பிகார் தேர்தல் முடிவு: நெருக்கடியில் தமிழக காங்கிரஸ்

பிகார் தேர்தல் முடிவு, திமுக- காங்கிரஸூக்கு இடியாப்ப சிக்கலை உருவாக்கியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு காரணமாக தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தமிழகத்தில் இன்னும் 5 மாதங்களில் வரவிருக்கும் பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் களம் களை கட்டத் தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அப்படியே
நீடிக்கின்றன.

2011, 2016 என இரு பேரவைத் தேர்தல்களில் தோல்வியுற்ற நிலையில், இந்த முறை எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று தொடர் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருந்துவிடுமோ? என்ற அச்சத்தை பிகார் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.

பிகாரில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு நூலிழையில் பறிபோனது. காங்கிரஸூக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் திமுகவுக்கும் இதே நிலை உருவாகும் என்ற சந்தேகம் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

2006- இல் திமுக கூட்டணியில் 48  தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 தொகுதிகளில் வென்றது. அதன் பிறகு 2011, 2016 தேர்தல்களில் காங்கிரஸால் அதிக இடங்களில் வெல்ல முடியவில்லை. காங்கிரஸூக்கு ஒதுக்கும் தொகுதிகளை அதிமுக எளிதில் கைப்பற்றிவிடுகிறது. 2011- இல் 63 தொகுதிகளில் போட்டியிட்டதில் 5 தொகுதிகளையும், 2016- இல் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸால் வெற்றிபெற முடிந்தது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே. வாசன் விலகி தமிழ் மாநில காங்கிரஸாத் தொடங்கியதும், விஜயகாந்தின் தேமுதிகவும் காங்கிரஸின் வாக்குவங்கியில் சரிவை ஏற்படுத்தின.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 1.1 சதவீதம் அதாவது 4.41 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை திமுக பறிகொடுத்தது. திமுக- அதிமுக நேருக்குநேர் மோதிய 177 தொகுதிகளில் திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதாவது திமுக- அதிமுக மோதும்போது திமுகவின் வெற்றி வாய்ப்புத் திறன் (Striking rate) 50.28 சதவீதம் ஆகும். ஆனால், காங்கிரஸ்- அதிமுக மோதிய 41 தொகுதிகளில் 33 தொகுதிகளை அதிமுக வென்றது. அதில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்புத் திறன் 19.6 சதவீதம் ஆகும். காங்கிரஸின் வெற்றி வாய்ப்புத் திறன் குறைவாக இருந்ததால் கடந்த தேர்தலில் திமுக ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை இழந்தது.

பிகாரிலும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. பாஜக- ஆர்.ஜே.டி.  நேருக்குநேர் மோதிய 56 தொகுதிகளில் பாஜக 37 தொகுதிகளையும்,  ஆர்.ஜே.டி. 19 தொகுதிகளையும் கைப்பற்றின. அதேநேரத்தில், பாஜக- காங்கிரஸ் நேருக்கு நேர் மோதிய 33 தொகுதிகளில் பாஜக 27 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸôல் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பாஜக- ஆர்.ஜே.டி. மோதும்போது மகா கூட்டணியின் வெற்றி வாய்ப்புத்திறன் 34 சதவீதமாகவும், பாஜக- காங்கிரஸ் மோதும்போது வெற்றி வாய்ப்புத் திறன் 17 சதவீதமாகவும் குறைந்ததால்தான் மகா கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது.

காங்கிரஸால் பின்னடைவு ஏற்பட்ட அனுபவம் 2016- இல் திமுகவுக்கு ஏற்பட்டது. இப்போது காங்கிரஸôல் பிகாரில் ஆர்.ஜே.டி.க்கு ஏற்பட்ட அனுபவத்தையும் திமுக கூர்ந்துநோக்கி வருகிறது. எதிர்வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸôல் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் திமுக மிகுந்த கவனத்துடன் அரசியல் நகர்வுகளை செய்து வருகிறது.

திமுகவுக்கு தேர்தல் வியூக வல்லுநராக செயல்படும் பிரசாந்த் கிஷோர், திமுக அதிகபட்ச தொகுதிகளில் குறைந்தபட்சம் 180- க்கு மேல் போட்டியிட வேண்டும் என்றும், கூட்டணி கட்சிகளுக்கு குறைவான எண்ணிக்கையிலான தொகுதிகள்தான் கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே ஆலோசனை கூறியுள்ளதாக தகவல் வெளியானது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சிக்கு அதிக  இடங்கள் கொடுக்கும்போது அவை அதிமுகவுக்கு எளிதில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக மாறிவிடுவதாக 2011,  2016 தேர்தல் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி ஆலோசனை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், திமுக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மக்களவைத்  தொகுதிக்கு மூன்று பேரவைத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது. இதன்படி, கடந்த மக்களவைத் தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ்  கட்சிக்கு 27 பேரவைத் தொகுதிகள் மட்டுமே ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

பிகார் தேர்தல் முடிவு தமிழக காங்கிரஸூக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். திமுக கழற்றிவிட்டால் காங்கிரஸூக்கு மாற்று வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நிலையில் திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "திமுக கூட்டணியில் தேவையற்ற பேரத்தில் காங்கிரஸ் இறங்காது' என்று தெரிவித்தார்.

பிகார் தேர்தல் தமிழக காங்கிரஸின் மனவலிமையை குறைத்திருந்தாலும், திமுகவால் காங்கிரஸ் கட்சியை எளிதில் கழற்றிவிடவும் முடியாது.   காங்கிரஸா கழற்றிவிட்டால் 13 சதவீத கிறிஸ்தவ, இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குகளை முழுமையாக திமுகவால் பெறுவது கடினம்.

காங்கிரஸ் இல்லாமல் திமுகவை முழுமையாக நம்பி சிறுபான்மையினர் வாக்களிப்பார்களா? என்பது கேள்விக்குறிதான்.

காங்கிரஸூக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கினாலும், அந்தக் கட்சியைக் கழற்றிவிட்டு பிற கட்சிகளுடன் தேர்தலை சந்தித்தாலும் திமுகவுக்கு ஆபத்தாகவே முடியும். திமுகவிடம் குறைந்த தொகுதிகளை பெற்றால் தொண்டர்களின் அதிருப்தியை காங்கிரஸ் தலைமை சந்திக்க நேரிடும். அதுவும் திமுகவுக்கு பாதகமாக அமையக்கூடும். இந்தப் பின்னணியில் பிகார் தேர்தல் முடிவு, திமுக- காங்கிரஸூக்கு இடியாப்ப சிக்கலை உருவாக்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com