'அம்மா' தந்த வேலை: மகளிர் தின மங்கைக்குக் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கருணை

மார்ச் 8 - மகளிர் தினத்தை மறக்கவே முடியாது மாற்றுத்திறனாளியான அந்தப் பெண்ணுக்கு. அன்றைய நாளில் தினமணியில் அவரைப் பற்றி வெளிவந்த ஒரு செய்தி, முதல்வர் ஜெயலலிதா முன் அவரைக் கொண்டுசென்று நிறுத்தியது.
'அம்மா' தந்த வேலை:  மகளிர் தின மங்கைக்குக் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத கருணை

மார்ச் 8 - மகளிர் தினத்தை மறக்கவே முடியாது மாற்றுத்திறனாளியான அந்தப் பெண்ணுக்கு. அன்றைய நாளில் தினமணியில் 'மகளிர் தின மங்கை'யாக அவரைப் பற்றி வெளிவந்த ஒரு செய்தி, முதல்வர் ஜெயலலிதா முன் அவரைக் கொண்டுசென்று நிறுத்தியது.

திருச்சி மாவட்டம் திருப்பைஞ்ஞீலி அருகேயுள்ள வாழ்மால்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் வேலு - சந்திரமதி தம்பதி. வேலுவோ கடவுள் மறுப்பாளர்.

இவர்களுக்குக் கைகளும் கால்களும் குறுகிப்போன நிலையில் ஒரு பெண் குழந்தை பிறந்தபோது, ஊரெல்லாம் வந்து வேடிக்கை பார்த்துக் கடவுள் இல்லை என்று சொன்னவனுக்குக் கிடைத்த தண்டனை என்று கேலி செய்தது.

ஆனாலும், மனந்தளராத வேலு, தன் குழந்தைக்கு அறிவுக்கண்ணு என்று பெயர் சூட்டினார். படிக்கவைத்து பி.காம். பட்டம் பெறச் செய்தார்.

இவர்களின் மற்றொரு மகனும் மகளும் படிக்கவில்லை. அறிவுக்கண்ணுவுக்கு வாழ்க்கை முழுவதும் துணை வேண்டும் என்பதற்காகக் கல்விச் செல்வத்தைக் கிடைக்கச் செய்தார் வேலு.

சிலேட்டைப் பற்றிக் கொள்ள முடியாது, சிலேட் குச்சியைக்கூட சரியாகப் பிடிக்க முடியாது. என்றாலும் பள்ளி செல்லத் தொடங்கினாள் அறிவுக்கண்ணு.

மருத்துவம் பார்த்தும் குணமடையாத நோயால் முதுகு வளைந்துபோய்விட்ட வேலு, சைக்கிளில் குழந்தையை அமரவைத்துக் காலையில் பள்ளியில் கொண்டுபோய் விடுவார், மாலையில் சென்று, சில நாள்களில் பள்ளியிலேயே தங்கியிருந்து, குழந்தையைத் திருப்பி அழைத்து வருவார்.

ஒரு கி.மீ. தொலைவிலிருந்த உள்ளூர்த் தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை, 4 கி.மீ. தொலைவிலுள்ள சிறுகாம்பூர் அரசு மேனிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை என்று 10 ஆண்டுகள், நாள்தோறும் மகளுடன் தந்தையும் பள்ளிக்கூடம் சென்றுவந்தார்.

பிளஸ் 1, 2 படிக்க அருகிலுள்ள மண்ணச்சநல்லூர் அரசுப் பள்ளியில் சேர்த்தார். விடுதியிலும் இடம் கிடைத்தது. அலைச்சல் இல்லை, செலவும் இல்லை. பிளஸ் முடித்ததும் எப்படியும் பட்டப்படிப்பு முடித்துவிட்டால், எதிர்காலத்தில் ஏதேனும் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரிக்குச் சென்றார் அறிவுக்கண்ணு.

கல்லூரியிலும் விடுதியிலும் இடம் கிடைத்தபோதிலும் கட்டணம் செலுத்த வழியில்லை. நண்பர்கள் வழிகாட்ட அரசுடைமை வங்கியொன்றில் கல்விக் கடனாக ரூ. 27,900 பெற்றார் வேலு.

ஒரு வகுப்பிலும் தோல்வியுறாமல் படித்து, 2000 ஆம் ஆண்டில் வாழ்மால்பாளையம் கிராமத்தின் பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் அறிவுக்கண்ணு!  இந்தக் கிராமத்தில் முதன்முதலில் எஸ்எஸ்எல்சி முடித்தவர் இவருடைய தந்தை வேலு.

மேற்கொண்டு படிக்கப் பண வசதியில்லை, கைகால்கள் வளர்ச்சியற்ற அறிவுக்கண்ணுவின் உயரமோ இரண்டு அடிதான். உடல் குறை காரணமாக உடனடியாக  வேலையும் எதுவும் கிடைக்கவில்லை. சிலருடைய யோசனையின் பேரில் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து அரசுத் தேர்வுகளுக்காகப் படிக்கத் தொடங்கினார்.

நம்பிக் கற்ற கல்வியால் பலனில்லாமல் வேலைக்காக அல்லாடிக்கொண்டிருந்த நிலையில்தான் தினமணியில், மார்ச் 8, 2003-ல் 'ஊனத்தை வென்றார்; வாழும் வழிதான் திறக்கவில்லை!' என்ற செய்தி முதல் பக்கத்தில் வெளியானது.

ஜெயலலிதாதான் அப்போது முதல்வர். திண்டுக்கல்லில் அரசு விழாவொன்றில் பங்கேற்றுவிட்டுத் திருச்சிக்கு வந்து அந்த நாளில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அறிவுக்கண்ணுவின் நல்ல நேரம், முதல்வரின் பார்வையில் பட்டது அந்தச் செய்தி.

காலையில் அறிவுக்கண்ணுவின் வீட்டைத் தேடிச் சென்றுவிட்டனர் அரசு அலுவலர்கள். இரண்டே நாளில், மார்ச் 10 ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருந்த அரசு விழாவில் அறிவுக்கண்ணுவுக்குப் பணி ஆணை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் ஜெயலலிதா.

உடனடியாக அறிவுக்கண்ணுவை அவருடைய தந்தையுடன் திருச்சிக்கு அழைத்துவந்துவிட்டனர். ஆனால், அறிவுக்கண்ணுவோ மேடைக்குக் கறுப்புச் சட்டை அணிந்துதான் வருவேன் என்று உறுதிபடத் தெரிவிக்க, ஜெயலலிதா முன்னால் கருப்புச் சட்டையா என அலுவலர்கள் தயங்க இழுபறி. கடைசியில் அறிவுக்கண்ணுவின் உறுதியே வெற்றி பெற்றது.

இரண்டு அடி உயரமே உள்ள அறிவுக்கண்ணு கறுப்புச் சட்டை அணிந்து விழா மேடையேறி வந்தபோது அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது. அறிவுக்கண்ணுவின் உயரத்துக்கு முதல்வர் ஜெயலலிதா குனிந்து வேலைக்கான அரசாணையை வழங்கி, மிக நெருக்கமாக விசாரித்துக் கொண்டிருந்தபோது கரவொலி அடங்கவேயில்லை.

அம்மா தந்த ஆணை. ஊரே கொண்டாடியது அறிவுக்கண்ணுவை. குழந்தைத் தொழிலாளர் சீரமைப்புத் திட்டத்தில் (சியர்ஸ்) எழுத்தர் வேலை.

நேரடியாகத் தர  எத்தனையோ வேலைகள் அரசுத் துறைகளில் இருக்கும் நிலையில், யாருடைய மனக் குறையோ உடல்குறை கொண்ட அறிவுக்கண்ணுவுக்கு சிறப்புத் திட்டத்தில் வேலை தந்தார்கள் (இதையெல்லாம்கூட முதல்வரா சொல்வார்?). சம்பளம் ரூ. 1,400.

பிறகு, ஏதேனும் அரசு வேலைக்கு மாற்றித் தருமாறு அறிவுக்கண்ணு மேற்கொண்ட முயற்சிகளால் பலனேதும் ஏற்படவில்லை. 2003 முதல் 2010 வரை வாழ்மானபாளையத்தில் தொடங்கி, திருப்பைஞ்ஞீலி, குருவம்பட்டி, சிறுகாம்பூர், திருவரங்கப்பட்டி, டி.ஈஞ்சப்பட்டி, செங்குட்டை ஆகிய ஊர்களில் வேலை. பேருந்திலிருந்து இறங்கிவிட முடியும், ஆனால், மேலேற யாருடைய உதவியேனும் தேவை. ஆனாலும் அலைந்துதான் வேலை பார்த்தார் அறிவுக்கண்ணு.

2010 முதல் 2015 வரை பெரியார் மணியம்மை நிறுவனத்தில் வேலை. பின்னர், மறுபடியும் மனுக் கொடுத்துக் கேட்டதும் குழந்தைத் தொழிலாளர் சீரமைப்புப் பள்ளியிலேயே ரூ. 5 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்தார். இடைப்பட்ட காலத்தில் அறிவுக்கண்ணுவின் தந்தை வேலு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். சியர்ஸ் திட்டமும் கூடவே வேலையும் முடிந்துவிட்டது. இப்போது திருச்சியில் தனியார் நிறுவனமொன்றில் சுமாரான சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அறிவுக்கண்ணுவுக்கு வயது 41 ஆகிவிட்டது. உடன்பிறந்தவர்கள் யாரும் இப்போது உடனில்லை. தாய்க்கு உடல் நலமில்லை. மூளையில் ஏதோ சிக்கல். ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு. அறிவுக்கண்ணுதான் கவனித்துக் கொண்டிருக்கிறார். கடும் பணச் செலவு. ஏதோ சமாளித்துக் கொண்டிருக்கிறார்.

கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அம்மாவே அழைத்துத் தந்தார் பணிக்கு உரிய ஆணையை. மார்ச் 8 மகளிர் தினம் என்றாலே அம்மாவின் நினைவுதான் என்று குறிப்பிடும் அறிவுக்கண்ணு,  இப்போதும் ஏதாவது நிரந்தரமான அரசு வேலை கிடைத்துவிடாதா எனத் தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறார். யாரோ ஒருவரின் அரைகுறையான வேலை காரணமாகக் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் வாழ்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் மாற்றுத் திறனாளியான அறிவுக்கண்ணு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com