கரோனாவின் பாடம்: 'இது தவக்காலம்: மாற்றம் நம்மில் தொடங்கட்டும்'

கரோனா ஒரு புதிய ஆன்மிக வாழ்வு முறையை நமக்குச் சொல்லித்தர வந்துள்ள சமத்துவ ஞான தூதன். அது நமது ஊனக் கண்களைத் திறக்கிறது...
கரோனாவின் பாடம்: 'இது தவக்காலம்: மாற்றம் நம்மில் தொடங்கட்டும்'

கடந்த சில வாரங்களாக நாம் கரோனா பற்றியே பேசி வருகிறோம். சில ஆண்டுகள் முன் கடைகளிலும், பின் சாலையிலும்கூட ஒரு லிச்சி பழம் போலவும், சுற்றிலும் விரல்கள் முளைத்த டென்னிஸ் பந்து போலவும் விற்கப்பட்டது ஒரு பொருள். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஏராளமான குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களில் ஒன்றான இது ரப்பர் பந்தைப் போலத் துள்ளும். தரையில் பட்டு எழும்போது பல வண்ண ஒளி வீசி வியப்பூட்டும். இதுபோன்ற, ஆனால், கண்ணுக்குத் தெரியாத சின்ன வைரஸ்தான் கரோனா.

அன்று சீனா விளையாட்டுப் பொம்மையாக அனுப்பி விலையாக்கிக் கொண்டதைக் கண்ணுக்குத் தெரியாத இலவச கிருமியாகத் தந்து பின் விளையாடப் போகிறது என்று யார் கற்பனை செய்து பார்த்திருக்க முடியும்?

சீனாவின் தொழில் நகரமான வூஹான் ஒரு வினோத நோயால் முடங்கிப் போனது என்ற செய்தி முதன்முதலில் வந்தபோது, நம் அமைச்சர்களில் ஒருவர் கூட, சீனாவின் வணிகம் இனி நமக்கு வரும், அது நமக்குப் பொருளாதார லாபமே| என்றார்.

அடுத்து, இத்தாலியில் பாதிப்பு என்றபோதும் நாம் அசரவில்லை. நமக்கு வராது என்ற அதீத நம்பிக்கையில் இருந்தோம். டிரம்பை வரவேற்க லட்சக்கணக்கில் மக்களைத் திரட்டி மகிழ்ந்தோம்.

பின் தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர் எனப் பரவியதும் வெறும் செய்தியாகவே படித்தோம். நமக்கு வரும் என்று ஆட்சியாளர்கள்கூடக் கற்பனை செய்யவில்லை. அந்த ஜெர்மன் கவிதை போல, இன்று நம் கதவைக் கரோனா தட்டியபோது அதிர்ந்து உறைந்து போயுள்ளோம். 

பிரதமர் நாளை பேசப் போகிறார் என்ற அறிவிப்பு வந்தபோது அடுத்து ஒரு 'மன்கி பாத்'தான், இந்தியில் ஏதோ உரக்கக் கையாட்டிப் பேசுவார். மறுநாள் தமிழ்ச் சுருக்கம் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தோம். பிரதமர் தோன்றினார். அதுவரை பார்த்திராத புதிய முகம், புதிய தொனி, புதிய உடல் மொழி. அமைதி, ஆழம், வருத்தம், அச்சம், எச்சரிக்கை, குழப்பம் அத்தனையும் அவரிடம் வெளிப்பட்டது. மொழி புரியாவிட்டாலும் ஏதோ பெரிய ஆபத்து என்பது மட்டும் தெளிவானது. 

ஒருநாள் வீட்டுக்குள் இருங்கள், வெளியே வராதீர்கள், கவனமாக இருங்கள் என்றதை 'யோகா செய்யுங்கள்' என்று எப்போதும் கூறுவது போன்றதே என்றிருந்தோம். இருமும்போது கைக்குட்டையால் மூடிக் கொண்டு இருமுங்கள், மூக்கைத் தொடாதீர்கள், எச்சில் துப்பாதீர்கள்; கூட்டம் கூடாதீர்கள் என்றபோதும், வழக்கமான மருத்துவ அறிவுரையைத்தான் பிரதமர் தருகிறார் என்றிருந்தோம்.

இந்த அறிவுரையைத்தான் கடந்த 50, 60 ஆண்டுகளாகக் காச நோய் தினத்தில் தருகிறார்கள். அதுபோல இந்தக் காசநோய் தினத்திலும் (மார்ச் 24) மருத்துவ அறிவுரை என்று அலட்சியமாகக் கடந்து சென்றோம். காச நோயால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சாவது நம் கண்களை இன்னமும்கூட திறக்கவில்லை. கவனத்தை ஈர்க்கவில்லை. இந்த ஆண்டு காச நோய் தினம்கூடக் கவனிப்பாரின்றிக் கடந்து போனது. 
   
தொடக்கத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை எனும் வழக்கம் போன்ற பந்த் அரைகுறையாக முடியும் முன், மறு நாள் காலை 5 மணி வரை என்ற அறிவிப்பு வந்தபோது சற்றுத் தயங்கி நின்றோம். தேவையில்லாத தொல்லை. எதற்கோ அடிப்போடுகிறார்கள் என்ற சந்தேகக் கண்ணுடன்தான் பார்த்தோம். ஒரு தேசிய மருத்துவ அவசர நிலையின் வருகைக்கான எந்தச் சலனமும் நமது அரசு மருத்துவமனைகளிலோ, மருத்துவர்களிடமோ, ஏன் சுகாதாரத் துறை அமைச்சர்களிடமோகூடப் பெரிதாகத் தென்படவில்லை.     
 
அதன்பின் கரோனா தலைப்புச் செய்தியானது. தொலைக்காட்சிச் செய்தியில் பெரிய இடம், தினசரி விவாதம் என முக்கியத்துவம் பெற்றது. மார்ச் 31 வரை கடையடைப்பு, ஊரடங்கு என்றெல்லாம் தமிழக அரசு அறிவித்தது.

மீண்டும் பிரதமர் தோன்றினார். ஏப்ரல் 14 வரை சுய தனிமைப்படுத்தல் எனும் சுய சத்தியாகிரகச் சொல்லை உச்சரித்தார். வீட்டிற்குள்ளிருங்கள்; வெளியே வராதீர்கள் என்ற வேண்டுகோள் கட்டளையானது. சுய தனிமைப்படுத்தல் என்பது தெருவில் நடப்போரை, அடித்துக் கூட்டுக்குள் அடைக்கும் நிலையாக வளர்ந்தது. சுயக்கட்டுப்பாடு என்பது ஊரடங்கு உத்தரவாக, கட்டளையாக மாறிவிட்டது. 

மூன்று மாதங்கள் முன் காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, தலைவர்கள் வீட்டுக் காவல், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு என்றெல்லாம் வந்தபோது, யாருக்கோ என்று ஏற்றுக்கொண்ட நாம், அவை மென்மையாக, ராணுவமின்றி நமக்கு வரும்போது எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நம் நன்மைக்கு எனத் தொடரும்போதும் ஏற்பது கடினமாகவே உள்ளது. தயக்கம், சலிப்பு, எதிர்ப்பு, நான் வேலைக்குப் போகாமல் எப்படி? சம்பாதிக்காமல் எப்படி? நண்பர்களைக்கூடப் பார்க்காமல் எப்படி? புதிய சினிமா, விடுமுறை, மகிழ்ச்சி இல்லாமல் எப்படி? என்று ஆயிரம் கேள்விகள் அவரவர் நிலைக்கேற்ப ஒத்துழையாமை உணர்வுடன் எழுந்தது. பள்ளிகள், கடைகள், பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், திரையரங்குகள் என எவையெல்லாம் இல்லாமல் வாழ முடியாது என்று நினைத்தோமோ அவையெல்லாம் இல்லாமல் நாள்கள் கடந்துகொண்டிருக்கின்றன.

ஏழைகளைத்தான் தாக்குமென காச நோயை அலட்சியம் செய்தோம். பாலியல் பாவிகளைத்தான் எய்ட்ஸ் தாக்குமெனக் கவலைப்படாமல் உறை மாட்டினோம். ரத்தசோகையும், சத்துக்குறைவும் ஏழைகளுக்குத்தான் என பர்கர் சாப்பிட்டோம். ஆனால், கரோனாவோ ஏழை, பணக்காரன் பார்க்காது. படித்தவன், படிக்காதவன் பார்க்காது. மேல் ஜாதி, கீழ் ஜாதி பார்க்காது என்பது புரிந்தபின், எலிபோல வலைக்குள் பதுங்கத் தொடங்கிவிட்டோம். கூவிக் கூவி 20 ரூபாய்க்கு சிக்கனும் மட்டனும் தந்தாலும் வாங்க ஆளில்லை. 

கரோனா இது ஒரு சமத்துவ யுகம் எனப் பிரகடனம் செய்துள்ளது. பணக்கார நாடுகள் தப்பிக்கும், ஏழை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளே சாகும் என்ற சமத்துவமற்ற நோய்களின் காலம் போய், சமத்துவம் எனும் பிசாசு உலகை ஏற்றத்தாழ்வின்றி அச்சுறுத்துகிறது. இளவரசர் சார்லஸைக்கூடக் கரோனா விட்டு வைக்கவில்லை. ஸ்பானிய இளவரசி இறந்தேபோய்விட்டார்.

சாவுகள் பல்லாயிரங்களாகப் பெருகியபோது கரோனா உலக மருத்துவ அவசர நிலையாகிவிட்டது. பொருளாதாரத்தை நிர்ணயித்த பங்குச்சந்தை சரிகிறது. வால்ஸ்ட்ரீட்கள் மூடப்படுகின்றன. இரண்டாம் உலகப் போரைக் காணாதவர்கள், காண்கிறார்கள். கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்பதைப் புதிதாக உணரத் துவங்கியுள்ளோம்.     

அலட்சியம், எதிர்ப்பு என்பன அடங்கி கவனம், கவனிப்பு, பணிவு, ஏற்பு என்பன இடம்பெறத் துவங்கியுள்ளன. எது சரியான வாழ்வு, எது தவறான வாழ்வு முறை என்பது புரியத் தொடங்கியுள்ளது. கொந்தளித்த மனம் மெல்லக் குளிர்ந்து அடங்கத் துவங்கியுள்ளது.   

பொருளற்ற, பொருள் தேடிய பரபரப்பு வாழ்வு தேவையற்றது எனப் புரியத் தொடங்கியுள்ளது. மைதாஸின் பேராசை வாழ்வு உயிரற்றது என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. காசிம் போல் பொற்குவியலின் நடுவே சாவது பொருளற்றது என்பது தெரிகிறது.

கரோனா ஒரு புதிய ஆன்மிக வாழ்வு முறையை நமக்குச் சொல்லித் தர வந்துள்ள சமத்துவ ஞான தூதன். அது நமது ஊனக் கண்களைத் திறக்கிறது. பழைய பைத்தியம் படீரென விலகுகிறது. ஒளி பிறக்கிறது. புரட்சிகள் சொல்லாத புதிய பாடத்தை வைரஸ் விரைவாகப் புரியச் செய்கிறது. சென்ற கணம் வரை முடியாது என்றவற்றையும் முடியும் என உணரச் செய்துள்ளது. தவம், ஞானம், துறவு, துறப்பு, நிர்வாணம் என்பன ஏதோ சிலருக்கு என்பதை மாற்றி என்னில், என்னுள், எனக்காக நிகழ்வது புரிகிறது. கரோனா பூத வேடமிட்டு மிரட்டும் ஞான ஆசான், சமத்துவ தூதன் எனப் புரிகிறது. என் தினசரி வாழ்வு முறை, சிந்தனை, செயல், சொல் எல்லாம் என்னை அறியாமல் மாறி வருகிறது. பயத்தால் தொடங்கிய மாற்றம், இயல்பு ஆக மாறுகிறது. சுடுகாட்டு வைராக்கியமாகி விடாமல் நிரந்தரமாக்கும் திறன் என்னைச் சுற்றிய உலகம் சார்ந்ததே. உலகம் புரட்டிப் போடப்பட வேண்டும். புதிய நீதி, புதிய வேதம், புதிய வாழ்வு, புதிய கணக்கு தொடக்கப்பட வேண்டும். 

பிரதமர் 14 ஆயிரம் கோடி ரூபாயை கரோனாவுக்கு ஒதுக்கியுள்ளார். 130 கோடி மக்களுக்கு, அசுரப் பசிக்கு அள்ளி வீசும் அவல் பொரி அது. இனி பாகிஸ்தானுடன், சீனாவுடன், காஷ்மீருடன், வடகிழக்குடன் சண்டையில்லை. எனவே, ராணுவ பட்ஜெட் ஒன்றரை லட்சம் கோடியை மருத்துவ நலவாழ்வுக்கு ஒதுக்குவதே மருத்துவ நீதி. நோய் எதிர்ப்புத் திறன் வளர்ப்பதைத் தவிர குணமாக்கும் மருந்தில்லை, தடுப்பூசி இல்லை என்கிறது அரசும் அறிவியலும். நமது உடலின் நோய் எதிர்ப்புத்திறன் ஆரோக்கியமான சமச்சீர் உணவால் மட்டுமே வரும். 63 விழுக்காடு மக்கள் அரைப் பட்டினியுடன் உறங்கப் போகும் நாட்டில் நோய் எதிர்ப்புத் திறன் என்பது ஏட்டுச் சுரைக்காயே. 

எல்லோர்க்கும் மூன்றுவேளையும் சத்தான உணவு தரும் மன்னா, மணிமேகலையின் அட்சயப் பாத்திரம், வள்ளல் பெருமானின் அணையா அடுப்பு, ஒன்றரை லட்சம் கோடி நிதியால் மட்டுமே முடியும். பிரார்த்தனை, தியானம், தவம் எதுவும் அதைத் தராது. 500 கோடி செலவில் திருமணம் ஒரு புறம், அரை வயிற்றுச் சோறு மறுபுறம் எனும் சமத்துவமற்ற சமூகம் கரோனாவை ஒழிக்காது. பரந்து கெடுக உலகியற்றியான் என அறம் பாடுகிறது கரோனா. ஆள்பவர்கள் கேட்கட்டும். அவர்களின் அலிபாபா குகைகள் திறக்கட்டும். 

வெங்கடாசலபதியும் அருணாச்சலேசுவரரும் வாடிகன் தேவாலயமும் மெக்காவும்தான் மூடப்பட்டன. ஆராதனைகள், பக்த கோஷங்கள், தீபாராதனைகள் எனப் பூசாரிகள் தயவு ஏதுமின்றி கடவுள்கள் நிம்மதியாக உள்ளே உள்ளார்கள். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்ற சித்தர் ஞானம் சுடர் விடுகிறது. கடவுளர்களெல்லாம் பூட்டப்பட்டாலும், அவர்களின் தளங்கள் திறந்தே கிடக்கின்றன.

திருப்பதி மலையை, திருவண்ணாமலை மலையை, திருமால் உறங்கிய கடலைத் தாயாக அமுதூட்டி வாழ்விக்கும் நதிகளை, உயிர் தரும் காற்றை, தீபமாகும் நெருப்பை, திக்குகளை வணங்குங்கள் என்கிறது. அவையே உண்மைத் தெய்வங்கள். அவற்றுள் நாம் புதைத்த பொம்மைகளே ரூபங்கள். இயற்கையே கடவுள் என்பதை மூடிவைத்த கோயில்கள் உணர்த்துகின்றன. பரிசேயர்களைச் சாட்டை கொண்டு விரட்டிய ஏசுப் போலப் பூசாரிகளும், சாமியார்களும் வெளியேற்றப்பட்டனர். முக்திக்கு வழி விற்ற கார்ப்பரேட் ஸ்வாமிஜிகளைக் காணவில்லை. உண்மை பக்தி, உள்ளம் திருக்கோவில் என்பது புரிகிறது. அபிஷேகம் போதும், உன் கையைக் கழுவு என்கிறது. திருவிழாக் கூட்டங்கள், சிவராத்திரி ஆட்டங்கள் எதுவும் வேண்டாம். தனித்திரு, தவிர்த்திரு என்கிறது உண்மை ஆன்மிகம். தெய்வம் இருப்பது எங்கே, அது இங்கே வேறெங்கே என உணரும் காலமிது. எல்லா உயிரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறெதுவும் சிந்திக்காதவர்களாக இரண்டு மீன்களையும் ஐந்து அப்பங்களையும் கொண்டு உலகின் பசியாற்றும் தேவ குமாரர்களாக நாம் ஆக முடியும் என்பதை உணர்த்தும் காலமிது.      
  
நம் தேவைகள் மெல்ல மெல்லக் குறைகின்றன. நமது ஆடம்பரங்கள் நம்மை விட்டு மெல்ல விலகுகின்றன. சலவைச் சட்டை, ஷேவிங் பௌடர், சென்ட் எல்லாம் தேவையிழந்து போகின்றன. காரோட்டம் நின்று போனது. பெட்ரோல் காசு மிச்சமானது. செலவு செய்ய வாய்ப்பே இல்லை. சம்பாதிக்கத் தேவையில்லையோ எனக் கேள்வி எழுகிறது. வசதி படைத்தவர்களைச் சார்ந்து வசதியற்றவர்கள் வாழ்கிறார்கள் என்ற மமதை சரிந்துள்ளது. தன் வேலைகளைக்கூடத் தானே செய்துகொள்ள இயலாதவர்களாக எளிய மனிதர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்கள்தாம் தான் என்பதை உணரச் செய்துள்ளது. மனைவியின் உழைப்பு புரிகிறது. பக்கத்திலிருப்பவர் துன்பம் காணப் பெறாத ஞானிகளாய் மாறுகிறோம். உலகின் கரிக்காற்றுச் சுமை குறைகிறது. கிரேடா துன்பர்க், லிசி ப்ரியா சிறுமிகளின் கோபத்தின் நியாயம் புரிகிறது. காற்று களங்கமின்றித் தெளிவாகிறது. பக்கத்து மரக்கூட்டில் முனகும் குருவிக்குஞ்சின் குரலும் கேட்கிறது. மினரல் வாட்டர் வரவில்லை. காய்ச்சிக் குடிக்கிறேன். சுவை மாற்றம் புரிகிறது. இதுபோதும் என்று தோன்றுகிறது. அதிகம் சாப்பிடவில்லை. ஆடம்பரத் திருமண விருந்து விரயம் நின்று போனது. சிக்கனம் புரிகிறது.  வாங்கி அடுக்கி அழகு பார்த்த புத்தகங்களைப் படிக்கிறேன். 1960-களின் சுசிலா, ஜேசுதாஸ், கண்ணதாசன், பட்டுக்கோட்டை மீண்டும் என் காதுகளை மட்டுமல்ல, மனதிலும் நிறைகின்றனர். குடும்பம் குழந்தைகள் தெரிகின்றனர். சிந்திக்க மறந்த உறவுகளுடன் தேடிப் தேடிப் பேசுகிறேன். 

புதிய அரசியல் புரிகிறது. பணம் படைத்த அமெரிக்காவும், உலகைச் சுரண்டிய பிரிட்டனும், போர் வெறி பிடித்த ஜெர்மனியும், புதிய முதலாளித்துவ ஏகாதிபத்தியமாகத் துடிக்கும் சீனாவும் பெரிய வல்லரசுகள் என்ற மாயை விலகி குட்டிக் கியூபாவே நல்லரசு என்பது புரிகிறது. தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் என்றது போல சோவியத்தின் மரணம், அமெரிக்காவின் தடைகள் என எல்லாம் வென்று மார்க்சியத்தையும் காந்தியத்தையும் இணைத்து கிராம சுயராஜ்யம், தன்னிறைவு கிராமம், இயற்கை விவசாயம், சிக்கன வாழ்வு, ஆயுத முட்டாள்தனத்திற்குச் செலவிடாமல் கல்வி, மருத்துவத்தை இலவசமாக அனைவருக்குமாக்கிய கியூபா இன்று முன்னிற்கிறது. இன்னா செய்தாரை மன்னித்தல் அவர் நாண நல்லது செய்தலே என இத்தாலிக்கும் அமெரிக்காவுக்கும் மருத்துவப் படை அனுப்பி வெல்கிறது கியூபா.

வணிகமயமாக்கப்பட்ட முதலாளித்துவக் கல்வி, புனிதமான மருத்துவத்தையும், கல்வியையும், கலைகளையும், ஆன்மிகத்தையும் சந்தைச் சரக்காக்கிவிட்டது எனக் குற்றம் சாட்டுவார் மார்க்ஸ். இத்தனை கேடுகெட்ட வணிகச் சூழலிலும், தன்னலம் பாராது தன்னுயிர் ஈந்தும் மன்னுயிர் காக்கும் உன்னதச் சேவையாளர்கள் நாங்களே. எனது மருத்துவ சகோதரர்கள் உலகெங்கும் காவல் தேவதைகளாகப் பணியாற்றி வருகின்றனர். இந்தோனேசியாவில் கரோனா நோயாளிகளுக்குப் பணியாற்றிய மருத்துவ சகோதரர் ஹபியோ அலி இறந்தும் மருத்துவ சேவையின் உன்னதச் சான்றாக, பூமியின் சாரமாக மருத்துவத் துறையின் துருவ நட்சத்திரமாக என்றும் வழிகாட்டுவார்.  

கரோனா 30 நாள்களில் மடிந்துபோகும் அற்ப ஆயள் கொண்ட வீரிய சளியே. மருந்தின்றியும் விலகிப் போகும். தனிமை கண்டதுண்டு, அதில் இன்பம் காணும் சித்தர் மனம் பெறு என்கிறது. இந்தத் தவக் காலத்தில் அகம் நோக்கிய அகப்பயணம் செய்வோம். நம்மை உணர்வோம். நம்மைச் சீர்திருத்திக் கொள்வோம். மனிதனைத் திருத்தினால் உலகம் திருந்தும். மாற்றம் என்பது நம்மில் தொடங்கட்டும். நாமே மாற்றத்தின் முதற்புள்ளி. நம் வாழ்வு முறைகளை, சிந்தனைகளை, கற்பித்தல்களை மாற்றுவோம். அதற்கான பயிற்சிக்காலம் இது. இது தண்டனைக் காலமல்ல. அகத்தாய்வுக் காலம். போலி ஆன்மிகத்தின் முடிவுக் காலமாகட்டும்.  

இயற்கையை வழிபடுவோம். உடைமை வெறி துறப்போம். பிறர்க்காக வாழ்வாம். குடும்பம் போற்றுவோம். பருவநிலை மாற்றமெனும் பேரழிவுக்கு முன் வந்த எச்சரிக்கை மணி கரோனா. டைனாசர் போலப் பூண்டற்றுப் போய் விடாமல் வாழ்வதும் முடிவதும் நம் கைகளில். கொற்றவையாகக் கோபத்துடன் பார்த்த கிரேடாவின் சினம் தணிக்க இந்தக் கரோனாபயத் தனிமை நமக்கு அறிவியல் தவக்காலமாகிப் பாடம் சொல்லட்டும். மாறுவோம். மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com