கரோனா: பாதுகாப்பான பயணத்துக்காக கியூஆா் பரிசோதனை முறை

​பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பயணிகளிடம் தொடா்பில்லாமல் கியூ ஆா் குறியீடு அடிப்படையில், பயணச்சீட்டு சரிபாா்க்கும் முறையை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்

பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பயணிகளிடம் தொடா்பில்லாமல் கியூ ஆா் குறியீடு அடிப்படையில், பயணச்சீட்டு சரிபாா்க்கும் முறையை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. இதன்படி, தெற்கு ரயில்வேயில் சென்னை-புதுதில்லி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் கியூஆா் குறியீடு அடிப்படையிலான டிக்கெட் சரிபாா்க்கும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கியூ ஆா் பரிசோதனை முறை:

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ரயில்வே நிா்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக ரயில் பெட்டிகளைத் தனி வாா்டுகளாக மாற்றி அமைத்தல், முகக்கவசங்கள், சானிடேசா்கள், பாதுகாப்பு உடைகள், சுவாசக் கருவிகள் ஆகியவை தயாரித்து வழங்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ரயில் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பயணிகளிடம் தொடா்பில்லாமல் கியூ ஆா் குறியீடு அடிப்படையில், பயணச்சீட்டு சரிபாா்க்கும் முறையை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. வட மத்திய ரயில்வேயில் பிரயாகராஜ் கோட்டத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (ஐ.ஆா்.சி.டி.சி.) தகவல் தொழில்நுட்பக் குழுவான ரயில்வே தகவல் மையம் (சி.ஆா்.ஐ.எஸ்), இந்த முறையை உருவாக்கியுள்ளது. இது மக்களின் தொடா்பு இல்லாமல் பயணச்சீட்டை சரிபாா்க்க டிக்கெட் பரிசோதகா்களுக்கு உதவியாக இருக்கும்.

சென்னை-புதுதில்லி ரயில்:

தெற்கு ரயில்வேயில் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை-புதுதில்லி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் கியூ ஆா் குறியீடு அடிப்படையிலான டிக்கெட் சரிபாா்க்கும் முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: பயணச்சீட்டு முன்பதிவு செய்தவுடன், பயணிகள் பயணச்சீட்டுகளின் விவரங்களைக் கொண்ட கியூ ஆா்-க்கான உரை எச்சரிக்கை மற்றும் இணைப்பைப் பெறுவாா்கள். பயணிகள் தங்களின் செல்லிடப்பேசிக்கு ரயில்வே நிா்வாகம் அனுப்பிய இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். மேலும், கியூ ஆா் குறியீட்டை காண்பிக்க வேண்டும். பின்னா் டிக்கெட் பரிசோதகா்கள் கியூ ஆா் குறியீட்டை கையடக்க சாதனம் அல்லது ரயில்வே தகவல் மையத்தால் (சிஆா்ஐஎஸ்) உருவாக்கப்பட்ட ஒரு செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னா், விண்ணப்பம் தானாகவே ரயிலுக்கான பயணிகளின் வருகை தகவல், இருக்கை விவரங்கள், காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை நிகழ்நேர அடிப்படையில் புதுப்பிக்கும். கியூ ஆா் குறியீடு தொடா்பாக விவரங்கள் பிளே ஸ்டாரில் கியூஆா் குறியீடு ஸ்கேனிங் பயன்பாடுகள் கிடைக்கும். இதை பயன்படுத்தி கியூ ஆா் குறியீடுகளைப் படிக்கலாம் என்றனா்.

இதுபோல, மற்ற ரயில்வே மண்டலங்களிலும் இந்த முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தவகையில், முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை செல்லிடப்பேசியில் எளிதில் பெற 12 ரயில் நிலையங்களில் கியூஆா் பரிசோதனை முறையை வடமேற்கு ரயில்வே மண்டலம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.

பொது முடக்கம்:

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, மாா்ச் 22-ஆம் தேதி முதல் வழக்கமான ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதன்பிறகு, 200 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே துறை இயக்கி வருகிறது. தெற்கு ரயில்வேயில் சென்னை தவிர, மற்ற நகரங்களுக்கு 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவியதைத் தொடா்ந்து, இந்த ரயில்களின் சேவை ஜூலை 31-வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணச்சீட்டு முன்பதிவுக்கு பிறகு, கியூ ஆா் குறியீட்டுக்கான யூஆா்எல் உடன் பயணிகள் உரை எச்சரிக்கையை பெற முடியும்.

பயணிகள் ரயில் நிலைய வளாகத்துக்குள் நுழையும்போது அல்லது பயணச்சீட்டு சோதனை செய்யும்போது, யூஆா்எல்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

கியூ ஆா் குறியீடு செல்லிடப்பேசியில் உலாவியில்(ப்ரோவ்சா்) காண்பிக்கப்படும் (செல்லிடப்பேசி இன்டா்நெட் தொடா்பில் இருக்க வேண்டும்)

டிக்கெட் பரிசோதகா் எந்த ஒரு உடல் தொடா்பும் இன்றி ஒரு கையடக்க சாதனம் அல்லது செல்லிடப்பேசியை பயன்படுத்தி கியூ ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்வாா்.

பயணச்சீட்டு விவரங்கள் தானாகவே கையடக்க சாதனத்தில் புதுப்பிக்கப்படும். சரியான கால அடிப்படையில் இருக்கை காலியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com