மன்னர்கள் தந்த மணிமகுடங்கள் தாமிரவருணி தடுப்பணைகள்

இந்தியாவின் வற்றாத ஜீவநதிகளில் தென்கோடியில் பொதிகை மலையில் உருவாகி இன்றளவும் உயிர்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நதி தாமிரவருணி. இதன் தடுப்பணைகளின் முக்கியத்துவம், வலிமை, தனித்துவம் வாய்ந்தது. 
மன்னர்கள் தந்த மணிமகுடங்கள் தாமிரவருணி தடுப்பணைகள்

நாட்டின் வற்றாத ஜீவநதிகளில் தென் கோடியில் பொதிகை மலையில் உருவாகி இன்றளவும் உயிர்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் நதி தாமிரவருணி. பாபநாசம், சேர்வலாறு ஆகிய பெரிய அணைகளால் தாமிரவருணியின் தண்ணீர் தடுக்கப்படும் முன்பாக, மன்னர் ஆட்சிக் காலத்திலேயே தாமிரவருணியை ஏழு இடங்களில் தடுத்து விவசாயிகளுக்கு நண்பர்களாக தடுப்பணைகள் உருவாக்கப்பட்டுப் பாசன நீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தடுப்பணைகளின் பழங்காலப் பெருமைகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படாவிட்டாலும் ஒவ்வொரு அணைகள் ஒவ்வொன்றும் முக்கியத்துவம், வலிமை, தனித்துவத்தால் இளைய தலைமுறையினருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

தலையணை: தாமிரவருணி அன்னை பொதிகை மழையின் பூங்குளம் பகுதியில் உருவாகி பல்வேறு சிற்றாறுகளுடன் இணைந்து பாணதீர்த்தத்தில் அருவியாய் கொட்டி காணிக்குடியிருப்பு வழியாக பாய்ந்தோடி சிவபெருமான் தனது திருமணக் கோலத்துடன் அகத்திய முனிவருக்குக் காட்சியளித்த கல்யாணத் தீர்த்தத்தில் அருவியாய் குதித்து பாபநாசத்தை அடையும் இடத்தில் தலையணை கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டிய மன்னர், ஆண்டு குறித்த விவரங்களோ, கல்வெட்டுகளோ இல்லை. ஆனால், கருங்கல் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

தென் தமிழகத்தில் ஆண்டின் 365 நாள்களும் தண்ணீரால் நிரம்பி வழிந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதியாக தலையணை உள்ளது. ஓராண்டில் 1.5 கோடிக்கும் மேற்பட்டோர் பாபநாசத்திற்கு வந்து தலையணை பகுதியில் குளித்துச் செல்கிறார்கள். சித்திரை முதல் நாளில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தலையணைக்கு வந்து நீராடி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்தத் தலையணையில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு கோடைமேலழகியான் கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன. வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் மூலம் ஞானியார்தோப்பு, செட்டிமேடு, ஆலடியூர், ஏர்மாள்புரம் பகுதிகளும், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய் மூலம் விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், அகஸ்தியர்பட்டி, பிரம்மதேசம், வாகைக்குளம் பகுதிகளும் பாசன வசதி பெறுகின்றன. இக்கால்வாய்களின் கரைகளில் 200-க்கும் மேற்பட்ட மருதமரங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து கம்பீரம் காட்டி நிற்பது கூடுதல் சிறப்பாகும். 1200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் தலையணையில் பிரியும் கால்வாய்களால் பாசன நீர் பெறுகின்றன.

நதியுண்ணி தடுப்பணை: பாபநாசத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் நதியுண்ணி தடுப்பணை உள்ளது. அம்பாசமுத்திரத்தில் இருந்து 1.5 கி.மீ. தெற்கில் உள்ள இந்த அணைக்கட்டும் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு கி.பி.1759 ஆம் ஆண்டில் கான்சாகிபு என்ற ஆட்சியாளரால் உருவாக்கப்பட்டதாகக் கல்வெட்டு தகவல்கள் உள்ளதாகவும், ஆனால், பாண்டிய மன்னர் கால கட்டடக்கலை அம்சம் உள்ளதாகவும் கருத்துகள் உள்ளன. இயற்கை எழில்கொஞ்சும் நதியுண்ணி கால்வாய் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கிறது.

இந்த அணைக்கட்டில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் (சின்னசங்கரன்கோவில்) உள்ளது. இப்பகுதியில்தான் தாமிரவருணியுடன், மணிமுத்தாறு வந்து இணைகிறது. தோஷ நிவர்த்திக்காக இப்பகுதியில் வந்து நீராடி செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம். நதியுண்ணி கால்வாய் அம்பாசமுத்திரம், ஊர்க்காடு வழியாக சுமார் 11 கி.மீ. தொலைவுக்கு மேல்பாய்ந்து 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கு பாசன வசதி கொடுத்து வருகிறது.

கன்னடியன் தடுப்பணை: தாமிரவருணி கரையோரம் உள்ள புகழ்பெற்ற ஊரான கல்லிடைக்குறிச்சியின் மேற்கே கன்னடியன் தடுப்பணை உள்ளது. இந்தப் பெயருக்கான சரியான காரணம் ஏதும் தெரியவில்லை. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி இக்கால்வாயில் தண்ணீர் திறப்பது வழக்கம்.

கல்லிடைக்குறிச்சி, வெள்ளங்குளி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை வழியாக பிராஞ்சேரி பெரிய குளத்துடன் கன்னடியன் கால்வாய் நீர் இறுதியை அடைகிறது. அந்தக் குளம் நிரம்பிய பின்பு மேலும் சில குளங்களுக்குத் தண்ணீர் செல்கிறது. 33.95 கி.மீ. பாய்ந்தோடும் இக்கால்வாய் மூலம் நெற்களஞ்சியம் போல வயல்கள் இரு போகம் நெல்மணிகளைக் கொடுத்து வருகிறது. தாமிரவருணி நதியில் பருவமழைக் காலங்களில் வீணாக வெளியேறும் உபரி நீரை வறட்சியான பகுதிகளுக்குத் திருப்பும் வகையில் கன்னடியன் அணைக்கட்டின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வெள்ளங்குளி பகுதியில் கன்னடியன் கால்வாயில் மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து சேரன்மகாதேவி, திடியூர், மூன்றடைப்பு வழியாக ராதாபுரம் வட்டம் வரை வெள்ளநீர்க் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முதலாவது நதிநீர் இணைப்புத் திட்டம் என்ற பெயரைப் பெற்றுள்ள இத்திட்டம் நிறைவடையும்போது தாமிரவருணி- பச்சையாறு- கருமேனியாறு- நம்பியாறு ஆகிய நதிகளின் தண்ணீர் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தின் மழை மறைவு பகுதிகளில் அனைத்தும் சோலைகளாக மாறும் வாய்ப்பைப் பெறும் என்ற நம்பிக்கை விவசாயிகளின் மனதில் துளிர்த்துள்ளது. 

அரியநாயகிபுரம் தடுப்பணை: வரலாற்றுப் புகழ் கொண்ட திருப்புடைமருதூர், முக்கூடல் பகுதிகளைக் கடந்து இயற்கை எழில்கொஞ்சும் பகுதியில் அரியநாயகிபுரம் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து பிரியும் கோடகன்கால்வாய் அரியநாயகிபுரம், சங்கன்திரடு, கல்லூர், சுத்தமல்லி வழியாக ராஜவல்லிபுரம் வரை சுமார் 27 கி.மீ. தொலைவு பாசன நீர் கொடுக்கிறது. இக்கால்வாயின் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அரியநாயகிபுரம் அணைக்கட்டுப் பகுதியில் இருந்துதான் இப்போது திருநெல்வேலி மாநகராட்சி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க பல கோடி மதிப்பில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

பழவூர் அணைக்கட்டு: சேரன்மகாதேவிக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் தாமிரவருணியின் குறுக்கே பழவூர் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் வடபுறம் பழவூர் கிராமமும், தென்பகுதியில் தேசமாணிக்கம் மற்றும் மேலச்செவலும் உள்ளன. திருநெல்வேலி மாநகரப் பகுதியின் நிலத்தடி நீரைக் காக்க உதவும் பிரதான கால்வாயான பாளையங்கால்வாய், பழவூர் அணைக்கட்டில் தொடங்கி 42.6 கி.மீ. தொலைவு பாய்ந்தோடி வளம் சேர்க்கிறது. கருங்குளம் முதல் கோட்டூர் வரை சுமார் 10 கி.மீ. தொலைவு திருநெல்வேலி மாநகர பகுதியில் இக் கால்வாய் செல்கிறது.

சுத்தமல்லி அணைக்கட்டு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளை வளமாக்குவதில் சுத்தமல்லி அணைக்கட்டின் பங்களிப்பு முதன்மையானது. இந்த அணைக்கட்டில் இருந்து தாமிரவருணி நீர் நெல்லை கால்வாய் வழியாக புறப்பட்டு கரிக்காதோப்பு வழியாக நெல்லை நகரத்தை அடைகிறது.

மாநகரின் மிகப்பெரிய குளமான நயினார்குளம் நெல்லை கால்வாயின் நீரால் நிரம்புகிறது. திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்றான அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பொற்றாமரை குளத்திற்கும், நெடுஞ்சாலையோரம் உள்ள வெளித்தெப்பத்திற்கும் தாமிரவருணி தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் பெருமை நெல்லை கால்வாய்க்கு உண்டு. காலமாற்றத்தால் இப்போது கோயிலின் உள்தெப்பத்திற்குத் தண்ணீர் செல்லும் பாதை தூர்ந்து போய்விட்டது. அதனால் கோயில் வளாகத்தில் சேரும் அனைத்து மழைநீரும் ஒரு துளிகூட வீணாகாமல் தெப்பக்குளத்தில் தேங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளித்தெப்பத்திற்கு நெல்லைக் கால்வாயின் தண்ணீர் கிடைத்து வருகிறது. நயினார்குளத்தில் இருந்து குப்பகுறிச்சி வரையுள்ள 23 குளங்களுக்கு நெல்லை கால்வாய் தண்ணீர் செல்கிறது. அதன்மூலம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மருதூர் தடுப்பணை: பாளையங்கோட்டையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள மருதூர் கிராமத்தில் இந்த தடுப்பணை உள்ளது. விவசாயத்துக்கு மட்டுமின்றி, குடிநீருக்கும் நீர் வார்க்கும் பழமைமிக்க இந்த அணைக்கட்டு 4,097 அடி நீளம் கொண்டது. இந்த அணைக்கட்டு 1507-ஆம் ஆண்டு நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. மருதூர் அணையில் இருந்து மேலக்கால்வாய், கீழக்கால்வாய் என இரண்டு கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன.

மேலக்கால்வாய் மூலம் முத்தாலங்குறிச்சி குளம், குட்டக்கால் குளம், கொல்லிவாய் குளம், நாட்டார் குளம், செய்துங்கநல்லூர் குளம், தூதுகுழி குளம், கருங்குளம், பொட்டைக்குளம்,  கால்வாய் குளம், தென்கரை குளம், வெள்ளூர் குளம், நொச்சிக் குளம், கீழ புதுக்குளம், முத்துமாலை குளம், வெள்ளரிகாயூரணி குளம்,  தேமாங்குளம் ஆகிய 16 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

கீழக்கால்வாய் மூலம் செந்திலாம்பண்ணை, பட்டர் குளம், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா, பேரூர், சிவகளை, பெருங்குளம், பத்மநாபமங்கலம் கீழக்குளம், பாட்டக்குளம், ரெங்கநாதன் புதுக்குளம், எசக்கன் குளம், கைலாசப்பேரி, தருமனேரி, நெடுங்குளம் உள்ளிட்ட  15 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இரு கால்வாய்கள் மூலம் மொத்தம் 31 குளங்கள் பயனடைகின்றன. மருதூர் அணைக்கட்டால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிராமங்கள் பயன் பெறுகின்றன. சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த அணையின் சுவர் வழியாக தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், அணையில் தண்ணீர் தேக்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீர் வள, நில வளத் திட்டம் பகுதி-2-ன் கீழ் அணையை பலப்படுத்தும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அணையில் சுமார் 1,280 மீ நீளத்துக்கு ஏற்கெனவே உள்ள சுவரை ஒட்டி  உள்புறமாக சுமார் 1.75 மீ உயரத்துக்கு கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

'ஸ்கின் வால்' தொழில்நுட்பத்தின்படி 1,280 மீ நீளத்திற்கு அணையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, அணையின் உள்புறமாக தரைமட்டத்திலிருந்து 2 அடி உயரத்துக்கு 85 செ.மீ. தடிமன் கொண்ட கான்கிரீட் சுவரும், அதற்கு மேல் 20 செ.மீ. தடிமன் கொண்ட கான்கிரீட் சுவரும் எழுப்பப்படுகின்றன. இந்த சுவர் மழை வெள்ளத்தின்போது சேதமடையாமல் இருப்பதற்காக, ஏற்கெனவே அணையில் உள்ள பழைய சுவருடன் இரும்புக் கம்பி மூலம் இணைக்கப்படுகிறது.

இந்தப் பணிகள் வடகிழக்குப் பருவமழை காலத்துக்கு முன்னதாக முடிக்கப்பட்டுவிடும். இதன்பிறகு அணையிலிருந்து நீர்க்கசிவு முற்றிலுமாக தடுக்கப்படும். இதனால் மேலக்கால், கீழக்கால் விவசாயிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். மேலும் மருதூர் அணைக்கட்டு பகுதியிலிருந்துதான் தூத்துக்குடி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு தண்ணீர் செல்கிறது.

ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை: தாமிரவருணியின் கடைசி தடுப்பணையாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தடுப்பணை திகழ்கிறது. தாமிரவருணியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரே தடுப்பணை இதுதான். மற்ற தடுப்பணைகள் அனைத்தும் அதற்கு முந்தைய மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவையாகும். வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தில் பாளையங்கோட்டை நகரத்தில் பொலிவுடன் இருந்த மிகப்பெரிய கோட்டையில் பயன்படுத்தப்பட்ட கல்லை பெயர்த்தெடுத்துச் சென்று இந்த அணை கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்புள்ளது. இப்போது தூர்ந்துபோய் 8 அடி உயர தடுப்பணை மணல் மேடுகளால் நிரம்பிவிட்டது. அணையில் தற்போது ஒரு அடி தண்ணீரே தேங்குகிறது. இதனை தூர்வாரி சீரமைக்கக் கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com