கிரஷர்களால் கீழே செல்லும் நீர்மட்டம்

கிரஷர்களால் கீழே செல்லும் நீர்மட்டம்

உலக தண்ணீர் தினம் என கொண்டாட வேண்டிய சந்தர்ப்பத்திறக்கு நாம் ஆளாகியுள்ளோம் என்றால், நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவப் பெருந்தகையின் கருத்தை நாம் உள்வாங்காமல் இருந்த விளைவால் உருவானதுதான்.


பெண்கள் தினம், அறிவியல் தினம் என நாம் கொண்டாடி வரும் நிலையில் உலக தண்ணீர் தினம் என கொண்டாட வேண்டிய சந்தர்ப்பத்திறக்கு நாம் ஆளாகியுள்ளோம் என்றால், நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவப் பெருந்தகையின் கருத்தை நாம் உள்வாங்காமல் இருந்த விளைவால் உருவானதுதான் உலக தண்ணீர் தினம்.

அண்ட பெருவெடிக்கொள்கையில் உருவானதாக அறிவியலார் கூறும் இந்த பூமிப்பந்தை 71 சதவீதம் நீரும், 21 சதவீதம் நிலமும் ஆக்கிரமித்துள்ளது. நான்கில் மூன்று சதவீதம் நீர் பரப்பு இருந்தாலும், அதில் 96.5 சதவீதம் உப்புத்தன்மை கொண்ட கடல்நீராகத்தான் உள்ளது. வெறும் 3.5 சதவீதம் நன்னீரை மட்டுமே நிலத்தில் வாழும் உயிரினங்கள் ஜீவிக்கின்றன. 

நீர் என்பது நாம் உயிர்வாழ்வதற்கு மட்டும் அவசியமானதல்ல. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியக் கருவியாக திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.  தண்ணீர் புதுப்பிக்கவல்ல ஆதாரம்தான் என்றாலும், இயற்கையில் அதன் அளவு மிகவும் குறைவாகவே இருப்பதால், அதன் நீடித்த மேம்பாட்டிற்கும், திறமையான மேலாண்மைக்கும் நாம் திட்டமிட வேண்டும். அப்போதுதான் அதிகரித்து வரும் மக்கள்தொகை, பெருகிவரும் தொழிற்சாலைகள்,  அதிகவேக நகரமயமாக்கல் ஆகியவற்றுக்கான நீர் தேவையையும், புவிவெப்பமயமாதலால் ஏற்படும் சவால்களையும் நம்மால் சமாளிக்க இயலும்.

இந்தியாவின் பனிப்பொழிவு, பனிமலை உருகுதல்  மூலம் கிடைக்கும் நீரையும் சேர்த்தால், இந்தியாவின் ஆண்டு தண்ணீர் உற்பத்தி 4 லட்சம் கோடி கனமீட்டர் என அறிவியல் நிபுணத்துவர்களால் மதிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், ஆவியாதல், தண்ணீரை எடுக்கும்போது உருவாகும் ஆவியாதல் போன்றவற்றால் ஏற்படும் இழப்பு போக மீதம் கிடைப்பது 10,869 லட்சம் கோடி கன மீட்டர்தான். இந்த தண்ணீரையும் முழுமையாக பயன்படுத்திவிட முடியாது. புவி அமைப்பு, தண்ணீரின் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்க்கும்போது 1.123 லட்சம்கோடி கனமீட்டர் தண்ணீரை மட்டுமே நாம் பயன்படுத்த முடியும். இந்த அளவு தண்ணீர் இருப்பும்கூட காலநிலை அளவு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது.

இதுதொடர்பாக அமராவதி பாசன விவசாயிகள் கூறுகையில், இந்தியாவில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலங்களின் பரப்பு சுமார் 14 கோடி ஹெக்டேர் என்றால், அதில் வெறும் 44 சதவீத நிலப்பரப்பு மட்டுமே, அதாவது 6.2 கோடி ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே பாசனவசதி பெற்றுள்ளன. மாநிலங்களில் ஆறுகளை இணைத்தல், நிலத்தடி நீரை செயற்கை முறையில் மறுஉருவாக்கம் செய்தல் ஆகியவற்றின் மூலம் புதியநீர் ஆதாரங்களை உருவாக்க முடியும். ஆறுகளை இணைப்பதன் மூலம் 3.5 கோடி ஹெக்டேரில் பாசன வசதியை உருவாக்க முடியும். நிலத்தடி நீரை  செயற்கை முறையில் மறுஉருவாக்கம் செய்வதன் மூலம் 3,600 கோடி கன மீட்டர் நீரை உருவாக்க முடியும்.

1951ம் ஆண்டில் தனிநபர் நீர் இருப்பு 5,177 கனமீட்டராக இருந்த நிலையில், தற்போது மக்கள் தொகைப் பெருக்கம், நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் ஆகியவற்றால் 1,650 கன  மீட்டராக குறைந்துவிட்டது. இந்த நிலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆறுகள் மாசுபடுவதும், நிலத்தடிநீரின் தரம் குறைந்து வருவது,  நகர்ப்புறங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரும், தொழிற்சாலைக் கழிவுகளும் கலப்பதுதான் நீர் மாசடைவதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த நிலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்தாலும் தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில் அதிகளவில் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக கரூர் நகர் பகுதியில் 1997-க்கு முன் 445 சாய, சலவை ஆலைகள் இருந்தபோது, ஆலை உரிமையாளர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாமையால் ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுகளை நீர்நிலைகளில் வெளியேற்றியதால் கரூரை வளம்கொழிக்கச் செய்த அமராவதி ஆறு முற்றிலும் மாசடைந்து, விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மைக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இதை எதிர்த்து அமராவதி பாசன விவசாயிகள் போர்க்கொடி தூக்கியதால் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் விளைவால் இன்று சாய, சலவை ஆலைகளில் ஆர்ஓ பிளாண்ட் என்றழைக்கப்படும் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்து 45 சாய, சலவை ஆலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இருப்பினும் அதன் தாக்கம் இன்றளவும் ஆங்காங்கே இருந்துகொண்டுதான் இருக்கின்றன. மேலும் இன்றளவும் சாய, சலவை கழிவுகளை வெளியேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதேபோல கோவை மாவட்டத்தின் வெள்ளியங்கிரி மலையில் இருந்து உருவாகி கோவை, திருப்பூர் மாவட்டங்களை கடந்து கரூரை நோக்கி ஓடி வரும் நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாய சலவை ஆலைகள் கழிவுகள் மழைக்காலங்களில் தாராளமாக திறந்து கலக்க விடுவதால், நொய்யல் ஆறு முற்றிலும் மாசடைந்து, இன்று இறந்து போன ஆறாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நொய்யல் நதியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். இதில் சிலருக்கு மட்டும் உரிய இழப்பீடு கிடைத்துள்ளது, சிலர் நீதிமன்ற வாசலை அவ்வப்போது தொட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். கரூரில் சுங்ககேட் பகுதியில் செயல்படும் சில சாய ஆலைகள் இன்றளவிலும் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கழிவுநீரை வெளியேற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் நிலத்தடி நீர் கெடுவதுடன் அதை பயன்படுத்தும் பொதுமக்களும் புற்றுநோய், தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்களுக்கும் ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவற்றைத்தவிர அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் க. பரமத்தி, பவித்திரம், தாராபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் கல்குவாரிகளில் அதிகளவு ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் நீர்மட்டம் 3000 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் புகார் கூறுகிறார்கள். மேலும் நடையனூர், சேமங்கி, நொய்யல், கரூர் ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றிற்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு அவை விற்கப்படுகின்றன.

நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை ஒழுங்குபடுத்த போதிய சட்டங்கள் இல்லாதது ஆகியவற்றால் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு குறைந்துவிட்டது. இவற்றையெல்லாம் மாவட்ட நிர்வாகம் அரசியல் பாகுபாடின்றி, முறையான கடுமையான சட்டம் வகுத்து,  நீர்நிலைகளை மாசடையச் செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டும் கரூர் மாவட்டத்தில் எதிர்காலத்திலாவது நீர் மாசடைவதை தடுக்க முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com