உலக மகளிர் தினம், யாருக்கானது?

ஒவ்வோராண்டும் மார்ச் 8 - இல் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நமது கல்லூரிகளில் மகளிர் தினத்தையொட்டி கோலப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துகிறார்கள்.
உலக மகளிர் தினம், யாருக்கானது?


ஒவ்வோராண்டும் மார்ச் 8 - இல் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. நமது கல்லூரிகளில் மகளிர் தினத்தையொட்டி கோலப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு கம்பு,உளுந்து  ஆகியவற்றைப் புடைத்து கற்களை நீக்குதல், உரலில் உளுந்தைப் போட்டு உலக்கையால் குத்தி மாவாக்குதல்,  இடுப்பிலும் தலையிலும் தண்ணீர் நிறைந்த மண் பானைகளை பெண்கள் சுமந்து வருதல்,  அகல் விளக்கை ஏற்றி கைகளில் ஏந்தி விளக்கு அணையாமல் வேகமாக நடத்தல் ஆகிய  போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. இயந்திரங்களின் வருகையால்  நூறாண்டுகளுக்கு முன்பு பெண்கள் செய்த பல வேலைகள் இன்று பல மறைந்து கொண்டு இருக்கின்றன. அவற்றை நினைவுபடுத்துவதற்கும் மீட்பதற்குமே இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

அரசுத்துறைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்  விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கவிதைப்  போட்டி, பாட்டுப் போட்டி,  சமையல் போட்டி,  கண்களைக் கட்டிக் கொண்டு புகைப்படத்தில் பொட்டு வைக்கும் போட்டிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.  பல பெண் அரசுப் பணியாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டிகளில் பங்கு கொள்கின்றனர்.

நாளிதழ்கள், இணையதளங்களும் மகளிர் தினப் போட்டிகளை நடத்துகின்றன. கணவருக்குக் காதல் கடிதம் எழுதும் போட்டி, மணி கோக்கும் போட்டி,  பந்து பாஸ் செய்தல் போட்டி,  தலையில் ஸ்டிரா செருகும் போட்டி, கோலி - ஸ்பூன் போட்டி,  இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டிலைக் கையை மடக்காமல் பிடித்து இருக்கும் போட்டி என பல போட்டிகளை நடத்துகின்றன. வென்ற பெண்களுக்கு வெட் கிரைண்டர்களைப் பரிசாக அளிக்க ஏதோ ஒரு வெட் கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனத்தை இந்த ஊடகங்கள்  தயார்ப்படுத்தி விடுகின்றன.

இம்மாதிரியான மகளிர் தின விழாக்களில் என்ன ஜாதக அமைப்புகள் உள்ள பெண்கள் ஆர்வமாகக் கலந்து கொள்வார்கள் என்று கணித்துச் சொல்ல நமது சோதிடர்களும்  கிளம்பிவிடுகிறார்கள். "சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் வரை பெண்களை விரும்புவதும், மகளிர் தினம் கொண்டாடுவதும் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கும். ஏனென்றால்  மகளிருக்கும்  கொண்டாட்டத்திற்கும்  காரகர்  நம்ம சுக்கிர பகவான் தாங்க என்றாலும் பெண்மையைப்  பொருத்தவரை சந்திர பகவானுக்கும்  பங்கு உண்டுங்க. அதனால்தான் அவர் சுக்கிரன் வீட்டில் உச்சம்  ஆகிறார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன" என்று சோதிடர்கள் மகளிர் தினக் கொண்டாட்டாங்களில் பெண்கள் ஆர்வமாகக் கலந்து கொள்வதைப் பற்றிக் கணித்துக்  கூறுகிறார்கள்.

இதேபோன்று உலக இட்லி தினம், உலக பட்டினி தினம், உலக கை கழுவும் தினம் போன்றவற்றுக்குமான  கிரகங்கங்களின் சேர்க்கைகளைப் பற்றி நமது சோதிடர்கள்  கண்டுபிடித்துச் சொல்வதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

உலக மகளிர் தினம் என்பது ஒரு கொண்டாட்டமாக ஆகிவிட்டிருப்பதையே இவை காட்டுகின்றன.   தீபாவளி, பொங்கல் என்று நாம் கொண்டாடும் விழாக்களைப் போலவே மகளிர் தினமும் கொண்டாடப்படுகிறது.   மத்தாப்பு, பட்டாசு, வெடிகள், புத்தாடை, நல்ல உணவு என்று தீபாவளியை அறிந்து வைத்திருப்பவர்களே அதிகம்.  சர்க்கரைப் பொங்கல் சாப்பிடவே பொங்கல் விழா என்பதாகவே அது மாறிவிட்டிருக்கிறது. இந்த பண்டிகைகளுக்கான உண்மையான காரணங்கள் ஒருபுறம் இருக்க, அவற்றின் நடைமுறைச் செயல்களே நமக்குப் போதுமானதாக இருக்கிறது.  மகளிர் தின விழாக்களிலும் இதுவே நிகழ்ந்திருக்கிறது.  கோலப்போட்டிகள், சமையல் போட்டிகள் மட்டுமே நம்மைத்  திருப்திபடுத்திவிடுகின்றன.   

உலக மகளிர் தினம் என்பது  ஒட்டுமொத்த சமுதாயத்தாலும், ஆணாதிக்கத்தாலும் ஒடுக்கப்பட்டுள்ள பெண்கள் ஒன்று சேர்ந்து இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் திரண்டு எழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஒரு பண்டிகையைப்   போல அது பார்க்கப்படுவதே  இப்போதைய நடைமுறையாக உள்ளது. உலக மகளிர்தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாத நிலையே உள்ளது.  

-----------

உலக மகளிர் தினம் தோன்றியதன் வரலாற்றை நாம் பார்த்தோமானால்  ஆணாதிக்கம், ஒட்டுமொத்த சமூக அமைப்பு ஆகியவற்றுக்கு எதிராகப் பெண்கள் திரண்ட வரலாறாகவே அது உள்ளது.

கி.பி.1863. லண்டன். வேல்ஸ் இளவரசருக்கு ஒரு நடனவிருந்து நடத்தப்பட்டது. அதில் கலந்து கொள்ளும் சீமாட்டிகளுக்கு  ஆடம்பர உடைகள் தேவையாக இருந்தன.  உடைகளைத் தயாரிக்கும் தலை சிறந்த தையல் நிறுவனமாகக் கருதப்பட்ட ஒன்றில் பெண்கள் வேலை செய்தனர்.  அவர்களில் ஒருவர் மேரி ஆன் வாக்லி. 8 மணி நேரம் அல்ல... தொடர்ந்து 26.5  மணி நேரம் வேலை செய்தார். ஒரு சிறிய காற்றோட்டம் இல்லாத அறையில் அவரைப் போலவே 30 பெண்கள் வேலை செய்தனர். சரியான உணவு, ஓய்வு இல்லாமல், மேரி ஆன் வாக்லி இறந்து போனார்.  அது வேலை செய்யும் பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வேலை செய்யும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும் என்று  போராட்டம் தொடங்கியது. ஆண், பெண் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து 8 மணி நேர வேலைக்காக  போராடினார்கள்.

8 மணி நேர வேலைக்கான  இந்தப் போராட்டம் இங்கிலாந்துடன் மட்டும் நின்றுவிடவில்லை.

1886 மே மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் வேலை நிறுத்தப் போராட்டமாக வெடித்தது. வேலைநிறுத்தத்தை ஒடுக்க காவல்துறையினர் பலரைச் சுட்டுக் கொன்றனர். நீதிமன்றம் விசாரித்து பலருக்குத் தூக்குத் தண்டனை வழங்கியது. போராட்டங்களை ஒருங்கிணைக்க  பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில்  சோசலிஸ்ட் அகிலத்தின் முதல் மாநாடு  1889 இல் நடந்தது. வேலை நேரம், பெண்களுக்கான உரிமைகள் தொடர்பாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அதில் கலந்து கொண்டவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின். அவருடைய முன்முயற்சியினால்  சோசலிஸ்ட் பெண்கள் இயக்கம் உருவானது.

1907ஆம் ஆண்டு ஜெர்மனியில்  சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு நடந்தது. அப்போது பெண்களுக்கு வாக்குரிமை இல்லை.  பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும்  என்ற முழக்கம் எழுந்தது.

1908இல் அமெரிக்காவில் சிகாகோ, நியூயார்க்  நகரங்களில் பெண்களுக்கான சம உரிமை கேட்டுப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் எட்டுமணி நேர வேலை, கூலி உயர்வு, வாக்குரிமை கேட்டு நியூயார்க் நகரில் அணிதிரண்டனர்.  1909 பிப்ரவரி 28ஆம் தேதி பெண்களின் வாக்குரிமைக்கான  ஆர்ப்பாட்டம் அமெரிக்காவில்  நடந்தது.

கருவுற்ற பெண்கள், குழந்தைகள், தாய்மார்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் சமத்துவம் ஆகியவற்றுக்கான தீர்மானங்களுடன், மகளிர் தினம் பற்றிய தீர்மானம் 1910 இல்  டென்மார்க்கில் கோபன்ஹேகனில் நடந்த சோசலிஸ்ட் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

1911, மார்ச் 19 இல் டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்ட்ரியா ஆகிய நாடுகளில் முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த மகளிர் தினம் உழைக்கக் கூடிய பெண்களை எல்லாம் ஒற்றுமைப்படுத்தும் தினமாகக் கருதப்பட்டது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நாடு முழுக்க திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் நிகழ்வாக இந்த மகளிர் தினம் இருந்தது. இது உலகின் பிற பகுதிகளிலும் பரவியது.

1917ஆம் ஆண்டு மார்ச்  8-இல்  ரசியாவில் ஜவுளி ஆலை பெண் தொழிலாளர்கள் புரட்சியைத் தொடங்கினார்கள். ஆலைகளில் வேலை செய்யும் பெண்களுக்கு மேலதிகாரிகளினால் பாலியல் துன்புறுத்துதல்கள்  இருந்தன. பெண்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அவற்றை எதிர்த்து பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களில்  ஆண் தொழிலாளர்களும் இணைந்தனர்.   2 லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட பேரணி நடந்தது. அந்த நிகழ்வை நினைவுகூரும் விதத்தில்  மார்ச் 8 - ஐ மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று மாஸ்கோவில் 1921 ஆம் ஆண்டு நிகழ்ந்த கம்யூனிஸ்ட் பெண்கள் அகிலத்தில் முடிவெடுக்கப்பட்டது.

1922 ஆம் ஆண்டு சீனாவில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1927 ஹூவாங்சௌ நகரில் நடந்த பேரணியில் 25 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டனர்.

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்படுவது வழக்கமான பிறகு, ஐக்கியநாடுகள் சபை சர்வதேச மகளிர் தினத்தை ஒவ்வோராண்டும் மார்ச்  8 ஆம் தேதி பெண்களின் உரிமைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொண்டாட வேண்டும் என்று 1975 இல்  அறிவித்தது.

உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிகழ்வு,  உழைக்கக் கூடிய பெண்கள் அவர்களுடைய உரிமைக்காக நடத்திய போராட்டங்களின் விளைவாகத் தோன்றியது. சம வேலைக்கு சம கூலிக்காக, பாலியல் துன்புறுத்துதல்களுக்கு எதிராக,  பெண்களின் வாக்குரிமைக்காக,  பெண்கள் ஆண்களுக்குக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காக உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

--------------- 

நமது நாட்டில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது?

ஆண்களுக்கு நிகராக அல்லது ஆண்களை விடவும் பெண்கள் அதிகமாக உழைத்தாலும் பெண் என்பதால் ஆண்களுக்குத் தருவதை விட குறைவான கூலி தரும்   நிலையே இப்போதும் உள்ளது. விவசாயம், கட்டுமானப் பணிகளில்  வேலை செய்யும் பெண்களுக்கு குறைவாகவே கூலி நிர்ணயம் செய்யப்படுகிறது.

பெண்கள் எவ்வளவுதான் கல்வி கற்று உயர்ந்த பதவிகளில் இருந்தாலும் பெண்களுக்காகவே  வீட்டு வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு அலுவலக வேலைகளையும் பெண்கள் பார்க்க வேண்டிய கட்டாய நிலையே இப்போதும் உள்ளது.

பெரும்பாலான குடும்பங்களில் எந்தப் பிரச்னை குறித்தும் முடிவு எடுக்கும் உரிமை இன்னும் ஆண்கள் கைகளிலேயே உள்ளது.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கான வரைவுச் சட்டம் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முன்வைக்கப்பட்டாலும் இப்போது  வரை அது நிறைவேற்றப்படவில்லை.  ஒருவேளை அப்படியே அது நிறைவேற்றப்பட்டாலும் உண்மையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் எத்தனை சதவிகிதம் பெண்கள் போட்டி போடும் நிலை உள்ளது.  ஆண்களுக்கு நிகராக எவ்வளவு பெண்கள்  அரசியலில் ஈடுபட்டு ஒளிவிடும் சூழ்நிலை உள்ளது. பெண்களுக்கு என ஒதுக்கப்படும் தொகுதிகளில்   அந்தப் பெண்களின்   பின்னணியில் செயல்படுபவர்கள் அவர்களின் கணவர்கள் அல்லவா?  ஆணைச் சார்ந்து வாழ வேண்டிய வாழ வேண்டிய நிலையில்தானே இப்போது வரை பெண்கள் இருக்கிறார்கள்?

ஆண்களுக்கு நிகராக எத்தனை பெண் தொழில்முனைவோர்கள் இப்போது இருக்கிறார்கள்?

பெண்களுக்கு கல்வி கற்க வாய்ப்புக் கொடுத்து, அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தரப்பட்ட இந்தச் சூழ்நிலையிலேயே பெண்கள் இவ்வாறு பின்தங்கிக் கிடக்கும் நிலை தானே உள்ளது?

வயல் வெளிகளில் கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை,  சாதிரீதியில் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள் கிராமப்புறங்களில் படும்பாடுகள் சொல்லி மாளாதவை. நள்ளிரவில் ஒரு பெண் அச்சமின்றி நடமாடும் நிலை இப்போது வந்துவிட்டதா?  அலுவலகங்களில், கல்விக் கூடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? சிறுமிகள் கூட  பாலியல் வன்முறைக்கு ஆளாகும் நிலை அல்லவா உள்ளது? பெண்களை  வெறும் உடலாகப் பார்க்கும் பார்வை மறைந்துவிட்டதா? திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும்  வெறும் உடலாகத்தானே பெண்கள் சித்திரிக்கப்படுகிறார்கள்?

பெண்கள் அடிமைகளாக இருப்பதற்கு இந்த ஆணாதிக்க சமூகம் ஒரு காரணம்.  ஆணையும், பெண்ணையும் அடிமைகளாக வைத்திருக்கும் ஒட்டுமொத்த சமூக அமைப்பு இன்னொரு  காரணம் .  அதனால்தான் பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதாக அல்லாமல், ஆணாதிக்கத்துக்கு எதிராக இருக்க வேண்டியுள்ளது. அதேசமயம் ஆண்களுடன் இணைந்து ஒட்டுமொத்த சமூக அமைப்புக்கு எதிராகப் பெண்கள் போராட வேண்டியுள்ளது. 

ஆனால் இந்த அடிப்படைகளை மறந்து  நமது நாட்டில் மகளிர் தினத்தன்று கோலப்போட்டி  நடத்துகிறார்கள்.  சமையல்  போட்டி நடத்துகிறார்கள். விளையாட்டுப் போட்டிகளை நடத்துகிறார்கள். பெண்களுக்கான பண்டிகையாக அதை மாற்றிவிட்டார்கள்.

இது எவ்வாறு நிகழ்கிறது   கோலம் போடுவது, சமையல் செய்வது,  வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்வு எல்லாம் பெண்களுக்கு என ஏற்கெனவே ஆணாதிக்க சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது.  அதற்குத்தான் பெண்கள் தகுதியானவர்கள் என்ற ஆணாதிக்க மதிப்பீடு காலம் காலமாக இருக்கிறது. பெண்களின் உரிமைக்காக. சமத்துவத்துக்காக நடத்தப்படும் மகளிர் தினத்தில்  இந்தப் போட்டிகளை நடத்துவது அதன் அடிப்படைகளுக்கே முரணாக இல்லையா?

வளர்ந்துவரும் தொழில்நுட்ப உலகில் - வேலைமுறைகளும் வாழ்க்கைமுறையும் மாறிவிட்ட நிலையில், இன்னும் அம்மியில் அரை. உரலில் நெல் குத்து என்று சொல்வது, மாற்றத்தை ஏற்காத மனநிலையைக் காட்டுகிறது. இன்னொருபுறத்தில் என்னதான் உலகம் மாறினாலும் பெண்கள் மாறாமல் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து பழைய அடிமைகளாகவே தொடர வேண்டும் என்ற கருத்தையே அது  பிரதிபலிக்கிறது.  அதே சமயம் உழைக்கும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் கடுமையான பிரச்னைகளை - அவர்களின் போராட்ட வாழ்க்கையை அது முற்றிலும் மறுதலித்துவிட்டு, மகளிர் தினத்தை வெறும் கேளிக்கையாக இது மாற்றிவிடுகிறது.  

மகளிர் தினம் என்றால் அது எல்லாப் பெண்களுக்கும் உரிய தினம் என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.    வயல் வெளிகளில், கிராமப்புறங்களில், வெயிலில் கருகி உழைப்பதோடு, சாதிய அடக்குமுறைக்குள்ளாகும் உழைக்கும் பெண்களும், நகரங்களில் அதிக சம்பளம் தரும் பெரிய நிறுவனங்களின் ஏசி அறைகளில் வேலை செய்யும் பெண்களும் - இருவரும் உழைக்கும் பெண்களாக இருந்தபோதிலும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் வேறு வேறாகவே இருக்கின்றன.

நடுத்தர வர்க்கத்தையும் தாண்டி அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ள செல்வ வளமிக்க குடும்பத்துப் பெண்கள் ஏழை கிராமப்புற பெண்களைப் போல ஒரு சேலைக்காக, ஒரு வேளை உணவுக்காக ஏங்கித் தவிப்பதில்லை.

பெரிய நிறுவனங்களில் அதிகாரியாக தலைமைப் பொறுப்புகளில் பணிபுரியும் பெண்களின் பிரச்னைகளும், அன்றாடம் காய்கறி விற்றுப் பிழைக்கும் பெண்களின் பிரச்னைகளும் வெவ்வேறானவையாகவே இருக்கின்றன.  

அரசியலில், பொதுவெளியில் பிரபலமாக உள்ள பெண்களின் வாழ்க்கை நிலையும்,  செங்கல்லைத் தலையில் சுமந்து செல்லும் கட்டட வேலை செய்யும் சித்தாள் பெண்களின் வாழ்க்கைநிலையும் வேறு வேறானவை.

வரதட்சணை தர முடியாமல் 35 வயது வரை திருமணம் ஆகாமல் இயல்பான வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட பெண்களின்  பிரச்னைகளும், வளமிக்க குடும்பத்தில் பிறந்து பல தலைமுறைகளுக்கும் நன்றாக வாழ்வதற்கு  கவலைப்பட எதுவுமில்லாத பெண்களின் பிரச்னைகளும்  ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.

எனவே பொதுவான பெண்கள்... பெண்களுக்கான பொதுவான பிரச்னைகள் என்று எதுவுமில்லை.   பல்வேறு வாழ்க்கைத் தரங்களை உடையே பெண்களே இருக்கிறார்கள்.  அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் வெவ்வேறானவையாகவே இருக்கின்றன.  எனவே எல்லாப் பெண்களுக்கும் பொதுவானதாக மகளிர் தினத்தைக் கருத முடியுமா? என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.

பெண் என்பதை பெண்ணுடல் கொண்ட உயிர் என்பதாக வரையறுத்தோம் என்றாலும் கூட, ஒட்டுமொத்த சமூகத்தின் ஒடுக்குமுறையும், ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறையும் எல்லாப் பெண்ணுடல் கொண்ட உயிர்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.  எனவே மகளிர் தினம் என்பது பொதுவான கொண்டாட்டம் அல்ல. அது உழைக்கும் பெண்களுக்கான தினம். ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காக ஒன்று திரள வேண்சும் என்பதை வலியுறுத்தும் தினம்.

அப்படியானால் அனைத்துப் பெண்களுக்குமான  தினமாக மகளிர் தினத்தைக் கருதவே முடியாதா என்று கேட்கலாம்.  உலகம் முழுவதும் நிரம்பி வழியும் ஆணாதிக்க கருத்தாயுதங்களுக்கு, அவற்றின் செயல்பாடுகளுக்கு எதிராக இருத்தல்,  அந்த ஆணாதிக்கத்தைக் கட்டிக்காக்கும் சமுதாய அமைப்பு முறையை மாற்றியமைத்தல்  ஆகிய குறிக்கோளுக்காக அனைத்துப் பெண்களும் ஒன்றிணைய முடியும்.  ஆதிக்கப் பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள்  இதில் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்று சொல்ல முடியாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com