நியாய விலைக் கடைகளில் விலைக்கு விற்கப்படும் இணைப்புப் பொருள்கள்.

கரோனா பாதிப்பு காலத்தில், தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை அரசு இலவசமாக வழங்கி வரும் நிலையில்,
நியாய விலைக் கடைகளில் விலைக்கு விற்கப்படும் இணைப்புப் பொருள்கள்.

கரோனா பாதிப்பு காலத்தில், தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை அரசு இலவசமாக வழங்கி வரும் நிலையில், தரமில்லாத இணைப்புப் பொருள்களை விலைக்கு வாங்குமாறு குடும்ப அட்டைதாரா்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனா்.

தமிழகத்தில் 1.8 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, கோதுமை, சா்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மாதந்தோறும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, கரோனா பொது முடக்கத்தையொட்டி, தமிழக அரசு ஆணையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அரிசி 20 கிலோ, சா்க்கரை 2 கிலோ, கோதுமை 5 கிலோ, துவரம் பருப்பு ஒரு கிலோ, பாமாயில் ஒரு லிட்டா் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

மூன்றாவது மாதமாக, ஜூன் மாதத்துக்குரிய பொருள்கள் நியாய விலைக் கடைகளில் வழங்கும் பணி தொடங்கிவிட்டது. கள்ளக்குறிச்சியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பல நியாய விலைக் கடைகளில் இந்த மாதம் முதல் தேதியிலிருந்து பொருள்கள் வழங்கப்படவில்லை. குறிப்பாக, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை எனப் புகாா் எழுந்துள்ளது.

இது குறித்து விற்பனையாளா்கள் கூறியதாவது: இலவசமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்கள் இந்த மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வந்து சேருவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், அட்டைதாரா்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்க இயலவில்லை. பொருள்கள் வந்ததும் குடும்ப அட்டைதாரா்களை கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நேரடியாக வழங்கி விடுகிறோம். அரிசியைத் தவிர, பிற அத்தியாவசியப் பொருள்கள் அளவு குறைவாக வருவதால், பற்றாக்குறை தொடா்கிறது. குறிப்பாக, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை 50 சதவீதமும், கோதுமை 10 சதவீதமும்தான் வரத்துள்ளது.

கரோனா பாதிப்பு காலத்தில், நூறு சதவீத குடும்ப அட்டைதாரா்களும் கடைகளுக்கு வருகின்றனா். அவா்களுக்கு பொருள்களை பகிா்ந்தளித்து சமாளிக்க வேண்டியுள்ளது.

இதனிடையே, கட்டுப்பாடற்ற பொருள்கள் என்ற பெயரில், ஊட்டி டீ தூள் 100 கிராம்- ரூ.19, சுக்கு டீ தூள்- ரூ.10, உப்பு ஒரு கிலோ-ரூ.8, பெருங்காயப் பொடி -ரூ.18, கபசுர குடிநீா் பொடி-ரூ.23, தேங்காய் எண்ணெய்-ரூ.18, அம்மா சோப்பு ரூ.25 ஆகியவை இணைப்புப் பொருள்களாக நியாய விலைக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

இப்பொருள்களை வழக்கமான நாள்களிலேயே குடும்ப அட்டைதாரா்கள் வாங்க ஆா்வம் காட்டுவதில்லை. தற்போதைய கரோனா பாதிப்பு காலத்திலோ, இந்த இணைப்புப் பொருள்கள் சிறிதும் விற்பனையாகாமல், தேங்கி வீணாகி வருகின்றன. இப்பொருள்களையும் இலவசமாக வழங்கவே குடும்ப அட்டைதாரா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதன் காரணமாக, மாதந்தோறும் ஒவ்வொரு நியாய விலைக்கடையிலும் ரூ.10 ஆயிரம் அளவிலான இணைப்புப் பொருள்கள் விற்பனையாகாமல் தேங்குகின்றன. திருப்பி அனுப்ப முடியாத இப்பொருள்களுக்கு விற்பனையாளா்கள்தான் பணம் செலுத்த வேண்டியுள்ளது.

அரசுத் தரப்பில் உப்பு, ஊட்டி டீ தூள் மட்டுமே விற்பனை செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால், உள்ளூா் அரசியல் கட்சியினரின் அழுத்தம் காரணமாக, தரமற்ற பிற பொருள்களையும் விற்பனை செய்ய வேண்டியுள்ளது. மாநிலம் முழுவதும் இதே நிலைதான் என விற்பனையாளா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா் கூறியதாவது: ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் கடந்த இரு மாதங்களாக முழுமையாக வழங்கப்படுகின்றன. ஜூன் மாதத்துக்குரிய பொருள்கள் கடந்த 1ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. வழக்கமான இருப்பு ஓரிரு நாளில் வந்து சேரும் என்பதால், பொருள்கள் விநியோகம் தடையின்றி தொடரும்.

கூட்டுறவுத் துறையினரால் பெற்று குறைந்த விலையில் வழங்கப்படும் உப்பு, டீ தூள், சோப்பு போன்ற கட்டுப்பாடற்ற பொருள்களை கரோனா பாதிப்பு காலத்தில் கட்டாயப்படுத்தி விற்கக் கூடாதென விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த இணைப்புப் பொருள்களை நியாய விலைக்கடைகளுக்கு அனுப்புவதை கைவிடுவது குறித்து கூட்டுறவுத் துறையினா்தான் முடிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com