Enable Javscript for better performance
Special story of Manickavasagar |மாணிக்கவாசகர்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  இறைவன் கேட்ட தமிழ் வாசகம், மாணிக்கவாசகத்தின் திருவாசகம்!

  By முனைவர். ப. பாலசுப்பிரமணியன்  |   Published On : 26th June 2020 05:00 AM  |   Last Updated : 25th June 2020 07:29 PM  |  அ+அ அ-  |  

  Special story of Manickavasagar

  மாணிக்கவாசகர்

   

  திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன், அருள்வாசகர், மாணிக்கவாசகர், என்ற  சிறப்புகளைப் பெற்று தமிழுக்குத் திருவாசகத்தைத் தந்து தெய்விகத் தமிழை உலகறியச் செய்த மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே வாழ்ந்து இறைவனோடு இரண்டறக் கலந்த நாள் இன்று. ஆம், ஆனி மகம்  தில்லையில் இறைவனுடன் நேரடியாகக் கலந்து மாணிக்கவாசகர் முக்தி பெற்ற நாள்!

  ஆங்கிலம் வாணிகத்தின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், கிரேக்கம் இசையின் மொழி என்றும், பிரெஞ்சு தூதின் மொழி என்றும், இத்தாலி காதலின் மொழி என்றும் கூறுவது பொருந்தும் என்றால் தமிழ் பக்தியின் மொழி என்று கூறுவதும் பொருந்தும் என்கிறார் அறிஞர் தனிநாயக அடிகளார். அவரது கூற்று முற்றிலும் உண்மை. இத்தகைய சிறப்புமிக்க பக்தியின் மொழியாகத் தமிழ் மொழி திகழ்வது நமக்கெல்லாம் மிகவும் பெருமை, வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் தமிழுக்குக் கிடைத்த அருள்கொடைகள் .

  சைவத்தில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் சிவன் கோயில்களில் பாடிய பதிகங்களில் மறைந்தவை போகக் கிடைத்தவை 8,000 பதிகப் பாடல்கள் ஆகும். இதன் தொடர்ச்சியாக அந்தக் காலகட்டத்தில் மாணிக்கவாசகர் தோன்றிப் பதிகம் பாடினார்.

  சிவபக்தர்கள் பலரது வீடுகளில் வைத்து வணங்கப்படும் நூல்  திருவாசகம்! அந்த மாபெரும் பொக்கிஷத்தை, நமக்கெல்லாம் தந்து அருளியவர்  சைவ சமயக் குரவர்கள், நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் ஆவார்.

  மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட, பெரும் நூல்களுள் முதலாவது  திருவாசகம், மற்றொன்று திருக்கோவையார் என்பதாகும். சிவனைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே இந்த இரண்டு நூல்கள்.

  குரு வடிவாகக் காட்சியளித்து, திருவடி தீட்சை தந்து மறைந்த சிவபெருமானை, மீண்டும் பெற நினைத்து, நனைந்து நனைந்து பாடியவை திருவாசகம் எனும் தேனருவி. இறைவனின் பேரன்பையும் பெருங்கருணையும் விளக்கும் தெவிட்டாத நூல். 

  “திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற தொடர் பாடல்களின் கனிவுத் தன்மையைப் புலப்படுத்தும்.

  பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்

  பரிந்துநீ பாவியே னுடைய

  ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

  உலப்பிலா ஆனந்த மாய

  தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த

  செல்வமே சிவபெரு மானே

  யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

  எங்கெழுந் தருளுவ தினியே.

  இப்பாடலின் பொருளுணர்ந்த டாக்டர் ஜி.யூ. போப் ‘எலும்பை உருக்கும் பாட்டு’ என்று கூறினார். திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார். மாணிக்கவாசகரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரைவிடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார். அத்தகைய சிறப்புமிக்க திருவாசகத்தைப் பற்றியும் மாணிக்கவாசகப் பெருமான் பற்றியும் முழுவதும் விரித்துக் கூற இந்த ஒரு கட்டுரையில் முடியாது. அவரைப் பற்றிய ஒரு சிறு முன்னுரையாக இந்த கட்டுரையைக் காண வேண்டும்.

  தாயுமானவர், இராமலிங்கர் ஆகியோரது பாடல்கள் மாணிக்கவாசகரது பாடல் அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன எனில் இதன் சிறப்பு விளங்கும்.

  திருவாசகத்தைப் படித்தால் உள்ளம் இளகும். உயிர் உருகும். கரும்புச் சாற்றில் தேன் கலந்து, பால் கலந்து, கனியின் சுவை கலந்து இனிக்கும் திருவாசகப் பாடல்கள் உயிரில் கலந்து உவகை தரும் என்று இராமலிங்க வள்ளலார் கூறுவார்.  திருவாசகத்தில் சிவத்தை உணர்ந்ததால் அருட்பெரும் ஜோதி தனிபெருங்கருணை என்று இறைவனை வள்ளலார் குறிப்பிட்டார்.

  திருவாசகம் 656 பாடல்களைக் கொண்டது. 51 பிரிவுகள் உள்ளன.  பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகிறது. சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை அமைந்துள்ளது.

  மாணிக்கவாசகர் வரலாற்றுச் சுருக்கம்

  மதுரை மாநகரத்திலிருந்து, ஏழு கிலோ மீட்டர் தொலைவில் வாதபூரீசுவரர் என்னும் திருநாமத்தோடு இறைவன் அருளும் தலம் திருவாதவூர்.

  அன்றைய தென்னாட்டில் புறச் சமயமாகிய புத்தம் மேலோங்கி, சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறைவன் திருவருளால் சைவம் தழைக்கவும், வேத சிவாகமநெறிகள் விளங்கவும் மாணிக்கவாசகர் அவ்வூரில் அவதரித்தார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து, அம்மகனார்க்கு ``திருவாதவூரார்`` என்று பெயரிட்டனர்.

  பதினாறு வயதளவில், வாதவூரார் கலைஞானங்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். இவரது கல்வித் திறத்தையும், நல்லொழுக்கத்தையும், அறிவுத் திறனையும் கண்டு அனைவரும் வியந்தனர். அக்காலத்தில், பாண்டிய நாட்டை ஆண்டு வந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் திருவாதவூரரது அறிவுத்திறனைக் கேள்வியுற்றான்.

  அரிமர்த்தன பாண்டியன், அவரைத் தனது அவைக்கு அழைத்து, அளவளாவி அவரது அறிவுத்திறனைக் கண்டு வியந்து, ``தென்னவன் பிரம்மராயன்`` என்னும் பட்டம் சூட்டினான். அத்தோடு தனது முதன் அமைச்சராக அமர்த்திக் கொண்டான். திருவாதவூரரும், இறைவனுடைய செயலாக எண்ணி, அதனை ஏற்றுக்கொண்டார்.

  வாதவூராரும், அரிமர்த்தன பாண்டியனுக்கு விசுவாசமாக இருந்து மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அமைச்சர் பதவியில்  சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆயினும் உலக அனுபவ இன்பங்களில் மகிழ்ச்சியடையவில்லை.

  உலக வாழ்வும், வாழ்வில் காணும் பெரும் போகமும், நிலையற்றவை என்றறிந்தமையால், அப்பதவியை அவர் பெரிதாக நினைக்கவில்லை. 

  ஒரு சிறந்த குருநாதரைத் தேடும் வேட்கை, இவருக்குள் இருந்தது. பிறவிப் பெரும் பயனை, அடைதற்குரிய வழி என்ன, என்பதிலேயே இவருடைய சிந்தனை இருந்தது.

  படைகளுக்கு சிறந்த குதிரை வாங்க நினைத்த  மன்னன் அதற்கான பொறுப்பை அமைச்சரிடம் ஒப்படைக்க நினைத்தான்.

  அரசன், அமைச்சராகிய வாதவூரனை பார்த்து, “நம்முடைய கருவூலத்திலிருந்து, வேண்டும் பொருள்களைப் பணியாளர் மூலம் எடுத்துச் சென்று, நல்ல குதிரைகளை வாங்கி வருக” என்று ஆணையிட்டான்.

  வாதவூரரும், அக்கட்டளையை ஏற்றுப் கருவூலத்திலிருந்து பொருள்களை ஒட்டகத்தின் மீதேற்றிக் கொண்டு, படைகளும் பரிவாரங்களும், தன்னைச் சூழ்ந்துவர, மதுரைச் சொக்கேசன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி மதுரையை விட்டுப் புறப்பட்டார். பல மாதங்களைக் கடந்து, திருப்பெருந்துறையென்னும் தலத்தை அடைந்தார்.

  அவ்வூரை அணுக அணுக, அவர்மேல் இருந்த ஏதோ ஒரு சுமை, குறைந்து வருவது போலத் தோன்றியது. இத்தலமே, இறைவன் தன்னை ஆட்கொள்ளும் இடம் போலும் என்ற உணர்வு தோன்றியது.

  அந்த சமயம் சிவநாம முழக்கம் எங்கிருந்தோ வருவது, அவர் செவிகளில் கேட்டது.  அவ்வொலி வரும் திசைநோக்கி வாதவூரரும் விரைந்து சென்றார். ஓரிடத்தில், கல்லால மரம் போன்ற பெரியதொரு குருந்த மரத்தடியில், சீடர்கள் சிலரோடு, சிவபெருமானே குருநாதராய் எழுந்தருளியிருந்தார்.

  வேத சிவாகமங்களும், புராண இதிகாசச் சமய நூல்களும் ஆகிய பல நூல்களையும், கற்றுத்தெளிந்த சிவகணநாதர்கள், அந்தக் குருநாதரிடம் சீடர்களாக விளங்கினர். அச் சீடர்களின் பற்றறுக்கும் ஆசானாக, அந்தக் குருநாதர் வீற்றிருந்தார். அவரது வலத்திருக்கை, சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அவரது திருமுகம், ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது. அவரது கண்கள், திருவருள் விளக்கத்தைச் செய்து கொண்டிருந்தன. இவ்வாறு வீற்றிருந்த, குருநாதரைக் கண்ட வாதவூரார், தாம் பலநாள்களாக விரும்பியிருந்த குருநாதர், இவரேயென்று எண்ணினார்.

  காந்தம் கண்ட இரும்பு போல, மணிவாசகர் மனம், குருநாதர் வசமாயிற்று. இந் நிலையில், விரைந்து அருகிற் சென்ற வாதவூரார், அடியற்ற மரம் போல, அவரது திருவடியில் வீழ்ந்து பணிந்து, அய்யனே !  எளியேனை ஆட்கொண்டருளுக, என வேண்டி நின்றார். வாதவூரரின் பணிவன்பான  நிலையைக் கண்ட குருநாதர், திருக்கண் நோக்கம், ஸ்பரிசம் முதலிய தீட்சைகள் செய்து திருவடிசூட்டி திருவைந்தெழுத்தை அவருக்கு உபதேசம் செய்தருளினார். ஞானாசிரியரது திருவருள் நோக்கால் ஞானத்தின் திருவுருவாக வாதவூரார் மாறினார்.

  தமது குருநாதரின் திருவடிகளுக்குத் தம்மை ஆட்கொண்டருளிய, பெருங்கருணைத் திறத்தை, வியந்து சொல்மாலைகள் பலவும் சூட்டினார்.

  குருநாதனின் முன் வாதவூரார் பாடிய தோத்திரங்கள், இனிமையோடும், அருள் விளக்கத்தோடும் இருந்ததால், வாதவூராருக்கு தீட்சா நாமமாகச் மாணிக்கவாசகன் என்ற பெயரைச் சூட்டினார். அன்று முதல் வாதவூரார் மாணிக்கவாசகர் என்று அழைக்கப்பட்டார்.

  மணிக்கவாசகர் குருநாதரை வணங்கி, `என்னை ஆட்கொண்டபோதே, என்னுயிரும் உடைமையும் தங்கட்குரியவாயின. ஆதலால், அடியேன் கொண்டு வந்த பொருள்கள் அனைத்தையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு அருளல் வேண்டும்` என்று கூறினார். குருநாதரும் அப்பொருள்களைக் கொண்டு சிவப்பணி செய்க` என்று அருளாணையிட்டார். அக்கட்டளையின்படியே, மணிக்கவாசகர் அப்பொருள்களைக்கொண்டு, திருப்பெருந்துறையில் மிகச் சிறந்த திருக்கோயிலைக் கட்டினார். திருவிழாக்கள் செய்தார். திருமடங்கள், திருநந்தவனங்கள் முதலியன அமைத்தார். அடியார்களுக்கு, மாகேசுவர பூசை நிகழ்த்தினார்.

  இவ்வாறு, அரசன் குதிரை வாங்குவதற்கு, தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும், சிவப்பணிகளுக்கே செலவிட்டார். நாள்கள் பல சென்றன. அமைச்சரின் வேறுபட்ட நிலையை, உடன் வந்தவர்கள் கண்டு மாணிக்கவாசகரிடம், `குதிரை கொண்டு மதுரை செல்ல வேண்டுமே என்று தாங்கள் வந்த வேலையினை  நினைவூட்டினர். மணிவாசகர் அவ்வுரைகளைக் கேளாதவராய், இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப்பதை அறிந்த பணியாளர்கள், மதுரைக்குச் சென்று, பாண்டியனிடம் நடந்தவற்றைத் தெரிவித்தனர்.

  இச் செய்தியையறிந்த பாண்டிய மன்னன் கோபங்கொண்டு அவரை அழைத்து வருமாறு ஆணையிட்டார், அரச பணியாளர்கள் திருப்பெருந்துறையை அடைந்து, அரசன் அளித்த திருமுத்திரையை அமைச்சரிடம் கொடுத்து  அரசன் கட்டளையை அறிவித்து நின்றனர்.

  அதனைக் கேட்ட வாதவூரார், தம் குருநாதரிடம் சென்று, நிகழ்ந்ததை விண்ணப்பித்து நின்றார். குருநாதர் புன்முறுவலோடு, ``அஞ்சற்க, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும், என்று மன்னனிடம் அறிவித்து, விலையுயர்ந்த மாணிக்கக் கல்லையும், கையுறையாகக் கொடுக்க`` எனக் கூறி, மாணிக்க மணியை அளித்து, விடை கொடுத்தனுப்பினார். வாதவூரரும் குருநாதரைப் பிரிய மனமில்லாதவராய்  பிரியா விடைபெற்று மதுரைக்கு வந்தார்.

  அரசவைக்கு வந்த மணிவாசகர், இறைவன் அருளிய மாணிக்க மணியை மன்னனிடம் கொடுத்து, `வருகின்ற ஆவணி மூல நாளில், குதிரைகள் மதுரை வந்தடையும்` என்று கூறினார். அரசனும், சினம் மாறி மனம் மகிழ்ந்து, அமைச்சரை அன்போடு வரவேற்று, அருகில் அமர்த்தி  அவரை மகிழ்வித்தான்.

  ஆவணி மூல நாளை அரிமர்த்தனன் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு இரண்டு நாள் முன்னர் அமைச்சரில் சிலர், “வாதவூரார் சொல்லியன அனைத்தும் பொய்யுரை, அவர் தங்களை ஏமாற்ற எண்ணுகின்றார். எடுத்துச் சென்ற பொருள்கள் அனைத்தையும், திருப்பெருந்துறையில் சிவப்பணிக்காகச் செலவிட்டு விட்டார், அவர் கூறுவதை நம்ப வேண்டாம்” என்று கூறினார்கள்.

  பாண்டியன் ஒற்றர்களை அனுப்பி  அவர்கள் மூலம் அமைச்சர்கள் கூறியன அனைத்தும்  உண்மையென்பதை அறிந்தான். வாதவூரார் செய்கையை எண்ணிச் சினந்து, தண்டநாயகர் சிலரை அழைத்து, வாதவூரார்பால் சென்று, குதிரை வாங்கக்கொண்டுபோன, பொருள்கள் அனைத்தையும், வற்புறுத்தித் திரும்பப் பெற்று வருமாறு கட்டளையிட்டான்.

  அச்சேனைத் தலைவர்கள், வாதவூரரிடம் சென்று, மன்னன் கட்டளையை எடுத்துக் கூறி, அவரைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். கொடுஞ்சிறையில் இட்டனர். சுடுவெயிலில் நிறுத்திக் கடுமையாக வருத்தினர்.

  வாதவூரார் இறைவனைத் தியானித்து, “ஐயனே! ஆவணி மூலத்தன்று குதிரை வருவதாகக் கூறிய உன் உரை பொய்யாகுமோ? உன் அடித்தொண்டன் இவ்வாறு துன்புறுவது உனக்கு அழகா?  நீ என்னைக் கைவிட்டால் எனக்கு யார் துணை? அடியான் ஒருவன் துன்புறுவது உனக்குக் குறையல்லவா?” என்று இறைவனிடம் முறையிட்டார்.

  வாதவூரார் கவலைகளைப் போக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், நரிகளையெல்லாம் குதிரைகளாக மாற்றி, தேவர்களெல்லாம் குதிரைச் சேவகர்களாய்ப் புடைசூழத் தான் குதிரை வாணிகன் போல திருக்கோலம் கொண்டு, வேதமாகிய குதிரையில் அமர்ந்து, குதிரைப் படையுடன்  மதுரையை நோக்கி வந்தான்.

  குதிரைப் படைகள் மதுரை நோக்கி வருவதை, ஒற்றர்கள் மூலம் மன்னன் அறிந்தான். அவன் மனம் மகிழ்ந்தது. திருவாதவூரரைத் தவறாகத் தண்டித்து விட்டோமோ? என்று வருந்தி, அவரை விடுவித்தான். அரசவையில் அவரை அன்போடு வரவேற்று அமர்த்தினான்.  

  கடல் அலை போல் வந்த படைகளின்  விரைந்த நடையால் எழுந்த புழுதிப் படலம் வானை மறைத்தது. குதிரைக்கூட்டம் மதுரை மாநகரை அடைந்தது. வாணிகத் தலைவனாக வந்த சிவபெருமான், பாண்டியன் முன்னிலையில் குதிரைகளனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினான். குதிரைகளைப் பல வகை நடைகளில் நடத்திக் காட்டியும் ஆடல்கள் புரியச் செய்தும், பாண்டியனை மகிழ்வுறுத்தினான். பெருமகிழ்ச்சியடைந்த பாண்டியன், குதிரைத் தலைவனுக்கு, ஒரு பட்டாடையைப் பரிசாகக் கொடுத்தான். குதிரைத் தலைவனாக வந்த பெருமான், அப்பரிசைப் புன்னகையோடு தன் செண்டினால் வாங்க, தான் அளித்த பரிசை மரியாதைக் குறைவாகக் குதிரைத் தலைவன் பெறுவதைக் கண்ட மன்னன் வெகுண்டு எழுந்தான்.

  அருகிலிருந்த வாதவூரார், `செண்டினால் பரிசு பெறுதல், அவர்கள் நாட்டு வழக்கு` என்று கூறி, மன்னன் சினத்தை மாற்றினார். பின்னர், குதிரை இலக்கணமறிந்த புலவர்கள், குதிரைகளையெல்லாம்; இவை நல்ல நிறமும்; நடையும், சுழிகளும் பெற்றுள்ளன என்று பாராட்டினர். அரசனும் தானளித்த பொருளைவிடப் பல மடங்கு அதிகமான குதிரைகளைப் பெற்றதாக மகிழ்ந்து அவற்றைப் பந்தியில் சேர்க்குமாறு ஆணையிட்டான்.

  வணிகர் தலைவன் குதிரைகள் அனைத்தையும் கயிறு மாற்றிக் கொடுக்கும் படி,  தன்னுடன் வந்தவர்களிடம் கூறி, அரசனிடம் விடைபெற்றுச் சென்றான்.

  அன்று இரவு நடுநிசியில் குதிரைகளெல்லாம் நரிகளாக மாறின. பந்தியில் இருந்த பழைய குதிரைகளையும் கொன்று தின்றது அந்த நரிக்கூட்டம்.

  ஊர் மக்கள் அஞ்சும்படி ஊளையிட்டு, மூலைமுடுக்குகளில் எல்லாம் ஓடி மறைந்தன. காலையில் குதிரைச் சேவகர்கள் உள்ளம் பதறி  உடல் நடுங்கியபடி அரசனிடம் வந்து முறையிட்டனர். இச்செய்தியைக் கேட்ட மன்னன் கோபம் அதிகம் கொண்டு அமைச்சர்களை அழைத்தான், திருவாதவூரார் செய்த வஞ்சனையைக் கூறினான்.

  படைத்தலைவர்களை அழைத்து, வாதவூரரைச் சுடுவெயிலில் நிறுத்தி தண்டனை அளித்து அவரிடத்தில் கொடுத்த பொருள்களையெல்லாம், திரும்பப் பெற்றுக்கொண்டு வருமாறு உத்தரவிட்டான். படைவீரர்கள் இவரை அழைத்துச் சென்று, சுடுவெயிலில் நிறுத்தித் தலையிலே கல்லேற்றிக் கொடுமைப்படுத்தினர்.

  வாதவூரார், இறைவன் திருவருளை நினைந்து, எனக்கு இத்தகைய துன்பங்கள் வருதல் முறையாகுமோ? என்று கூறி வருந்தி நின்றார்.

  வாதவூரருடைய துன்பம் துடைக்க எண்ணிய பெருமான், வைகையாற்றில் வெள்ளம் பெருகுமாறு செய்தருளினார். வைகையில் தோன்றிய பெருவெள்ளம், மதுரை மாநகர் முழுவதும் விரைந்து பரவத் தொடங்கியது. பெரு வெள்ளத்தைக் கண்ட ஊர் மக்கள், ஊழிக்காலமே வந்துவிட்டதென்று அஞ்சி, மன்னனிடம் சென்று முறையிட்டனர்.

  பாண்டியனும், ஆற்று வெள்ளத்தைத் தணிக்க, பொன், பட்டு முதலிய அணிகலன்களை ஆற்றில் விட்டு, வெள்ளம் தணியுமாறு ஆற்றைப் பணிந்தனன். வெள்ளம் மேலும் பெருகியதேயல்லாமல், சிறிதும் குறையாதது கண்டு, அமைச்சர்களோடு கூடி ஆலோசித்தான். அனைவரும் சிவனடியாராகிய வாதவூரரைத் துன்புறுத்தியதன் விளைவே இது என்றனர். அவரை விடுவித்து மதுரை மாநகரை இவ்வெள்ள நீர் அழிக்காதவாறு காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள்.

  வாதவூரரும் சிவனின்  திருவருளை எண்ணி உள்ளம் நிறைந்தார். வெள்ளத்தின் வேகம் ஒரு சிறிது குறைந்தது. இருப்பினும் முற்றும் வெள்ளம் குறையவில்லை. அதனை சரி செய்ய நினைத்த  பாண்டியன், மதுரை மக்களையெல்லாரையும் அழைத்து  ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பங்கு என்று அளந்து கொடுத்து ஆற்றின் கரையை அடைக்கும்படி ஆணையிட்டான்.

  அரசன் ஆணையை காவலர்கள் ஊர் முழுவதும் முரசறைந்து அறிவித்தனர்.

  அந்நகரில் பிட்டு விற்று வாழ்க்கை நடத்தும் வந்தி என்னும் மூதாட்டி தனக்கு அளவு செய்துவிட்ட ஆற்றின் பங்கை அடைக்க ஆள் கிடைக்காமல் வருந்தினாள். நாள்தோறும் ஆண்டவனிடம் அன்பு செலுத்தி வந்த அவ்வந்தியின் துன்பத்தைத் தவிர்க்க இறைவன் அவளிடம் கூலி ஆள் போலத் தோன்றினான், `யாரேனும் கூலி கொடுத்து என் வேலை கொள்வார் உண்டோ?` என்று கூவிய வண்ணம் தன்னை வந்தடைந்த அப்பணியாளனைக் கண்ட வந்தி மகிழ்ந்தாள். நீ எனக்குக் கூலியாளாக வர வேண்டும்  என்றாள்.

  அவ்வாறு வந்து, என் ஆற்றின் பங்கை, அடைத்துத் தருவாயானால், நான் விற்கும் பிட்டைக் கூலியாகத் தருகிறேன்` என்று கூறினாள். அதற்கு இசைந்த அந்தக் கூலியாள், அவள் கொடுத்த பிட்டை வாங்கி உண்டு, தாயே! என் பசி தீர்ந்தது, இனி நீ ஏவிய பணியை நான் செய்து முடிப்பேன், என்று அவன் பங்கை அறிந்து, அதனை அடைப்பதற்கு முற்பட்டான். வேலையைத் தொடங்கிய, அவ் வந்தியின் ஆளாகிய சிவபெருமான், மண்ணை வெட்டித் தன் திருமுடியில் எடுத்துச் சென்று கரையில் கொட்டிவிட்டுக், களைப்படைந்தவன் போல ஓய்வு எடுத்துக்கொள்வதும், வந்தி அளித்த பிட்டை உண்பதும், ஆடுவதும் பாடுவதும் செய்து பொழுதைப்  போக்கினான். வேலை செய்து களைத்தவன் போலக், கூடையைத் தலையணையாக வைத்து, உறங்கவும் செய்தான். ஆற்றின் கரை அடைபட்டதா என்பதைப் பார்வையிட வந்த மன்னனிடம் காவலர், ஊரில் உள்ளோர் ஒவ்வொருவரும் தத்தம் பங்கை அடைத்து முடித்தனர். பிட்டு விற்கும் வந்தியென்னும், கிழவியின் பங்கு மட்டும் அடைபடாமல் கிடக்கிறது.

  வந்திக்கு ஆளாய் வந்த ஒருவன் சரிவரத் தன் பணியைச் செய்யாமல் பொழுதைக் கழிக்கிறான். அதனால் அப்பகுதி நூற்றைக் கெடுத்தது குறுணி என்பது போல, ஒருத்தி பங்கு ஊரார் பங்கையும் கரைக்கிறது என்று கூறினர்.

  உடனே அப்பகுதியைப் பார்வையிட வந்த பாண்டியன், அந்தக் கூலியாளை அழைத்து வரச் செய்தான். தன்னுடைய கைப்பிரம்பால் முதுகில் அடித்தான். அடித்த அளவில் கூலியாளாக வந்த பெருமான் ஒருகூடை மண்ணை உடைப்பிற்கொட்டி மறைந்தான், பாண்டியன் அடித்த அப்பிரம்படி; அரசன், அரசி, அமைச்சர், காவலாளர்கள் முதலிய எல்லோர் மேலும் பட்டது. அப்போது வாதவூரார்  இறைவன் தன் அடியவர் பொருட்டுக் கூலியாளாக வந்த திருவருளை எண்ணி வியந்தார்.

  பாண்டிய மன்னன் வாதவூரார் பெருமையை நன்கறிந்து அவரை வணங்கி நின்றார், “நற்றவப் பெரியவரே  எனக்கு அமைச்சராய் இருந்து எம் குலதெய்வத்தை என் கண்ணில் காட்டி, குதிரைச் சேவகனாகவும், கூலியாளாகவும் வரச்செய்து, என் பிறவி மாசை ஒழித்த பெரியவரே, என்னை மன்னித்தருள வேண்டும். தங்கள் பெருமையை, இறைவன் எனக்கு நன்குணர்த்தினான். என் அரசுரிமையை இன்று முதல் தாங்கள் ஏற்றருளல் வேண்டும்`, என்று வேண்டினான்.

  வாதவூரார் பாண்டியனிடம், “இறைவனுடைய திருவடித் தொண்டு செய்ய, என்னை உரிமையாக்குவதே இவ்வுலக ஆட்சியை எனக்குத் தருவதற்கு ஒப்பாகும்” என்றார். மன்னனும், அவர் விரும்பியவாறு அவரைச் செல்லவிடுத்துத் திருவருள் உணர்வோடு தம் அரண்மனைக்குச் சென்றான்.

  அமைச்சர் பதவியைத் துறந்து தவ வேடம் தாங்கிய மாணிக்கவாசகர் இறைவன் திருவிளையாடல்களை எண்ணி மகிழ்ந்தவராய் திருப் பெருந்துறையை அடைந்தார்.

  மீண்டும் தன் குருநாதரை அடைந்த மாணிக்கவாசகர் அடியவர் கூட்டத்தோடு கலந்து மகிழ்ந்திருந்தார். ஞானதேசிகனாய் வந்த  சிவ பெருமான் தாம் கயிலைக்குச் செல்ல வேண்டியதை சீடர்களுக்கு உணர்த்தி அவர்களுக்கு அருளாசி வழங்கி சென்றார்.  

  அடியவர்கள் தம் குருநாதரைப் பிரிய மனம் இல்லாமல், பெரிதும் வருந்தினர். அதனைக் கண்ட குருநாதர் “இக் குருந்த மரத்தின் நிழலில் ஒரு தெய்வப் பீடம் அமைத்து அதில் நம்முடைய திருவடிகளை எழுப்பி வழிபாடு செய்து வருவீர்களானால் ஒருநாள் இக்கோயில் திருக்குளத்தில் தீப் பிழம்பு ஒன்று தோன்றும். அதில் அனைவரும் மூழ்கி எம்மை அடையலாம்” என்று திருவாய் மலர்ந்தார்.  தம்மைப் பின்தொடர்ந்து வந்த அடியார்களை `நிற்க` எனக் கட்டளையிட்டுக் கயிலை சென்றார். வாதவூரடிகள் மட்டும், அவரைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். அவரைக்கண்ட குருநாதர்  `நீ எம்மைப் பின்தொடர்ந்து வருதல் வேண்டாம். உத்தரகோசமங்கை என்னும் திருப்பதிக்குச் சென்று, அங்கு எண்வகைச் சித்திகளையும் பெற்று, திருக்கழுக்குன்றம் முதலான தலங்களைத் தரிசித்துப் பின்னர், தில்லை அடைவாயாக` என்று கூறிச்சென்றார்.

  மணிவாசகரும் அவ்வாறே திருப்பெருந்துறைக் குருந்த மரத்தின் கீழ், ஒரு தெய்வீகப் பீடம் அமைத்து, அதில் குருநாதரின் திருவடிகளை எழுந்தருளச் செய்து, அடியார்களோடு தாமும் வழிபட்டு வந்தார்.

  தலயாத்திரை

   மாணிக்கவாசகர், திருவருளில் திளைத்து வாழும் நாள்களில், நமச்சிவாய வாழ்க என்று தொடங்கும் சிவபுராணம் முதல், அற்புதப் பத்து, அதிசயப்பத்து,  குழைத்த பத்து, சென்னிப் பத்து, ஆசைப்பத்து, வாழாப்பத்து, அடைக்கலப் பத்து,  செத்திலாப் பத்து, புணர்ச்சிப் பத்து, அருட்பத்து, திருவார்த்தை, எண்ணப் பதிகம்,  திருவெண்பா, திருப்பள்ளியெழுச்சி, திருவேசறவு, ஆனந்த மாலை, உயிருண்ணிப்பத்து, பிரார்த்தனைப் பத்து, திருப்பாண்டிப் பதிகம் முதலிய பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளி பாடினார்.

  அதிகாலையில் எழுக என்று பாடுவது ‘பள்ளி எழுச்சி’ ஆகும். மன்னர்களை எழுப்ப, பள்ளியெழுச்சி பாடும் நிலை அந்நாளில் இருந்தது. மாணிக்கவாசகர் சிவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதாகப் பத்துப் பாடல்களைத்  “திருப்பள்ளி எழுச்சி” பாடியுள்ளார். இதுவும் திருவாசகத்தில் ஒரு பகுதியே.

  அடியார் கூட்டத்துடன், பலநாள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் திருக்குளத்தில் தீப் பிழம்பு தோன்றிற்று. அடியார்கள் அனைவரும், ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு அதில் மூழ்கினர். பெருமான், அம்மையப்பராய் இடப வாகனத்தில் எழுந்தருளி அருட்காட்சி வழங்கியருளினார்.

  அடியார்கள் அனைவரும் அதில் மூழ்கிச் சிவகணங்களாயினர். மணிவாசகர் இவ்வேளையில் கொன்றை மர நிழலில், சிவயோகத்தில் அமர்ந்திருந்தார். இந்நிகழ்ச்சியை, யோகக் காட்சியில் அறிந்த அடிகள், அடியார்களின் பிரிவாற்றாது வருந்தி, குருந்த மரத்தினடியில் இருந்த, குருநாதரின் திருவடிப் பீடத்தை, பற்றிக் கொண்டு அழுதார். திருச்சதகம் என்னும் பாமாலையால், இறைவன் திருவருளைத் தோத்திரித்தார்.

  பின்னர், குருநாதன் தனக்குப் பணித்த அருளாணையின் வண்ணம், திருவுத்தரகோசமங்கைக்குச் சென்று, அங்கும் குருநாதரைக் காணாது வருந்தி, நீத்தல் விண்ணப்பம் என்னும் திருப்பதிகத்தால் தோத்திரம் செய்தார். அப்போது, இறைவன் திருப்பெருந்துறையில் காட்டிய குருந்தமர் கோலத்தைக் காட்டியருளினார். அத்திருக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அடிகள், அங்கு பல சித்திகளும் கைவரப் பெற்றார்.

  பின்னர், பல திருப்பதிகளையும் வணங்கிக் கொண்டு பாண்டிய நாட்டைக் கடந்து சோழவள நாட்டைச் சேர்ந்த திருவிடைமருதூரை வந்தடைந்தார். இடைமருதில் ஆனந்தத் தேனாக எழுந்தருளியுள்ள இறைவன் அருள் நலத்தை நுகர்ந்து திருவாரூரை அடைந்தார். அங்கு  புற்றிடங் கொண்ட பெருமானை வணங்கி திருப்புலம்பல் என்னும் பதிகத்தை அருளிச் செய்தார்.

  அதன் பின்னர், சீர்காழியை அடைந்து தோணியப்பரைத் தரிசித்து, பிடித்தபத்து என்னும் பதிகத்தை அருளிச்செய்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, சோழநாடு கடந்து நடுநாட்டை அடைந்து, திருமுதுகுன்றம், திரு வெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, திருவண்ணாமலையை அடைந்தார். அங்கும் இறைவன் குருந்தமர் திருக்கோலம் காட்டியருளினான். அக்காட்சியைக் கண்டு வணங்கிய அடிகள், அத்தலத்தில் பலநாள்கள் தங்கியிருந்தார்.

  மாணிக்கவாசகர் தல யாத்திரை செல்லும் இடங்களில் மக்கள் வாழ்வியலோடு வழக்கத்தில் இருந்த சில நாட்டுப்புறப்பாடல் வடிவங்களுக்கு ஏற்ப தம் பக்தி பாடல்களுக்கு  வடிவம் கொடுத்துள்ளார். அதனால் தான் எழுதப் படிக்கத் தெரியாத சிற்றூர் மக்களும் அவர் பாடல்களைக் காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, வெகு எளிதாகப் பாடுவதைக் இன்று வரை காண முடியும்.

  அண்ணாமலையில் தங்கியிருந்தபோது, மார்கழி மாதம் வந்தது. திருவாதிரைக்கு முன் பத்து நாள்களில், கன்னிப் பெண்கள் விடியற்காலம் எழுந்து, வீடுகள்தோறும் சென்று, ஒருவரையொருவர் துயிலெழுப்பிக் கொண்டு, நீராடி வழிபாடு செய்வதைக் கண்டார். அவர்கள் வாய் மொழியாகவே வைத்து, திருவெம்பாவையை மாணிக்கவாசகர் பாடினார்.

  ‘திருவெம்பாவை’. இது திருவாசகத்தில் ஒரு பகுதி. இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் சைவர்களால் பாடப்படுகிறது. 20 பாடல்களைக் கொண்டது. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பி, கூடி, பொய்கைக்குச் சென்று நீராடிப் பாவை வைத்து வழிபடுவதைச் சொல்லுகிறது.

  ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
  சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
  மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
  மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
  வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
  போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
  ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
  ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்..
            (திருவெம்பாவை’. முதல் பாடல்)

  என்று இறைவழிபாட்டுக்கு ஆன்மாக்களைத் தட்டி எழுப்பும்விதமாக இருக்கும் இவரது பாடல்கள். திருவண்ணாமலை கிரிவலம் வரும்போது அடி அண்ணாமலை செல்லும் முன்பு மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய சன்னதி சாலையின் முன்பே இருக்கும். போனால் ஒரு நிமிடம் அமைதியாக உணருங்கள்.

  அதேபோல திருவண்ணாமலை பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு, அவர்கள் பாடுவதாக வைத்து, திருவம்மானையையும் அருளினார்.

  இளம்பெண்கள் உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு அம்மானை. அப்போது அவர்கள் பாடுவர். அப்பாடல் அமைப்பில் மாணிக்கவாசகர் பாடியது திருவம்மானை ஆகும்.

  அண்ணாமலைக்கு அடுத்து காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவ்வூர் இறைவனைத் தரிசித்து திருக்கழுக்குன்றம் அடைந்தார். திருக்கழுக்குன்றப் பதிகம் பாடினார். அங்கே பெருமான் பெருந்துறையில், அவரை ஆட்கொண்ட குருநாதர் திருக்கோலத்தோடு காட்சி வழங்கினான். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு, திருத்தில்லையின் எல்லையை அடைந்து, அத் திருத்தலத்தைத் தரிசித்தார். தில்லை, சிவ லோகம் போலக் காட்சியளித்தது.
   
  அந்நகரையடைந்த மணிவாசகர் திருவீதிகளைக் கடந்து வடக்குத் திருவாயில் வழியே திருக் கோயிலுக்குள் சென்றார். சிவகங்கையில் நீராடி வலமாகச் சிற்சபையில் எழுந்தருளியிருக்கும், ஆனந்த நடராசப் பெருமானை உளம் நெகிழ்ந்து வணங்கினார். குரு நாதனாக எழுந்தருளிக் காட்சி கொடுத்த இறைவனை, தில்லைச் சிற்றம்பலத்திலே கண்டு தரிசித்து பேரானந்தம் கொண்டார்.  ஆனந்தக் கண்ணீர் பெருக, கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர், தில்லையின் கீழ்த்திசையில், ஒரு தவச்சாலை அமைத்து, பலநாள்கள் தங்கியிருந்து, தினமும் அம்பலவாணனின், ஆனந்த நடனத்தைத் தரிசித்துவந்தார். அங்கிருந்து திருப்புலீச்சுரம், திருநாகேச்சுரம் முதலான தலங்களுக்குச் சென்று தரிசித்து, மீண்டும் தில்லை வந்தடைந்தார்.

  தில்லையில் அடிகள் அருளிச் செய்தவை, குலாப்பத்து, கோயில் திருப்பதிகம், கோயில் மூத்த திருப் பதிகம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், திருப்பொற்சுண்ணம், திருத்தெள்ளேணம், திருவுந்தியார், திருத்தோள் நோக்கம், திருப்பூவல்லி, திருப்பொன்னூசல், அன்னைப் பத்து, திருக்கோத்தும்பி, குயில் பத்து, திருத்தசாங்கம்,  அச்சப்பத்து என்பனவாம்.

  கீர்த்தித் திரு அகவல்

  கீர்த்தி என்பது புகழ். சிவனது புகழைப் பாடும் நூல் கீர்த்தித் திரு அகவல். அடியார் பார்க்கும் வகையிலும், நினைக்கும் வகையிலும் எளிமையாக அருள் செய்தவன் சிவன். தில்லையில் ஆடுபவன் சிவன் வேட்டுவன் வடிவம் தாங்கியது, வலை வீசும் மீனவனாக  வந்து கெளிற்று மீனைக் கொன்றது, என்று இறைவனின் திருவிளையாடல்களைப் போற்றுகிறார் மாணிக்கவாசகர். திருவாசகத்தின் ஒரு பகுதியாக கீர்த்தித் திரு அகவல் விளங்குகின்றது.

  திருவண்டப் பகுதி

  மாணிக்கவாசகர் பாடியது, ‘திருவண்டப் பகுதி’ ஆகும். சிவன் எல்லாம் வல்லவன். பெரியதில் பெரியவன், சிறியதில் சிறியவன் என்று அவனது வடிவத்தைப் போற்றுவது ‘திருவண்டப் பகுதி’ ஆகும். சிவனின் திறத்தை வியந்து பாடுகிறது.

  படைப்பாற் படைக்கும் பழையோன், படைத்தவை
  காப்போற் காக்கும் கடவுள், காப்பவை
  கரப்போன் கரப்பவை கருதாக்
  கருத்துடைக் கடவுள்

  (திருவண்டப் பகுதி : 13-16)

  சூரியனுக்கு ஒளி தந்தவன். சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன். தீயில் வெப்பத்தை வைத்தவன். காற்றில் இயக்கத்தை வைத்தவன். நீரில் சுவையைத் தந்தவன். மண்ணில் திட்பத்தை வைத்தவன் என்று சிவனை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

  போற்றித் திரு அகவல்

  ‘போற்றி’ என்றால் வணக்கம் என்று பொருள். உலகில் உயிர்கள் உடம்புடன் பொருந்தித் தோன்றும் உலக உற்பத்தியைக் கூறுவது, போற்றித் திருவகவல் ஆகும்.

  ஐயா போற்றி அணுவே போற்றி
  சைவா போற்றி தலைவா போற்றி
  குறியே போற்றி குணமே போற்றி
  நெறியே போற்றி நினைவே போற்றி
  வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
  ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி

  (அடிகள் :112-117)

  திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பொற்சுண்ணம், திருவம்மானை, திருப்பூவல்லி, திருவுந்தியார் முதலியன பலர் கூடிப் பாடும் கூட்டுப் பாடலாக அமைந்துள்ளன.

  நெல் குத்தும்போதும், வாசனைப்பொடிகள்  இடிக்கும்போதும் பெண்கள் கை சோர்வு தெரியாமலிருக்கப் பாடும் பாடல் ‘வள்ளைப் பாட்டு’ என்பது.   ‘திருப்பொற்சுண்ணமாக’ மாணிக்கவாசகர் அமைத்துள்ளார். அந்தப் பாடல்களின் அமைப்பில் மாணிக்கவாசகர் இயற்றியது,  திருப்பொற்சுண்ணம் ஆகும்.

  பெண்கள் பூப்பறிக்கும்போது பாடும் அமைப்பில் அவர் எழுதியது,  திருப்பூவல்லி.  பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது பாடும் பாடல் வடிவில் அவர் அமைத்த பாக்கள், திருப்பொன்னூஞ்சல் ஆகும்

  விழாக் காலங்களில் மகளிர் ஒன்றாகக் கூடி வட்டமாக நின்று கைகொட்டி ஆடும்போது பாடும் பாடல் வடிவம் ‘திருத்தெள்ளேணம்’ ஆகும். இவ்வாறாக பெண்களது பாடல்கள் முறைமையைப் பின்பற்றி  மாணிக்கவாசகர் பாக்களை அமைத்துள்ளமை சிறப்பானது, அனைவருக்கும் பாட எளிதானது.

  மாணிக்கவாசகரது ‘திருச்சாழல்’ பாடல்கள், ‘திருப்பிச் சொல்லும் முறையில்’ அமைந்துள்ளன.

  தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் காணேடீ
  தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் ஆயிடினும்  (3)

  என்றும்

  தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!
  தொக்கன வந்தவர் தமைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங்கு                                     (5)

  என்று ‘திருச்சாழல்’ பகுதி முழுவதுமே திருப்பிச் சொல்லும் முறையில் உள்ளது. ஒருவர் பாட ஏனையோர் திருப்பிச் சொல்லும் முறை அனைவரிடமும் பாடல்களைக் கொண்டு சேர்க்க உதவியது எனலாம்.

  இன்றைய நிறைய  நவீன பாடல்களுக்குச் சிந்தனை வளத்தைத் தருவது திருவாசகத்தில் உள்ள பாடல்கள் ஆகும்.

  புத்தரொடு சமய வாதம்

  மணிவாசகர் தில்லையில் வாழ்ந்துவரும் நாள்களில் சிவனடியார் ஒருவர் சிதம்பரத்திலிருந்து ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தார்.

  அவ்வடியார் செம்பொன்னம்பலம் திருவம்பலம் திருச்சிற்றம்பலம் என்ற திருநாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டிருப்பவர். அவர் ஈழம் சென்றிருந்த காலத்தில் ஈழநாட்டில் புத்த சமயம் மேலோங்கியிருந்தது. இவ்வடியாரின் இயல்பைக் கண்ட சிலர் அரசனிடம் சென்று அவரது செய்கைகளை உணர்த்தினர். அரசன் அச் சிவனடியாரைச் சபைக்கு அழைத்து வருமாறு செய்தான். அரசவைக்கு வந்த அடியவர் செம்பொன்னம்பலம், திருவம்பலம், என்று சொல்லிக் கொண்டே தன் இருக்கையிலமர்ந்தார்.

  அரசன் வியந்து இதன் பொருள் யாது? என்று அவரைக் கேட்டான். அவ்வடியார், அதன் சிறப்புகளை எடுத்துரைத்து, `தீயவரும் உள்ளன்போடு இப்பெயரை ஒருமுறை கூறினால், 21,600 தடவை, திருவைந் தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்` என்று கூறித் தில்லைப் பெருமானின், சிறப்பை எடுத்துரைத்தனர். அங்கிருந்த புத்தமத ஆசாரியன் சிவனடியார் கூறுவதைக் கேட்டுச் சினந்தார். `திரிபிடகம் அருளிய எங்கள் புத்தனைத் தவிர வேறு தெய்வம் உண்டோ? இன்றே நான் தில்லைக்குச் சென்று சைவத்தை வென்று புத்தனே கடவுள் என்று நிலைநாட்டி வருவேன்` என்று சூளுரைத்து கிளம்பினார். ஈழத்தரசனும் தன் ஊமைப் பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு புத்தாசாரியனுடன் தில்லைக்குப் புறப்பட்டான். தில்லையையடைந்த புத்த குரு, அரசன் முதலானோர் திருக்கோயிலையடைந்தனர். அக்கோயில் மண்டபம் ஒன்றில் அமர்ந்தனர். கோயில் காப்பாளர் அவர்களை அணுகி புறச் சமயத்தார் இங்கு தங்குதல் கூடாது என்று கூறினர். அதனைக் கேட்ட புத்தகுரு `யாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை இங்கு நிலைநாட்ட வந்துள்ளோம் என்று வாதிற்கு அறைகூவினான்.

  அச்சூளுரை தில்லைவாழ் அந்தணர்களுக்கு எட்டியது. அவர்கள் சோழ மன்னனுக்கு இந்நிகழ்ச்சியை உடன் தெரிவித்தனர். அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் புத்தமத குருவை எவ்வாறு வெல்வது என்ற கவலையுடன் தில்லைச் சிற்றம்பலவனை எண்ணி வணங்கித் துயில்கொண்டனர். நடராசப் பெருமான்  அவர்கள் கனவில் எழுந்தருளி `தில்லையின் கீழ்பால் சிவயோகத்தில் அமர்ந்து தவமியற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை அழைத்துவந்து இந்த புத்த குருவோடு வாதிடச் செய்க. அவன் அவர்களை வெல்வான்” என்று கூறி மறைந்தார்.

  மறுநாள் தாம் கண்ட கனவை ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு இறைவன் திருவருளை வியந்து மணிவாசகர் எழுந்தருளியுள்ள தவச்சாலையை அடைந்தனர். மணிவாசகரிடம் “அடிகளே! நம் சைவ சமயத்தை அழித்து புத்த மதத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன்  ஈழநாட்டு மன்னனும், புத்த மதகுருவும் வந்துள்ளனர். தாங்கள் வந்து அவர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைநிறுத்தல் வேண்டும்`” என்று அழைத்தார்கள்.

  வாதவூரடிகளும் தில்லை மூவாயிரவருடன் சென்று ஆனந்தக் கூத்தனை வணங்கி அவனருள் பெற்று புத்த மத குரு இருந்த மண்டபத்தை அடைந்தார். தீயவர்களைக் காண்பது தீதென்றெண்ணி அவர்களுக்கெதிரே ஒரு திரையிடச் செய்து தான் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும் மறையோரும் புலவர்களும்  அந்த அவையில் கூடியிருந்தனர்.

  சோழன் வாதவூரரைப் பணிந்து, “புத்தர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைபெறச் செய்வது தங்கள் கடமை, தோல்வியுற்ற புத்தர்களை முறைசெய்வது என் கடமை” என்று வேண்டிக் கொண்டான்.

  பின்னர் மணிவாசகர், புத்த குருவை நோக்கி வந்த காரியம் என்ன?` என்று வாதத்தைத் தொடங்கினார்.

  வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மணிவாசகர் எத்தனை உண்மைகளை எடுத்துரைத்தாலும் அவை புத்தகுருவின் செவிகளில் ஏறவில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றி, சிவ நிந்தை செய்யத் தொடங்கினான். அதனைக் கண்ட மணிவாசகர் கலைமகளை வேண்டி “சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ? இவர்கள் நாவைவிட்டு அகல்வாயாக. இது இறைவன் ஆணை” என்று கூறினார். அவ்வளவில் புத்த குருவும் அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர்.

  இதனைக் கண்டு வியப்புற்ற ஈழமன்னன், வாதவூரரை வணங்கி, “அடிகளே என் பெண், பிறவி முதல் ஊமையாக இருக்கின்றாள். அவளைப் பேசும்படி செய்தால் நான் தங்களுக்கு அடிமையாவேன்” என்று கூறினான். வாதவூராரும் அதற்கிசைந்தார். அப்பெண்ணை அவைக்கு வரவழைத்து அமர்த்தி, பெண்ணே! இப்புத்தன் கேட்ட கேள்விகளுக்கு விடை கூறு என்று கூறினார். அப்பெண்ணும் அனைவரும் வியந்து மகிழும்படி, புத்த குருவின் வினாக்களை மணிவாசகர் தாமே அப்பெண்ணிடம் கேட்க அப்பெண் அதற்கு விடையளித்தாள்.

  அந்த வினா விடைகள் தாம், திருச்சாழல் என்ற திருப்பதிகமாக அமைந்தது (தோழியர் இருவர் ஒருவரை ஒருவர் வினா-விடை கூறும் விளையாட்டுப் பாடல் முறை  ‘திருச்சாழல்’ ஆகும்).

  ஈழ மன்னனும் அதனைக் கண்டு மகிழ்ந்தார். மணிவாசகர் திருவடிகளிலே விழுந்து வணங்கி சைவம் சார்ந்தான். அவையோர் அனைவரும் மணிவாசகப் பெருமானைப் போற்றித் துதித்தார்கள். ஈழ மன்னன் திருநீறும் கண்டிகையும் பூண்டு அடிகளைப் பணிந்து, புத்தகுருவும் மற்றவர்களும் மீண்டும் பேசும் திறம் பெற அருள் செய்ய வேண்டுமென்று வேண்டினான். மணிவாசகர் அவர்கள் மீது திருவருட் பார்வையைச் செலுத்தினார்.

  அவ்வளவில் அனைவரும் ஊமை நீங்கிப் பேசும் திறம் பெற்றனர். மாணிக்கவாசகரை வணங்கித் தாங்கள் செய்த குற்றத்தை, மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். புத்தகுருவும் அவரைச் சூழ வந்த அனைவரும் சைவர்களாக மாறினர். மாணிக்கவாசகரும் திருக்கோயிலுக்குட் சென்று சபாநாயகரை வணங்கித் தம் தவச் சாலைக்கு எழுந்தருளினார். இவ்வாறு தவச்சாலையில் தங்கியிருந்த காலத்தில் மணிவாசகர் திருப்படையாட்சி, திருப்படையெழுச்சி, அச்சோப்பத்து, யாத்திரைப்பத்து என்ற பதிகங்களைப் பாடியருளினார்.

  இறைவன் திருவாசகம் கேட்டு எழுதியது

  சிதம்பரத்தில் இப்படியாக  மணிவாசகர் வாழ்ந்து வரும் நாள்களில், ஒரு நாள் அந்தணர் ஒருவர் அவரிடம் வந்து, தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், சிவபிரான் மணிவாசகருக்காகச் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது என்றும் வியந்து கூறி, மணிவாசகர் பல தருணங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படி கேட்டுக் கொண்டார்.

  மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தி தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார்.

  அந்தணரும் தம் திருக்கரத்தால் அவற்றை எழுதி முடித்தார். “பாவை பாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக” என்று கேட்டுக்கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங்கிய மணிவாசகர் இறைவனது திருவடிப் பேற்றை உட்கருத்தாகக் கொண்டு இனிய கோவையார் என்ற நூலை அருளிச் செய்தார்.

  அதை கேட்ட அந்தணர் அந்த நூலையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அதனைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருகித் திருவருளை எண்ணி மகிழ்ந்தார். 

  திருச்சிற்றம்பலக் கோவை சிவனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட தமிழ் மரபுப் பாடல்.  தில்லையில் சிற்றம்பலத்தில் உறையும் சிவன் தலைவன் ஆதலால் இந்நூல், ‘திருச்சிற்றம்பலக் கோவை’ எனப்படுகிறது. இறைவன் தலைவன். மனித ஆன்மா தலைவி. இத்தலைவன் தலைவியின் அன்புகலந்த காதல் நுவல்பொருள் ஆக அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. பாடல்களில் சொற்சுவை, பொருள் சுவை மிகுந்துள்ளது. ‘தேனூறு செஞ்சொல் திருக்கோவை நானூறு’ என்பார்கள். இப்பாடல்கள் கட்டளைக் கலித்துறைப் பாவகையில் அமைந்துள்ளன.

  மீண்டாரென உவந்தேன் கண்டும்மை இம்மேதகவே
  பூண்டார் இருவர்முன் போயினரே புலியூரெனை நின்று
  ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேனயலே
  தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே

  (திருக்கோவையார் - 244)

  திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து` எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தின் வாயிற்படியிலே வைத்தருளினார்.

  காலையில் இறைவனைப் பூசை செய்ய வந்த அர்ச்சகர் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக் கண்டு அதனையெடுத்து ஆண்டவனால் இது தரப்பட்டதாகும் என்ற அன்புணர்வோடு பிரித்துப் பார்த்துப் படித்தார். அவ்வேடுகளின் முடிவில் திருவாதவூரார் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக் கண்டு உடல் சிலிர்த்தனர். இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய நூல்களில் இது தலையானது என்று புகழ்ந்து இந்நூலைப் பாடிய வாதவூரரைச் கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார். வாதவூரார் அதனைக் கேட்டு திருவருளை எண்ணி வணங்கினார்.

  முடிவில் அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளை தாங்களே விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு மணிவாசகர் இதன் பொருளை தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந்தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவான்” என்று சுட்டிக் காட்டி அச்சபையில் எல்லோரும் காண மறைந்தருளினார்.

  ஆனி மகத்தன்று இறைவனோடு இரண்டற கலந்தார்.  இவ்வற்புத நிகழ்ச்சியைக் கண்ட அனைவரும் வியந்து மகிழ்ந்து தொழுது போற்றினர்.

  நடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலேயே இரண்டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து, அவரை ஆட்கொண்டருளினார்.

  32 ஆண்டுகளே வாழ்ந்த பெருமான் ஞானநெறி மூலம் பக்தியும், இறைமார்க்கத்தையும் காட்டியருளினார். இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு.

  சுந்தரமூர்த்தி நாயனாரது திருத்தொண்டத் தொகை நூலில் மாணிக்கவாசகர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் மாணிக்கவாசகரின் பாடல்களில் வரகுண பாண்டியனின் பெயர் இடம் பெறுகிறது. எனவே மாணிக்கவாசகர் வரகுணபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர் எனலாம். இவற்றால் இவரது காலத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்று கூறுகின்றனர்.

  ஆனால், "நரியைக் குதிரை செய்" எனும், திருநாவுக்கரசர் பாடல் மூலம் மாணிக்கவாசகர், அப்பருக்கும் முந்திய காலத்தார் எனவும்  கருதப்படுகிறது.

  மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை நிலைநாட்டுவதற்கு, பல்வேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும், கடைச் சங்க காலத்திற்குப் பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில், ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம், என முடிவு செய்கின்றது. இக்கால ஆராய்ச்சிகளை, தொகுத்து ஆராய்ந்து மணிவாசகர் காலம், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என முடிவு செய்து, தருமை ஆதீன திருவாசக நூல் வெளியீட்டு விழாவில் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர் குறிப்பிட்டுள்ளார்கள்.

  மாணிக்கவாசகரின்  காலத்தைப் போலவே அவர் குலத்தையும் பலர் அறியவில்லை.  மாணிக்கவாசகர் “மங்கலன்” என்னும் பெயர் பெற்ற மருத்துவக் குலத்தை சார்ந்தவர் ஆவார். ‘மங்கல’ என்பது திருவள்ளுவரின் வாக்குப்படி தூய தமிழ்ச்சொல் மட்டுமல்ல, வரலாற்றுச் சான்றுகளின்படி அச்சொல் மருத்துவக் குலத்தினரையும் குறிப்பதாகும்.

  தங்கம் விசுவநாதன் என்ற  நந்தர் எழுதிய   “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாறு” என்ற நூலில் மருத்துவ சமுதாயத்தின் வரலாறு பற்றியும் மாணிக்கவாசகர் மருத்துவ குலத்தைச் சார்ந்தவர் என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் அவர் எழுதிய நூலின் வழி நின்று விளக்குகிறார்.

  சேக்கிழாரின் பெரியபுராண – சிறுத்தொண்டர் புராணத்தின் “ஆயுள் வேதக்கலையும்” (செய்யுள் – 3) என்ற பாடல் வரிகளின் மூலம் சிறுத்தொண்டரின் மருத்துவக் குலப் பின்னணியைக் காட்டுகிறார். மேலும், மாணிக்கவாசகரின் குலமான ‘ஆமாத்திய அந்தணர் குலம்’ என்பது மங்கல சமூகம் அல்லது மங்கல அந்தணர்கள் குலம். அம்+பட்டர், அழகிய பட்டர் என்ற பெயரில் மருத்துவத் தொழில் செய்தோர் அம்பட்டர் என்ற அந்தண குலத்தினர். அந்தணர்கள் ‘பட்டர்’ என அழைக்கப்படுவது வழக்கம். “அம்பட்டன் வேதத்துக்குரிய ஆறங்கங்களையும் அறிந்த தலைவன்” என்பதைக் காட்டும் “அம்பட்டன் கோன் சடங்கவி” என்ற ஒரு குறிப்பு தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டிலும் (SII Vol. II, Parts iii, iv & v No. 66. Inscription of Rajaraja) காணப்படுகிறது.  முன்னர் மதிப்புடன் வாழ்ந்தவர் இந்த மருத்துவக் குலத்தினர். மங்கல மரபினர் என்றும் போற்றப்படும் உயர்ந்த நிலையில் வாழ்ந்தவர்கள். ஆனால், காலப்போக்கில் வரலாற்றின் இடைக்காலத்தில் அம்பட்டன் என்ற சொல் மருவி அம்பட்டையன் என்ற இழிசொல் நிலைக்கு ஆளாகியுள்ளதுடன், தீண்டாமை நிலைக்கும் இலக்காகியது வேதனை.

  சாதி பற்றி கூறுவதாக  நினைக்க வேண்டாம். தமிழக சமுதாய வரலாற்றின் ஒவ்வொரு சமுதாயத்தின் ஆவணங்களும் தொகுக்கப் பெறுதல் இன்றியமையாததாகும்” என்று கல்வெட்டு-தொல்லியல் துறை அறிஞர் புலவர் செ. இராசு கூறும் சிறந்த அறிவுரையைக் கவனத்திற்கொண்டு, நம் வரலாறு அறிவதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும்.

  மாணிக்கவாசகர் வாழ்வையும், அவர் இயற்றிய பாடல்களையும்  படித்துணர்ந்தால் இம்மையும் மறுமையும் சிறக்கும். இது உறுதி.

  [கட்டுரையாளர் - நூலகர் மற்றும்

  நூலக அறிவியல் துறைத் தலைவர்,

  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., திருநெல்வேலி]


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp