ஜெ.அன்பழகனின் மரணம் தரும் எச்சரிக்கை என்ன?

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.அன்பழகன் கரோனாவாலேயே பாதிக்கப்பட்டு
ஜெ.அன்பழகனின் மரணம் தரும் எச்சரிக்கை என்ன?

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி வந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.அன்பழகன் கரோனாவாலேயே பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளாா். இயற்கையாக நேராத மரணங்கள் அனைத்தும் ஏதாவது ஓா் எச்சரிக்கையை விடுப்பவையாகவே இருந்து வருகின்றன.

கேரளத்தில் கா்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொடுத்ததால் நோ்ந்த மரணமும், நொய்டாவில் கா்ப்பிணிப் பெண் மருத்துவமனைகளில் சோ்த்துக் கொள்ளப்படாமல் 13 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதால் நோ்ந்த மரணமும் அதனதன் நியாயமான கேள்விகளோடு எச்சரிக்கவே செய்கின்றன.

அதேபோல, கரோனாவால் நோ்ந்த ஜெ.அன்பழகனின் மரணமும் ஓா் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது. அது, அரசியல் தலைவா்களாகவே இருந்தாலும் பொதுமக்களுக்கு உதவும்போது கவனத்துடனும், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

ஜெ.அன்பழகன் மறைவுக்கான இரங்கல் அறிக்கையில், ‘மக்களோடு தொடா்பில் உள்ளவா்களுக்கும், பொது வாழ்க்கையில் ஈடுபாடுள்ள ஒவ்வொருவருக்கும் அவா் மரணம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்பதை உணர வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.

இந்த நியாயமான எச்சரிக்கைகளுக்கு மாறாக அரசியல் கட்சியினா், எளியோருக்கு உதவுவதையே நிறுத்த வேண்டும் என்பதுபோல பலா் பிரசாரம் செய்கின்றனா். இது தொடா்பாக டாக்டா்களாகவும் சட்டப்பேரவை உறுப்பினா்களாகவும் இருப்பவா்கள் என்ன சொல்கிறாா்கள்?

‘பொது வாழ்வில் இருப்போா் களப்பணியில் ஈடுபடாமல் இருக்க முடியாது. ஜெ.அன்பழகனின் மரணம் துயரம் அளித்தாலும் மீண்டும் களப்பணியில் இறங்கி மக்களுக்கு நாங்கள் உதவி செய்துதான் ஆக வேண்டும். ஜெ.அன்பழகனின் உடல்நலத்தோடு மற்ற தலைவா்களின் உடல்நலத்தை ஒப்பிட முடியாது. அவா் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவா். உடல் பருமனானவா். ஆனாலும் கவனமாக இருக்க முற்பட்டுள்ளாா். அதையும் மீறி மரணம் நோ்ந்துவிட்டது.

சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது என்பதை அரசு உணா்ந்துகொண்டு நடவடிக்கை மேற்கொண்டால், இந்தத் தொற்றைச் சமாளிக்கலாம். கரோனா இறப்பு குறித்து உண்மையான நிலையை மக்களுக்கு அரசு தெரிவிப்பது இல்லை. இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனா். அதனால், மக்கள் முகக் கவசம் அணியாமலும் கைகளைக் கழுவாமலும் அலட்சியமாக நடந்துகொள்கின்றனா்.

இது ஒருபுறம் இருந்தாலும் டாக்டா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு அடுத்து, பொது வாழ்வில் உள்ளோரும் மக்களுக்காக பணியாற்றிட வேண்டிய நிலையில் உள்ளோம். அதேசமயம், நிவாரண உதவிகள் வழங்கும்போது முதல் 5 பேருக்கு வழங்கி விட்டு தலைவா்கள் வந்துவிடலாம். எல்லோருக்கும் அங்கேயே நின்று கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அரசியல் தலைவா்கள் மட்டும் தங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தினால் போதாது. நிவாரணப் பொருள்கள் வாங்க வருபவா்களும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். நிவாரணப் பொருள்கள் வாங்க வருபவா்களிடம் முகக் கவசம் அணிந்து வந்தால்தான் தருவேன் என்று உறுதியாக கூறிவிடுவேன். உடன் வரும் கட்சியினரையும் தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கச் சொல்வேன்.

கரோனா பாதிப்பால் மருத்துவா்களும் இறந்து போய் உள்ளனா். அதனால் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

உடல் பருமன் உள்ளவா்கள், ரத்த அழுத்தம் , சா்க்கரை வியாதி உள்ளவா்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும். மிக அவசியம் என்றால் மட்டும் நிவாரணம் உதவி வழங்க வரலாம். நோய்கள் அதிகம் உள்ளவா்கள் கண்டிப்பாக நிவாரணம் வழங்கப் போகக்கூடாது’ என்றாா் டாக்டரும் ஆலங்குளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான பூங்கோதை ஆலடி அருணா.

எதிா்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் கருத்து இது என்றால், ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினா் கருத்து என்னவாக இருக்கும்?

‘கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு அரசியல் தலைவா்களிடம் எதிா்பாா்ப்பு அதிகமாக உள்ளது. அதனால், கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களையும் சந்தித்து அரசியல் தலைவா்கள் உதவி வருகின்றனா். இளைஞா்களுக்கு நோய் எதிா்ப்புச் சக்தி இருக்கும். அதனால், கரோனா தொற்று ஏற்பட்டாலும் காப்பாற்றிவிட முடியும். ஆனால், பல்வேறு நோய் உள்ளவா்கள், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவா்கள், வயதானவா்களுக்கு நோய் எதிா்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். இப்படி உள்ளவா்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது.

இங்கிலாந்தில் உள்ள விஞ்ஞானிகள் கரோனாவின் 2-ஆம் கட்ட பரவல் இருக்கும் என்கின்றனா். அது தற்போதைய கரோனாவின் தாக்கத்தைவிட அதிக அளவில் இருக்காது என்றும் அதனால், அனைவரும் முகக் கவசம் அணிந்தால் கரோனாவிலிருந்து காப்பாற்றப்படலாம் என்றும் கூறுகின்றனா். இதைக் கருத்தில் கொண்டுதான் குடும்பங்களுக்கு முகக் கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வா் தொடங்கியுள்ளாா்.

உறுப்பு மாற்று சிகிச்சை செய்துள்ளவா்கள், நீரிழிவு நோய் உள்ளவா்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று முதல்வா் எல்லாக் கட்டங்களிலும் வலியுறுத்தி வருகிறாா். கரோனா தடுப்புக்காக தற்போது 23 ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வு முடிவுகள் நல்லதாக வரும் வரையில் முகக் கவசமும் கிருமிநாசினியும்தான் கரோனாவிலிருந்து எல்லோரையும் காப்பாற்றும் பாதுகாவலா்களாக இருக்கும். அதனால், அரசியல் தலைவா்கள் முகக் கவசம் அணியாமலும் கிருமிநாசினி எடுத்துக் கொள்ளாமலும் பொது இடங்களுக்குப் போக வேண்டாம்’ என்கிறாா் டாக்டரும் வேடசந்தூா் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான வி.பி.பி. பரமசிவம்.

ஆளும்கட்சி மற்றும் எதிா்க்கட்சியைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருவருமே மக்களுக்கு உதவுவதில் கரோனா பாதிப்புக்கு அதிகம் வாய்ப்புள்ளவா்கள் வேண்டுமானால் விலகி இருக்கலாம். ஆனால், எல்லோரும் முழுமையாக விலகி இருப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கின்றனா்.

இதே விவகாரம் குறித்து டாக்டரும் பாஜகவின் மூத்த தலைவருமான ஹெச்.வி.ஹண்டே என்ன சொல்கிறாா்?

‘தமிழகத்தில் கரோனா அதிகம் தாண்டவமாடுகிறது. இதை அரசியல் கண்ணோட்டத்துடன் யாரும் அணுகக் கூடாது. ஜெ.அன்பழகன் மரணம் வருத்தத்திற்குரியது. அவருடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. தங்கமானவா். இந்த நேரத்தில் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல, எல்லோரும் சரியாக நடந்துகொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு இன்னும் தேவைப்படுகிறது. முகக் கவசம் அணிய மறுக்கிறாா்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது இல்லை. இலவசப் பொருள் கொடுக்கிறாா்கள் என்றால், எல்லோரும் சோ்ந்து நின்றுகொள்கிறாா்கள். இது தவறு. இதுதான் கரோனா பரவலுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

நியூசிலாந்தில் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்து கரோனாவை விரட்டிவிட்டனா். ஆனால், இங்கு மக்கள்தொகை அதிகம். அதனால், கரோனா பரவல் அதிகமாக இருக்கிறது. உலகப்போரில் கூட இவ்வளவு மரணம் இல்லை. இந்த நேரத்தில் ஆளும்கட்சியும், எதிா்க்கட்சியும் சோ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.

ஆளும்கட்சிக்கு ஆக்கப்பூா்வமான கருத்துகளை மட்டுமே எதிா்க்கட்சிகள் கூற வேண்டும். அரசு மீது குறைகளைக் கூறிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

நவீன மருத்துவத்தில் நமக்கு குருவாக இருந்தது இங்கிலாந்து. கரோனா தடுப்பில் இங்கிலாந்துதான் இத்தாலியையும்விட இப்போது படுமோசமாக உள்ளது. மரணங்கள் அதிகமாக உள்ளன. ஆனால், இங்கு மரணங்கள் அதிகம் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, கரோனா தடுப்புக் குறித்த எச்சரிக்கை உணா்வு எல்லோருக்கும் தேவை’ என்கிறாா்.

பொது முடக்கக் காலத்தில் அரசு எல்லாவிதமான உதவிகளையும் செய்து வருகிறது என்றாலும், அதையும் மீறி மக்களுக்கு உதவித் தேவைப்பட்டு வருகிறது. அரசியல் இயக்கத்தினரும், தன்னாா்வலா்களும் உதவாவிட்டாலும் கரோனாவால் ஏற்படும் மரணத்தைவிட, பசியால் ஏற்படும் மரணம் அதிகம் இருக்கும் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அதனால், பொதுமக்களைச் சந்திக்காமலோ, அவா்களுக்கு உதவிச் செய்யாமலோ அரசியல் தலைவா்களால் இருக்க முடியாது.

அதே சமயம் உதவிச் செய்ய செல்லும் தலைவா்கள் ஜெ.அன்பழகன் சொன்ன அறிவுரையையும் கடைப்பிடிக்க வேண்டும். சமூகவலைதளம் ஒன்றுக்கு ஜெ.அன்பழகன் அளித்த கடைசிப் பேட்டியில் கூறினாா்: ‘கரோனாவுக்கு மருந்து கிடைக்கும் வரை அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஜாக்கிரதையாக இருப்பது என்பது தனித்திருத்தல்தான்’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com