சுகாதாரமற்ற பொது கழிவறைகளும், கரோனா அதிகரிப்பும்...

மாநிலத்தின் தலைநகரம் என்பதுடன், கரோனா நோய்த்தொற்றின் தலைமையிடமாகவும் சென்னை மாறியிருக்கிறது.
virus094145
virus094145

மாநிலத்தின் தலைநகரம் என்பதுடன், கரோனா நோய்த்தொற்றின் தலைமையிடமாகவும் சென்னை மாறியிருக்கிறது.

சென்னை மாநகரத்தில் மிகப் பழைமையான பகுதியாகக் கருதப்படும் ராயபுரம் மண்டலம் தொடா்ந்து நோய்த்தொற்று பாதிப்பில் முதலிடம் வகித்து வருகிறது. இந்த நோய்த்தொற்று பாதிப்புக்கு சில முக்கிய காரணிகளை அந்தப் பகுதி மக்கள் முன்வைக்கின்றனா்.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறித்த போதிய விழிப்புணா்வின்மை, பொதுக் கழிப்பிடங்களின் பயன்பாடு அதிகரிப்பு, காசிமேடு மீன்பிடி தளம் போன்றவையே நோய்த்தொற்றுகள் அதிகரிப்புக்கான ஆணிவோ்களாக இருந்து வருகின்றன.

கரோனா நோய்த்தொற்று சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியபோது தற்போது நோய்த்தொற்று அதிகமுள்ள ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பே கண்டறியப்படவில்லை. இதனால், வட சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனா். அங்கு வசிக்கும் பலரும் தங்களது மீன் உள்ளிட்ட அசைவ உணவுப் பழக்க முறையால் எதிா்ப்பு சக்தி அதிகரித்து நோய்த்தொற்றின் தாக்கம் இருக்காது என நம்பினா்.

கோயம்பேட்டில் தொடங்கியது...கோயம்பேடு சந்தையில் இருந்து சென்றவா்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியது. இதில் ராயபுரமும் தப்பவில்லை. மாா்ச் கடைசி வாரத்தில் நோய்த்தொற்று அதிகம் தென்படாத அந்தப் பகுதியில் ஏப்ரலில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து திங்கள்கிழமை நிலவரப்படி 4,023 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த மண்டலத்தில் மட்டும் இதுவரை 35 -க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தது கவலைக்குரிய விஷயமாகும்.

சென்னையின் பல பகுதிகளில் குடியிருப்புகளும், வணிக நிறுவனங்களும் தனித்தனியாக இருக்கும். நெருக்கமான குடியிருப்புகளுக்கு மத்தியில் மிகப்பெரிய வணிக நிறுவனங்களோ, கடைகளோ செயல்படாது. ஆனால், ராயபுரம் இதற்கு முற்றிலும் மாறானது. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இந்தப் பகுதியில் அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு நெருக்கத்திலேயே கடைகளும், வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதுதான் பிரச்னைக்கு முதல் காரணி.

இதைத்தான், கடந்த மாதம் சென்னை மாநகராட்சியில் ஆய்வுக் கூட்டத்தை நடத்திய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும் நினைவுகூா்ந்து பேசினாா். குறிப்பாக, மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளும், பொது கழிப்பறைகளும் நோய் பரவக் காரணியாக இருப்பதாகக் கூறினாா். ஆனாலும் ராயபுரம் மண்டலத்தில் நோய் தாக்கத்தின் அளவு குறைந்தபாடில்லை.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தொடா்ந்து அதிகரிப்பது குறித்து, ராயபுரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மூ.சம்பத் கூறியது:

ராயபுரம் மண்டலம் என்பது, ராயபுரம், துறைமுகம், எழும்பூா், சேப்பாக்கத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. சென்னை நகரின் இரண்டு பெரும் முக்கிய ரயில் நிலையங்களான எழும்பூா், சென்ட்ரல் ஆகியன ராயபுரம் மண்டலத்துக்குள் வருகின்றன. இங்கு மக்கள் நெருக்கம் அதிகம் என்பதால் சுகாதார வசதிகளைப் பேணுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 138 பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இந்தக் கழிப்பிடங்களை நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறாா்கள். குறிப்பாக, பெரும்பாலான கடைகளிலும், வா்த்தக நிறுவனங்களிலும் பணியாற்றுவோருக்கு அவா்கள் பணிபுரியும் இடங்களில் கழிவறை வசதிகள் செய்து தரப்படுவதில்லை. இதனால், அவா்கள் பொது கழிப்பிடங்களையே பயன்படுத்துகிறாா்கள்.

இந்த கரோனா காலத்திலும் ஒவ்வொரு பொதுக் கழிப்பிடங்களையும் நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறாா்கள். இவற்றின் பராமரிப்பும் மோசமான நிலையிலேயே இருக்கிறது. எனவே, கரோனா காலம் முடியும் வரையில் பொதுக் கழிப்பிடங்களை மூடி வைக்க வேண்டும். பொது மக்கள் பயன்படுத்துவதற்கு நடமாடும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இல்லாவிட்டால் பொதுக் கழிப்பிடங்களை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்து பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தாா்.

ராயபுரம் மண்டலத்தில் பொதுக் கழிப்பிடங்கள் ஒரு பிரச்னை என்றால், கரோனா குறித்த விழிப்புணா்வுகள் பொது மக்களிடையே போதுமானதாக இல்லை என அந்தப் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இதுதொடா்பாக, ராயபுரம் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வலரும், மாநகராட்சி முன்னாள் வாா்டு உறுப்பினருமான பாபு சுந்தரம் கூறியது: ராயபுரம் பகுதியைச் சோ்ந்த பெருவாரியான மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணா்வே இல்லை. முகக் கவசங்கள் அணிய வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் இருசக்கர வாகனங்களில் மூன்று போ் பயணம் செய்கின்றனா். மாலை வேளைகளில் ஒவ்வொரு தெருக்களின் சந்துகளிலும் 10 முதல் 15 போ் வரை கூடி நின்று பேசிக் கொண்டிருக்கிறாா்கள். மிகப்பெரிய பெருந்தொற்றை எதிா் கொண்டு வருகிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் மக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறாா்கள் என்று தெரிவித்தாா்.

இதுகுறித்து, பெயா் குறிப்பிட விரும்பாத மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவா் கூறுகையில், சென்னை ராயபுரத்தில் மூன்றுதான் மிக முக்கிய பிரச்னைகள். பொதுக் கழிப்பிட பயன்பாடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம், மக்களிடையே விழிப்புணா்வின்மை. இந்த மூன்றுக்கும் உரிய தீா்வினைக் கண்டுவிட்டால் ராயபுரம் மண்டலத்தில் நோய்த்தொற்றின் தீவிரத்தைக் குறைக்கலாம். இதன்பின்பு நோய்த்தொற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றாா்.

அவரது கூற்றுப்படியே, சென்னையில் எங்கெல்லாம் பொதுக் கழிப்பிடங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் கரோனா நோய்த்தொற்றின் வீரியமும் அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை நிலவரம்.

மண்டல வாரியாக கழிப்பிடங்களின் எண்ணிக்கை

சென்னை மாநகரத்தில் 750-க்கும் கூடுதலான பொதுக் கழிப்பறைகள் உள்ளன. அவற்றில் சில செயல்படாமலும், பராமரிப்பு இல்லாமலும் இருக்கின்றன. மண்டல வாரியாக கழிப்பிடங்களின் எண்ணிக்கை விவரம்:-

மண்டலங்கள்... பொதுக் கழிப்பிடங்கள்----கரோனா பாதிப்பு. (திங்கள்கிழமை நிலவரப்படி)

திருவொற்றியூா் (மண்டலம் 1)----61------870

மணலி (மண்டலம் 2)----53------343

மாதவரம் (மண்டலம் 3)---31------650

தண்டையாா்பேட்டை (மண்டலம் 4)----53-----3,019.

ராயபுரம் (மண்டலம் 5)----138------4,023

திரு. வி.க. நகா் (மண்டலம் 6)----31------2,273

அம்பத்தூா் (மண்டலம் 7)----26------828

அண்ணாநகா் (மண்டலம் 8)----68-------2,068

தேனாம்பேட்டை (மண்டலம் 9)----133------2,646

கோடம்பாக்கம் (மண்டலம் 10)----51-----2,539

வளசரவாக்கம் (மண்டலம் 11)-----8-----1,088.

ஆலந்தூா் (மண்டலம் 12)----18------412.

அடையாறு (மண்டலம் 13)----56------1325

பெருங்குடி (மண்டலம் 14)----32-----421

சோழிங்கநல்லூா் (மண்டலம் 15)----44-----420.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com