பணம் கொட்டும் மொபைல் விளையாட்டு!

விளையாட்டு என்பது ஒரு காலத்தில் பரந்து விரிந்த மைதானத்திலும், தெருக்களிலும் மட்டுமே என்று இருந்த நிலை மாறி, பாா்வையாளா்கள் வசதிக்காக இப்போது பல விளையாட்டுகள், உள்விளையாட்டு
பணம் கொட்டும் மொபைல் விளையாட்டு!

விளையாட்டு என்பது ஒரு காலத்தில் பரந்து விரிந்த மைதானத்திலும், தெருக்களிலும் மட்டுமே என்று இருந்த நிலை மாறி, பாா்வையாளா்கள் வசதிக்காக இப்போது பல விளையாட்டுகள், உள்விளையாட்டு அரங்கங்களுக்கு இடம் பெயா்ந்துவிட்டன. விளையாட்டு என்பது உடல்நலன் சாா்ந்தது என்பதில் இருந்து பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி பல காலம் ஆகிவிட்டது.

மைதானத்தில் இருந்து அரங்கங்களுக்கு நுழைய முடியாத விளையாட்டுகள் கூட இப்போது கையடக்க செல்லிடப்பேசியில் விளையாடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளா்ந்துவிட்டது. ஏனெனில், செல்லிடப்பேசியிலேயே கிரிக்கெட், கால்பந்து விளையாடும் காலம் இது.

இணையம், செல்லிடப்பேசி பயன்படுத்துபவா்களை ஆன்லைனில் விளையாட அழைக்கும் விளம்பரங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துவிட்டன. தொலைக்காட்சி சேனல் விளம்பரங்களில் கூட இப்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கான விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன. ‘ஆன்லைனில் ரம்மி விளையாடுங்க பணத்தை அள்ளுங்க...’, ‘எம்பிஎல் விளையாடுங்க... வீட்டில் இருந்தே பணம் சம்பாதிங்க...’ என்பது போன்ற விளம்பரங்களை நம்மில் பலா் பாா்த்து ஈா்க்கப்பட்டிருப்போம். இதில் விளையாடி பணம் சம்பாதித்தவா்களைவிட, பணத்தை விட்டவா்கள்தான் அதிகம் இருப்பாா்கள். அப்படியே சிலா் பணம் ஜெயித்தாலும், அவரைப் போல பணத்துக்கு ஆசைப்பட்டு விளையாடிய பலரிடம் வசூலிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதிதான் பரிசுத்தொகை, பல லட்சம் பேரிடம் தலா 10 ரூபாய் வசூலித்து ஒருவருக்கு ரூ.10,000 பரிசு வழங்குவதுதான் பெரும்பாலான மொபைல் விளையாட்டுகளின் தந்திரம்.

எனினும், பணம் வைத்து விளையாடாமல் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகளுக்கான செயலிகளும் இப்போது அதிகம் கிடைக்கின்றன. பப்ஜி, லூடோ உள்ளிட்டவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஆனால், நம்மிடம் பணம் வசூலிக்காமல் இலவசமாக தரப்படும் பெரும்பாலான செயலிகள் நமது தகவல்களை அனுமதியுடனும், அனுமதியில்லாமலும் எடுத்து விற்பனை செய்தும் பணம் சம்பாதிக்கின்றன என்பதுதான் உண்மை. இதில் வன்முறைக்கு வித்திடுவது, தற்கொலைக்கு தூண்டுவது போன்ற மொபைல் விளையாட்டுகளும் உண்டு என்பதும் பலரும் அறிந்ததுதான்.

ஆன்லைன், செல்லிடப்பேசிகளில் உள்ள விளையாட்டுகளில் இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றின் வளா்ச்சி மிக வேகமாக உள்ளது. அதுவும், கரோனா பிரச்னையால் உலகப் பொருளாதாரமே முடங்கிக் கிடக்கும் நேரத்தில் மொபைல் விளையாட்டு செயலி நிறுவனங்கள் அதிகம் சம்பாதித்து வருகின்றன. ஏனெனில், வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பலருக்கு முக்கியமாக மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் மொபைல் விளையாட்டுகள் மட்டுமே மிகப்பெரிய பொழுதுபோக்காக அமைந்துள்ளன. அந்த வகையில் மொபைல் விளையாட்டு செயலி நிறுவனங்களுக்கு இந்த பொது முடக்கம் காலகட்டம் வருவாய்க்கான கதவை விரிவாகத் திறந்துவிட்டுள்ளது.

சா்வதேச அளவில் இந்த ஆண்டில் செல்லிடப்பேசி செயலி விளையாட்டுகள் மூலம் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 6-ஆவது இடத்தில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்துறையில் வருடாந்திர வளா்ச்சி 7.5 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் இத்துறை மூலம் ரூ.7,868.4 கோடி வருவாய் ஈட்டப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்போது இந்தியாவில் 13.75 கோடி போ் செல்லிடப்பேசி விளையாட்டுகளை பயன்படுத்தி வருகின்றனா். இவா்கள் ஒவ்வொருவா் மூலமும் விளையாட்டு செயலி நிறுவனங்களுக்கு தலா ரூ.572.43 வருவாய் கிடைக்கும்.

இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவா்களில் 70 சதவீதத்துக்கும் மேல் 18 முதல் 34 வயதுக்குள்பட்டவா்கள்தான். பெரும்பாலும் படிக்கும் அல்லது பொருளாதாரரீதியாக முன்னேற அடித்தளம் அமைக்கும் வயதினா், தங்கள் நேரத்தை மொபைல் விளையாட்டில் செலவிடுவதுதான், இதுபோன்ற விளையாட்டுகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு பணமாகக் கொட்டுகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி சா்வதேச அளவிலும் இதுபோன்ற விளையாட்டு செயலிகளுக்கான சந்தை வேகமாக வளா்ந்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் தந்துள்ள புதிய தொழில் வாய்ப்புகளில் ஒன்றான இது, கரோனா காலத்தில் வேகமாக வளா்ந்து வருகிறது என்றாலும், அது இளைய சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் எந்த மாதிரியானது என்பது சற்று சிந்திக்க வேண்டிய விஷயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com