பாழ்பட்டுப் போன பழங்காவிரி

காவிரி பல கிளை நதிகளாக, கிளை வாய்க்கால்களாக பிரிந்து பல்வேறு ஊர்களில், பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது.
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு பகுதியில் குப்பைகள் மற்றும் சாக்கடை நீரால் சூழப்பட்டு காணப்படும் பழங்காவிரி
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு பகுதியில் குப்பைகள் மற்றும் சாக்கடை நீரால் சூழப்பட்டு காணப்படும் பழங்காவிரி

 

'நடந்தாய் வாழி காவேரி, நாடெங்குமே செழிக்க, நன்மையெல்லாம் சிறக்க நடந்தாய் வாழி காவேரி..' என்ற பாடல் வரிகளுக்கேற்ப, அடர்ந்த மலைத்தொடரில் உருவாகி, தமிழகத்தில் ஓடும் காவிரி நதி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, மரங்களின் செழுமையான வளர்ச்சிக்கு உதவுவது, பாசனத்துக்கு பயன்படுவது, குளங்கள், குட்டைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீராதாரமாக விளங்குவது என, தான் ஓடும் இடங்களில் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பசுமையை பரப்பிச் செல்கின்றது.

காவிரி பல கிளை நதிகளாக, கிளை வாய்க்கால்களாகப் பிரிந்து பல்வேறு ஊர்களில், பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. அவ்வகையில்,  மயிலாடுதுறை அருகே மகாதானபுரத்தில், காவிரியில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால் பழங்காவிரி என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

மயிலாடுதுறை அருகே மகாதானபுரம் கிராமத்தில் காவிரியின் கிளை வாய்க்காலாக (ஏ பிரிவு வாய்க்கால்) பிரிந்து, மூவலூர், மாப்படுகை என ஊராட்சிப் பகுதிகளில் 4 கி.மீ தொலைவும், காவிரி நகர் வழியாக மயிலாடுதுறை நகர்ப்புறத்தில் 3.2 கி.மீ தொலைவும் என மொத்தம் 7.2 கி.மீ தொலைவுக்கு ஓடி மயிலாடுதுறையிலேயே (ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் பின்புறம்) முற்றுப்பெறுகிறது பழங்காவிரி.

அங்கிருந்து, புதிய பழங்காவிரி என்ற பெயரில் சுமார் 8 கி.மீ. தொலைவு ஓடி, காவிரியின் கிளை ஆறான மஞ்சளாற்றில் கலக்கிறது. மயிலாடுதுறை  நகராட்சியில் உள்ள 89 குளங்களில், சுமார் 15 குளங்கள் பழங்காவிரி மூலமாகவும், மேலும் சில குளங்கள் புதிய பழங்காவிரி மூலமாகவும் நீராதாரம் பெறுகின்றன. பழங்காவிரி கடந்த 2018-ஆம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டது. (பழங்காவிரி மற்றும் பட்டமங்கலம் வாய்க்கால் இரண்டும் சேர்த்து ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில்).

அதன்பயனாக, கூறைநாடு செம்மங்குளம், யானை வெட்டிக்குளம்,  கிளைச்சிறை பின்புறம் உள்ள மட்டக்குளம், நீதிமன்றம் எதிரில் உள்ள அங்காளம்மன் குளம், புளியந்தெரு குளம், மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள குளம், சந்திரிகுளம் உள்ளிட்ட சுமார் 10 குளங்கள் கடந்த ஆண்டு நீர் நிரம்பிக் காணப்பட்டன.

கூறைநாடு மசூதி குட்டை, திருவாரூர் சாலையில் உள்ள சங்கிலி ஓடை,  பெசன்ட் நகரில் உள்ள குளம் உள்ளிட்ட சில குளங்களில் ஆக்கிரமிப்பின் காரணமாக, தண்ணீர் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 

ஆனால், கடந்த ஓராண்டாகப் பராமரிப்பின்மை காரணமாக பழங்காவிரி மீண்டும் பாழ்பட்டுப் போய் உள்ளது. பல்வேறு வணிக நிறுவனங்கள்,  உணவகங்கள், வீடுகளில் இருந்து கழிவு நீர் நேரடியாக பழங்காவிரியில் திறந்துவிடப்படுவதால், இப்போதும் பல இடங்களில் பழங்காவிரியில் கழிவுநீர் தேங்கிநிற்கிறது.

நீராதாரங்களை பாதுகாக்க வேண்டும் என்று பேச்சளவில் கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், சம்பந்தப்பட்ட களத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்வதன் மூலமாகவும், பொதுமக்கள் சுயவிழிப்புணர்வோடு கழிவு நீரை நீர்வழிப் பாதையில் திறந்துவிடுவதைத் தவிர்ப்பதன் மூலமாகவே பழங்காவிரியை மீண்டும் நாம் புதுப்பொலிவுடன் காண முடியும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com