கடமையைச் செய்யும் மகத்தான நேரம் இது!

மனித குலத்திற்கான கடமையைச் செய்யும் மகத்தான நேரம் இது. அரசாங்கத்திடம் இருந்து நாம் வலியுறுத்திப் பெறுவதற்கு எத்தனையோ உரிமைகள் இருக்கின்றது.
கடமையைச் செய்யும் மகத்தான நேரம் இது!

மனித குலத்திற்கான கடமையைச் செய்யும் மகத்தான நேரம் இது. அரசாங்கத்திடம் இருந்து நாம் வலியுறுத்திப் பெறுவதற்கு எத்தனையோ உரிமைகள் இருக்கின்றது. நமக்கான உரிமைகள் என்பது அரசாங்கம் தனது மக்களுக்குச் செய்யும் கடமையாகும். சில நேரங்களில் நமக்கான உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தின் உதவியையும் நாடுகின்றோம். நமக்கான உரிமையை நிலைநாட்டிக்கொள்கின்றோம். 

அரசாங்கத்திடம் இருந்து நாம் கோரிப்பெறும் உரிமைகளைப்போலவே நாமாகவே அரசுக்குச் செலுத்த வேண்டிய சில கடமைகளும் இருக்கின்றது. இப்போது அதற்கான கட்டாயச் சூழல் எழுந்துள்ளது.

உரிமையும், கடமையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல, ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்க முடியாது. ஆனால், நம்மில் எத்தனை பேர் நமது கடமையைச் செய்திருக்கின்றோம்? என்றால் வெறும் கேள்விதான் தொங்கி நிற்கும். பதில்களைத் தேடித்தான் பார்க்க வேண்டும்.

நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் உரிமையும், கடமையும் சேர்ந்தே வரையறுக்கப்பட்டு உள்ளன. இதுநாள் வரை நாம் செய்ய வேண்டிய கடமையைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திருக்கலாம். அதற்காக நம்மை அறியாமலேயே நாம் பெரும் விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும். ஏனெனில் இனி நாம் கொடுக்கப்போகும் விலை சாதாரணமான ஒன்றல்ல. முன்னதை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். பின்னதை பார்க்க நாம் இருக்கமாட்டோம். 

எது நடக்கக்கூடாதோ அது நடந்து கொண்டிருக்கின்றது. மூன்றாம் உலகப்போர் என்ற ஒன்று இப்போது இல்லை. ஆனால், நமது கண்முன்னே ஒரு பேரழிவு அபாயம் நின்று கொண்டிருக்கின்றது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றி இன்றைக்கு உலகையே மிரள வைத்துக் கொண்டிருக்கின்றது கரோனா(கோவிட்-19) என்ற மிக மிக நுண்ணிய வைரஸ் கிருமி. மனித குலம் ஒன்று சேர்ந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சாதாரண வைரஸ் தொற்றின் பரவும் வீச்சிற்கும், கரோனா வைரஸ் தொற்றின் பரவும் வீச்சிற்கும் இடையே உள்ள வித்தியாசம்தான் அறிவியலாளர்களை அச்சமடைய வைத்துள்ளது. 

கரோனா வைரஸ் கிருமி பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி ஒவ்வொருவரும் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதுதான். நாம் ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டோடு தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வது என்பது மனித குலத்திற்குச் செய்யும் மகத்தான சேவையாகும். 

மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்ற அவப்பெயர் எப்போதும் உண்டு. அதைத் துடைத்தெறிவதற்கான காலம் இதைவிட வேறு ஒன்று இருக்கமுடியாது. 

ஒவ்வொருவரும் தன்னைச் சுத்தமாக வைத்துக்கொள்வதன் அவசியம் காலம் காலமாக நம் முன்னோர்கள் வலியுறுத்திய ஒன்றுதான். ஆனால் நாம் எதையும் ஒழுங்காகக் கடைபிடிப்பது இல்லை என்பதுதான் கசப்பான உண்மையாக இருக்கின்றது.

எச்சில் பழக்கம் என்பது நம்மோடு கூடப் பிறந்த ஒன்றாகவே இருந்து வருகின்றது. காகிதப் பணத்தை எண்ணுவதற்கும், புத்தகங்களின் பக்கங்களை புரட்டுவதற்கும் நாக்கை நீட்டி எச்சிலைத் தொடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.

பின்னால் யார் வருகின்றார்கள் என்ற உணர்வே இல்லாமல் வழியில் எச்சிலைத் துப்பிக்கொண்டுதான் இருக்கின்றோம். இந்த நிலையில் இருந்துதான் நாம் இப்போது எச்சில் திவலைகள் வழியாக பரவும் கரோனா வைரஸ் தடுப்புக் குறித்து சிந்தித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். 

நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, வருடம் இரண்டு என ஒவ்வொரு மனிதனும் சுய ஒழுக்கத்தோடு தன்னைப் பேணிப்பராமரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்கள் நமக்குக் கற்றுக்கொடுத்த தாரக மந்திரம்.

அதன்பிறகு அறிவியலின் துணைகொண்டு நாம் எவ்வளவோ தூரம் கடந்து வந்துவிட்டோம். ஆனாலும் கூட நாம் இன்றைக்கும் கைகழுவுவதன் அவசியத்தை வலியுறுத்தும் காலத்திலேயே இருக்கின்றோம்.

இயற்கையைப் பற்றியோ அல்லது நாம் வாழும் இந்த பூமிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையைப் பற்றியோ நாம் ஒருபோதும் கவலைப்பட்டதே கிடையாது. இன்றைக்கு வழிபாட்டுத் தலங்களை மூடியிருக்கின்றோம். இயற்கையை இறைஞ்சுகின்றோம்.

கண்களால் மட்டுமல்ல, சாதாரண நுண்ணோக்கியால் கூட பார்க்க முடியாத ஒரு நச்சுக்கிருமி உலகையே சிறைப்படுத்திவிட்டது. நமது தலைமுடியின் அகலத்தில் (நீளத்தில் அல்ல) தொள்ளாயிரத்தில் ஒரு பங்கு அளவு மட்டுமே உள்ள மிக நுண்ணிய நச்சுக் கிருமிதான் இந்த கரோனா. 

இந்தக் கரோனா வைரஸ் கிருமி தும்முவதன் மூலமாகவோ அல்லது இருமுவதன் மூலமாகவோ ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவது என்பதுதான் இப்போது அரசின் முன்பாக உள்ள மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.

உலகில் எந்த நாட்டிடமும் தடுப்பு மருந்து இல்லை. பரவிய பிறகு கட்டுப்படுத்துவது என்பது எவ்வளவு பெரிய வல்லரசாலும் இயலாத ஒன்றாகவே உள்ளது. எனவே பரவும் முன்னரே கட்டுப்படுத்துவதுதான் மனித குலத்தின் முன்பாக உள்ள ஒரே தீர்வாக உள்ளது. 

கரோனா விசயத்தில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. யாரும் நான் வல்லரசு என்று நெஞ்சை நிமிர்த்த முடியாது. எல்லோரும் இப்போது கைகழுவ வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றோம். 

‘மனிதம்’ என்ற ஒற்றைச் சொல்தான் இப்போது அனைவரின் கண் முன்பாகவும் நிற்கின்றது. இதுதான் இந்த உலகில் கடைசி வரை நிற்கும் என்ற உண்மையையும் இப்போது உலகம் கண்டுகொண்டது. நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வது என்பது கரோனாவைத் தனிமைப்படுத்தும் முயற்சியாகவே உள்ளது. 

இப்போது நரேந்திர மோடி அழைப்பு விடுக்கின்றாரா? அல்லது எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுகின்றாரா? என்பது முக்கியமல்ல. மிக மிக அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே இடம் பெயருவோம். பொதுப் போக்குவரத்தைத் தவிர்ப்போம். சுய பராமரிப்பைப் பேணுவோம். இதுதான் மனித குலத்திற்கான பாதுகாப்புக் கவசமாகும்.

மனித குலத்திற்கு சேவை ஆற்றுவதற்கான மகத்தான வாய்ப்பு ஒவ்வொருவரின் கைகளிலும் உள்ளது. நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது என்பதுதான் நாம் இப்போது நாட்டிற்குச் செய்ய வேண்டிய மிக முக்கியக் கடமையாகும். 

அரசாங்கம் நமக்கான கடமையைச் செய்ததா? என்று கேள்வி எழுப்ப இப்போது நேரம் இல்லை. நாம் நமது கடமையைச் செய்தோமோ? என்பதில்தான் மனித குலத்திற்கான விடுதலை இருக்கின்றது. 

இயற்கை நமக்கு எப்போதும் பாடம் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றது. நாம் கற்றுக்கொள்ளத் தயாராவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com