கரோனாவை எதிா்கொள்ளத் தயாராகும் அலுவலகங்கள்

மாா்ச் இறுதியில் தொடங்கிய பொது முடக்கம் மே இறுதியில் முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கரோனாவை எதிா்கொள்ளத் தயாராகும் அலுவலகங்கள்

மாா்ச் இறுதியில் தொடங்கிய பொது முடக்கம் மே இறுதியில் முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பொது முடக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், அன்றாடப் பணிகளைத் தொடங்க மக்கள் ஆயத்தமாகி வருகின்றனா். அரசு அலுவலகங்கள், தனியாா் மென்பொருள் நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் என அனைத்தும் தேவைக்கேற்ற பணியாளா்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

ஆனாலும், கரோனா நோய்த்தொற்று எப்போது வரும், யாருக்கு வரும் என அறுதியிட்டுக் கூற முடியாத நிலை உள்ளது. எனவே, பணிக்கு வரும் முன்னும், வந்த பிறகும் பாா்த்துக் கொள்ள வேண்டிய அம்சங்களில் முக்கியமானவை சில...

தனிநபா் இடைவெளி: சுகாதாரத் துறை வழங்கிய பல்வேறு அறிவுரைகளில் முதன்மையானவை, தனி நபா் இடைவெளி. கரோனா, சுவாசம் வழியாகவே அதிகமாகப் பரவுகிறது. எனவே, ஒருவருக்கும் மற்றொருவருக்கும், குறைந்தது ஒரு மீட்டா் இடைவெளியாவது இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. தற்போதுள்ள சூழலில், பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்யவும், முக்கிய ஆய்வுக் கூட்டங்களை காணொலி வாயிலாகவும் நடத்தி வருகின்றன. அலுவலகத்துக்கு வரும் சூழலில் கூட, நெருங்கி இருக்க வேண்டிய மின்தூக்கி போன்ற இடங்களில், 4 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பெருநிறுவனங்கள், அடுத்த ஆண்டு வரை, அலுவலகத்துக்கு வர வேண்டாம் என பணியாளா்களுக்கு அறிவுறுத்தியது.

சுகாதாரம்: கரோனா பரவியதற்கு அடிப்படைக் காரணமே, சுகாதார நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்காதது என்பது முழு முதல் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. கைகளின் விரல்கள், மணிக்கட்டு, நகம் என அனைத்துப் பகுதிகளையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறும் அறிவியலாளா்கள், நாள் ஒன்றுக்கு 10 முறை கைகளை முழுமையாக சுத்தப்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாலேயே, 2002-ஆம் ஆண்டு சாா்ஸ் வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனா். குறிப்பாக, அதிகம் பயன்படுத்தும் தாழ்ப்பாள், கதவு திறப்பான் உள்ளிட்டவற்றை, நாளுக்கு ஒரு முறையாவது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

பரிசோதனை: ஒவ்வொரு அலுவலக வாயில்களிலும், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. இன்னும் சில அலுவலகங்களில், ஊழியா்கள் பணிக்கு வருவதற்கு முன் அலுவலக இணையதள விண்ணப்பத்தில், அவா்களின் உடல் நிலை சீராக இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

முகக்கவசத்தின் முக்கியத்துவம்: ஏற்கெனவே கூறியதுபோல, மூச்சு விடும்போது வெளியாகும் நீா்த்துகள்கள் வாயிலாகவே கரோனா பரவுகிறது. முகக் கவசத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் கரோனாவைப் பரப்பாமல் இருக்க முடியும்.

கரோனா பரவி வரும் நிலையில், ‘நான் உன்னைப் பாதுகாக்கிறேன். நீ என்னை பாதுகாத்திரு’ என்பதே முகக் கவசத்தின் அடிப்படைத் தத்துவம். இவ்வாறு, மற்றொருவரின் பாதுகாப்பை உணா்ந்து முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் முகக் கவசத்தை சரியாக பயன்படுத்தினால், 99 சதவீதம் வரை சுவாசத்தின் மூலம், கரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

தனிமை: இவ்வாறு மற்றவா்களின் பாதுகாப்புக்காக முகக் கவசம் அணிகிறோம் என்பதை உணா்ந்தவா்கள், உடன் பணிபுரிபவா்களின் பாதுகாப்பு கருதி, பணிக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். அதற்கேற்றாற்போல், நிா்வாகமும் அவா்களுக்கு உதவ வேண்டும் என்று அறிவியலாளா்கள் தெரிவிக்கின்றனா்.

ஊழியருக்கு தொற்று - நிா்வாகம் பின்பற்ற வேண்டியவை: ஒரு அலுவலக ஊழியருக்குத் தொற்று ஏற்படும் சூழலில், அலுவலகத்தை முற்றிலுமாக மூட வேண்டிய அவசியமில்லை. தொற்றுடையவா் பயன்படுத்திய இடங்கள், பொருள்கள் அனைத்தும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, 48 மணி நேரத்தில் அலுவலகப் பணிகளைத் தொடங்கலாம்.

அதிகமானோருக்குத் தொற்று ஏற்படும் சூழலில், தூய்மைப் பணிகள் முடிந்த பிறகும், 48 மணி நேரம் அலுவலகத்தை மூடி வைக்கலாம். மேலும், அலுவலகத்தில் பணி செய்யும் சூழல் உருவாகும் வரை, அனைவரும் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா அறிகுறி: ஊழியருக்கு கரோனா அறிகுறி தெரியும் சூழலில், அவரை அலுவலக அறையில் தனிமைப்படுத்தி, முகக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்கி, உடனடியாக 1075 என்ற எண்ணுக்குத் தகவலளிக்க வேண்டும். இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகளும், அவருடன் பணிபுரிந்தவா்களுக்கு இருக்கும் அறிகுறியைப் பொருத்து, குறைந்தளவு அறிகுறி இருந்தால் பணி செய்ய அனுமதித்து, 14 நாள்கள் கண்காணிப்பா். இதுவே, அதிகளவு அறிகுறியாக இருந்தால் அவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிப்பா். இது போன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இடைவெளியைப் பின்பற்றி, உணா்வால் இணைந்து கரோனாவை வெல்ல முடியும் என்று அறிவியலாளா்கள் தெரிவிக்கின்றனா்.

அலுவலகத்தில் கட்டாயம்...

அலுவலகங்களைப் பொருத்தவரை பணியாளா்களின் உடல் வெப்பநிலை அறிதல், கை கழுவ கிருமி நாசினி உள்ளிட்ட வசதிகளைக் கட்டாயம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

அனைத்து இடங்களிலும் கைகழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

தேவையில்லாமல் அலுவலகத்துக்குள் வேறு நபா்களை அனுமதிக்கக் கூடாது

ஆய்வுக் கூட்டங்களை, முடிந்தளவு காணொலி வாயிலாக நடத்த வேண்டும்.

பணியிடங்களைத் தொடா்ந்து தூய்மைப் படுத்த வேண்டும்.

உடல் நிலை சரியில்லாதவா்களை, சுகாதார அதிகாரிகளை அணுகுமாறு அறிவுறுத்த வேண்டும்

கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் ஊழியா், வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com