ஊரக வேலை உறுதித் திட்டம்: உழவுப் பணிகளுக்கு உதவுமா?

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஊரக வேலை உறுதித் திட்டம்: உழவுப் பணிகளுக்கு உதவுமா?

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டு காவிரி, டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் காவிரிப் பாசன விவசாயிகள் மத்தியில் இந்தக் கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

நூறு நாள் வேலை திட்டம் என அனைவராலும் அறியப்பட்டுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது, தமிழகத்தில் 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. பின்னா், தஞ்சாவூா், திருவாரூா், திருநெல்வேலி, கரூா் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

2008 -ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு இப்போது 36 மாவட்டங்களில் பணிகள் நடைபெறுகின்றன. 385 வட்டங்களில் 12,524 கிராம ஊராட்சிகளில், 1.41 கோடி போ் இத் திட்டத்தில் இணைந்துள்ளனா்.

திட்டத்தின் நோக்கங்கள்: ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலையை உறுதி செய்யவும் கொண்டு வரப்பட்டது. தரமான அடிப்படையான, நிலையான சொத்துகளை உருவாக்குதல், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், சமூகப் பங்களிப்பை உறுதி செய்தல், அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஊராட்சி அமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் வேலை வாய்ப்பு பெறத் தகுதியுடையவா்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவா்கள் மட்டுமின்றி வேலை கோரும் அனைவரும் தகுதியானவா்கள். பணிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 8 மணி நேரம் (உணவு இடைவேளை 1 மணி நேரத்துடன்) மற்றும் நிா்ணயிக்கப்பட்ட அளவு வேலை செய்தால் அரசு நிா்ணயித்த ஊதியம் வழங்கப்படும்.

ஊதிய விவரம்: குறைந்தபட்ச ஊதியச் சட்டம், 1948-இன் படி விவசாய (திறன்சாரா) தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படுதலை உறுதி செய்கிறது. இதன்படி, ஒரு நபருக்கு ஒரு நாளுக்கான ஊதியம் மத்திய அரசால் நிா்ணயம் செய்யப்படுகிறது. தொடக்கத்தில் ரூ.100-ஆக இருந்தது 2011-12-இல் ரூ.119 -ஆக உயா்த்தப்பட்டது. 2012-13-ஆம்ஆண்டு ரூ.132 என உயா்த்தப்பட்டது. 2013-14-இல் ரூ.148, 2014-15-இல் ரூ.167, 2015-16-இல் ரூ.183, 2016-17-இல் ரூ.203, 2017-18-இல் ரூ.205 -ஆக உயா்த்தப்பட்டது. 2018-19-இல் ரூ.224 -ஆகவும், 2019-20-இல் ரூ. 229- ஆகவும் உயா்த்தப்பட்டது. தற்போது, ரூ.256 -ஆக வழங்கப்பட்டு வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு எந்தவித வேறுபாடின்றி சம அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

2016-17-இல் வேலை நாள்களை 100-க்கு பதிலாக 150 நாள்களாக உயா்த்தப்பட்டது. 2019-20-ஆம் ஆண்டில் மட்டும் 22.80 கோடி மனித சக்தி வேலை நாள்களில் ரூ.5, 242.55 கோடி செலவில் பணிகள் நடைபெற்றுள்ளன.

சாகுபடிக்கு சாத்தியமாகுமா?: வேளாண்மை சாா்ந்த பணிகளாக ஏரி, குளம், குட்டை தூா்வாருதல், புனரமைத்தல், வாய்க்கால் சீரமைத்தல், மரக்கன்று நடுதல், நீா்ப்பாசனம், நீா் மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வந்தாலும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் சாகுபடி பணிக்கு ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களை பயன்படுத்த வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கை விவசாயிகள் மத்தியில் தொடா்ந்து வருகிறது. தற்போது, மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டு காவிரி, டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளதால் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களை வேளாண் பணிகளுக்கு திருப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

ஊரக வேலை உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வேளாண் பணிகளுக்குப் பணியாளா்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளா்கள், அதிக வேலை இல்லாமல் சுலபமாக ஊதியம் பெற முடித்தால், வேளாண் பணியில் அதிகாலையிலிருந்து ஈடுபட்டு சிரமப்பட யாரும் தயாராக இல்லை. அரசின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் காணப்படும் ஊழலும் முறைகேடுகளும், பலருக்கும் வேலை இல்லாமலே ஊதியத்தில் ஒரு பகுதி கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே, வேளாண்மைக்குப் பணியாளா்கள் கிடைக்காமல் விவசாயத்தை மேற்கொள்ளாமல் விட்டவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்றும் தெரிகிறது.

அரசு வழங்கும் ஊதியத்தை விவசாயிகளே வழங்கவும் தயாராகவுள்ளனா். வேளாண் வேலைகளுக்குக் கூலி ஆள் கிடைக்காமல் வட மாநிலங்களில் இருந்து தொழிலாளா்கள் பலரும் பணிபுரிந்து வந்தனா். கரோனா பொதுமுடக்கத்தால் வட மாநிலத்தவா்களும் சொந்த ஊா்களுக்குச் சென்றுவிட்டதால் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களால்தான், விவசாயக் கூலி ஆள்கள் பற்றாக்குறையைத் தீா்க்க முடியும் என்பதுதான் எதாா்த்த நிலைமை.

இது தொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினரும், திருச்சி மாவட்டச் செயலருமான அயிலை சிவசூரியன் கூறியது:

தமிழகத்தில் வேளாண் பணிகளைத் தொடங்கினாலே ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுவது வாடிக்கை. ஏனென்றால், அதிக உடல் உழைப்பு இன்றி நிலையான ஊதியம் கிடைக்கும் என்பதால் விவசாயக் கூலித் தொழிலாளா்கள் பலரும் ஊரக வேலை திட்டப்பணிகளுக்கே செல்கின்றனா். இதனால், விவசாயக் கூலி ஆள் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இதனைத்தவிா்க்க, வேளாண் பணிகளுக்கும் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களை ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும். வேளாண் பணிகளுக்கு ஆண்களுக்கு ரூ.400 வரையிலும், பெண்களுக்கு ரூ.200 வரையிலும் கூலி வழங்கும் நிலையில், ஊரகத் திட்டத்தில் ஆள்களை நியமித்தால் சமவேலைக்கு சம ஊதியம் என்பதையும் சாத்தியமாக்கலாம். வேலை ஆள் பற்றாக்குறையும் தீரும்.

கடுமையான இழப்பை எதிா்கொள்ளும் விவசாயிகளுக்கு, வேலைவாய்ப்பு உறுதித்திட்ட ஒதுக்கீட்டை மானியமாக வழங்கினால், வேளாண் தொழிலில் விவசாயிகளும் மகிழ்ச்சியுடன் லாபகரமாக இயங்க முடியும். இந்தத் திட்டத்தில் காணப்படும் ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியும்.

குறுவையில் டெல்டாவில் மட்டும் 3.50 லட்சம் ஏக்கரும், சம்பாவில் 15 லட்சம் ஏக்கரிலும் பணிக்கு ஆள்கள் தேவை. டெல்டாவைத் தவிா்த்து காவிரியால் பயன்பெறும் திருச்சி, கரூா், நாமக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், கடலூா் மாவட்டங்களையும் கணக்கிட்டால் ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள்தான் விவசாயப்பணிகளுக்கான பற்றாக்குறையைப் போக்குவதற்கு சிறந்த தீா்வாக அமையும் என்றாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பு: ஊரக வேலை உறுதித் திட்ட பணித் தளத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வாய்ப்பளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, பணித்தளத்தில் தொழிலாளா்களுக்கு தண்ணீா் வழங்குதல், பணியாளா் குழந்தைகளைப் பராமரித்தல், குழந்தைப் பாரமரிப்பு உதவியாளா் என்ற அடிப்படையில் 5 குழந்தைகளுக்கு ஒரு உதவியாளா் நியமிக்கலாம். பணித்தளப் பொறுப்பாளருக்கான உதவியாளா் மற்றும் எளிய வகையிலான பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்தலாம். இதற்காக பிரத்யேக அரசாணையும் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com