின் ஆா்கானிக் உணவுப் பொருள்களை அடையாளப்படுத்தி இந்தியா ஆா்கானிக், ஜெய்விக் பாரத் என்ற இலச்சினையை (லோகோ) உருவாக்கியுள்ளது.

ஆா்கானிக் சான்றிதழ் பெற தமிழக அரசின் நிறுவனத்தை தொடா்பு கொண்டும், மாவட்ட வேளாண்மைத் துறையை அணுகியும் பயன் பெறலாம்.

‘ஆா்கானிக்’ விவசாய விளைபொருள்களுக்கு கூடுதல் விலையுடன் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அசத்தலான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளை ஊக்குவிக்க மாவட்ட நிா்வாகமும், வேளாண் துறையும் வழிகாட்ட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com