'கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி': தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் இன்று!

நாடு சுதந்திரம் பெற தங்களை முழுமையாக அர்பணித்த தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் அமரகவி தியாகி விஸ்வநாததாஸ்.  நாட்டின் நலனுக்கு என வாழ்ந்தவர். அவரது பிறந்த தினம் இன்று.
அமரகவி தியாகி விஸ்வநாததாஸ்
அமரகவி தியாகி விஸ்வநாததாஸ்

நம் நாடு சுதந்திரம் பெற தங்களை முழுமையாக அர்ப்பணித்த தியாகிகளில் குறிப்பிடத் தக்கவர் அமரகவி தியாகி விஸ்வநாததாஸ்.  தன்னுடைய சிந்தனை, சொல், செயல் அனைத்துமே நாட்டின் நலனுக்கு என வாழ்ந்தவர். அந்த வீரத் தியாகி அமரகவி விஸ்வநாததாஸ் பிறந்த நாள் இன்று, ஜூன் 16.

தியாகி விஸ்வநாததாஸ் 1886-ஆம் ஆண்டு ஜூன் 16-ல் அன்றைய ஒருங்கிணைந்திருந்த ராமநாதபுரம் மாவட்டம் சிவகாசியில் மருத்துவர் குடும்பத்தில் பிறந்தார். அவரது முன்னோர்கள் மருத்துவத் தொழிலைப் பரம்பரையாக செய்து வந்தனர். பெற்றோரிட்ட பெயர் தாசரிதாஸ். சிறுவயதிலேயே இசை, நாடக, நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டார்.

சிவகாசியிலும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் எங்கெல்லாம்  நாடகம், கூத்து நடக்கிறதோ, அங்கெல்லாம் தொலைவைப் பொருட்படுத்தாமல் அவற்றைப் பார்க்கச் சென்றுவிடுவார். நாளடைவில் நாடக அரங்கமே அவரின் கல்விக்கூடமாகியது. நாடகக்கலையில் தேர்ந்து சிறப்பினைப் பெற்றார்.

அந்த காலகட்டத்தில் நாடக கலைக்கே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள்,  “நாடக உலகின் இமயமலை“ என்றும் சிறப்பிக்க பட்டவர். தாசரிதாஸ் என்ற விஸ்வநாதனின் ஆர்வத்தைக் கண்டார். நல்ல குரல் வளம், நடிப்பில் திறமை, வரலாற்று அறிவு ஆகியவற்றைப் பாராட்டினார். அவரின் திறமையை வெளிக்கொண்டுவர நாடகத்தில் அறிமுகப்படுத்தினார் சங்கரதாஸ் சுவாமிகள்.

நடிப்பில் அனைவரையும் கவரும் வண்ணம் பல வித்தியாசமான வேடங்களில் பெண்ணாகவும், ராஜபார்ட்டாகவும் நடித்தார் விஸ்வநாததாஸ்.  வேடத்திற்குத் தக்க குரலும் உடல் மொழியும் இயல்பாகவே இருந்தது. இவருக்கென ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது .

1911-ஆம் ஆண்டு துாத்துக்குடிக்கு காந்தி வருகை தந்தார். அப்போது நாடக மேடையொன்றில் பாடிய பாடல் மக்களையும் அங்கே இருந்த காந்தியையும் கவர்ந்தது. பெரும் மக்கள் கூட்டத்தைக் கவர்ந்திழுக்கும் விஸ்வநாததாஸ் திறமையைக் கண்டு வியந்த காந்தி அவரைச் சந்தித்துப் பாராட்டினார்.

“உன் திறமை நாட்டிற்கு பயன்படட்டும், தாய்நாட்டின் சுதந்திர பணியில் உன்னை அர்ப்பணித்துக் கொள்” என்று காந்தி அறிவுறுத்தினார்.  தன்னுடைய இசைத் தமிழாலும், நாடகத் தமிழாலும் தேச உணர்வை ஊட்டி வந்த விஸ்வநாததாஸ் மேலும் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.

தான் மேடையேறும் ஒவ்வொரு நாடகத்திலும் தேச விழிப்புணர்வுப் பாடல்களைப் பாடினார். நாடகம் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள் மனதிலும் தன்னுடைய நடிப்பாலும்,  கம்பீரமான குரல் வலிமையாலும் தேசபக்தியைப் புகுத்தினார் விஸ்வநாததாஸ்.

தேசபக்தியுள்ள நல்ல நடிகரான விஸ்வநாததாஸ், ரசிகர் மன்றத்தை முறைப்படுத்தினார்.  சுய நலத்திற்காகவோ, சுய லாபத்திற்காகவோ அந்த ரசிகர் மன்றத்தை அவர் தொடங்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தன்னுடைய பெயரில்கூட அந்த சங்கத்தைத் தொடங்கவில்லை.

அவரது சிந்தனை, சொல், செயல் எல்லாம் நாட்டின் நலனைப் பற்றித்தான் இருந்தது. எனவே அந்த வீரத்தியாகி விஸ்வநாததாஸ் ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கத்தை மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு 1938ம் ஆண்டு துவக்கினார்.

இந்த சங்கத்தின் தலைவராக வீரத்தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸும் பொருளாளராக தியாகி ஜி.வெங்கிடாத்திரி நாயுடுவும் செயலாளராக எஸ்.வி.சுப்பிரமணியன் மற்றும் எ.சிதம்பரம் ஆகியோரும் செயல்பட்டனர்.

நாட்டின் சுதந்திரத்தை வென்றெடுக்க தீவிரவாதம், மிதவாதம் என இரு வேறு சித்தாந்தங்கள் உருவாகின. இரு பெரும் தலைவர்கள் தலைமையில் அணி சேர்ந்தனர். ஆயுதப்படைகளுடன் போராடிய சுபாஷ் சந்திர போஸின் வீரத்தைப் பறைசாற்றிடும் வகையில் சுபாஷ் என்ற பெயர் முதலாவதாகவும், அஹிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடிய காந்தியடிகளின் வீட்டில் அழைக்கும் பாபுஜியை என்ற பெயரில் பாபு என்ற பெயரை இரண்டாவதாகவும் இணைத்து ஸ்ரீசுபாஷ்பாபு வாலிபர் சங்கம் என்பதை துவக்கினார்.

இந்த இடத்தில் அவருடைய சிந்தனையை ஆராய்ந்து பாருங்கள்.. எந்த குறுகிய நோக்கமும் இல்லாமல் பரந்த தேசிய சிந்தனை கொண்டு செயல்பட்டது நன்கு புலப்படும். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் சுதந்திரப் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திய தீரர் சத்தியமூர்த்தி, வ.உ. சிதம்பரம் பிள்ளை, காமராஜர் போன்றோரிடம் மிகவும் நெருங்கிப் பழகிய விஸ்வநாததாஸ், வீரம் மற்றும் விவேகத்துடன் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட இந்த சங்கத்தை துவக்கினார். இந்த சங்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்கள் நேரடி உறுப்பினர்களாகவும், ஆயிரக்கணக்கானோர் மறைமுகத்  தொண்டர்களாகவும் இணைந்துள்ளனர்.

இவருக்குப் பக்கபலமாக திருமங்கலத்தைச் சேர்ந்த ஜி.வெங்கிடாத்திரி நாயுடு, எஸ்.வி.சுப்பிரமணியன், எ.சிதம்பரம், ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியன், நாடக நடிகர் சங்க அருணாச்சலம், சுவாமி நித்தியானந்த அடிகள் போன்றோர் இருந்துள்ளனர்.

இந்த சங்கத்தின் பின்னணியில் தியாகி விஸ்வநாததாஸ் தனது உணர்ச்சி மிகுந்த நாடகங்கள் மூலம் மக்களிடையே சுதந்திர வேட்கையை வளர்த்தார்.
சுதந்திரப் போராட்டத்தின்போது பல்வேறு அமைப்புகள், தனிமனிதர்கள், கூட்டணிகள், தொண்டர் படைகள், மன்னர்கள், ஜமீன்தார்கள் என பல்வேறு தரப்பட்டவர்களும் களம் கண்டிருந்த நிலையில், இந்திய தாய்த் திருநாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேய அடக்குமுறைகளை எதிர்த்துக் கட்டுக்கோப்பான தொண்டர் படைகளைக் கொண்டு  போராடியது இந்த சங்கம்.

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியது. அந்நியப் பொருள்களை வாங்காமல் சுதேசிப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மேடைகளில் முழங்கியதைக் கேட்டு, தான் நடித்த ஒரு நாடகத்தில் “அந்நியத் துணிகளை வாங்காதீர் உள்நாட்டுத் துணிகளை வாங்குவீர்…'' எனப் பாடினார்.

அவரது பாடலால் மக்களுக்கு சுதேச உணர்வு மேலிட்டது. பார்வையாளர் ஒருவர், தான் அணிந்திருந்த அந்நியத் துணியைக் கழற்றி மேடையிலேயே தீ வைத்து எரித்தார். இதனைக் கண்ட விஸ்வநாததாஸ் தனது கதராடையை அவரிடம் தந்து அணியச் செய்தார்.

1938ம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர் மற்றும் ஆங்கிலேயர் அடக்குமுறைகளை எதிர்த்து திருமங்கலம் ஸ்ரீசுபாஷ்பாபு  வாலிபர் சங்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. அப்போது சங்கத்தின் மதுரை தொண்டர் படையுடன் திருமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரமும், ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியனும் போராடுவதற்காகச் சென்றனர். அதில் கைதாகி சிறையிலிருந்த ஜமீன்தார் சீமைராஜ் பாண்டியன் சிறையிலேயே நாட்டிற்காக தனது உயிரை அர்ப்பணித்தார்.

புராண நாடகத்தின் இடையே, சம்பந்தமே இல்லாமல், ஆங்கிலேயர்களை, சிலேடையாகவும், சமயங்களில் நேரடியாகவும் தாக்கி வசனம் பேசுவார். புராணம், சரித்திரம் என எந்த நாடகமாக இருந்தாலும் தேசபக்தி பாடல்களைப் பாடும்படி மக்கள் விஸ்வநாததாஸிடம் கேட்க ஆரம்பித்தனர்.

நெல்லையில் வள்ளி திருமண நாடகத்தில் கொக்கு பறக்குதடி பாப்பா பாடலைப் பாடுகிறார் விஸ்வநாததாஸ். முடிவில் மேடைக்கு வந்த போலீஸ் ஆங்கில அரசுக்கு எதிராகப் பாடியதால் உங்களைக் கைது செய்கிறோம் எனக் கூறினார்கள். யாருக்கு வாரண்ட் எனக் கேட்க விஸ்வநாததாசுக்கு என காவலர்கள் பதிலளித்தனர். இந்தப் பாடலைப் பாடியது நான் இல்லை; முருகப் பெருமான் வேடன் ரூபத்தில் வந்து பாடினார், எனவே முருகப்பெருமான் பேரில் வாரண்ட் கொண்டு வாருங்கள் என்று விஸ்வநாததாஸ் கூறியதும், குழம்பிப் போயினர் காவலர்கள். மிகவும் சாமர்த்திய கலைஞர் விஸ்வநாததாஸ். ஒவ்வொருமுறை அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கும்போதும் மிகுந்த எச்சரிக்கையுடனே வார்த்தைகளைக் கண்காணித்தது ஆங்கில அரசு.

சண்முகானந்தம் குரூப் என்ற நாடகக் கம்பெனியை நிறுவி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று நாடகம் போட்டார்.
வள்ளி திருமண நாடகம் அவரது நாடகத்தில் முக்கியமானது, அதில் கொக்கு பறக்குதடி பாப்பா பாடல் மிக முக்கியமானது. முருகப் பெருமான் - வேடனாக நடிக்கும் விஸ்வநாததாஸ் தாய் நாட்டைக் கொள்ளையடிக்கும் வெள்ளையனைப் பற்றி கொக்கு பறக்குதடி பாடலில் இரு பொருள்படும்படி வெள்ளையனை இடித்துரைப்பார்.

''கொக்கு பறக்குதடி பாப்பா - நீயும்கோபமின்றிக் கூப்பிடடி பாப்பா
கொக்கென்றால் கொக்கு கொக்கு –அது நம்மைகொல்ல வந்த கொக்கு வர்த்தகம் செய்ய வந்த கொக்கு -நமது வாழ்க்கையைக்கெடுக்கவந்த கொக்கு! அக்கரைச் சீமைவிட்டுவந்து - இங்கே கொள்ளை அடிக்குதடி பாப்பா!"

கொக்கு அந்த வெள்ளை கொக்கு என்று பாடியவுடன் எழுந்த பாமர மக்களின் கைதட்டல்களால் அரங்கம் அதிரும், கோஷங்கள் முழங்கும் .

பிரிட்டிஷ் அதிகாரிகள் வெறுப்படைந்தனர். பாடல்கள், காவல்துறையின் நெஞ்சைத் துளைத்தது. விஸ்வநாததாஸ் மேடைகளில் தொடர்ந்து ராஜத் துரோக பாடலைப் பாடி வருகிறார். அவ்வாறு பாடுவதை அவர் நிறுத்த வேண்டும், இனி விஸ்வநாததாஸ் ஆங்கிலேயரைத் தாக்கியோ அல்லது இந்திய விடுதலை பற்றியோ மேடைகளில் பாடக் கூடாது என தடையாணை பிறப்பித்தது ஆங்கிலேய அரசு.

எதற்கும் அஞ்சாமல்,  “போலீஸ் புலிக்கூட்டம் நம்மேல் போட்டு வருகிறது கண்ணோட்டம்” என்று பாடி ஆங்கில அரசை அதிர வைத்தார். இதனால் விஸ்வநாததாஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும்பொழுது அவரின் மூத்த மகன் சுப்பிரமணிய தாஸ் மேடைகளில் தேசபக்திப் பாடல்களைத் தொடர்ந்து பாடினார். மகனையும் கைது செய்தனர்.

அப்பொழுதுதான் திருமணமாகியிருந்த சுப்பிரமணியதாஸிடம், “இனிமேல் தேச விடுதலை பற்றி எந்த மேடையிலும் பேச மாட்டேன், பாட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் உன்னை விடுதலை செய்கிறோம்'' என்றனர் ஆங்கில அதிகாரிகள். தனது தந்தையிடம் இது பற்றிக் கருத்து கேட்டபோது கோபத்தோடு வெடித்த விஸ்வநாததாஸ், “மகனே! நீ மன்னிப்புக் கேட்டு மானமிழந்து மனைவியுடன் வாழ்வதைவிட சிறையிலேயே மாவீரனாகச் செத்துவிடு” என்று கடிதம் அனுப்பினார்.

இந்த தேசத்தின் விடுதலைக்காக கிராமங்கள்தோறும் தேசபக்தி மணம் பரப்பி போராடியவர், அதற்காக இருபத்தொன்பது முறை சிறைச் சாலை சென்றார். அவருக்கு 52 வயது ஆகிவிட்டாலும் நாடகத்தில் எழுச்சியூட்டும் நாயகனாகவே விளங்கினார், 1940, டிசம்பர் இறுதியில் விஸ்வநாததாசின் நாடகத்தை சென்னையில் ஐந்து நாள்கள் நடத்த ஏற்பாடு செய்தனர். அவரின் நாடகத்தைக்  காண சென்னை வால்டாக்ஸ் சாலையிலே  உள்ள ராயல் தியேட்டர் அரங்கில், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வள்ளி திருமணம் என்ற புராண நாடகம் அரங்கேறியது. புராண நாடகமாக அதில் வெள்ளையனை எதிர்த்து கருத்துகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் விஸ்வநாததாஸ் பேசும் அந்த வசனங்களுக்காகவே, மக்கள் கூட்டம் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.

வள்ளி திருமண நாடகத்தில், முருகனாக நடித்தார். மயில் மேல் அமர்ந்து கொண்டு, "கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளைக் கொக்கு பறக்குதடி" என்று பாடினார்.

அவர் பாடலைத் தணிக்கை செய்யவும், அவர் பாட தடை விதிக்கவும், ஆங்கிலேய போலீஸ் அதிகாரிகள் காத்திருந்தார்கள். நாடகம் முடியட்டும், அவரைக் கைது செய்யலாம் என்றிருந்தார்கள். முருகன் வேடமிட்ட தாஸ், ஆவேசமாக, அரக்கர்களை ஏசுவதைப் போல, ஆங்கிலேயர்களை வசை பாட ஆரம்பித்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது.

அடுத்த நிமிடம், ஆரவாரம் அடங்கியது. முருகன் அப்படியே மயில் மேல் சிலையாக இருந்தார். ஆம்! மயில் மேல் அமர்ந்து தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும்பொழுதே அவரின் உயிர் பிரிந்தது.

டிசம்பர் 31, 1940... அந்த நாடகத்திலேயே, அவர் உயிரும் பிரிந்துவிட்டது. "என் உயிர் நாடக மேடையிலேயே போக வேண்டும்" என்ற அவரது விருப்பத்தைக் கடவுள் நிறைவேற்றி வைத்து விட்டார்.

1941-ஆம் ஆண்டின் துவக்கம், ஜனவரி 1-ஆம் தேதி மக்கள் வெள்ளத்தில் அவரது இறுதி ஊர்வலம் சென்னையில் நடைபெற்றது. 52 வயது வரை போராடி 29 முறை சிறைச்சாலை சென்றவர். தனது வாழ்நாளையும், திறமைகள் முழுமையும் தேசத்திற்கு அர்ப்பணித்த அமரகவி தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் தியாகத்தை நினைவு கூர்ந்து போற்றுவோம்.

[கட்டுரையாளர் - நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத் தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com