ஆழ்துளைக் கிணறுகள் தீர்வல்ல!

அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளைக்   கிணறு அமைப்பது தீர்வாகாது, ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் தண்ணீரைத் தேக்கம் செய்வது சிறந்து என்கின்றனர் வல்லுநர்கள். 
ஆழ்துளைக் கிணறுகள் தீர்வல்ல!

அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளைக்   கிணறு அமைப்பது தீர்வாகாது, ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளில் தண்ணீரைத் தேக்குவதே சிறந்தது என்கின்றனர் வல்லுநர்கள். 

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவனின் வாக்கு. உலகம் நான்கில் மூன்று பாகம் தண்ணீரால் சூழப்பட்டாலும், அவற்றை முற்றிலும் பயன்படுத்த இயலாது. இந்த தண்ணீர் வெப்பத்தால் ஆவியாகி, மேகங்களாக உருமாறி, மழையாக பூமியை அடைந்து, ஆறுகள், குளங்கள் போன்ற நீர் நிலைகள் மூலம் நமக்குத் தண்ணீராகக் கிடைக்கின்றன. இதுவே இயற்கையின் நியதி. 

கடந்த சில ஆண்டுகளாக, குளங்கள், ஆறுகள் மாசு அடைந்ததாலும், வறண்டதாலும் தண்ணீரைப் பயன்படுத்த இயலாத நிலை அதிகரித்துள்ளது. இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. நமக்குக் கிடைக்கும் நீர், 70 சதவீத அளவில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதம் சமைக்கவும், குளிர்பானங்கள் செய்யவும், துணி துவைக்கவும் பயன்படுத்துகிறோம். 

தண்ணீரை சேமிக்கக் கூடிய முக்கியமான காரணிகளாக காடுகள், பசும்புல்வெளிகள், நீர்நிலைகள் ஆகியவை முக்கிய பங்களிக்கின்றன. இவை, மண்ணரிப்பைத் தடுப்பது மட்டுமல்லாமல் நிலத்தடி நீர்மட்டத்தையும் சரியான விகிதத்தில் வைக்க உதவுகின்றன.

உலகம் முழுவதும் காடுகளின் பரப்பளவு குறைந்து வருவதால், நிலத்தடி நீர்மட்டமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால், சுகாதாரமற்ற, மாசு படிந்த நீரை நாம் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். 

பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய தண்ணீர் நமக்கு நிலத்தடி நீர் ஆதாரம், மழை வழி நீர், மாசு நீர் என மூன்று நிலைகளில் தண்ணீர் கிடைக்கிறது. இந்த மூன்றில் முதல் இரண்டு ஆதாரங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இயற்கையில் கிடைக்கும் தண்ணீர் மற்றும் நீர்நிலைகளை மாசு அடையச் செய்வதன் மூலம், மாசு நீரைப் பயன்படுத்தி நாமும் மாசுபட்டு வருகிறோம்.

பூமியில் உள்ள தண்ணீரில் 6 சதவீத தண்ணீர் மட்டுமே பயனுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நவீன ஆய்வின்படி பூமியில் மிகக் குறைந்த அளவே நிலத்தடி நீர் உள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தடி நீர் குறைவுக்குக் காரணம், மனிதன், பூமியை மாசுபடுத்துவதே என விக்டோரியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் டாம் கிளசன் கூறியுள்ளார். நிலத்தடி நீரைப் பாதுகாப்பது மனிதரின் கையில்தான் உள்ளது என்கிறார் அவர்.

உலகில் மொத்த மக்கள்தொகையில் 18 சதவீதத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவில் வெறும் 4 சதவீத நன்னீர் ஆதாரங்களே உள்ளன. முன்பு இல்லாத வகையில் மோசமான தண்ணீர் பிரச்னையை நாடு சந்தித்து வருகிறது என அரசின் பங்களிப்புடன் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் உள்ள தில்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற 21 நகரங்களில் விரைவில் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என அந்த அறிக்கை எச்சரிக்கிறது. 

பூமிக்கடியில் தண்ணீர் உற்பத்தியாவதைக் காட்டிலும், அதிக அளவு வெளியேற்றப்படுவதே பிரச்னைக்கு காரணம் என்கிறார் வாட்டர் எய்ட் இந்தியா அமைப்பின் தலைமைச் செயல் அலுவலர் மாதவன். கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் நாட்டில் உள்ள 66 சதவீத கிணறுகளின் நீர்மட்டம், கடந்த ஆண்டு மிகவும் குறைந்து காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதற்குப் பருவநிலை மாற்றும் ஒரு காரணம். மழை பெய்யாமல் வறட்சி ஏற்படுகின்றது எனக் கூற முடியாமல், தற்போது, அதிக அளவில் மழை பெய்து, நீர் நிலத்தடிக்குச் செல்லாமல் வழிந்தோடி செல்வது முக்கிய காரணம் எனக் கூறலாம். இவற்றிலிருந்து நாம் மீண்டு, சுகாதாரமாகவும், இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

காடுகளை மீ்ட்டு அவற்றின் பரப்பளவை அதிகரிப்பதன் மூலமும், இழந்த புல்வெளிகளை நாம் மீண்டும் உருவாக்குவது அவசியமாகிறது. விவசாயிகளிடமும் குறைந்த அளவில் நீரை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிலத்தடி நீராதரங்களை உருவாக்க வேண்டியது நமது கடமையாகிறது. இல்லையேல் அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டிய காலம் வெகு தொலைவு இல்லை. பணம் சேமிப்பு குடும்பத்தை செழிக்க வைக்குமோ அப்படிதான், தண்ணீரும் நமது குடும்பத்தையும் செழிக்க வைக்கும்.

இதை உணர்ந்த மாநில அரசு, குடிநீர்ப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்துக்கு ரூ.158.42 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வாரியத்துக்கு ரூ.36 கோடியும்,  நகராட்சிக்கு ரூ.56 கோடியும், பேரூராட்சிக்கு ரூ.148.32 கோடியும் நிதி ஒதுக்கியது. மேலும், குடிமராமத்து திட்டத்தின் மூலம் 39,222 ஏரிகள் தூர்வாரப்பட்டன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் மாசற்ற நீர் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. 

ஏரிகளை மீட்டெடுக்கும் இளைஞர்கள்

கிருஷ்ணகிரி அருகே கடந்த பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் சின்ன ஏரி, மாசி ஏரி போன்ற ஏரிகள் வறண்டு காணப்பட்டன. இதையடுத்து, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து உணர்வுகள் என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஏரிகளை மீட்டெடுக்கும் பணியில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி சின்ன ஏரியை சுத்தம் செய்த இவர்கள், குடியிருப்புகள் மிகுந்த மாசி ஏரியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். 

மாசி ஏரியானது கடந்த 10 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதையடுத்து, மாசி ஏரிக்கான நீர்வரத்தைக் கண்டறிந்த அவர்கள், நீர்வரத்துப் பாதையானது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அறிந்தனர். தொடர்ந்து, கிராம மக்களையும், விவசாயிகளையும் பலமுறை நேரில் சந்தித்து, வருவாய்த் துறையினரின் உதவியோடு, ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

மழை பெய்தபோது, மீட்கப்பட்ட நீர்வரத்துக் கால்வாயில் மழைநீர் ஓடுவதைக் கண்ட ஆக்கிரமிப்பாளர்கள், தாங்களே முன்வந்து, மீதம் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர். இதையடுத்து, 10 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட 16 ஏக்கர் பரப்பளவு கொண்டு மாசி ஏரியில் தண்ணீர் தேக்கப்பட்டது. 

இளைஞர்களின் முயற்சியால் கடந்த மூன்று ஆண்டுகளாக மாசி ஏரியானது வற்றாமல் தண்ணீர் இருந்து வருகிறது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போகாமல் உள்ளன. 

தற்போது, கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள ஏரிகளின் நீர்வரத்துக் கால்வாயைக் கண்டறிந்து, அவற்றை மீட்கும் பணியில் ஈடுப்டடுள்ளனர். இளைஞர்களின் முயற்சியை அறிந்த கிராம மக்களும், நீர்வரத்துக் கால்வாயைத் தூர்வார முன்வந்துள்ளனர். நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு, தண்ணீர் தேக்கப்பட்டாலும், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவது நிரந்தரத் தீர்வாகாது என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

ஒவ்வொரு ஊராட்சியிலும், அதிக அளவில் கசிவுநீர்க் குட்டைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் புதிய ஓடைகளை உருவாக்கி, பழைய நீர் நிலைகளை மட்டுமல்லாமல் புதிய நீர்நிலைகளை உருவாக்கி, போதிய அளவில் தண்ணீரைத் தேக்குவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். 

அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதால், ஓடைகள் உருவாவதற்கான நீர் ஊற்றுகளை அழித்து, கிளை நதிகள் வறண்ட போக, ஒரு வகையில் மனிதன் காரணமாக அமைகின்றான். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஅள்ளி மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டதால் இயற்கையாக உற்பத்தியான நீர் ஊற்றுகள் வறண்டு, மார்கண்டேயன் நதி முற்றிலும் வறண்டு போனது என்கின்றனர்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள், பொதுமக்களின் ஒருங்கிணைப்புடன் காணாமல்போன நீர்வரத்துக் கால்வாய்களைக் கண்டறிந்து, அவற்றை மீட்டெடுக்க வேண்டும். அதிக அளவில் கசிவுநீர்க் குட்டைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் ஓடைகளையும், கிளை நதிகிளையும் உருவாக்கி மறைந்துபோன நதிகளை மீட்டெடுக்க இலக்குடன் பணியாற்றுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

500 அல்லது 600 அடிக்கு மேல் ஆழ்துளை அமைக்கும் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவது இல்லை என்ற முடிவுக்கு அரசு வர வேண்டும். மேலும், நீர்வரத்துக் கால்வாய், நீர்நிலைகளைப் பாதிக்காத வகையில் சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது - நம்முடையதும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com