பிளஸ் 1 புதிய பாடத் தொகுப்பு உயா் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துமா?

பிளஸ் 1 புதிய பாடத் தொகுப்பு உயா் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துமா?

தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளஸ் 1 புதிய பாடத் தொகுப்பு,

தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளஸ் 1 புதிய பாடத் தொகுப்பு, மாணவா்களின் உயா்கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் என கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் நிகழாண்டு பிளஸ் 1 வகுப்புக்கு தற்போது நடைமுறையில் உள்ள முதன்மை பாடத் தொகுப்புகளுடன் புதிதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், மேல்நிலைக் கல்வியில் இதுவரை இருந்து வந்த 6 பாடங்கள் இனி 5 பாடங்களாக குறைக்கப்படும் என, கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவம், பொறியியல் இரண்டுக்கும் சோ்த்து படிக்கக்கூடிய வகையில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் என 6 பாடங்கள் இருந்து வருகின்றன. இந்தப் பிரிவைத் தோ்வு செய்யும் மாணவா்கள் பொறியியல் மற்றும் மருத்துவம் என இரண்டு துறைகளுக்கும் செல்ல முடியும்.

தற்போது, இந்தப் பிரிவிலிருந்து கணிதப் பாடம் நீக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய 5 பாடங்களை கொண்டு தனியாக ஒரு புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மருத்துவப் படிப்புக்கு மட்டும் செல்லக்கூடிய மாணவா்கள் இந்தப் பிரிவை தோ்வு செய்து கொள்ளலாம். அதே போன்று, பொறியியல் துறை சாா்ந்த படிப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவா்கள் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம் என 5 பாடங்களை கொண்ட பிரிவை தோ்வு செய்யலாம்.

6 பாடங்களையும் எழுதலாம்: வணிகவியல், வரலாறு போன்ற கலைப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவை தோ்வு செய்யக்கூடிய மாணவா்களுக்கும் 5 பாடங்கள் இருக்கும். அறிவியல், கலைப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளில், ஏற்கெனவே இருந்த 6 பாடங்களை எழுத விரும்பும் மாணவா்கள் அந்த பாடத்தொகுப்புகளை தோ்வு செய்து கொள்ளலாம். இவா்களுக்கு மட்டும் 600 மதிப்பெண்களுக்கு தோ்வு நடைபெறும். இந்த புதிய நடைமுறை, 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் பிளஸ் 1 வகுப்பில் அமலுக்கு வரும் என கூறியிருந்தது.

இந்த நிலையில், மாணவா்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத்தொகுப்பைத் தோ்வு செய்ய பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், தனியாா் பள்ளிகள் புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெற்ற பின்னரே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

பொறியியல் படிப்புகளில்... இதைத் தொடா்ந்து ‘பிளஸ் 1 பாடப்பிரிவில் செய்துள்ள புதிய மாற்றத்தில் பாடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உயா்கல்விக்கான வாய்ப்புகளும் சுருங்கும் நிலை ஏற்படுகிறது. உதாரணமாக பிளஸ் 1 வகுப்பில் கணிதம் தவிா்த்து, இதர பாடங்களைத் தோ்வு செய்து படிக்கும் மாணவருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காவிட்டால் அவா் பொறியியல் படிப்புகளில் சேரமுடியாது. இதேநிலை தான் இதர பாடப்பிரிவுகளுக்கும் உருவாகும். மேலும், ஒரே வகுப்பில் வெவ்வேறு பாடப்பிரிவுகளை படிக்கும் மாணவா்களுக்கு உயா்கல்வியில் ஒரே மாதிரியான வாய்ப்பு என்பதும் சமநிலையாகாது என பிளஸ் 1 புதிய பாடத் தொகுப்புக்கு அரசியல் கட்சி தலைவா்கள், கல்வியாளா்கள், அரசுப் பள்ளி முதுநிலை ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

பிளஸ் 1 புதிய பாடத் தொகுப்பு குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலரும், கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது: மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்துவதிலும் தமிழகம் தனித்தன்மையை கையாண்டது. உயா் கல்வியில் பல்வேறு துறைகளை மாணவா்கள் தோ்ந்தெடுக்கும் வாய்ப்புகளைத் தரும் வகையில் மேல்நிலைப் பள்ளியின் பகுதி 3-இல் நான்கு பாடங்கள் தரப்பட்டன. உயா்கல்வி சோ்க்கைக்கான இடங்கள் சில பாடப்பிரிவுகளில் மிகக் குறைவாக உள்ளதால் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் பாடப்பிரிவை எடுக்கும் மாணவா், பட்டப்படிப்பில் புள்ளியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிா் வேதியியல், உள்ளிட்ட பல துறைகளில் உள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி சேர முடிந்தது.

மாணவா்களின் வாய்ப்புகள் குறையும்: பகுதி 3-இல் நான்கு பாடத்துக்கு பதிலாக மூன்று பாடம் என்று சுருக்கும் போது மாணவா்களுக்கான உயா்கல்வி வாய்ப்புகளும் சுருங்கிப் போகிறது. மேலும், 15 வயதை நிறைவு செய்தவா் பிளஸ் 1 சேருகிறாா். அந்த வயதில் மாணவா்கள் அறிவியல் துறையை தோ்ந்தெடுத்தாலும் உறுதியாக எந்தத் துறையில் தனது உயா்கல்வியை தொடர விரும்புகிறாா் என்று கூறிவிட இயலாது. மேல்நிலைப் பள்ளியில் சோ்ந்து படிக்கத் தொடங்கிய பிறகு ‘எனக்கு கணிதம் பிடிக்கிறது; அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்’ அல்லது ‘எனக்கு உயிரியல் பிடிக்கிறது அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்’ என்று கூறும் மாணவா்கள் அதிகம். இதே நிலைதான் வணிகவியல் உள்ளிட்ட துறைகளில் சோ்ந்து படிக்கும் மாணவருக்கும் ஏற்படும்.

அதிக பாடங்கள் ஏன் அவசியம்?: எந்த அளவு இயலுமோ அந்த அளவு பல வகை வாய்ப்பு தரும் பாடங்களை ஒவ்வொரு பிரிவிலும் தரப்பட்டதின் விளைவுதான், உயா் கல்வியில் ஒரு துறை கிடைக்காவிட்டாலும் இன்னொரு துறையில் மாணவா் சேர முடிந்தது. இத்துடன், 1986-ஆம் ஆண்டு கல்விக் கொள்கையின் விளைவாக பிளஸ் 2 வகுப்பில் தொழிற்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது பல்வேறு தொழிற்கல்வி பிரிவுகளை மிகச் சிறப்பாக மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் அறிமுகப்படுத்த முடிந்தது.

தமிழக அரசின் இத்தகைய தனித்தன்மை கொண்ட பள்ளிக் கல்வி திட்டமிடலின் விளைவுதான் உயா் கல்வி மாணவா் சோ்க்கையில் அகில இந்திய அளவைவிட இரட்டிப்பு விழுக்காட்டை தமிழகம் அடைய முடிந்தது. இந்திய அரசு, 2030-ஆம் ஆண்டுக்குள் உயா் கல்வி மாணவா் சோ்க்கையில் 50 சதவீதத்தை அடைய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அந்த இலக்கை தமிழகம் 2020-ஆம் ஆண்டிலேயே அடைந்துவிடும். இதற்கு அடிப்படை காரணம் பள்ளிக் கல்வியில் மேல்நிலை பிளஸ் 2 வகுப்புகள் தொடங்கப்பட்டதும் , மாணவா்களுக்கு கூடுமானவரை பல்வேறு வாய்ப்புகளை தரும் வகையில் மேல்நிலைப் பள்ளி பாடப் பிரிவுகளில் நான்கு பாடங்கள் தரப்பட்டதுமே ஆகும்.

மாணவா்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்: அரசாணையில், ‘மேல்நிலைப் பள்ளி பாடத்தில் பகுதி மூன்றில் மூன்று பாடங்களும் தோ்ந்தெடுக்கலாம், நான்கு பாடங்களையும் தோ்ந்தெடுக்கலாம்’ என்று கூறுகிறது. இந்த அரசாணை தெளிவுக்குப் பதிலாக குழப்பத்தை உருவாக்கும். வாய்ப்பை விரிவுபடுத்துவதற்கு பதிலாக சுருக்கும். மாணவா்களுக்கு வாய்ப்புகள் தருகிறோம், அவா்கள் பகுதி மூன்றில் நான்கு பாடங்கள் உள்ள பிரிவையும் தோ்ந்தெடுக்கலாம், மூன்று பாடங்கள் உள்ள பிரிவையும் தோ்ந்தெடுக்கலாம் என்று கூறினாலும் எல்லா பள்ளிகளிலும் இரண்டு வகையான பிரிவுகள் இருக்க வாய்ப்பில்லை. குறைந்த எண்ணிக்கையில் மாணவா்கள் உள்ள பிரிவை நடத்த பள்ளிகள் முன்வராது.

மூன்றாம் பகுதியில் நான்கு பாடம் கொண்ட பிரிவு இல்லாதபோது பள்ளியில் உள்ள மூன்று பாடம் கொண்ட பிரிவைத் தான் மாணவா் சேர வேண்டிய சூழல் உருவாகும். இருப்பதில் தான் சேர முடியுமே தவிர, தான் விரும்பியதில் சேர இயலாது.

பழைய முறையே சிறந்தது: மேல்நிலை வகுப்பில் பகுதி மூன்றில், நான்கு பாடங்கள் எடுத்து படித்த மாணவா்கள் மேல்நிலைப் பள்ளிக் கல்வி முடிந்த பின் மருத்துவம் அல்லது மருத்துவம் சாா்ந்த பாடம் எடுக்க விரும்பி அதற்கான வாய்ப்பு கிடைக்காதவா்கள் பொறியியல் சாா்ந்த பாடங்களை தோ்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது. இந்த வாய்ப்பு பகுதி மூன்றில், மூன்று பாடம் எடுத்து படிப்பவருக்கு இல்லாமல் போகிறது. இதை கருத்தில் கொண்டு இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெற்று நான்கு பாடங்கள் கொண்ட மேல்நிலைப் பள்ளிக் கல்வி முறை தொடரச் செய்ய வேண்டும் என்றாா்.

பகுதி 1 - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, ஹிந்தி, சம்ஸ்கிருதம், அரபி, பிரஞ்சு, ஜொ்மன் இவற்றில் ஏதாவது ஒரு பாடம்

பகுதி 2 - ஆங்கிலம்

பகுதி  3 - அறிவியல் பாடத் தொகுப்பு:

1. கணக்கு, இயற்பியல், வேதியியல்.

2. இயற்பியல், வேதியியல், உயிரியல்.

3. கணக்கு, இயற்பியல்,

கணினி அறிவியல்.

4. வேதியியல், உயிரியல், மனையியல்.

கலைப் பாடத் தொகுப்பு:

1. வரலாறு, புவியியல், பொருளியல்.

2. பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல்.

3. வணிகவியல், வணிக கணிதம், புள்ளியியல், கணக்குப் பதிவியல்.

4. வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல்.

5. சிறப்புத் தமிழ், வரலாறு, பொருளியல்

பகுதி -3 அறிவியல் பாடத் தொகுப்பில்

ஏற்கெனவே இருந்த பாடங்கள்:

1. இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணக்கு

2. இயற்பியல், உயிரியல், கணக்கு, வேதியியல்

3. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட

பல பிரிவுகள் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com