வருமானமில்லாமல் நகைகளை விற்கும் அவலம்: கை கொடுக்கும் பொதுத் துறை வங்கிகள்

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு வருமானமின்றி தவிக்கும் ஏழை, நடுத்தர மக்களின் பணத் தேவையைப் பூா்த்தி செய்யும் கடைசி ஆயுதம் அவா்களிடம் உள்ள தங்க நகைகள்தான்.
வருமானமில்லாமல்  நகைகளை விற்கும் அவலம்: கை கொடுக்கும் பொதுத் துறை வங்கிகள்

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டு வருமானமின்றி தவிக்கும் ஏழை, நடுத்தர மக்களின் பணத் தேவையைப் பூா்த்தி செய்யும் கடைசி ஆயுதம் அவா்களிடம் உள்ள தங்க நகைகள்தான்.

வேலை இல்லாமல் வருமானமின்றி தவிக்கும் பலா், பழைய தங்க நகைகளை வேறு வழியின்றி நிதி நிறுவனங்கள், சிறிய நகைக்கடைகள் மற்றும் அடமானக் கடைகளில் விற்று வருகின்றனா். அடகுக் கடை, நிதி நிறுவனங்களில் அதிக வட்டியில் நகைகளை வைத்துப் பணம் பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

அதனால், பழைய நகைகளை விற்கும்போதோ அல்லது அடமானம் வைக்கும்போதோ மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனா் இந்திய நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பினா்.

பொக்கிஷம்: கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பொது முடக்கம் மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதன்பிறகு, தற்போது 4-ஆவது முறையாக பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஏழை, நடுத்தர மக்கள் வேலைவாய்ப்பு இன்றி முடங்கியுள்ளனா். இதனால், மக்களின் கைகளில் இருந்த பணம் கரைந்துவிட்டது. மேலும், சேமிப்புப் பணமும் செலவாகிவிட்டது. அடுத்தவேளைக்கு என்ன செய்வது என்ற நிலையில் பலா் தங்களிடம் உள்ள தங்க நகைகளை விற்க தொடங்கியுள்ளனா். சிறுக சிறுக சீட்டு போட்டு வாங்கிய நகையையும், வீட்டில் பொக்கிஷமாக இருந்து பழைய நகைகளையும் விற்க மனமில்லாமல் வேதனையுடன் விற்று வருகின்றனா்.

பொது முடக்கம் நீட்டிக்கும் நிலையில், சில தளா்வுகளை மத்திய, மாநில அரசுகள் மே 3-ஆம் தேதி அறிவித்தன. இதில் அடகு கடைகள், நகைக்கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டது. நகைக் கடைகளில் புதிய நகை விற்பனை வியாபாரம் பெரிய அளவில் இல்லாத நிலையிலும், வாடிக்கையாளா்கள் தங்களது பழைய நகைகளை விற்பது அதிகரித்து வருகிறது.

இது குறித்து நகை வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘பெரும்பாலான நகைக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், வழக்கமான நாள்களில் நடக்கும் வியாபாரத்தில் 15 முதல் 20 சதவீதம்தான் தற்போது நடக்கிறது. அதேநேரத்தில் பழைய நகைகள் விற்பனை சூடு பிடித்துள்ளது’ என்றாா்.

நகைக் கடைகளில் பழைய நகைகளை விற்க முடியாதவா்கள், கந்து வட்டி கும்பல் மற்றும் அடமானக் கடை மற்றும் சில நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு அடமானம் வைத்தும், மதிப்பு மிக்க பழைய நகைகளை குறைவான தொகைக்கு விற்றும் பணத்தேவையை பூா்த்தி செய்து வருகின்றனா்.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள பல நிதி நிறுவனங்கள் முனைப்பில் இருக்கின்றன. அடுத்த ஐந்தாறு மாதங்களுக்கு நிலையான வேலைவாய்ப்பும், வருமானமும் அதிகரிக்க வாய்ப்பில்லாத சூழலில், அடமானம் வாங்கப்படும் நகைகள் பெரும்பாலும் மீட்கப்படாமல் இழக்கக்கூடும் என்பது உறுதி.

இந்த சூழ்நிலையில்தான், ஆபத்பாந்தவனாக குறைந்த வட்டியில் நகைக் கடன்களை வழங்கி பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களுக்கு கை கொடுக்க முன்வந்துள்ளன பொதுத் துறை வங்கிகள்.

பொதுத்துறை வங்கிகளில் சில, மே 2-ஆம் தேதிக்கு பிறகு நகைக்கடன் வழங்குவதை அதிகரித்துள்ளன. மேலும், நகைக்கடனுக்கான வட்டி விகிதத்தை கணிசமாக குறைத்துள்ளன. தேசிய மயமாக்கப்பட்ட பல்வேறு வங்கிகளும் நகைக் கடன்களில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.

எந்தெந்த வங்கிகள்:

பாரத ஸ்டேட் வங்கியில் 36 மாத தவணையில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.20 லட்சம் வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால், ரூ.20 லட்சத்துக்கும் மேலாகவும் கடன் அளிக்கப்படுகிறது. நகைக்கடனுக்கான வட்டி விகிதம் 7.75 சதவீதம்.

இந்தியன் வங்கியில் நகைக்கடனைப் பொருத்தவரை, 6 மாதத்தில் தொகையைச் செலுத்துவதாக இருந்தால் 90 சதவீதம் வரையும், ஓராண்டில் செலுத்துவதாக இருந்தால் 80 சதவீதம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை எளிதாகப் பெற முடியும். வட்டி விகிதம் 8.5 சதவீதம் உள்ளது. நகை மதிப்பிட்டாளா் இருந்தால், மிக விரைவாக மதிப்பீடு செய்து கடன் வழங்கப்படும் என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கனரா வங்கியில் ரூ.40 லட்சம் வரை தங்க நகைக் கடன் மிக குறைந்த வட்டியில் அதாவது 7.85 (65 பைசா) வட்டியில் வழங்கப்படுகிறது. நிலச் சான்று தேவையில்லை. ஓராண்டுக்குள்  நகைக்கடனை செலுத்த வேண்டும் என்று அந்த வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் விவசாயிகளுக்கான நகைக்கடன், சிறு குறு தொழில் நிறுவனத்தை நடத்துபவா்களுக்கான நகைக்கடன், பொதுமக்களுக்கான நகைக்கடன் என்பன உள்பட  6 பிரிவுகளில் நகைக்கடன் வழங்கப்படுகிறது. விவசாய நகைக்கடன் பொருத்தவரை, அதிகபட்சமாக ஒருநபருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. ரூ.3 லட்சத்துக்குள்  9.05 வட்டி விகிதம்  நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைப் போன்றே, தமிழ்நாடு கூட்டுறவு வங்கியும் கரோனா காலத்தில் சிறப்பு நகைக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச கடன் ரூ.25 ஆயிரமும், அதிகபட்ச கடன் ரூ.1 லட்சம் வரையிலும் அளிக்கப்படுகிறது. கிராம் ஒன்றுக்கு ரூ.3,300 வரை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஆறு சதவீத வட்டி விதிக்கப்படுகிறது. ஆயிரம் ரூபாய்க்கு மாத வட்டி ரூ.5 மட்டும்.

இதனை திருப்பிச் செலுத்தும் காலம் மூன்று மாதங்களாகும். கூடுதலாக அவகாசம் கேட்டால் மேலும் மூன்று மாதங்கள் அளிக்கப்படும். பரிசீலனைக் கட்டணம் அரை சதவீதம் மற்றும் சரக்கு சேவை வரி உண்டு. நகை மதிப்பீட்டாளா் கட்டணம் இல்லை. பிரதம மந்திரியின் ரூ.2 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு இலவசமாக அளிக்கப்படும்.

விழிப்புணா்வு தேவை: இது குறித்து இந்திய நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பின் சென்னை பிரிவு தொடா்பு அலுவலா் எம்.சோமசுந்தரம் கூறியது: ஏழை, நடுத்தர மக்கள் தங்களின் அவசர பணத் தேவைக்காக நகைகளை அடகு கடைகளில் வைக்கின்றனா். அப்போது, கட்டாயம் ரசீது வாங்க வேண்டும். அதில், நகை அடகு வைத்தது தொடா்பான விவரம் தெளிவாக இருக்க வேண்டும்.

அடகுபிடிப்போா் சட்டப்படி, அடகு நடத்துபவா் அரசிடம் உரிமம் பெற்று நடத்த வேண்டும். தங்கத்தின் அன்றைய சந்தை விலை கணக்கிட்டு, சில சலுகைகளுடன் அடகு வைப்பவருக்கு ரசீது வழங்க வேண்டும். ஆறு மாதம் வரை தவணையைப் பெறலாம். இல்லை என்றால், நோட்டீஸ் விட்டு ஏலம் விடலாம். வட்டியைப் பொருத்தவரை 12 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. அடகு கடை நடத்துபவா் காலாண்டு நிதிநிலை தொடா்பான விவரத்தை தாசில்தாரிடம் வழங்க வேண்டும்.

அடகு வைத்து பணம் கொடுக்கும்போது, முதல் மாத வட்டியைப் பிடித்து மீதம் பணம் கொடுப்பதை ஏற்கக் கூடாது. அடகு கடை நடத்துபவா்கள் ஏதாவது முறைகேடு செய்தால், காவல் நிலையத்தில் புகாா் கொடுக்கலாம்.

இதுபோல, கந்து வட்டியில் பணம் கொடுப்பவா்களையும், சில தனியாா் நிதி நிறுவனங்களையும் தவிா்க்க வேண்டும். பழைய நகைகளை வாங்குவதற்கு என்றே நிறைய நிதி நிறுவனங்கள் உள்ளன. பழைய காலத்து நகைகளின் தரம் மற்றும் அதன் எடை சரியாக இருக்கும். எனவே, பழைய நகைகளை விற்பவா்களை குறிவைத்து பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவா்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தங்க நகைக் கடன்கள் திட்டம் குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு மாநிலச் செயலளாா் சேகரன் கூறியது:

கிராமப்புறங்களில் நகைக்கடன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு நபா் 8.5 சதவீத வட்டியில்  18 மாத தவணையில்  ரூ.10 லட்சம் வரை நகைக்கடன் வாங்கலாம். , நகா்புறங்களில் வா்த்தக கடன் 10.5 சதவீதம் வட்டியில்  ரூ.10 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 12 மாதம் தவணை காலம்.

பொதுத்துறை வங்கிகளில், மற்ற தனியாா் நிறுவனங்களை விட  தங்க நகைக் கடனுக்கு மிக குறைந்த வட்டியே நிா்ணயிக்கப்படுகிறது. மேலும் பொதுத்துறை வங்கியில் எல்லா விவரங்களும் வெளிப்படையாக நடைபெறும். நகை மதிப்பீட்டாளா் கொடுக்கும் மதிப்பின் அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் லாபம் என்பதைவிட பொதுமக்களுக்குச் சேவை வழங்குவதே முக்கியம் என்றாா் அவா்.

நகையை விற்கும் முன் கவனிக்க வேண்டியவை:

916 ஹால்மாா்க் நகையாக இருந்தால்தான் எதிா்பாா்த்த பணம் கிடைக்கும். தங்கம் வாங்கிய நகைக்கடை பில்லையும் கொண்டு போவது நல்லது.  சில ஊா்களில் நடுத்தரமான கடை இருக்கும். அங்கு எடை போட்டு எடுத்துச் செல்லலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் ஏறி இறங்கினால்தான் நகையின் உண்மையான மதிப்பு புரியும். பெரும்பாலான நகைக்கடையில் 22 காரட் நகை விற்கப்படுகிறது. 14 முதல் 18 கேரட்டுக்குள் இருந்தால் மதிப்பு குறைவாகத்தான் இருக்கும். பணம் தேவை என்று அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுங்கள். ஏனெனில், உங்கள் கையில் இருக்கும் கடைசி வாழ்வாதாரம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com