சோழர் காலத்தில் உறை கிணறு தொழில்நுட்பம்

உறை கிணறுகள் அமைத்தல் தொன்றுதொட்டு தமிழகத்தில் நடைபெற்ற ஒன்றாக இருக்கிறது. பட்டினப்பாலை, காவிரிபூம்பட்டினப் பகுதியில் எளிய நிலையில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையில் உறை கிணறு பற்றி பேசப்படுகிறது.
சோழர் காலத்தில் உறை கிணறு தொழில்நுட்பம்

 

ஏதோ ஒரு பொருளை அல்லது செயலை நினைவு கூறும் விதமாக குறிப்பிட்ட ஒருநாள் கொண்டாடப்பட்டு வருவது மரபாக இருந்து வருகின்றது. அவ்வகையில் இன்று உலகத் தண்ணீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 22-ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகின் விலைமதிக்க முடியாத தண்ணீரின் அருமையை உணர்த்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

அதனால் நம் தமிழ்ச் சமூகம் நீரின் அருமையை நன்கு உணர்ந்து நீராதாரங்களை சேமித்து பாதுகாத்து முறையாக பயன்படுத்துவது மிகுந்த தொழில்நுட்ப அறிவோடு செயல்பட்டதை பழந்தமிழ் நூல்களும் பின்வந்த கல்வெட்டுகளும், செப்பேடுகளும் தமிழகம் முழுவதும் இன்றும் காணக்கூடிய பயன்பெற்று வரக்கூடிய அணைக்கட்டுமானங்களும் அடுக்குத்தொடர் ஏரிகளும், குளங்களும் புதையுண்டு காணப்படும் உறைகிணறுகளும் நீர் மேலாண்மையில் தமிழர் கண்ட உயர்ந்த தொழில் நுட்பத்தை பறைசாற்றி இருக்கின்றன. 

நீரின்றி அமையாது என்பான் வள்ளுவப் பெருந்தகை. சங்ககால நூலான புறநானூற்றுப் பாடல்,

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவண்தட் டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே

இதில் எங்கெல்லாம் பள்ளம் இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

பெருங்கதை எனும் தமிழ்நூல் குளமும் பொய்கையும், வாவியும், கூவலும் தனித்தனி அமைப்புடைய நீர்நிலைகளை குறிப்பிடுகிறது. மக்களுக்கு குடிநீர் தரவல்ல கிணறுகளை குறையில்லாமல் செய்வது மிகமுக்கிய அறச்செயலாக மன்னனின் கடமையாக குறிப்பிடுகின்றது. இதனை திரிகடுகம் எனும் தமிழ்நூல் கூவல் குறைவின்றித் தொட்டானும் என்ற வரியால் உணர்த்துகின்றது.

பழந்தமிழகத்திலே மக்களுக்கு மட்டுமல்ல அஃறிணை உயிர்களுக்கும் கிணறுகளை வெட்டினர். ஐங்குறுநூறு, சீவக சிந்தாமணி, புறநானூறு, நற்றிணை போன்ற பழந்தமிழ் நூல்கள் கிணறுகள் பற்றி கூறுகின்றன. கிணறுகள் பற்றி கூறுவதோடு அக்கிணறு தோண்டுவதற்குத் தேவையான கருவிகள் குறித்தும் விளக்கியுள்ளன.

உறை கிணறுகள் அமைத்தல் தொன்றுதொட்டு தமிழகத்தில் நடைபெற்ற ஒன்றாக இருக்கிறது. பட்டினப்பாலை, காவிரிபூம்பட்டினப் பகுதியில் எளிய நிலையில் வாழ்ந்த மக்களின் குடியிருப்புப் பற்றி விவரிக்கும்போது உறை கிணறு பற்றி பேசுகின்றது.

தமிழகத்தின் பெரும்பகுதியை ஆட்சிச்செய்த இரண்டாம் நந்திவர்ம பல்லவன் சோழநாட்டில் நந்திபுரம் என்ற நகரை உருவாக்கினான். அங்கு ஆயிரம் லிங்கங்களுடன் கூடிய ஒரு சிவாலயத்தினையும் எழுப்பித்தான். நந்திபுரம் ஆயிரத்தளி என்று அழைக்கப்பட்ட இந்நகரம் பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழர்களாலும் போற்றப்பட்டது. சோழர் தங்கள் அரண்மனையை இங்கேயே அமைத்துக்கொண்டனர். சோழருக்குப் பின்வந்த பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவ்வூரில் தான் வீராபிசேகமும் விஜயாபிசேகமும் செய்து கொண்டான்.

இத்தகு சிறப்புவாய்ந்த வீரசிங்கம்பேட்டையில் எங்கெங்கு தோண்டினாலும் o ஒன்றரை அடி உயரமும் மூன்றடி விட்டமும் கொண்ட சுடுமண் உறை போன்று கட்டப்பட்ட கிணறுகளை காணமுடிகிறது.

காவிரிப் படுகையை ஒட்டி அமைந்துள்ள கிணறு நிலத்தடி நீரால் வளம்பெற்று அமைந்திருந்தன. மண் சரிந்து கிணறுகளை தூர்ந்து போகாமல் இருப்பதற்கும், ஒரு உறைக்கும் மற்ற உறைக்கும் இடையே உள்ள வெளிவழியாக ஊற்றுநீர் கிணற்றினுள் படிவதற்கு ஏற்றவகையிலும் இக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சையில் இருந்து குடந்தை செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் வெட்டாற்றின் வடகரையில் இருந்து கிழக்கு நோக்கி 5 கி.மீ சென்றால் தாழக்குடி எனும் சிற்றூர் உள்ளது. இவ்வூரினை ஒட்டிச்செல்லும் வெட்டாற்றின் உள்ளே உறை கிணற்றின் தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெட்டாற்றின் தரையிலிருந்து 20 அடி தொலைவில் ஆற்றின் உள்ளே இருபுறமும் சுடுமண்ணால் செய்யப்பட்ட உறைகிணறு கண்டறியப்பட்டது. ஆற்றினுள் அமைக்கப்பட்ட கிணற்றின் விளிம்பில் இருந்து 2 அடி விட்டமும் 2 அடி நீளமும் கொண்ட சுடுமண்குழாய்கள் ஒன்றன்மீது ஒன்று சொருகப்பட்டு குளத்திற்கு நீர் செல்லும் வழியாக அமைக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் ஊற்றுநீரால் நிரம்பிய கிணற்றிலிருந்து குழாய் வழியே வெளியே கொண்டு செல்லப்பட்டு குளங்களில் நிரப்பி மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்படுமாறு செய்தனர்.

அதேபோன்று தஞ்சை திருவையாறு இடையே அம்மன்பேட்டையிலிருந்து பணவெளி தென்பெரம்பூர் செல்லும் சாலையில் தஞ்சையிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நாகத்தி எனும் ஊராகும். இவ்வூரில் அரசுக்கட்டடம் கட்டுவதற்காக நிலத்தை தோண்டும்போது சோழர் கால உறைகிணறு கண்டறியப்பட்டது. சோழர்கள் காலத்தில் ஆற்காட்டு கூற்றத்தில் திகழ்ந்த இவ்வூரில் வெட்டாற்றின் கரையிலிருந்து சிலமீட்டர் தள்ளி உறைகிணறு கண்டறியப்பட்டது. நாகத்தி கிராமம் நாகத்தீவு என்றும் அழைக்கப்படுகிறது. நான்கு புறமும் நீரால் சூழப்பட்டு தனித்தீவாகவே இவ்வூர் இன்றும் உள்ளது. ஊரின் மேற்கே அமைந்துள்ள பணவெளி எனும் சிற்றூரில் பிரியும் வெட்டாறு நாகத்தியை நடுவில்கொண்டு கிழக்கே அம்மன்பேட்டைக்கு முன்னர் ஒன்று சேர்கிறது. ஆற்றின் நடுவில் அமைந்த இப்பகுதி நாகம் படம் எடுப்பதுபோல் அமைந்துள்ளதால் நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது.

பல்லவர் காலத்தில சிறப்புற்று விளங்கிய இப்பகுதியில் கண்டறியபட்ட இக்கிணறு 40 செ.மீ உயரம் 60 செ.மீ விட்டம் கொண்டு சுடுமண் உறைகளால் ஒன்றன்மீது ஒன்று சொருகி அமைக்கப்பட்டு கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

அதேபேன்று ஆற்காட்டு கூற்றத்தில் அமைந்த மற்றொரு ஊர் வரகூர் ஆகும். இவ்வூரில் தனியார் ஒருவரின் தோட்டத்தில குளம் வெட்டுவதற்காகக் தோண்டும் போது 5 அடி ஆழத்தில சோழர் காலத்து சுடுமண் உறைகிணறு கண்டறியப்பட்டது. ஒரு அடி உயரமும் 3 அடி விட்டமும் கொண்டு சுடுமண் உறைகள் ஒன்றின்மீது ஒன்று அடுக்கப்பட்டிருந்தது.

இருபக்கங்களில சிவப்பு நிறமும் உட்பகுதியில் கருப்பு நிறமும் கொண்டு விளங்கும் இவ்வுறை கட்டுமானம் சோழர் காலத்து கட்டுமானமாகும். சோழர் காலத்தில் இவ்வூர் ஆதனூர் என்று அழைக்கப்பட்டது. ஏதோ சில காரணங்களால் இப்பகுதியில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்து சேலம் நாமக்கல் மாவட்டத்திற்கு சென்றுவிட்டனர். பல நூறாண்டுகள் கடந்தும் இவ்வூரில் உள்ள ஆதனூர் கொல்லை என்ற இடத்தில் அமைந்துள் அய்யனார் கோயிலிற்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். நாராயண தீர்த்தரால் இவ்வூர் வரகாபுரி என அழைக்கப்பட்டது. வரகூரில் தங்கியிருந்த நாராயண தீர்த்தர் கிருஷ்ண லீலா தரங்கிணி என்ற பக்தி நூலை படைத்தார். இவர் நினைவாக கிருஷ்ண லீலா தரங்கிணி உற்சவ விழா இன்றும் நடைபெற்று வருகிறது. மேலும் இங்குள்ள பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மிகச்சிறப்பாக உறியடித்திருவிழா நடைபெற்று வருகிறது.

சோழநாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் உறைகிணற்றின் தடங்கள் இருந்து கொண்டே இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com