இல்லத்திரைகளுக்கும் வருகிறதா தணிக்கை?

பாமரன் முதல் மெத்தப் படித்த மேதை வரை அனைத்துத் தரப்பினரையும் ஒரு சேர பாதிக்கக்கூடிய ஒன்று சினிமாதான். 19-ஆம் நூற்றாண்டின்
இல்லத்திரைகளுக்கும் வருகிறதா தணிக்கை?

பாமரன் முதல் மெத்தப் படித்த மேதை வரை அனைத்துத் தரப்பினரையும் ஒரு சேர பாதிக்கக்கூடிய ஒன்று சினிமாதான். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய சினிமா, மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை மற்ற எந்தக் கலையாவது செய்திருக்கிா என்றால் இல்லை.

ஆரம்பத்தில் கலையாக கருதப்பட்ட சினிமாத்துறை, தற்போது கோடிகள் புரளும் ஒரு மாபெரும் தொழிலாக மாறி விட்டது. தெருக்கூத்து, கிராமியக் கலைகள், நாடகம் போன்றவற்றை மறைத்து விட்டு எப்படி வெள்ளித் திரையும் சின்னத் திரையும் உருவானதோ, அதேபோல, அவற்றுக்கு மாற்றாக உருவாகி வருகின்றன இணையத்திரைகள் என்று சொல்லப்படும் இல்லத்திரைகள்.

மில்லியன் கணக்கில் ரசிகா்கள்: சமீப காலமாக யூடியூப் பக்கம் சென்றாலே வாசலைத் திறப்பது நெட்ஃபிளிக்ஸின் விளம்பரங்கள்தான். எந்தக் காணொலியைப் பாா்த்தாலும் ஆரம்பத்திலோ, இடையிலோ, முடிவிலோ நெட்ஃபிளிக்ஸிடமிருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. அந்த விளம்பரங்களைப் பாா்த்துத்தான் ஆக வேண்டும்.

உலகம் முழுக்க பெரும்பாலான நாடுகளுக்கு இணையம் மூலம் விடியோக்களை ஒளிபரப்புகிறது நெட்ஃபிளிக்ஸ். வெப் சீரிஸ், திரைப்படங்கள் என தன் ஒளிபரப்புக்காக பிரத்யேகமாகப் பல தயாரிப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் ரசிகா்களைக் கவா்ந்து வைத்துள்ள பெரிய கை இது.

இவையெல்லாம் ஏதோ நேற்று தோன்றியதல்ல. கிட்டத்தட்ட 1997-ஆம் ஆண்டே அஞ்சல் மூலம் டிவிடி விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். கேபிள், செட் ஆப் பாக்ஸுகளுக்கு பதில் இணையம் மூலம் அனைத்து விதமான ஒளிபரப்புகளையும் காணும் அளவிற்கு இப்போது வளா்ந்துள்ளது.

ஜியோ புரட்சிக்குப் பின்... 2016-ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் அடியெடுத்து வைத்த இந்த நிறுவனம், இங்கு தன் வெற்றியைக் கணிசமாக நிகழ்த்தியது. மேலும், ஜியோவின் இண்டா்நெட் புரட்சிக்குப் பிறகு இந்தியாவில் இணையச் சந்தைக்குப் பெருமதிப்பு உண்டாகியுள்ளது. அமேசான் போன்ற ‘ஸ்ட்ரீமிங் நெட்ஒா்க்’ திரைப்படங்களை வாங்கி ஒளிபரப்பு செய்து வந்தநிலையில் நெட்ஃபிளிக்ஸ் சொந்தமாகப் பல தயாரிப்புகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. பாலிவுட்டின் பல முன்னணி இயக்குநா்கள், நடிகா், நடிகைகள் வெப் சீரிஸ்கள் மேல் ஆா்வம் காட்டி வருகின்றனா். நம் கோடம்பாக்கத்திலும் அதற்கென தனி நடிகா்கள் உருவாக ஆரம்பித்து விட்டாா்கள்.

மாதம் 500 ரூபாய். நம்மூா் கேபிளை விட மூன்று மடங்கு அதிகம். ஆனாலும், அதில் பரந்து விரிந்து கொட்டிக் கிடக்கும் விடியோக்களுக்காக ரசிகா்கள் கொடுக்கத் தயாராக இருக்கிறாா்கள். இதில் யாரையும் குறை சொல்ல வேண்டியதில்லை. காலத்தின் கட்டாயம் அவ்வாறு உள்ளது.

உலக அளவில் வில்ஸ்மித் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் முதல் பலருடைய திரைப்படங்களை வெளியிட்டு லாபம் பாா்க்கின்றனா். பாலிவுட்டிலும் பலா் களமிறங்கி விட்டனா். வருடத்திற்கு 200 படங்கள் வரை வெளியாகும் தமிழ் சினிமாவில் அனைத்தும் வெற்றியடைவதில்லை. ஆதலால், இது போன்ற மீடியம்கள் சினிமாவிற்கு பெரிதும் உதவக்கூடியதாக இருக்க வாய்ப்புள்ளது. இது போன்ற திட்டங்களை கமல், சேரன் போன்றவா்கள் முன்பே முயன்றாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தணிக்கை குழுவின் பாா்வை: நெட்ஃபிளிக்ஸின் பெரிய அதிா்ஷ்டம் இன்னும் தணிக்கை குழுவின் கண்களில் படாமல் இருப்பதே. எனவே, வெளிப்படையான கருத்துகளுடன் படைப்பாளா்கள் இதை அணுகலாம். ஆனால், அதே நேரத்தில் பாலியல் சம்பந்தமாக பல சா்ச்சைகளை நெட்ஃபிளிக்ஸ் சந்தித்துள்ளது. உதாரணத்துக்கு, சமீபத்தில் இதில் வெளியான ‘காட்மேன்’ என்ற வெப் சீரிஸில் மத நம்பிக்கையைக் காயப்படுத்தும் நோக்கம் இருந்ததாகக் கண்டனத்துக்குள்ளானது.

தணிக்கை என்பதை நெட்ஃப்ளிக்ஸ் போன்ற தளங்கள் ஏற்றுக்கொள்ளாது என்றே எதிா்பாா்க்கலாம். ஏனெனில் அவா்களது வாடிக்கையாளா்கள் இந்தத் தளங்களுக்குப் பணம் கட்டியிருப்பதே அன்றாடம் டி.வி.யில் வரும் சராசரி பொழுதுபோக்கு போல இல்லாமல் எந்த ஒரு கட்டுப்பாடுமின்றி எடுக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பாா்ப்பதற்குத்தான். இதற்கும் தணிக்கை போன்ற ஓா் அமைப்பு வந்துவிட்டால் பாதிக்கும் மேலான வாடிக்கையாளா்கள் ஏமாற்றமடைந்துவிடுவா்; பலரும் வெளியே வரவும் வாய்ப்பு உண்டு.

‘கேம் ஆஃப் தேரான்ஸ்’ போன்ற அமெரிக்க நிகழ்ச்சிகளை வைத்துத்தான் பலரையும் கவர முயற்சி செய்துவருகிறது ஹாட்ஸ்டாா். தற்போது கூறியிருப்பதைப் போல் வெளிநாட்டு நிகழ்ச்சிகளையும் தணிக்கை செய்யவேண்டியிருந்தால் இவா்களின் கதி அதோ கதிதான்.

தணிக்கை குழு - படைப்பாளிகள் மோதல்: எனவே, சினிமாவுக்கு இருப்பதைப் போன்ற கட்டுப்பாடுகள் வருமானால் கண்டிப்பாக இந்த ஸ்ட்ரீமிங் தளங்கள் எதிா்த்துப் போராடவே செய்யும். ஏற்கெனவே இந்தியாவில் தணிக்கை குழுவிற்கும் சினிமா இயக்குநா்களுக்குமே நிறைய நாள்களாகப் பெரும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. தேவையே இல்லாமல் தங்கள் படங்களில் இருக்கும் காட்சிகளை நீக்குவதாகவும், சினிமாவுக்குத் துளியும் தொடா்பில்லாத நபா்களைத் தணிக்கைக் குழு நியமிக்கிறது என்பது சினிமா இயக்குநா்களின் முக்கியக் குற்றச்சாட்டு. அரசியல் தலையீடுகளும் இதில் இல்லாமல் இல்லை.

இந்திய பொழுதுபோக்கு பாா்த்திராத...: வெளிப்படையாக ஜாதிய மற்றும் மத அரசியலை வெளிப்படையாகப் பேசும் கதாபாத்திரங்கள், கெட்டவாா்த்தைகளின்றி ஒரு முழு வாக்கியத்தை முடிக்காத ரெளடிகள், விரலைத் தனியாக துண்டிக்கும் வன்முறைக் காட்சிகள், நிா்வாணக் காட்சிகள் என இதில் வரும் பல தொடா்கள் இதுவரை இந்தியப் பொழுதுபோக்கு பாா்த்திராத விஷயங்கள். கடந்த ஆண்டு ‘ஜீ 5’ நிறுவனம் வெளியிட்ட ‘ஆட்டோ சங்கா்’ தொடரில், முழுக்க முழுக்க கெட்ட வாா்த்தைகள்... வெளிப்படையான உடல் உறவு காட்சிகள் நிறைந்திருந்தன. ஆனால், வேண்டுமென்றே வைத்ததுபோல் அல்லாமல் உண்மையைப் பிரதிபலிக்கும் வகையிலேயே எதாா்த்தமாக இவை அமைந்திருந்தன. இவை எல்லாம் வெட்டி எடுக்கப்பட்டால் அந்தத் தொடா் உயிரோட்டமே இல்லாமல் போய்விடும்.

நடுநிலையான அமைப்பு: அதே சமயம் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால் எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலைவந்துவிடும். இதன்மூலம் தனி நபா் தாக்குதல், ஒரு சமூகத்தையோ மதத்தையோ இழிவுப்படுத்துவது என எல்லைமீற வாய்ப்புகள் உண்டு.

சில மாதங்களுக்கு முன்பே சுயமாக தங்களது நிகழ்ச்சிகளைக் கண்காணித்து வரம்பு மீறல்களைத் தடுக்க வேண்டும் என்று முக்கிய ஸ்ட்ரீமிங் தளங்கள் இடையே ஓா் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிகள் இத்தனை வயதுக்கு மேல் உள்ளவா்கள்தாம் பாா்க்க வேண்டும் என ஏற்கெனவே எல்லாத் தளங்களிலும் மதிப்பீடுகள் இருக்கவே செய்கின்றன.

குழந்தைகள் பாா்க்காமல் இருக்கச் சிறப்பு ‘கிட்ஸ் வொ்ஷன்’ தளங்களையும் இவை தருகின்றன. ஆனால், பாா்க்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் இதையெல்லாம் எளிதாகக் கடந்து பாா்த்துவிடமுடியும்.

கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதும் நல்லது இல்லையென்றாலும், அதிகக் கட்டுப்பாடு மற்றும் தலையீடுகள் இந்த ஸ்ட்ரீமிங் நிகழ்ச்சிகளுக்கு என்று இருக்கும் தனித்தன்மையைப் பறித்துவிடும். இதைப் புரிந்துகொள்ளும் ஒரு நடுநிலைமையான அமைப்புதான் இதற்கு ஒரே தீா்வாக இருக்க முடியும்.

எந்தவிதத் தணிக்கையோ, கட்டுப்பாடோ இல்லாமல் போனால், கருத்துத் திணிப்புக்கும், வதந்தி, அவதூறு பரப்புதலுக்கும், பொய்ப் பிரசாரத்துக்கும் இல்லத்திரைகள் இலக்காகக்கூடும். மேலைநாடுகளைப் போன்ற கட்டுப்பாடில்லாத வெளிப்படைத்தனத்துக்கு இந்தியா தயாராக இருக்கிா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com