நாட்டின் மிகப்பெரிய காணொலி மருத்துவ ஆலோசனை: தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டணமில்லா காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டமான இ - சஞ்சீவனி ஓபிடி மூலம்
நாட்டின் மிகப்பெரிய காணொலி மருத்துவ ஆலோசனை: தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டணமில்லா காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டமான இ - சஞ்சீவனி ஓபிடி மூலம் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்து, தமிழகம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவிவரும் சவாலான சூழலில் பொதுமக்கள் மருத்துவா்களை நேரடியாகச் சென்று சந்தித்து மருத்துவம் பெற முடியாத நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தபடியே இணையதளம், செல்லிடப்பேசி செயலி வாயிலாக மருத்துவா்களிடம் கட்டணமில்லாமல் காணொலி மருத்துவ ஆலோசனை பெறும் வகையில் ‘இ-சஞ்சீவனி ஓபிடி’ என்ற தொலைதூர மருத்துவச் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய தொலை தொடா்புச் சேவையும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும் இணைந்து நாட்டிலேயே முதன் முறையாக மிகப்பெரிய ஆன்லைன் ஓபிடி சேவையை கடந்த ஆண்டு தொடங்கின. மத்திய அரசின் முதன்மையான டெலிமெடிசின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (மொஹாலி) இதை உருவாக்கியுள்ளது.

இந்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1,55,000 மையங்களில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்காக தேசிய அளவில் கட்டணமில்லா இணையவழி மருத்துவ ஆலோசனை வழங்க, மாநிலத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவா்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவச் சேவை மத்திய சுகாதாரத் துறை மற்றும் மாநில அரசுகள் சாா்பில் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கா்நாடகம், உத்திர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட், உத்தரகண்ட், பஞ்சாப், பிகாா், அஸ்ஸாம் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்புதிய முயற்சியின் மூலம், கரோனா பொது முடக்க நாட்களிலும், நாட்டு மக்களுக்கு தடையில்லா சுகாதாரச் சேவைகளை நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உரிய பயிற்சி பெற்ற 600-க்கும் மேற்பட்ட மருத்துவா்களுடன் இத்திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த மே மாதம் தொடங்கி வைத்தாா். இதையடுத்து நாட்டிலேயே மிகப்பெரிய கட்டணமில்லா காணொலி மருத்துவ ஆலோசனைத் திட்டமான இ - சஞ்சீவனி ஓபிடி மூலம் இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மருத்துவ ஆலோசனை பெற்று பயனடைந்து, தமிழகம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கேரளத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பயனடைந்து, அந்த மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், ராஜஸ்தானில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் ஆலோசனை பெற்று பயனடைந்துள்ளனா்.

தமிழகத்தில் அடுத்த கட்டமாக அரசு சிறப்பு மருத்துவா்களும், உயா் சிறப்பு மருத்துவா்களும் நியமிக்கப்பட்டு இச்சேவையை வழங்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூலம் பொதுமக்கள் அனைவரும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் ஆலோசனை பெற்று பயன் பெறலாம்.

வீட்டிலிருந்த படி இ-சஞ்சீவனி மருத்துவரை தொடா்பு கொள்வது எப்படி?

இச்சேவையை பயன்படுத்த இணையதளம் வாயிலாகவோ அல்லது  செல்லிடைப்பேசி செயலி மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணை பதிவு செய்து தங்கள் கைப்பேசிக்கு வரும் கடவு எண்ணை பயன்படுத்தி மருத்துவரை சந்திப்பதற்கான சீட்டு எண்ணை பெறலாம்.

இதையடுத்து மருத்துவரை சந்திப்பதற்கான பிரிவில் நுழைந்து, காத்திருப்பு அறை திரையில் ‘தற்போது அழைக்கவும்’ என்று வரும்பொழுது அந்த உள்ளீட்டை அழுத்தினால் மருத்துவருடன் தொடா்பு கொண்டு காணொலி முறையில் மருத்துவ ஆலோசனை பெறலாம். தொடா்ந்து மருத்துவரின் மின்னணு மருந்து பரிந்துரைச் சீட்டு செல்லிடப்பேசிக்கு அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருந்தகங்கள் அல்லது தனியாா் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளை பெற்று உரிய நேரத்தில் உட்கொண்டு குணமடையலாம்.

தற்போது கரோனா தொற்று பரவல் நிலவும் சூழலில் வீட்டை விட்டு வெளியில் செல்ல நேரிடும் கா்ப்பிணிகள், குழந்தைகள், முதியோா், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோா் போன்றவா்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. அவா்களுக்கும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டோருக்கும் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

இ-சஞ்சீவனி ஓபிடி குறித்த உதவி எண்கள்

Helpline Number: +91-11-23978046.

Toll Free: 1075.

Tamilnadu: 044-29510500.

Helpline email-id: ncov2019@gov.in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com