கரைகளைத் தேடும் காவிரி பாசனக் கால்வாய்கள்

அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் தடம் பதித்தவையாகவும், தமிழ்ப் புலவர்கள் பலரும் போற்றிப் பாடிய பெருமைக்குரியது காவிரி.
கரைகளைத் தேடும் காவிரி பாசனக் கால்வாய்கள்

அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை, பட்டினப்பாலை, பத்துப்பாட்டு, பெரியபுராணம் உள்ளிட்ட  தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் தடம் பதித்ததாகவும், தமிழ்ப் புலவர்கள் பலரும் போற்றிப் பாடிய பெருமைக்குரியது காவிரி.

இத்தகைய பெருமைமிக்க காவிரி நதி பாயும் கரூர், திருச்சி மாவட்டங்களில் 17 வாய்க்கால்கள் உணவு, தானிய உற்பத்திக்கான அட்சயப் பாத்திரங்களாக விளங்குகின்றன. ஆனால், இந்த வாய்க்கால்கள் முறையாகப் பராமரிக்காமலும், ஆக்கிரமிப்புகளாலும், கழிவுநீர் கலப்பதாலும் குடிநீருக்குப் பயன்படுத்துவது குறைந்துகொண்டே வருகிறது.

கடைமடைப் பகுதிகளில் பாசனத்துக்கே தண்ணீர் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. புகளூர், நெரூர், வாங்கல், கிருஷ்ணாபுரம், தென்கரை, வடகரை, கட்டளை மேட்டு வாய்க்கால், பங்குனி, புள்ளம்பாடி, பெருவளை, அய்யன், ராம சமுத்திரம், காட்டுப்புத்தூர், ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான், புதுவாத்தலை, புதுகட்டளை மேட்டு வாய்க்கால் ஆகிய 17 வாய்க்கால்களும் ஆங்காங்கே கரைகள் சேதமடைந்து உருக்குலைந்து காணப்படுகின்றன.

கட்டளை மேட்டு வாய்க்கால் 134 கி.மீ. தொலைவும், உய்யகொண்டான் வாய்க்கால் 87 கி.மீ. தொலைவும், புள்ளம்பாடி வாய்க்கால் 90 கி.மீ. தொலைவும் உள்ளன. இதில்,  கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனத்தில் 22 ஆயிரத்து 550 ஏக்கர், உய்யன்கொண்டான் வாய்க்கால் பாசனத்தில் 32 ஆயிரம் ஏக்கர், புகளூர் வாய்க்காலில் 3 ஆயிரம் ஏக்கர், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் ஆயிரத்து 500 ஏக்கர் மற்றும் தென்கரை, நெரூர், வடகரை, காட்டுப்புத்தூர் வாய்க்கால் என மொத்தம் 17 வாய்க்கால்கள் மூலம் 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் இந்த 17 வாய்க்கால்களுக்கும் பாசன காலம் முழுவதுமாக தினமும் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் தேவை. மாயனூரிலிருந்து 1,100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். மொத்தம் 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெற வேண்டுமெனில் நெல் சாகுபடிக்கு மட்டும் சராசரியாக 33 டிஎம்சி தண்ணீர் தேவை.  இந்தத் தேவையை முழுமையாக வழங்கினாலும், கடைமடைக்கு எட்டவில்லை என்பதே விவசாயிகளின் பிரதான புகாராக உள்ளது.

புதிய கட்டளை மேட்டுக்கால்வாய், சரளைக்கற்கள் நிறைந்த பகுதியாக அமைந்துள்ளது. அங்கு 107 ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்க வேண்டியுள்ளதால் கடைமடைப் பகுதிக்குச் சென்றடைய 75 நாள்கள் ஆகிறது. அதுபோன்றே உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் 36 ஏரிகளுக்கும், புள்ளம்பாடி வாய்க்கால் மூலம் 28 ஏரிகளுக்கும், உய்யகொண்டான் வாய்க்கால் நீட்டிப்பு செய்து நீட்டிப்பு கால்வாயில் தண்ணீர் வழங்கப்படுவதாலும், கடைமடை வரை சென்றடைய முறையே 60 நாள்கள் வரை ஆகிறது என்பது பொதுப்பணித் துறையின் கருத்தாக உள்ளது.

உண்மை நிலவரம் என்னவெனில் 17 வாய்க்கால்கள் செல்லும் பாதை முழுவதும் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதே கடைமடைக்குத் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வாய்க்கால்களின் பெரும்பகுதி கரைகள் சேதமடைந்து தூர்ந்து போய் காணப்படுகிறது. ஆண்டுதோறும் குடிமராமத்துப் பணி, தூர்வாரும் பணி, கரைகளைப் பலப்படுத்தும் பணி என ஒவ்வொரு வாய்க்காலுக்கும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டாலும் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் தருணங்களில் கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை எனக் கோரி விவசாயிகள் போராடும் சூழல்தான் உள்ளது.

கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு ரூ. 335 கோடி: நீண்ட போராட்டத்துக்கு இடையே கட்டளை மேட்டு வாய்க்காலை சீரமைத்து மேம்படுத்துவதற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது. இந்தப் பணிகளை ரூ.335 கோடியில் நிறைவேற்றி முடிக்க தமிழக அரசின் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. இதன்படி, இந்த மாத இறுதியில் பணிகள் தொடங்கவுள்ளன.

மாயனூர் முதல் தாயனூர் வரை கட்டளை மேட்டு வாய்க்காலின் கரைகள் சிமெண்டு சாய்வு தளம் அமைத்து பலப்படுத்தப்படும். இந்த வாய்க்காலில் மதகுகள், நீர் வெளியேற்றும் கருவிகள், நீர் உள் வாங்கும் கருவிகள், நீர்ப்போக்கிகள் உள்ளிட்ட 174 கட்டமைப்புகள் உள்ளன. இவற்றில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டமைப்புகள் முற்றிலுமாக மாற்றப்படும். ஓரளவு சரி செய்யக்கூடிய கட்டமைப்புகளின் பழுதுகள் நீக்கப்பட்டு சரி செய்யப்படும். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அயிலை சிவசூரியன் பேசுகையில், காவிரியில் பாசனம் பெறும் 17 வாய்க்கால்களில் கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு மட்டுமே தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, இதர 16 வாய்க்கால்களுக்கும் நிதி ஒதுக்கிக் கரைகளைப் பலப்படுத்தி சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும். உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்து புனரமைக்கவும், புதிதாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், வாய்க்கால்களில் தண்ணீர் விரயமாகாது. கடைமடை வரை பாசனப் பகுதிகளுக்கு விரைந்து செல்லும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். 

காணாமல் போன ஏரிகள், குளங்கள்: தண்ணீர் அமைப்பின் செயலர் கே.சி. நீலமேகம் கூறியதாவது: 17 பாசனக் கால்வாய்கள் என்பது வெறும் பாசனத்தோடு நிற்பதில்லை. ஒவ்வொரு கால்வாயும் குறைந்தது 30 ஏரி, 100 குளங்களை நிரப்பும் வகையில் இருந்தவை. குறிப்பாக உய்யகொண்டான் கால்வாய் மூலம் மட்டும் 3,300 குளங்கள் தண்ணீர் வரத்து பெற்றன. இந்த குளங்கள், ஏரிகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிட்டன. வரத்து பகுதிகள் ஆக்கிரமிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான குளங்களையும், ஏரிகளையும் தேடும் நிலை உருவாகியுள்ளது. காவிரி பாசனக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் ஏரி, குளங்களுக்கான வரத்து பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில், தண்ணீர்த் தட்டுப்பாடு தவிர்க்க முடியாமல் போகும் என்றார்.

சிட்டிசன் ஃபார் உய்யகொண்டான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் தர்மர் கூறியதாவது: உய்யகொண்டான் கால்வாயை அழகுபடுத்தவும், கரைகளைப் பலப்படுத்தவும், ஆகாயத் தாமரைகளை அகற்றவும் வாரந்தோறும் அமைப்பின் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். 114 வாரங்கள் பணிகள் நடைபெற்றுள்ளன. திருச்சி மாநகரப் பகுதிக்குள் வரும் 8 கி.மீ. தொலைவுக்கு எங்களால் பணி செய்ய முடிகிறது. உய்யகொண்டான் முழுமைக்கும் கரைகளைப் பலப்படுத்தி, சிமெண்ட் தளம் அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாகக் கால்வாயில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். மாநகரப் பகுதி கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரைச் சுத்திகரித்த பிறகே உய்யகொண்டானில் கலக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com